மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் அதன் புரிதல் பற்றிய பிரச்சினை வருகிறது.

கேள்வி : ஏன் வினவு, மூலதனம் (காரல் மார்க்ஸ் எழுதிய முக்கியமான நூல்) படிக்க ஒரு அப்பழுக்கற்ற – வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு கட்சி உறுப்பினராகதான் இருக்க வேண்டுமா? ஒரு சமூக அறிவியல் என்ற முறையில் அதை படிக்க முடியாதா?
-ஆதவன்

ன்புள்ள ஆதவன்,

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிறது.

துறை சார்ந்து ஒரு படிப்பை பயில நாம் ஏதேனும் ஒரு கல்லூரிக்கு செல்வது அவசியம். இணைய காலத்தில் எல்லாம் கையில் அடக்கம் என்றான பிறகு நாம் மெய்நிகர் உலகிலேயே எதையும் படிக்கலாமே என்ற கேள்வி எழுகிறது!

நவீன மருத்துவத் துறையில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமென்றால் அவர் ஐந்தாண்டுகள் கல்லூரியில் படித்து அதில் கடைசி வருடம் “ஹவுஸ் சர்ஜன்” – பயிற்சி மருத்துவர் நடைமுறை தேர்வில் தேற வேண்டும். மேலும் சில வருடங்கள் படித்தால் மட்டுமே முதுகலைப் பட்டம் பெற முடியும்.

இந்த எம்.டி டாக்டர் படிப்பை ஒருவர் இணையத்திலேயே படித்து முடிக்க முடியுமா? இல்லை இது உயிர் காக்கும் விசயம் என்பதால் அப்படி ரிஸ்க் எடுக்க முடியாது என்பீர்கள். அதே போன்று புரட்சி என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு தொடர்புடையது எனும் போது அந்த “ரிஸ்க்” இங்கே இன்னும் பிரம்மாண்டமான அளவில் இருக்கிறதல்லவா? மருத்துவத்தில் அப்படி விசப் பரிசோதனை எதுவும் இருக்க கூடாது என்பதை முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் சட்டங்கள் பார்த்துக் கொள்கின்றன.

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை!

மாறாக மார்க்சியம் என்பது கருத்து, அரசியல், கொள்கை சார்ந்ததாக இருப்பதால் அதற்கு அத்தகைய கவசங்கள் இல்லை. ஆனால் எது கம்யூனிசம் எது கம்யூனிசமில்லை என்ற கேள்விக்கான பதில்களாகவே மார்க்சிய ஆசான்களின் படைப்புகள் எழுதப்பட்டன. சொத்துரிமை, அரசு – அதிகாரம் என அரசியலின் மையமான அச்சை பேசுவதாக மார்க்சியம் இருப்பதால் அதை எதிர்த்து பேசும் இசங்களும், போலிகளும் நிறைய இருக்கின்றன.

அறிவியல், வரலாறு போன்றவையும் நவீன கல்வியால் வரையறுக்கப் பட்டிருந்தாலும், பிள்ளையார் சிலை அந்தக் கால பிளாஸ்டிக் சர்ஜரியின் சான்று, இராமயண புஷ்பக விமானம்தான் இன்றைய ஜெட் விமானங்கள், அர்ஜுனன் பயன்படுத்திய பிரம்மாஸ்திரம்தான் இன்றைய நைட்ரஜன் குண்டு என்று உளறுவோர்தான் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இந்த உளறல்களை வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார்கள். அதைப் போல கம்யூனிசம் மார்க்சியம் குறித்தும் பல முட்டாள்தனமான கருத்துக்கள் பல அறிஞர்களிடம் இருப்பதை நாம் மேற்கண்ட பிளாஸ்டிக் சர்ஜரி நோயாக மட்டும் கடந்து போய்விட முடியாது. எது அசல், எது போலி என்று விவாதித்து நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. முக்கியமாக புதியவர் ஒருவர் இத்தகைய குழப்பமான சூழலில மார்க்சியம் கற்பது எப்படி? அதற்கு கட்சியில் சேரவேண்டியது அவசியமா?

யூடியூப்பில் ஒளிப்பதிவு, இயக்கம், படத்தொகுப்பு, சி.ஜி அனைத்தையும் படிப்பதற்கு ஏராளம் டுடோரியல்கள் உள்ளன. இதைப் படித்தே ஒருவர் இயக்குநர் ஆக முடியுமா?

இணையம் பரவலாவதற்கு முன்னர் மேற்கண்ட சினிமா துறைகளில் சேர்ந்து ஆளாவதற்கு நீங்கள் ஒரு முன்னோடியிடம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். சில பல ஆண்டுகள் கழித்தே உங்களுக்கு வாய்ப்பு வரும். இப்போது அப்படி இல்லை. பல புதிய இயக்குநர்கள் யாரிடமும் சேராமலேயே முதல் படங்களை இயக்குகிறார்கள். எனில் இந்த சான்றின் படி தனியாக படித்தே ஒருவர் சினிமாவில் கலைஞராக முடியாதா?

இணையத்தில் படிப்பது மூலம் ஒருவர் இயக்குநராக உருவாக முடியுமா?

இல்லை. இந்த புதிய இயக்குநர்கள் அனைவரும் சினிமா எனும் கூட்டு உழைப்பின் பாதையில் பயணிப்பதால் அங்கே தயாரிப்பாளர் நியமிக்கும் படைப்பாளிகள் தொட்டு பிற கலைஞர்கள் வரை புதியவரின் தவறுகளை திருத்துவதற்கு இருக்கிறார்கள். மேலும் அந்த புதிய இயக்குநரும் தனது பழைய வாழ்வில் ஏதேனும் ஒரு ஓட்டைக் கேமராவை வைத்து நிறைய குறும்படங்கள், சோதனை முயற்சிகளை செய்து பார்த்திருப்பார். அத்தகைய நடைமுறையில் ஈடுபட ஈடுபடத்தான் கலை பழக்கமாகும். இது போக மைல்கல் சாதனைகளான உலகப் புகழ் பெற்ற படங்களை பார்த்து அவர் ஏராளமான படிப்பினைகளையும் கற்றிருப்பார். உலகப் பட அறிமுகம் இல்லையென்றாலும் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான படங்களை பார்த்துப் பார்த்து அவர் காட்சிக் கலையை பழகியிருப்பது அவசியமாக இருக்கிறது.

இத்தகைய கூட்டுத்துவம் சார்ந்த நடைமுறை பயிற்சி இல்லாமல் புதிய இயக்குநர்கள் இல்லை. முந்தைய காலத்தில் இந்த பயிற்சியை ஒரு முன்னோடி அளித்தார். இப்போது பலரும், பல முறைகளில் அளிக்கின்றனர். அவற்றில் இணையமும் ஒன்று.

இணையத்தில் மருத்துவ தளங்களைப் பார்த்து அதில் மருந்துகள், நோய்க்குறிகளை அறியும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் ஒரு மருத்துவர் ஒரு மருந்தை தேர்வு செய்து ஒரு நோயாளிக்கு கொடுப்பது என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் தனிச்சிறப்பான முடிவு மட்டுமே. குறிப்பிட்ட மருந்தை அல்லது மருந்துகளின் தொகுப்பை அவர் தனது அனுபவம், நோயாளியின் குறிப்பான நிலை, குறிப்பிட்ட நாடு – பகுதி மக்களின் தனிச்சிறப்பான யதார்த்த நிலை, குறிப்பிட்ட பகுதியின் விசேடமான காலநிலை, குறிப்பிட்ட மருந்தின் தனிச்சிறப்பான விளைவுகள் ஆகியவற்றை வைத்து முடிவு செய்கிறார்.

இன்டெர் நெட் மூலம் ஒரு டாக்டர் ஆகிவிட முடியாது!

ஆனால் இணையத்தின் வழி கருத்தாளர்களாக உருவெடுத்திருக்கும் கந்தசாமிகளும் காயத்ரி-கஸ்தூரிகளும் அதன் அடிப்படை தொகுப்பை படித்து விட்டு மருத்துவர்களை பாடாய்ப் படுத்துகின்றனர். நவீன மருத்துவர்கள் முன்பெல்லாம் மக்களிடம் அதிகம் பேசமாட்டார்கள். சந்தேகங்கள் கேட்டால் சீறுவார்கள். இப்போது மக்கள் விழிப்புணர்வு பெறும் காலத்தில் அந்த சீறல் நிறைய மாறியிருக்கிறது. அதேநேரம் நாம் மருத்துவர்கள் அல்ல, அறிவிலிகள் என்பதை இணைய தலைமுறை ஒப்புக் கொள்ளாது. இந்த நோய்க்கு இந்த மருந்துதானே என்று எளிமைப்படுத்தி தொல்லைகளை வரவழைத்துக் கொள்கிறது.

ஆகவதான் அலோபதி மருத்துவத்தை  வெறும் புத்தகங்கள் சார்ந்தோ, இணையம் சார்ந்தோ கற்றுக் கொள்ள முடியாது. கல்லூரிகளில் பல பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக ஊழியர்கள், நவீன சோதனை எந்திரங்கள், மருத்துவமனைகள், நோயாளிகளான மக்கள் ஆகியோர் சேர்ந்தே ஒரு மருத்துவரை உருவாக்குகிறார்கள். இந்த பல்துறை நடவடிக்கைகளை அந்தந்த வகுப்பின் பேராசிரியர் ஒருங்கிணைக்கிறார்.

இந்த விதி மார்க்சியத்திற்கும் பொருந்தும்.

ஃபேஸ்புக்கில் தமீம் தாந்த்ரா என்பவர் மாஸ்கோ  பதிப்பக தமிழ் நூல்களை வாங்கிப் படிக்க முயன்றும் முடியவில்லை, மொழிபெயர்ப்பு படு மோசம், என்பதாக தெரிவித்திருந்தார். “டெம்பிள் மங்கிஸ்” யூடியூப் சானலின் விஜய் ஆதிராஜ் என்பவரும் தமிழில் இருக்கும் மார்க்சிய நூல்களில் மொழிபெயர்ப்பு படுமோசம் என்று அந்த பதிவில் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கும் பரிகாரம் செய்யும் முகமாக சில சி.பி.எம் நண்பர்கள் நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை அவர்களுக்கு சிபாரிசு செய்து அந்தக் குறையை போக்க முயன்றனர்.

ஒருவேளை நல்ல மொழிபெயர்ப்பில் இல்லையென்று நல்ல ஆங்கிலத்தில் மார்க்சிய நூல்களை கொடுத்தாலும் தமீம் தாந்த்ரா போன்றோர் மார்க்சியத்தை தெளிவாக படித்து தேற முடியுமா? முடியாது அல்லது பெரும் சிரமம் என்கிறோம். இது மருத்துவம், இயற்பியல், வேதியியல் என இயற்கை அறிவியல் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த உலகம், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது.

இந்த உலகில் இயற்கையின் இயக்கத்திலிருக்கும் வளர்ச்சி குறித்த பொது விதிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் மனித சமூகத்தின் இயக்கம் மற்றும் வளர்ச்சி பற்றிய பொதுவான விதிமுறைகளை  மார்க்சியம் கண்டுபிடித்து முன்வைக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஒரு நாட்டில் புரட்சி நடத்த தேவையான பாதை – திட்டங்களை வகுக்க முடியும். அறிவுத்துறை நடவடிக்கையாக பார்த்தால், மனித சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் திறம்பட ஆய்வு செய்து புரிந்து கொள்வதோ, அதை மாற்ற முனைவதோ மார்க்சியம் கற்றுக் கொண்டோர் மட்டுமே மற்றவர்களை விட சரியாக முன்வைக்க முடியும்.

மேலே உள்ளவற்றை சுருக்கிப் பார்த்தால் தத்துவம், நடைமுறை இரண்டும் இணைந்திருப்பதை காணலாம். இந்த உலகம், சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மார்க்சிய தத்துவம் உதவுகிறது என்றால் அந்த உலகை எப்படி மாற்ற வேண்டும் என்பதை முயன்று பார்க்க மார்க்சிய நடைமுறை ( கம்யூனிஸ்டு கட்சி) உதவுகிறது. இவை இரண்டையும் பிரித்தால் அது மார்க்சியமும் இல்லை, அதைப் பயின்று கொள்வதும் சாத்தியமில்லை.

தனிநபராக இருக்கும் அறிஞர்களும், பெயரளவில் இருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சியினர் பலரும் மார்க்சியத்தை ஒரு ஏட்டுக் கல்வியாக மட்டும் பார்ப்பதால் அதன் இலக்கணத்தை எளிமைப்படுத்தி பல நேரங்களில் தவறாக வியாக்கியானம் செய்தும் புரிந்து கொள்கின்றனர், பேசுகின்றனர். இதற்கு அவர்களது பழைய, பிழையான கண்ணோட்டங்களும் காரணமாகின்றன. வர்க்க முரண்பாட்டை ஏற்பதும், அதை மாற்றுவதுமான பார்வை இல்லாமல் இந்த அறிஞர்கள் நிலவும் சமூக அமைப்பை மறைமுகமாக ஆதரிப்பதான தடத்தில் மார்க்சியத்தை பிழையாக விளக்குகிறார்கள். ஆகவே இதில் பிழை எவ்வளவு, காரியவாதம் எவ்வளவு, தேர்தல் கூட்டணிக்கான ஆதாயம் எவ்வளவு என்பதை துல்லியமாக பிரிப்பது கடினம்.

ரு நுட்பமான இசையை ரசிக்கும் போது, ஒரு சூக்குமமான கவிதை – ஓவியத்தோடு ஒன்றும் போது, மார்க்சியம் மட்டும் படித்து புரிந்து கொள்வது சிரமமா அது என்ன கம்பசூத்திரமா என்று ஒரு  கேள்வி எழலாம்.

இந்த சான்றுகளையே எடுத்துக் கொண்டாலும், இசை, ஓவியம், கவிதைகளை ரசிப்பதற்கு சில ஆண்டுகளாவது பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சியிலும் முன்னோடிகள், பாடத்திட்டங்கள் போன்றவை குறைந்த பட்சமாக இருக்க வேண்டும். மேலதிகமாக கலை ரசனை குறித்த பார்வையில் ஒரு கலைஞனைப் போல ஒரு பார்வையாளனும் சுதந்திரமாக ரசனை எனும் இரண்டாவது படைப்பு முயற்சியில் ஈடுபடும் போது இப்பார்வைகள் பலவாய் வேறுபடலாம்.

ஆகவே இக்கலைகளை ஒரு ரசனை என்று சுருக்கும் போது அது தனிநபரின் பார்வையாகவும் இருக்கலாம் என்பதால் இந்த ரசனைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. குறிப்பாக கலை என்பது நமது அறிவு – சமூகம் சார் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும் உணர்ச்சி என்பதாலும் அது தன்னுடைய பயன்பாட்டு பொருளிலிலும் கூட தொழிற்படும். அதனால்தான் ‘தரமான’ கர்நாடக இசையை விட ‘தரமில்லாத’ திரையிசை இளைஞர்களின் உற்சாகத்தை கரைபுரண்டு ஓட வைக்கிறது.

உரையாடும் மார்க்ஸ்

மார்க்சியம் அத்தகைய தனிநபர் சார்ந்த உணர்ச்சிகளின் ரசனையோடு தொடர்புடையதல்ல. அது ஒட்டு மொத்த சமூகத்தின் உணர்வை ஆய்வு செய்கிறது. அதனால்தான் மற்ற அறிவுத் துறைகளை விட மார்க்சியத்தை கற்பதற்கு தனிச்சிறப்பான கல்லூரிகள், கடும் முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி என்பது புலனறிவோடும், உணர்வு என்பது பகுத்தறிவோடும் தீர்மானிக்கப்படுகிறது. அதே நேரம் இந்த உலகில் துன்பப்படும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது நம்மிடம் உணர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த மக்களை விடுதலை செய்வது எப்படி என்ற மார்க்சியக் கல்வியை படிப்பதற்கு தேவையான மனித எத்தனம் கிடைக்க முடியும்.

இந்த இரண்டையும் அளிக்கும் கல்லூரிகள்தான் கம்யூனிஸ்டுக் கட்சிகள். சரி கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட  பல இருக்கிறதே, அவற்றில் எது நல்ல கல்லூரி என்ற கேள்வி எழுகிறதா? ஒருவகையில் எந்த கல்லூரி பொறியியல் படிப்பிற்கு சிறந்தது என்பதைப் போன்றும் இது தோன்றலாம். அதற்கு பதில், எந்த கம்யூனிஸ்டுக் கட்சி தீவிரமாக செயல்படுகிறது, திட்டம் – நடைமுறையில் ஒத்திசைவைக் கொண்டிருக்கிறது, தான் கூறுகின்ற கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொள்கிறது, புரட்சியின் நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா இல்லை சட்டமன்றம், பாராளுமன்ற தொகுதி உடன்பாடை முதன்மையாக வைத்து செயல்படுகிறதா என்றெல்லாம் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

 கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது.

முக்கியமாக ஒரு அரசியல், பண்பாடு, புரிந்து கொள்ளவே முடியாத ஒரு பிரச்சினை, தீர்வே இல்லாத ஒரு சிக்கல், ஒரு நாடு அல்லது பெரும் மக்கட் கூட்டத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகள் போன்றவற்றில் ஒரு சரியான கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே சரியான ஆய்வையும் தீர்வையும் முன்வைக்க முடியும்.

ல்லூரியில் கோட்பாடாக படித்த மருத்துவ அறிவியலை பல நூறு – ஆயிரம் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிக்கும் போது மட்டுமே ஒரு மருத்துவர் மருத்துவம்  எனும் நடைமுறையில் தேர்ச்சி பெறுகிறார். அல்லது தன்னை மருத்தவராக செயல்படும் இயக்கத்தில் புகுத்துகிறார். அது போன்று கட்சியில் சேர்ந்து மார்க்சியம் பயிலும் போது மட்டுமே நடைமுறையிலும் அதனை கற்றுத் தேர முடியும்.

மக்கள் என்றால் யார், வர்க்கங்கள் என்றால் என்ன, புரட்சியின் போர் தந்திரம் – செயல் தந்திரம் என்றால் என்ன?, புரட்சி அலை ஓங்குகிறது அல்லது தாழ்கிறது என்பது எவற்றை வைத்து முடிவு செய்வது, பூஜ்யம் என்ற நிலையில் இருந்து துவங்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சி சர்வ பலம் நிறைந்த ஆளும் வர்க்கத்தை எப்படி வீழ்த்தும், புரட்சிக்கு முந்தைய – பிந்தைய கால கட்டத்தில் நம்முடைய பணி எதுவாக இருக்கும், புரட்சியை சாதித்த ரசிய – சீன நாடுகளில் கம்யூனிசம் ஏன் பின்னடைவுக்குள்ளானது, அவற்றிலிருந்து நாம் கற்ற பாடம் என்ன என்பவையெல்லாம் கட்சி நடைமுறைகளோடுதான் பயின்று கொள்ள முடியும்.

ரி, ஒருவர் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்தால் போதும், அவர் மார்க்சியத்தை சுலபமாக பயின்று கொள்ள முடியுமா? என்று கேட்டால் நம் பதில், இல்லவே இல்லை. நடைமுறை எனும் பாதியோடு தத்துவம் படித்தல் எனும் மறுபாதியும் இருந்தாக வேண்டும். கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சிய தத்துவத்தை சொந்தமாக படித்து ஆய்வு செய்து, பிரயோகிக்கும் வல்லமையை கற்றுக் கொண்டால்தான் மார்க்சியத்தையும் கற்க முடியும். மாறாக அவர் அதை செய்ய வில்லை என்றால் அவர் கட்சி உறுப்பினராகவே இருந்தாலும் மார்க்சியத்தை பயின்று கொண்டவராக மாற முடியாது. அல்லது அவரது கம்யூனிச வாழ்வும் நீடிக்கும்  என்று சொல்ல முடியாது. இங்கே நாம் பேசவது ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியின் அணிகள் எனப்படும் முன்னணிப் படையினரைப் பற்றித்தான். ஏனெனில் கம்யூனிஸ்டு கட்சிகளை ஏற்று  ஆதரிக்கும் மக்கள் பலருக்கும் கம்யூனிசம் என்பது குறித்து விரிவாக தெரிந்திருக்காது, அது சாத்தியமுமில்லை. அவர்கள் வர்க்கம் என்ற முறையிலும், அனுபவத்திலம் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்.

ஒரே மருத்துவக் கல்வியை படித்து வந்தாலும், பிரபலமான மருத்துவர்களின் சிகிச்சை முறை சற்றே அல்லது கணிசமான அளவில் மாறுபடுகிறது அல்லவா? காரணம் அவர்கள் தமது கல்வி – அனுபவத்தின் ஊடாக சொந்த முறையில் மருத்துவத்தை பிரயோகிக்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியிலும் அத்தகைய சொந்த பிரயோகங்கள் பல சேர்ந்தே இறுதியில் அந்த நாட்டின் புரட்சியை சாத்தியமாக்குகிறது. இந்த சொந்த பங்களிப்புகள் என்பவை பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனத்தின் தனித்தனி செடிகள், மலர்களே அன்றி அவை தனியாக ஒரு காட்டிலோ, தெருவிலோ இருப்பதல்ல. ஒரு நாட்டில் எப்போது புரட்சியை கொண்டு வருவோம் என்ற கேள்விக்கு ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் தனிநபர்கள் தீவிரமாக விடை தேடும் போதே இந்த தனிநபர் பங்களிப்புகள், சாதனைகள் தவிர்க்கவியலாமல் தோன்றுகின்றன. ஆகவே இவற்றை கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் தனிநபர் சாதனைகள் என்று புரிந்து கொள்வது அவசியம்.

மேற்கு ஐரோப்பிய மக்கள், சமூக அளவில் முன்னேறியவர்களாக இருக்கும் போது ரசியா பின்தங்கி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியமில்லை என்றார்கள், லெனினின் சமகாலத்திய கம்யூனிஸ்டுகள் பலர். ஆனால் அரசியல் ரீதியில் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை விட ரசிய பாட்டாளி வர்க்கம் முன்னேறி இருப்பதால் இங்கே புரட்சி சாத்தியம், இப்போது இல்லை என்றால் எப்போதுமில்லை என்று லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் சாதித்துக் காட்டினார்கள்.  தியரிப்படி முடியாது என்ற ஒன்றை முடியும் என்று சாதித்த இந்த அம்சமே நாம் குறிப்பிடும், மார்க்சியம் என்பது தத்துவம் – நடைமுறை இரண்டோடும் சேர்ந்த ஒன்று என்பது.

போலவே பாட்டாளி வர்க்கம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் சீனாவில் புரட்சி சாத்தியமே இல்லை எனும் போது உழவர்கள் – தொழிலாளி கூட்டணியில், தொழிலாளி வர்க்கத் தலைமையில் ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி புரட்சி நடத்துவது சாத்தியம் என்று மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்டுக் கட்சி சாதித்தது. கம்யூனிசத்தை வறட்டுவாதமாக கற்கும் எவரும் இந்த சீன, ரசிய சான்றுகளின் வேறுபாடுகளை ஒரு போதும் உணர முடியாது.

கட்டுப்பாட்டிற்கு பேர் உள்ளது கம்யூனிஸ்டுக் கட்சிதான். ஆனால் கட்சிக்குள் கம்யூனிசமல்லாத கருத்துக்கள் உள் புகுந்து கட்சி சீரழியும் என்பதையும், அப்படி சீனாவில் ஒரு நிலை உருவானபோது, பொதுமக்கள், அணிகளிடம் தலைமையை தகர்த்தெறியுங்கள் என்று அறைகூவல் விடுத்தவரும் அதே கட்டுப்பாடான கம்யூனிசத்தின் மாவோதான்.

ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல்.

ஆகவேதான் மார்க்சியம் கற்பது என்பதை நடைமுறையில் இருந்தும் பிரிக்க முடியாது, தத்துவத்தில் இருந்தும் பிரிக்க முடியாது. சரியாகச் சொன்னால் மார்க்சியம் என்பது இந்த உலகின் தலை சிறந்த ஆய்வு முறையியல். இதைப் படிப்பது என்பது அதன் பொது விதிகளை தெரிந்து கொள்வது, இதை புரிந்து கொண்டோம் என்பது அந்த விதிகளின் துணையோடு சமூக நிகழ்வுகளை ஆய்வு செய்வதால் கிடைப்பது. குர்ஆன் – பைபிள் போல மார்க்சிய நூல்களில் குறிப்பிட்ட பிரச்சினைக்கு இன்ன தீர்வு என்று ஒன்றைக் காட்டவே முடியாது.

மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வுமுறையில் அலசி எழுதப்பட்ட படைப்புகள். இந்த நூல்களை படிப்பதால் நாம் கற்பது என்ன? அவர்கள் மார்க்சியத்தின் துணை கொண்டு அந்த நிகழ்வை எப்படி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனால் ஏன் அந்த முடிவுகளுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளை வந்தடைந்த பாதையின் விசேட அம்சங்கள் என்ன என்பதையே கற்கிறோம். இந்த பயிற்சி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.

மூலதனம் நூல் முதலாளித்துவ பொருளாதாரம் செயற்படும் இரகசியத்தை திறந்து காண்பிக்கிறது. அதன் முரண்பாடுகளை ஆய்வின் வழி நிரூபிக்கிறது. அந்த முரண்பாடுகளே அதற்கான சவக்குழியை வெட்டும் என்பதை ஏற்க வைக்கிறது. இதில் எந்த வர்க்கம் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடும், உணர்வின் மேதைமையோடும் முன்வைக்கிறது.

கவே முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமோ அவையும், அந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவிலிருந்து உலகைக் காக்கும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கம்யூனிசக் கட்சியின் கற்பித்தலும் இன்றி மூலதனம் நூலை மட்டுமல்ல, மற்ற கம்யூனிச நூல்களையும் கற்பது சிரமம் என்கிறோம்.

கட்சி என்றால் தனிநபரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், படைப்புணர்ச்சியை நிறுத்திவிடும், புத்தாக்க சிந்தனைகளை அழித்து விடும் என்று முதலாளித்துவ உலகின் ஆதரவு அறிஞர்கள் வரலாறு நெடுகிலும் உருவாக்கி வைத்திருக்கும் – தோ பாரு பூச்சாண்டி வாறான், ஒழுங்கா சாப்பிடு – தவறான அபிப்பிராயங்கள் கம்யூனிஸ்டு கட்சியில் சேருவது குறித்து நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மறுபுறம் உலகமயம் உருவாக்கியிருக்கும் வண்ணமயமான தூண்டில் புழு வாழ்க்கை வசதிகளும் கூட இந்த தயக்கத்தினை ஒரு நீதி போல அறம் போல பேசவைக்கின்றன. தனிநபரின் காரியவாத வாழ்க்கை கம்யூனிசத்தின் கூட்டுத்துவ இலட்சியத்தினை தவறு என்று பேசும் அடிப்படையை தோற்றுவிக்கிறது.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் கம்யூனிச நூல்கள் கற்கும் ஆர்வம் இளையோரிடம் அதிகரித்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் கம்யூனிச நூல்கள் அதிகம் விற்றிருக்கின்றன. ஆனால் அந்த நூல்களை வாங்கியோர் படிக்க முயன்றும் இது ஏன் புரியவில்லை என்று குழம்பியிருப்பர்.

அவர்களை அழைக்கிறோம், வாருங்கள் மார்க்சியம் கற்போம். ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் இணைந்து மார்க்கசியம் எனும் இந்த மகத்தான தத்துவத்தை கற்பதோடு, அதை மனித குல விடுதலைக்கான போராட்டமாக மாற்றும் பணியிலும் நம் வாழ்வை இணைக்க முடியும். இதை விட நமது வாழ்க்கை அதன் பிறவிப் பொருளை அடைவதற்கு வேறு வழி இருக்கிறதா?

– வினவு

11 மறுமொழிகள்

 1. மிக்க நன்றி. மிக தாமதமானாலும் நன்றாக விளக்கி இருக்கின்றீர்கள் !!!

 2. //மறுபுறம் உலகமயம் உருவாக்கியிருக்கும் வண்ணமயமான தூண்டில் புழு வாழ்க்கை வசதிகளும் கூட இந்த தயக்கத்தினை ஒரு நீதி போல அறம் போல பேசவைக்கின்றன. தனிநபரின் காரியவாத வாழ்க்கை கம்யூனிசத்தின் கூட்டுத்துவ இலட்சியத்தினை தவறு என்று பேசும் அடிப்படையை தோற்றுவிக்கிறது.//

  இது என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது

 3. நடைமுறை உதாரணங்களுடன் விளக்கியுள்ளது அருமை.நீந்தவேண்டுமென்றால் தண்ணீரில் குதித்துதான் ஆகவேண்டும்.முதலாளித்துவ பெரும் பிணிக்கடலை கடக்க மார்க்சியம் என்ற life boat தயாராகவுள்ளது!

 4. கட்சியில் சேர்ந்து மார்க்சீயம் படிப்பது என்பது மதம் மாறிய பின்னர் அந்த மதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது போன்றது .

  உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் , அந்த மதத்தின் சிறப்புகளை மட்டும் சொல்வார்கள் . பிழைகளுக்கு காரணம் கற்பிப்பார்கள்.

  ஆனால் வெளியே இருந்து தத்துவங்களை புரிந்து கொள்ள முயன்றால் நிறை குறை இரண்டையும் தெரிந்து கொள்ளலாம் .
  உங்கள் மூளை கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியின் வாழ்க்கை முறையை ஒப்பிடும் .

  • தண்ணீரில் குதிக்காமல் நீந்தமுடியாது, நீங்கள் குறிப்பிட்ட முறையில் வெளியே நின்று கற்ப்பது என்பது கரையில் நின்று வேடிக்கை பார்ப்பதுதான் ராமன்

 5. தோழர்களே கட்டுரை அருமை. என்னைப் போன்றவர்களுக்கு சற்று உரைக்கும் வகையில் தான் கட்டுரை உள்ளது.

  ஒவ்வொரு பதிவையும் எவ்வளவு பேர் பார்வையிட்டுள்ளனர் என்பதைக் காட்டும் பட்டியை சேர்த்திருந்தீர்கள். இப்பொழுது தென்படவில்லை. அதை மீண்டும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

 6. அடிப்படை அறிந்திருக்க வேண்டுமல்லவா …? பொருள் முதல் வாதத்தை கற்பது என்பதும் — அதை தற்கால புரட்சிகர நடைமுறைகளுக்கு பொருத்துவது என்பதும் – இயக்கவியல் .. இது ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு அடிப்படையானது — கம்யூனிசத்திற்கு முன்னேறி செல்ல விரும்பும் அனைவரும் கம்யூனிசத்தை கற்றறிந்தாக வேண்டும் என்பதே – முதலாவதும் , மிகவும் இயற்கையானதுமான பதிவாய் தோன்றுகிறது என்று தோழர் லெனின் கூறுகிறார் … !

  அறிவின் கூட்டு தொகையில் இருந்து விளைந்த வினைப்பயனே ” கம்யூனிசம் ” என்றும் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவை பெற்று உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொள்ள பயிற்சி கொண்டால் மட்டுமே கம்யூனிஸ்டாக முடியும் — அந்த பயிற்சி கிடைக்க ஊன்றுகோல் தான் கட்சியில் இணைவது … !

  முழுமையான அறிவு பெற : புத்தகங்களில் காணப்படும் ” முன் தயாரிக்கப்பட்ட அறிவு ” மற்றது புலனுணர்வான பகுதி அறிவு — இரண்டுமே ஒரு தலைப்பட்சமானது — இந்த இரண்டின் இணைப்பில் தான் பலமான ஒப்பீட்டளவில் முழுமையான அறிவை பெற முடியும் என்று – மா-வோ .. கூறியதையும் உற்று நோக்க வேண்டும் …

  புரட்சிகரமான அறிவு என்பது கட்சியின் பயிற்சி மூலம் படிப்படியாக கிடைப்பது — நடைமுறைக்கு வருவது — இது இல்லையென்றால் எந்த புரட்சியும் நடத்துவது ஈடுபடுவது கடினம் தான் …!! படியுங்கள் — அதன் வழியே பயிற்சி பெறுங்கள் தக்க வழி காட்டலின் படி — உண்மைகள் புலனாகும் …!!!

 7. கட்சியில் சேந்து மாக்சியம் படிப்பதற்கு டிரைலர் போன்று நீங்களே ஒரு கம்யூனிசத் தொடர் ஆரம்பித்தால் நல்லது இல்லையா?

 8. இந்த வாதத்தைதான் பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும்ொல்கின்றனர்.எங்கள் ஸாகாவில் பயிற்சி பெ ற்ற வர்களே இந்து மதத்தின்பெருமை களை புரிந்து .

 9. அய்யா, ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பதை மறந்து விட்டீர்கள் போலும். ஒரு 15 அல்லது 20 வரிகளில் சொல்லவேண்டியதை 200 வரிகள் இழுத்து விட்டீர்கள். நீங்களே திருப்பி கருத்தூன்றிப் படித்துப் பாருங்கள். புரியும். மற்றபடி, கட்டுரையின் உள்ளடக்கத்தில் முழுமையாக உடன் படுகிறேன். நன்றி!

 10. என்னய்யா இது வழ வழ கொழ கொழ தனமான பதிவு…. மார்சியம் வெறும் தியரி மட்டும் கிடையாது…. அது முதலாளித்துவ அரசியலை மாற்றி சோசியலிச அரசாங்கத்தை உலகம் முழுக்க அமைப்பதற்கான நடைமுறை வழிகாட்டி அறிவு பெட்டகம்… ஆகவே அத்தகைய அரசியல் பொருளாதார மாற்றத்துக்கு கண்டிப்பாக ஒரு கம்யுனிஸ்டு கட்சி அவசியம்…. அந்த கட்சி இன்றி…., மார்சியத்தை பயிலுவதால் என்ன பயன் ? இப்படி தானே எளிமையாக அதே நேரத்தில் கருதாழதுடன் இருக்கவேணும் உங்க பதில்…..?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க