விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !

மார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம் அறியவேண்டியவை பல...படித்துப் பாருங்கள்!

மார்க்ஸ் பிறந்தார் – 19
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 2

மார்க்ஸ் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு உறுதியான ஆதரவளிக்கும் நிலைக்கு மாறியதன் விளைவாக அவர் முதலாளிவர்க்க ஜனநாயகவாதிகளுடன், முதலாவதாகவும் முதன்மையாகவும் அர்னோல்டு ரூகேயுடன் முறித்துக் கொள்ள நேரிட்டது.

ரூகே எவ்வளவுதான் தீவிரவாதத்தைப் பேசினாலும் அவர் சுதந்திரத்தைப் பற்றிக் கனவு காண்கின்ற, ஆனால் அதற்குச் சிறிது கூட தியாகம் செய்ய விரும்பாத அற்பவாதியாகவே இருந்தார். Deutsch-Französische Jahrbücher இன் விற்பனையின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்குமென்று அவர் எதிர்பார்த்தார். இந்த நம்பிக்கைகள் தகர்ந்த பொழுது அவர் மனச்சோர்வுக்கு ஆளானார். கடைக்காரனைப் போல எல்லாவற்றின் மீதும் சந்தேகங் கொண்டார். வெளியீட்டுத் துறையில் மார்க்சின் ஒவ்வொரு முன்முயற்சியும் தன்னுடைய பணத்தைத் திருடுவதற்குச் செய்யப்படும் முயற்சி என்று ஓயாமல் சந்தேகப்பட்டார்.

அர்னோல்டு ரூகே

மார்க்ஸ் “பண விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக இருப்பார்” (மேரிங்); எனவே ரூகே அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயங்கவில்லை. மார்க்ஸ் மிகவும் வறுமையான நிலையில் இருந்தார்; அவர் குடும்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது (1844 மே மாதத்தில் அவருக்குப் பெண்குழந்தை பிறந்திருந்தது); ஆனால் ரூகே அந்த Jahrbucher இன் பிரதிகளை மட்டுமே அவருக்கு ஊதியமாகக் கொடுத்தார்.

எனினும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்க்சின் கம்யூனிசத்தின் விளைவாக ரூகேயிடம் அற்பவாதியின் பீதி தோன்றியது.

Jahrbücher -இன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிகமான தீவிரத்துடன் ஈடுபட்டார். முக்கியமான விஷயம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தோன்றியது-புதிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள் விரித்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால் மார்க்சுக்கு இது ஆரம்பம் மட்டுமே. அவர் மனிதகுலத்தின் மொத்தக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மறுவிளக்கம் செய்கின்ற புதிய நோக்கைத் தேடிக் கொண்டிருந்தார்.

படிக்க :
♦ மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

அவர் ஏராளமாகப் படித்தார்; புதிய திட்டங்கள் ஒவ்வொன்றாக அவருடைய மூளையில் உதித்தன. முதலில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றித் தன்னுடைய பூர்த்தியடையாத கையெழுத்துப் பிரதிக்குத் திரும்புவதற்கு அவர் விரும்பினார்; அதைக் கம்யூனிஸ்ட் நோக்கிலிருந்து இப்பொழுது திருத்தி எழுதுவதற்கு விரும்பினார். பிறகு அவர் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் மூழ்கிவிட்டார்; கன்வென்ட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்று மிகவும் விரும்பினார். கடைசியில் அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் அரசியல் பொருளியலாளர்களைப் பற்றிய விமர்சனத்துக்குத் திரும்பினார்.

அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும். தான் செய்த வேலையைப் பற்றி அவர் ஒருபோதும் திருப்தி அடைந்ததில்லை; அவர் எவ்வளவு அதிகமாகக் கற்றாரோ, அவ்வளவுக்கு அறிவுக் கடல் எல்லையற்றதாகத் தோன்றியது. அவர் எத்தனை பிரச்சினைகளைத் தன்னுடைய அறிவில் தீர்த்தாரோ, அந்த அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் அவருக்கு முன்னால் தோன்றின.

கையெழுத்துப் பிரதிகள் பூர்த்தியாகாமல் நின்றுவிட்டன, அவருடைய சிந்தனை புதிய கருத்துக்களைப் பிரசவித்துக் கொண்டு மேலும் முன்னோக்கிச் சென்றது. ஒரு பிரச்சினையின் நுட்பமான அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் தான் எழுதிய எதையுமே வெளியிடாதபடி சுய-விமர்சனம் என்ற பிசாசு மார்க்சைத் தடுத்தது.

“அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும்.”

மார்க்சின் ஆராய்ச்சிகளில் இந்தக் காலகட்டத்தை அர்னோல்டு ரூகே பின்வருமாறு வர்ணிக்கிறார்: “அவர் ஏராளமாகப் படிக்கிறார், அசாதாரணமான தீவிரத்துடன் பாடுபடுகிறார், அவரிடம் விமர்சனத் திறமை இருக்கிறது, ஆனால் அது சமயங்களில் வேண்டுமென்றே சீர்குலைந்த இயக்கவியலாக மாறிவிடுகிறது; அவர் எதையும் முடிப்பதில்லை, ஒன்றை விட்டு இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறார், மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிப் போய்விடுகிறார்.”(1)

இப்படி அசாதாரணமான தீவிரத்தைக் கொண்ட விஞ்ஞான ஆராய்ச்சியும் தன்னுடைய சாதனையைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் மார்க்சிடம் மனச் சோர்வை ஏற்படுத்தின. ஆனால் அதைப் பற்றி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் அதிகமாகப் பாடுபடுவது, தொடர்ச்சியாகச் சில இரவுகளில் தூக்கமில்லாமற் படிப்பது என்ற ஒரு தீர்வு மட்டுமே அவருக்குத் தெரியும். “மார்க்ஸ், குறிப்பாக தன் உடல்நிலை சீர்குலைகின்ற வரை அவர் பாடுபடும் பொழுது, மூன்று அல்லது நான்கு இரவுகள் சேர்ந்தாற்போலத் தூங்காதிருக்கின்ற பொழுது அதிகமான எரிச்சலும் கோபமும் உள்ளவராக இருக்கிறார்”(2) என்று ரூகே எழுதினார்.

இந்த ஆராய்ச்சிகளின் முக்கியமான விளைவு ஒரு பெரிய பூர்த்தியடையாத நூலாகும். அது 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் மார்க்சியம் தோன்றிய “பிரசவ வேதனையின்” சுவடுகள் இன்னும் காணப்படுகின்றன. ஹெகல் மற்றும் ஃபாயர் பாஹிடமிருந்து அவர் கடன் வாங்கிய சொற்பிரயோகத்தில் இதைக் குறிப்பாகக் காண முடியும். ஆனால் பழைய தத்துவஞானக் கருத்தமைப்புகளின் மக்கிப்போன ஓட்டிலிருந்து சமூகத்தைப் பற்றி அடிப்படையான புதிய கருத்தின் முளைகள், உலகம் இதுவரை அறிந்திராத புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு அணுகுமுறையின் முளைகள் வெடித்துக் கிளம்பின.

படிக்க :
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

இதில் முதல் தடவையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக-அரசியல் அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மனிதன் மொத்த ஆராய்ச்சியின் மையமாக இருக்கிறான்; இயற்கை, சமூகம் ஆகிய இரண்டுடனும் அவனுடைய சிக்கலான உறவுகளின் மொத்தப் பல்தொகுதியுடன் தோன்றுகிறான். உண்மையான, முரணில்லாத மனிதாபிமானம் என்ற நோக்கில் முதலாளித்துவச் சமூகத்திலுள்ள மனிதத் தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை ஆசிரியர் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இதில் அரசியல் போராட்டக்காரருடைய ஆத்திரமும் வெறியும் மாபெரும் சிந்தனையாளருடைய முதிர்ந்த ஆராய்ச்சியுடன் இணைந்திருக்கின்றன.

இதில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றி மெய்யான அணுகுமுறை சமூக வளர்ச்சியின் தொலைவிலுள்ள காட்சிகளைப் பற்றிய பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் மிகவும் ஆழமான பிரச்சினைகளை எழுப்புகிறது;அவற்றின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற நூலின் மீது எல்லா நாடுகளையும் சேர்ந்த தத்துவஞானிகள், பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் இப்பொழுது குறையாத அக்கறை காட்டுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.

1844 பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடு

கையேடுகளைப் பற்றி அதிக விவரமான வர்ணனை அல்லது மிகவும் புறநிலையான பொருள் விளக்கம் கூட அவற்றின் சிறப்புமிக்க கருத்து வளத்தை எடுத்துக்காட்டாது. ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள், வறட்டுக் கோட்பாட்டுத் திட்டங்களின் குறுகிய தன்மை ஆகிய தடைகளை நொறுக்கித் தள்ளுகின்ற, இயற்கையைப் பற்றிய விளக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்திலும் கருத்துமுதல்வாதத்தின் கடைசி விலங்குகளை அகற்றுகின்ற தத்துவச் சிந்தனையின் துணிவுடைமையை, விரிந்த பரப்பை, கலையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு இப்புத்தகத்தை ஒருவர் படித்தால் (பல முறைகள்!) மட்டுமே முடியும்.

மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் தேட வேண்டும்- இம்முடிவுக்கு மார்க்ஸ் ஏற்கெனவே வந்து விட்டார் – என்ற கருத்திலிருந்து மார்க்ஸ் இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். அதை அவர் பின்வருமாறு வகுத்தளிக்கிறார்: “… தனிச் சொத்துடைமையின் இயக்கத்தில் இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் பொருளாதாரத்தில், மொத்தப் புரட்சிகர இயக்கமும் தன்னுடைய அனுபவ ரீதியான மற்றும் தத்துவஞான அடிப்படையைக் காண்கிறது.”(3)

மனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு – இதுதான் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை. மனிதனுடைய உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் “மொத்தமாக மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள் – தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் – மட்டுமே எஞ்சுகின்றன.(4)

ஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில் மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கின்ற உறவுகளின் இடத்தில் மார்க்ஸ் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வாழ்கின்ற உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில், பணம் தலைமையான, தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலகத்தில் தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான். அவனிடம் மூலதனமோ அல்லது வரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கிறான்; உழைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையையே மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் தொடக்க நிலையாக வைக்கிறார்.

தொழிலாளி பொருளாயதச் செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. மேலும் இச்செல்வம் தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி மூலதனம் என்ற முறையில் தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாக தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது. மார்க்ஸ் இந்த உண்மையை உழைப்பு அந்நியமாக்கப்படுதல் என்கிறார்.

தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்ற பொழுது அவனால் படைக்கப்படுகின்ற செல்வங்களின் உலகமும் அதிகரிக்கிறது; ஆனால் தொழிலாளியின் மீது இந்தச் செல்வத்தின் ஆட்சியும் அதிகரிக்கிறது. முதலாளி முன்னிலும் அதிகமான சக்தியைப் பெறுகிறான், தொழிலாளி முன்னைக் காட்டிலும் ஏழையாகிறான்; அவனுடைய உரிமைகள் முன்னிலும் அதிகமாகப் பறிக்கப்படுகின்றன.

படிக்க :
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

தொழிலாளி தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாகிறான். அவனுடைய உழைப்பின் திரட்டு மூலதனத்தின், பணவியல் செல்வத்தின் வடிவத்தை அடைகிறது. அது தொழிலாளியை வேலைக்கு வைத்துக் கொள்கிறது, அவன் ஜீவிக்கின்ற சாதனத்தைத் தருகிறது, அவனுடைய வாழ்கின்ற உழைப்பையும் அவன் வாழ்க்கையையுமே பயன்படுத்துகிறது.

தொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருள்களைப் படைக்கிறது; ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அது அரண்மனைகளைப் படைக்கிறது, ஆனால் தொழிலாளிகளுக்குச் சேரிகளை உற்பத்தி செய்கிறது. அது அழகைப் படைக்கிறது; ஆனால் தொழிலாளியை அவலட்சணமாக்குகிறது. அது மனிதர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வருகிறது; ஆனால் தொழிலாளர்களையே இயந்திரங்களாக மாற்றி விடுகிறது. அவன் செய்கின்ற உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவன் மூளை அழிகிறது.

இந்தத் தலைகீழான உலகத்தில் பொருள்கள் அவற்றைப் படைத்தவனை ஆட்சி செய்கின்றன; அங்கே மக்களுக்கு இடையிலான உறவுகள் பொருள்களுக்கு இடையிலான உறவுகளின் வடிவத்தில் தோன்றுகின்றன. இந்த உலகத்தை மார்க்ஸ் மூலதனத்திலும் அதற்குப் பூர்வாங்கமாக எழுதிய சில நூல்களிலும் பிற்காலத்தில் விரிவாக ஆராய்ந்தார். பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தோன்றிய பிம்பம் இவற்றில் இன்னும் அதிகத் தத்ரூபமான, கொடுமைமிக்க உருவரைகளைப் பெறுகிறது.

நாம் கையேடுகளுக்குத் திரும்பி மார்க்சினுடைய வாதத்தைப் பின்தொடர்வோம். தொழிலாளியின் உழைப்பின் பலன்களை அவனிட மிருந்து அந்நியப்படுத்துவது இந்தப் பிரச்சினையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது; அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.

இதன் பொருள் என்ன? தொழிலாளி தன்னுடைய சுதந்திரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை, அவனுடைய உழைப்பு சுய நடவடிக்கை அல்ல; அது பலவந்தப்படுகின்ற, கட்டாய உழைப்பு; அந்த நிகழ்வுப் போக்கின் போது தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான்.

இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்திரமாக வளர்க்கவில்லை; அவன் உடல் ஓடாகத் தேய்கிறது, அவன் தன் உடலைக் கெடுத்து அறிவை அழித்துக் கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஒரு உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனல் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது. மக்கள் உழைப்பை ஒரு சாபக்கேடாகக் கருதுவதிலும் அருவருப்புடன் அதைச் செய்வதிலும் பிளேக் நோயைக் கண்டு ஓடுவதைப் போல அதிலிருந்து தப்பியோடுவதிலும் உழைப்பு அந்நியமாகியிருக்கின்ற தன்மையை மிகவும் தெளிவாகக் காணலாம்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியே தான், அவனுடைய சாதாரணமான, அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது-உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை, உறக்கம், இதரவை-தொழிலாளி தன்னைச் சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப் பிறவியாக உணர்கிறான். “எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.”(5)

இப்படி உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளியின் சுய அந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடமிருந்து அந்நியமாதல், தொழிலாளி மற்றும் முதலாளியின் எதிரிடையான நிலைகள்.

அந்நியமாதல் மற்றும் உழைப்பு சுய அந்நியமாதல் பிரச்சினை குறித்து மார்க்சின் பகுப்பாய்வு பொருளாதார யதார்த்தத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனம் என்று எதிர்மறையான அம்சத்தில் மட்டுமே வழக்கமாகப் பாராட்டப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனத்தில், இருக்கின்ற நிலைமையைப் பற்றி மார்க்சினுடைய மதிப்பீட்டை, உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தைப் பற்றி அவருடைய கருத்துக்குப் பின்னால் உள்ள ஆக்க முறையான கொள்கை களை ஒருவர் தெளிவாகக் காண முடியும்.

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். அது வாழ்க்கை நடத்துகின்ற சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக, மனிதன் தன்னுடைய திறமைகளை முழுமையாகவும் அகல்விரிவாகவும் வளர்த்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுப் போக்காக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளே மிகவும் ஒட்டியிருக்கின்ற பொருளியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட குறிப்பேடுகளில் அந்நியப்படுத்தப்பட்ட மனிதனின் உலகம் மனிதனுடைய உண்மையான சமூக சாரம்சத்தின், அவனுடைய “உண்மையான இனப்பொது வாழ்க்கையின்”(6) கேலிச்சித்திரம் என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்தில், அதாவது ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளம் மார்க்ஸ் குறிப்பேடுகளின் பின்வரும் பகுதியில் சித்திரிக்கிறார்:

“மக்கள் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்: ஒவ்வொருவரும் தன்னுடைய உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தன்னையும் பிறிதொருவரையும் இரட்டிப்பாக உறுதிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நான்

1) …..அந்த நடவடிக்கையின் போது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்பாட்டையும் உற்பத்திப் பொருளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன்.

2) என்னுடைய உற்பத்திப் பொருளை நீங்கள் உபயோகிக்கின்ற அல்லது ரசிக்கின்ற பொழுது மற்றொரு மனித உயிருக்கு அவசியமான ஒரு பொருளைப் படைத்திருக்கிறேன் என்ற சாதனையைப் பற்றி நேரடியான மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்;

3) உங்களுக்கும் மனித இனத்துக்கும் இடையில் நான் இடையீட்டாளராக இருந்திருக்கிறேன், உங்களுடைய இருத்தலின் தொடர்ச்சியாக, உங்களின் அவசியமான பகுதியாக நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள், அப்படியே உணர்வீர்கள்…

4) என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட வெளிப்பாட்டில் உங்களுடைய வாழ்க்கை வெளிப்பாட்டை நான் நேரடியாகப் படைத்திருக்கிறேன், ஆகவே என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கையில் எனது உண்மையான இருத்தலை, என்னுடைய மனித, என்னுடைய சமூக சாராம்சத்தை நான் நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறேன், கைவரப் பெற்றிருக்கிறேன்.

“என்னுடைய உழைப்பு வாழ்க்கையின் சுதந்திரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். தனிச் சொத்துடைமைக்கு நடுவில் அது வாழ்க்கையை அந்நியப்படுத்தலே, ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கிறேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.”(7)

குறிப்புகள்:

(1) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 19.
(2) Ibid.
(3) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 297.
(4) Ibid., p. 266.
(5) Ibid., p. 275.
(6) Marx/Engels, Gesamtausgabe, Erste Abteilung, Bd. 3, S. 536.
(7) Ibid., S. 546-47. 284.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க