privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் - ஏன் ?

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

-

மார்க்ஸ் பிறந்தார் – 4

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:

இந்த அத்தியாயம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் செய்திகளை வரலாறாய் முன்வைக்கின்றது. கார்ல் மார்க்சின் பள்ளிப் பருவத்தை விரிவாக சித்தரிக்கிறார் நூல் ஆசிரியர். உருப்போட்டு படிக்கும் இன்றைய ஆங்கிலவழிக் கல்வியின் அதே மாதிரிதான் மார்க்சின் அந்தக் கால பிரஷ்யாவிலும் (ஜெர்மனி) இருந்துள்ளது. அந்தக் கல்வியில் சுமாரான மதிப்பெண்களையே வாங்குகிறார் மார்க்ஸ். பள்ளியாண்டின் இறுதியில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள் என்று அனைத்து மாணவர்களும் கட்டுரை எழுதுகின்றனர். மார்க்ஸ் அதில் எதை தெரிவு செய்கிறார்? படித்துப் பாருங்கள்!

மார்க்சின் தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் அரசியல் ரீதியான வழக்குகள், கருத்துக்கள் மார்க்சுக்கு அறிமுகமாகின்றன. குடும்ப நண்பர் ஒருவர் ஷேக்ஸ்பியர், ஹோமர் போன்றோரின் இலக்கியங்களை மார்க்சுக்கு படித்துக் காட்டுகிறார். சுதந்திரத்தை நேசிக்க கற்றுக் கொடுக்கும் கலைத்துறை அவருக்கு இளம் வயதிலேயே அறிமுகமாகிறது.  அதனால்தான் அவர் சுயநலம் பெற்றெடுத்த அற்பவாதத்தை அடியோடு வெறுக்கிறார். மார்க்சுடன் படித்த மாணவர்களிடமிருந்து கத்தோலிக்க மதகுருமார்களும், வழக்கறிஞர்களும், மருத்துவர்களும் உருவாகும் போது மார்க்ஸ் மட்டும் மனித குலத்திற்கு தொண்டாற்றும் தத்துவப் பணியை மேற்கொள்ளுகிறார். அந்த தெரிவின் சுவடுகளை இளம் மார்க்சின் பள்ளி நாட்களில் பார்க்கிறோம்.

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”- என்று பள்ளி இறுதி ஆண்டு கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிடுமளவு அவரது இளம் பருவ வரலாற்றுச் சூழல் எப்படி பங்காற்றியது? படித்துப் பாருங்கள். கார்ல் மார்க்சின் வரலாற்றைப் பின் தொடர்ந்தும் நீங்கள் மார்க்சியத்தை கற்க முயலலாம். தொடர்ந்து படியுங்கள்!

2. வாழ்க்கைத் தொழிலைத் தேடல்

மகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து?
போராட்டம்

-கார்ல் மார்க்ஸ்

சந்தகாலத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்த ஒரு பகற்பொழுதில் வாட்டசாட்டமான உடல், கறுப்புத் தலைமுடி சகிதம் ஒரு நபர் முகத்தில் புன்சிரிப்புடன் கைகளில் அணையாடைகள் சுற்றப்பட்டிருந்த குழந்தையைத் தாங்கி டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்துக்கு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் அதிகாரிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அந்த அதிகாரி இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் தான் வழக்கமாகக் கேட்கும் கேள்விகளைக் கேட்டார். பிறகு தன்னுடைய இறகுப் பேனாவை எடுத்துக் காகிதத்தில் எழுதினார்

“டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரியர் நகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் ஜனன, திருமண, மரணப் பதிவாளராகிய எனக்கு முன்னால் 1818-ம் வருடம் மே மாதம் 7-ம்  தேதியன்று பிற்பகல் 4 மணிக்கு டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்ஸ் (வயது 37, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழில்) ஆஜராகி ஒரு ஆண் குழந்தையைக் காட்டினார். அந்தக் குழந்தை வழக்குரைஞராகத் தொழில் செய்கின்ற டிரியரில் குடியுரிமைச் சான்றிதழுடைய திரு. ஹென்ரிஹ் மார்க்சுக்கும் அவருடைய மனைவி ஹென் ரியேட்டா பிரெஸ்பார்க்குக்கும் மே மாதம் 5ந் தேதியன்று அதிகாலையில் 2 மணிக்கு டிரியரில் பிறந்ததாகத் தெரிவித்தார். தங்களுடைய குழந்தைக்குக் கார்ல் என்று பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள்”.(1)

அதிகாரி பிறப்புச் சான்றிதழில் கையொப்பமிட்டு அதைத் தகப்பனாரிடம் கொடுத்தார். அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய ஆவணம், பெரியவரானதும் சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கின்ற ஒருவர் மற்ற எவரையும் காட்டிலும் அந்த நாட்டுக்கு அதிகமான புகழைக் கொண்டு வரப் போகின்றவர் பிறந்திருப்பதை அறிவிக்கின்ற சான்றிதழ் என்பது அந்த அதிகாரிக்குத் தெரியாது. மகிழ்ச்சியில் திளைத்த தகப்பனாரும் அப்படி நினைக்கவில்லை.

மார்க்ஸ் பிறந்த வீடு இருந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது

அவர் தன் குடும்பத்தை நோக்கி, புரூக்கென் ஹாஸேயில் 664ம் எண்ணுடைய சிறிய, இரண்டு மாடி வீட்டை நோக்கி நடந்தார்; எதிரில் வந்தவர்கள் அவருக்குப் பணிவோடு வணக்கமும் வாழ்த்தும் கூறினார்கள்; அவரோ ஆனந்தத்தில் தன்னை மறந்திருந்தபடியால் எப்படியோ ஒரு வழியாக அவர்களுக்குப் பதில் வணக்கம் கூறினார்.

அந்த நகரத்தில் ஹென்ரிஹ் மார்க்சை எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அவருடைய உயர்ந்த கல்வித் தகுதிகளை, குறை காண முடியாத ஒழுக்கத்தை, பரோபகார உணர்ச்சியை – குற்றமற்ற நபர் ஆபத்தில் சிக்கிவிட்டால் தன்னுடைய சட்டத் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி அவருக்கு உதவியளிக்க அவர் எப்பொழுதுமே தயாராக உள்ளவர் – அவர்கள் மிகவும் மதித்தார்கள்.

யூத மத குருக்களின் குடும்பத்தில் பிறந்த ஹென்ரிஹ் மார்க்ஸ் யூத சமயத்தைக் கைவிட்டு லூதரன் சமயத்தை ஏற்றுக் கொண்டார்.

மார்க்ஸ் தம்பதிகளின் இல்லத்தில் கிறிஸ்துவப் புனிதர்கள் வணங்கப்பட்ட போதிலும் வொல்தேர், ஷில்லர், ராளபீன், ரூஸோ, லேஸ்ஸிங், ஸ்பினோஸா, கான்ட் ஆகியோர் இன்னும் அதிகமாகவே மதிக்கப்பட்டார்கள். ஹென்ரிஹ் மார்க்ஸ் ஐரோப்பியப் பண்பாட்டின் செழுமையான பாரம்பரியத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டதுடன் தன் அன்புக்குரிய மகன் கார்லிடம் அதை ஒப்படைக்கவும் செய்தார். ஆகவே கார்லின் “தொட்டிலில் கலைத் தேவதைகள் வைத்த” (மேரிங்) பலவிதமான திறமைகளும் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைவதற்கு முழு வாய்ப்புக் கிடைத்தது.

மார்க்சின் குடும்பம் பிரிவி கவுன்சிலர் பேரன் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது இளைஞரான மார்க்சின் நற்பேறு என்றே குறிப்பிட வேண்டும். வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அவருடைய வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கப் போகிறார்கள்; முதலாவதாக, அக்குடும்பத்தின் தலைவர் – அவர் மார்க்சுக்கு இரண்டாவது தகப்பனாரானார். இரண்டாவதாக, அவருடைய கடைசி மகன் ஏட்கர்- மார்க்சின் குழந்தைப் பருவ நண்பர், பள்ளி நாட்களில் அவருடைய விளையாட்டுத் தோழர் (1840-களின் இறுதியில் அவர் ஒரு சமயத்தில் கம்யூனிஸ்டு சங்கத்துக்கு நெருக்கமாக வந்தார்); கடைசியாக, ஏட்கரின் சகோதரி ஜென்னி. மார்க்சின் எதிர்கால மனைவி வாழ்க்கை முழுவதும் அவருடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி.(2)

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் குடும்பத்தினருடன்

லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் ஒரு கவர்ச்சிகரமான பிரமுகர். அவர் ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மானிய உயர்குடியில் பிறந்தவர். அவர் அக்காலத்தில் மிகவும் அதிகமாகப் படித்தவர்களில் ஒருவர், கவிதைப் பிரியர். கார்லின் தகப்பனார் வொல்தேரையும் ராளனேயும் அவருக்கு அறிமுகப்படுத்தினார் என்றால் லுட்விக் வான் வெஸ்ட்ஃபாலன் தான் மனப்பாடமாக அறிந்திருந்த ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கார்லிடம் (ஜென்னியும் ஏட்கரும் உடனிருக்க) படித்துக் காட்டினார். முதியவரான வெஸ்ட் ஃபாலன் மார்க்சிடம் கவிதை ரசனையைத் தூண்டி அவருடைய அழகியல் ஈடுபாடுகளை வளர்த்தார். சான்-சிமோனைப் பற்றி மார்க்சிடம் முதலில் எடுத்துக் கூறியவர் அவரே.

மார்க்சினுடைய அறிவைச் சமூக விஷயங்களில் திருப்பி அன்றைய சமூக அமைப்பைப் பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையை முதலில் தூண்டியவர் ஒருவேளை வெஸ்ட்ஃபாலனாக இருக்கலாம். மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் தன்னுடைய முதல் ஆராய்ச்சியை – டாக்டர் பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை – என்னுடைய அன்புமிக்க, தந்தையைப் போன்ற நண்பருக்குச் சமர்ப்பித்தது தற்செயலானதல்ல. அவர் தன்னுடைய சமர்ப்பணத்தில் வெஸ்ட்ஃபாலனை “காலம் முன்னோக்கி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காலடியையும் உண்மையின் உற்சாகத்துடனும் கவனத்துடனும் வாழ்த்துபவர்” என்றும் “பின்னோக்கி இழுக்கும் ஆவிகளுடைய இருண்ட நிழல்களுக்கு முன்னால் ஒருபோதும் பின்வாங்காதவர்”(3) என்றும் வர்ணித்தார். இளம் மார்க்சுக்குத் தன்னுடைய சொந்தக் குடும்பத்தில் அல்லது பள்ளிக்கூடத்தில் கிடைத்ததைப் போன்ற வளமான ஆன்மிக உணவு வெஸ்ட்ஃபாலனுடைய பழைய இல்லத்தில் கிடைத்தது என்பதில் ஐயமில்லை.

அந்த உயர்நிலைப் பள்ளியில் மார்க்சின் ஆன்மிக வளர்ச்சிக்கு அதிகமான உணவு கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் பள்ளிக் கூடக் கல்வி முறை உருப்போடுதல், ஒப்பித்தல் என்ற ‘பழைய மரபுகளுக்கு’ ஏற்பவே நடத்தப்பட்டது. மதப் பாடங்கள், வரலாற்று விவரங்கள், கணிதப் பாடத்தில் சூத்திரங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதிலே மனப்பாடம் செய்வது, அதைத் துல்லியமாக ஒப்பிப்பது-மாணவர்களிடம் இந்தத் திறமையையே ஆசிரியர்கள் மிகவும் மதித்தார்கள். கற்பிக்கப்பட்டவற்றைத் தடங்கல் இல்லாமல் ஒப்பிக்கக் கூடிய, “புனித நூலில்’ அடங்கியிருக்கும் அழிவில்லாத உண்மைகளைத் திருத்தமான கையெழுத்தில் எழுதக் கூடியவனே அவர்களுடைய கருத்தின்படி சிறந்த மாணவன். சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனைப் பாய்ச்சல், பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறை இவை அனைத்தும் சிறப்புத்தகுதிச் சின்னங்களல்ல, குறைகள் என்றே அதிகமாகக் கருதப்பட்டன.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறை மாணவனின் ஆளுமையை வளர்ப்பதைக் காட்டிலும் அதை ஒடுக்கவே செய்தது. அது விஞ்ஞானங்களைப் படிக்கின்ற ஆர்வத்தைத் தூண்டவில்லை, அலுப்பூட்டுகின்ற கோட்பாடுகளின் தொகுதி என்ற முறையில் வெறுப்பையே அதிகமாக ஏற்படுத்தியது. கற்பிக்கப்பட்ட பாடங்களை மறுக்க முடியாது, அவை முடிவானவை, கண்டிப்பான தன்மையைக் கொண்டவை. இவை மாணவர்களுடைய மனங்களைக் கெடுத்தன. முயற்சியற்ற, அடுத்தவரை நம்பி வாழ்கின்ற சிந்தனையை, அடுத்தவர்களுடைய கருத்துக்களைத் திருப்பிக் கூறுகின்ற, “அங்கீகரிக்கப்பட்டவற்றுக்கு” வணக்கம் செலுத்துகின்ற பழக்கத்தை வளர்த்தன. ஆகவே பள்ளிக்கூடம் மாணவர்களுடைய கருத்தில் விஞ்ஞானத்தின் வன்மையை அரித்தழித்தது, ஏனென்றால் அது எதேச்சாதிகார சிந்தனை முறையை, விதிகளைக் கொண்டு சிந்திக்கின்ற முறையை வளர்த்தது. உண்மையைப் போற்றுவதற்குப் பதிலாக அது மெய்மைகள் அழியாதவை என்ற நம்பிக்கையை வளர்த்தது; சுதந்திரமான முடிவுகளைத் தேடுகின்ற ‘சிந்தனை விசாரத்துக்குப்’ பதிலாக அது அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உருப்போடுகின்ற சித்திரவதையை ஏற்படுத்தியது.

மார்க்ஸ் கல்வி பயின்ற டிரியர் பள்ளி அத்தகைய கல்வி நிலையங்களில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்று எனலாம்; ஏனென்றால் அங்கே அநேகமாக ஒரு மிதவாத உணர்ச்சி நிலவியது. மார்க்சின் ஆசிரியர்களில் சிலர் தங்கள் துறையில் பிரபலமானவர்களாக இருந்தார்கள்: உதாரணமாக, யோஹன் ஹீகோ விட்டென்பாஹ் (தலைமை ஆசிரியர்) பிரெஞ்சு அறிவியக்கத்தின் கருத்துக்களை ஆதரித்தார், டிரியர் நகரத்தின் வரலாற்றாசிரியரான அவர் கேதேயுடன் தனிப்பட்ட பழக்கம் உடையவராக இருந்தார். முன்னேற்றத்திலும் மனிதனுடைய மேம்பாட்டிலும் தன்னுடைய மாணவர்கள் புனிதமான நம்பிக்கை வைக்கும்படி அவர் அரும்பாடுபட்டார். கணிதம் மற்றும் பெளதிகவியல் ஆசிரியரான யோஹன் ஷ்தேய்னின்கர் போலீசுத் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தார்.

ஆனால் இந்த ஆசிரியர்கள் கல்வி போதனையின் தன்மை, நோக்கங்கள் மற்றும் முறைகளில் கணிசமான எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மையே. ஆசிரியர்கள், மாணவர்களுடைய சிந்தனை சரியான வழியில் செல்வதை உறுதிப்படுத்துவதற்கென்று பிரஷ்ய அரசாங்கம் அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. அந்த நோக்கத்துடன் அரசாங்கம் விஸ்டுஸ் லியோர்ஸ் என்பவரைப் பள்ளிக்கூடத்தின் இனண இயக்குநராக நியமித்திருந்தது. அவருடைய பிற்போக்குக் கருத்துக்கள் பிரசித்தமானவை. அரசருக்கும் நாட்டுக்கும் அரணாகவிருந்த படித்த அற்பவாதிகளே அந்த உயர்நிலைப் பள்ளி தயாரிக்க வேண்டும். அதைத்தான் அது செய்தது.

மார்க்ஸ் அந்தப் பள்ளியிலிருந்து விலகிய சமயத்தில் அவருடைய வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தார்கள் அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வயது பத்தொன்பதிலிருந்து இருபத்தேழு வரை இருந்தது. அதாவது அவர்கள் பள்ளியில் படிக்கின்ற வயதைக் காட்டிலும் அதிக வயதானவர்கள். அந்த மாணவர்கள் சுறுசுறுப்பில்லாதவர்கள், அநேகமாக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவர்கள். இவர்களில் பதின்மூன்று மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தார்கள்.

மார்க்சுடன் படித்த மாணவர்களில் பலர் குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களேச் சேர்ந்தவர்கள். அவர்கள் குருட்டுத்தனமான மதப்பற்றில் மூழ்கியிருந்தார்கள். மதகுருவின் வேலையே எதிர்காலத்தைப் பற்றி அவர்களுடைய கனவுகளின் சிகரம். அந்த வகுப்பைச் சேர்ந்த 25 கத்தோலிக்க மாணவர்கள் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரைகளை ஆராயும் பொழுது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

அவர்களுடைய கனவுகள் நனவாயின. 1835-ம் வருடத்தில் டிரியர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதித் தேர்வை முடித்து வெளியேறிய மாணவர்களில் பிரஷ்யாவுக்கு 13 கத்தோலிக்க மத குருக்களும் 7 வழக்குரைஞர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளும் 2 டாக்டர்களும் கிடைத்தனர். அந்த வருடப் பள்ளியிறுதி வகுப்பு கோஷ்டி உலகத்துக்கு ஒரு கார்ல் மார்க்சைக் கொடுக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்புடைய மாணவர் என்று யாரும் கருதவில்லை. அவர் எல்லாப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றார்; எதிர்காலத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் படைக்கப் போகின்ற மாணவர் வரலாற்றுத் தேர்வு எழுதிய பொழுது மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களைத் தான் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

இதைப் பற்றி ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆசிரியர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்கள் – மார்க்சுக்கு அவை பொருந்தவில்லை. அவருடைய சிந்தனைகளின் தற்சிந்தனை அவர்களைப் பயமுறுத்தியது. ஒரு பிரச்சினையின் மூலவேர்களை அறிவதற்கு ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக அறிந்து கொள்வதற்கு, தன்னுடைய சிந்தனைகளை – சிறுதரமாக, இன்றி – தத்ரூபமாக வர்ணிப்பதற்கு அவர் செய்த முயற்சியை அவர்கள் கண்டித்தார்கள். அவை ‘மிகையான அலங்கார நடை’, “அதிகமான பளுவை அவசியமில்லாமற் சுமத்துதல்”, “சலிப்பூட்டும் சொற்குவியல்” என்று அவர்கள் கூறினார்கள். மார்க்சின் கையெழுத்து அழகாக இல்லாததும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. “வெறும் கிறுக்கல்” என்று இலத்தீன மொழி ஆசிரியர் புகார் செய்தார். அதை மற்ற ஆசிரியர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

இளைஞர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஏட்டுப்புலமை மார்க்சுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அது பிந்திய வருடங்களிலும் அவரிடம் நிலைத்திருந்தது. அவர் 1862இல் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஏட்டுப் படிப்பாளிகளில் ஒருவரை வர்ணித்தார். இந்த ஆசிரியர் வெளித்தோற்றத்தில் கெளரவமான மனிதர், தன் புலமையைப் பற்றி அகந்தைமிக்கவர், ஆனால் படிப்பது மற்றும் கற்பிப்பதில் உருப்போடுகின்ற முறைக்கு அப்பால் அவர் ஒருக்காலும் போவதில்லை. அவருடைய புலமை ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களைத் தேடி எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் கணிதப்பாடங்கள் எல்லாவற்றையும் படித்தவர், ஆனால் கணிதவியலை அறியார். இந்த ஏட்டுப்படிப்பாளி நேர்மையானவராக இருந்தால் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும். அவர் போலித் தந்திரங்களில் ஈடுபடாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்: இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள், மற்றவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்குச் சொந்த அபிப்பிராயம் இல்லை, நீங்களே சிந்தியுங்கள், இப்பிரச்சினையின் அடிமட்டத்துக்குப் போக முடியுமா என்று பாருங்கள்! “இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஒரு பக்கத்தில் மாணவர்களுக்குச் சில விவரங்கள் கிடைக்கும், மறு பக்கத்தில் அவர்களைத் தாமே உழைக்கும்படி உற்சாகப்படுத்தியதாகவும் இருக்கும்.”(4) ஆனால் ஏட்டுப்படிப்பாளியின் இயல்புக்கு மாறான ஒரு நிபந்தனையை நான் குறிப்பிடுகிறேன் என்று மார்க்ஸ் உடனடியாகக் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் படித்த உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு இந்தச் சித்திரத்தை ஒத்திருந்தார்கள் என்று சொல்வது கடினம். தனிப்பட்ட முறையில் அவர்கள் ஏட்டுப்படிப்பாளிகளாக இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு நபரின் தனிப்பட்ட உளவியல் அமைப்பு இங்கே முக்கியமல்ல, அந்த அமைப்பே முக்கியம். அது உயர்நிலைப் பள்ளிக் கல்வியில் ஏட்டுப்படிப்பையும் கடுவேதனையான சலிப்பையும் தவிர்க்க முடியாத முறையில் வளர்த்தது. கார்ல் மார்க்சின் ஆன்மிக உலகம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முறையினால் உருவாக்கப் பட்டதல்ல; அதற்கு மாறாக, சுதந்திரமான, மிகவும் தீவிரமான அறிவு உழைப்பில் அது உருவாயிற்று, நல்ல கவிதையையும் நகைச்சுவையையும் ரசிக்கின்ற சில நண்பர்களடங்கிய சிறு குழுவில், வெஸ்ட்ஃபாலன் குடும்பம் மற்றும் அவருடைய தகப்பனாரைக் கொண்ட குழுவில் அது உருவாயிற்று.

டிரியர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குரைஞரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் பதவி காரணமாக அரசியல் தன்மையைக் கொண்ட வழக்குகளில் பங்கெடுப்பது அவசியமாக இருந்தது. எனவே சமூக அநீதிகளைப் பற்றிய பயங்கரமான உண்மைகள் அவருக்குத் தெரியும். அவர் தன் மகனிடம் அவற்றைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் 1843இல் Rhenische Zeitung-இல் (ரைன் பத்திரிகை) எழுதிய கட்டுரையிலிருந்து இந்த உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் மோஸெல் பிரதேசத்தில் வசித்த மக்கள் தம்முடைய அபிப்பிராயத்தை ஒளிவு மறைவில்லாமலும் பகிரங்கமாகவும் தெரிவிக்க முடியவில்லை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார். 1830க்களில், அதாவது அவருடைய இளமைப் பருவத்தில் நடைபெற்ற சில நீதிமன்ற வழக்குகளை வர்ணிக்கிறார், “நல்ல குணத்தின் காரணமாக எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு குடிமகன் மாவட்டத் தலைவருடைய வேலைக்காரியிடம் பேசும் பொழுது” உன் எசமானர் நேற்று போதையில் இருந்தார் என்று கூறினார் (அந்த மாவட்டத் தலைவர் முந்திய நாள் மாலையில் அரசருடைய பிறந்த நாளைக் கொண்டாடிய பொழுது மகிழ்ச்சி நிரம்பிய நண்பர்கள் மத்தியில் அதிகமாகக் குடித்தார்). இந்தச் சாதாரண வார்த்தைக்காக அவர் டிரியர் போலீஸ் நீதிமன்றத்தில் பகிரங்கமாக விசாரணை செய்யப்பட்டார். ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல அவர் விடுதலை செய்யப்பட்டார்.”(5)

இந்த வழக்கில் மார்க்சின் தகப்பனார் வழக்குரைஞராகப் பங்கெடுத்தபடியால் அது மார்க்சின் நினைவில் பசுமையாக இருந்திருக்கலாம். அவருடைய “குறை சொல்ல முடியாத நேர்மை” மற்றும் “சட்டத் திறமைகளின்” விளைவாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை அடைந்தார்.

டிரியர் மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்கள் சட்டமன்றப் பிரதிநிதியின் மூலம் இளவரசருக்கு ஒரு மனுவைக் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். அந்தப் பிரதிநிதியின் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. “சில வருடங்களுக்கு முன்பு அரசு நிர்வாகம் மற்றும் பொருளியல் (cameralistics) பேராசியரான திரு. கெளஃப்மன்” ஒரு ரைன் பத்திரிகையில் “மோஸெல் பிரதேசத்தில் திராட்சைக் கொடி பயிரிடுபவர்களுடைய பரிதாபகரமான நிலையைப் பற்றி என்ற ஒரு கட்டுரையை எழுதினார். அரசாங்கம் அதைத் தடை செய்தது”.(6)

” இளம் மார்க்சைச் சூழ்ந்திருந்த அரசியல் நிலைமையை இந்த விவரங்கள் விளக்குகின்றன. 1830-களில் டிரியர் நகரத்தின் அறிவுஜீவிகளிடத்தில் பிரஷ்ய அரசாங்கத்துக்கு மிதவாத எதிர்ப்புத் தோன்றியது; அதில் கார்ல் மார்க்சின் தகப்பனார் சுறுசுறுப்பாகப் பங்கெடுத்தார். 1834ம் வருடத்தின் ஆரம்பத்தில் மிதவாதிகளின் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன, மர்ஸேல் கீதம் (பிரெஞ்சுப் புரட்சியின் கீதம்) பாடப்பட்டது. அங்கே செய்யப்பட்ட சொற்பொழிவுகளில் பிரெஞ்சுப் புரட்சியின் எதிரொலியைப் போலீஸ்காரர்களின் கூர்மையான காதுகள் கண்டுபிடித்தன. ஹென்ரிஹ் மார்க்சும் “ஆபத்தான” பாடல்களைப் பாடினார், சொற்பொழிவாற்றினார், அவை அதிகமாக மிதவாதத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இதுவே போதுமானதாக இருந்தது.

கார்ல் மார்க்ஸ் தன் தகப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார். அவரைப் பற்றி இனிய நினைவுகள் மகனின் முதிர்ச்சிக் காலத்திலும் நிலைத்திருந்தன. அவர் எப்பொழுதும் தன் தகப்பனாருடைய புகைப்படத்தைத் தன்னோடு வைத்திருந்தார். மரணப் படுக்கையிலும் அந்தப் புகைப்படம் அவரிடமிருந்தது. ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் மத அரசியல் துறைகளில் மிதவாதியாக இருந்தாலும் கடைசி வரையிலும் பிரஷ்ய தேசபக்தராகவும் மதப்பற்றுடைய கிறிஸ்துவராகவுமே இருந்தார். அவர் ஷீல்லரை மிகவும் போற்றினார். அவர் ஷீல்லரின் கதாநாயகர்களில் ஒருவரான நல்லவரும் உணர்ச்சிக் கனிவுடையவருமான மோரை ஒத்திருந்தார். அந்த மோர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளின் சுகத்தில் முழு மகிழ்ச்சியடைந்தார். தன்னுடைய அன்புக்குரிய மகனின் மேதாவிலாசமான திறமையை அவரால் இனங்காண முடிந்தது; ஆனால் கார்ல் தன்னுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார், அடக்கமான, ஆனால் ”மேன்மையான” தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார், அதன் மூலம் கௌரவமான மனிதர்களுக்கு மத்தியில் “தகுதிமிக்க இடத்தைப் பெறுவார், முன்னுதாரணமான குடும்பத் தலைவராக விளங்குவார் என்று அவர் எதிர் பார்த்தார்.

இந்த விஷயத்தில் இளம் மார்க்ஸ் தன்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் குறைவான உற்சாகத்தையே கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே அற்பவாத வாழ்க்கையின் ஆனந்தமான இலட்சியத்தை- அதன் அறிவுமிக்க நயமான வடிவத்தில் கூட- தீவிரமாக வெறுப்பதற்குத் தொடங்கியிருந்தார்.

இதன் முதல் நிரூபணத்தை மார்க்ஸ் தன்னுடைய 17-ம் வயதில் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரையில் நாம் பார்க்கின்றோம். வேலையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள் என்ற தலைப்பில் மார்க்ஸ் அக்கட்டுரையை எழுதினார்.

“எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறேன்” என்ற சொந்த விருப்பங்களை விவாதிப்பதற்கு இந்தத் தலைப்பு வாய்ப்புத் தருவதாகவே மார்க்சின் வகுப்பிலிருந்த சக மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதினார்கள். ஆனால் மார்க்ஸ் அப்படி நினைக்கவில்லை என்பது சுவாரசியமானதாகும். ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள புறநிலையான மற்றும் அகநிலையான நிபந்தனைகளைப் பற்றியும் வேலைக்கும் தனிப்பட்ட திறமைகளுக்கும் இடையிலுள்ள பொருத்தத்தைப் பற்றியும் விரிவான சமூக விவாதத்துக்கு இது ஒரு வாய்ப்பு என்று அவர் கருதினார், மார்க்ஸ் தன்னுடைய முதிர்ச்சிக் காலத்தில் முழுமையாகவும் சிறப்பான முறையிலும் வளர்த்த கருத்துக்கள் ஏற்கெனவே இளம் மார்க்சிடம் “கோடைக்காலத்தின் மின்னல் வீச்சைப் போலப் பளிச்சென்று ஒளி வீசின” (மேரிங்) என்பதை இங்கே பார்க்கிறோம்.

“நாம் செய்ய வேண்டியவை என்று நாம் நம்புகின்ற நிலைமையை நாம் எப்பொழுதுமே அடைய முடியாது; சமூகத்துடன் நம்முடைய உறவுகளே நாம் நிர்ணயிக்கக் கூடிய நிலைமையை அடைவதற்கு முன்னரே அவை ஏற்கெனவே நிறுவப்பட்டு விடுகின்றன.”(7)

அவருடைய வகுப்பு மாணவர்கள் வர்த்தகத்தைக் காட்டிலும் இராணுவ வேலையின் சாதகங்களை அல்லது இறைப்பணி மற்றும் மதகுரு வேலையில் ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாக விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் மார்க்ஸ் ஆணவத்தைத் தூண்டி பதவி ஆசை என்ற பேயை எழுப்புகின்ற வேலைகளின் போலியான பளபளப்பைப் பற்றியும் எதிர்கால வேலையைக் கற்பனையில் பிரகாசிக்கச் செய்கின்ற “பிரமைகளைப்’ பற்றியும் எழுதினார். நம்முடைய திறமைகளைப் பற்றிய சுய ஏமாற்றுதல்களுக்கு இதுவே காரணம் என்பது அவருடைய கருத்தாகும். “இத்தவறு நம்மை நாமே பழிவாங்கிக் கொள்ளச் செய்கிறது”, “அது வெளியுலகத்தின் கண்டனத்தைச் சந்திக்காவிட்டாலும் அத்தகைய கண்டனத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக பயங்கரமான வேதனையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறது, அத்தவறில் ஏற்படுகின்ற தன்னிகழ்ச்சி ஒருவருடைய இதயத்தை எப்பொழுதுமே அரிக்கிறது. இதயத்திலிருந்து ஜீவரத்தத்தை உறிஞ்சி மனித இன வெறுப்பு மற்றும் மன முறிவு என்ற நஞ்சுடன் கலக்கிறது”. (8)

” ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அந்தத் தேர்வு போலிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தால் “சுய ஏமாற்றுதலுக்கு’’ இரையாவது சுலபமே. உறுதியான கோட்பாடுகளே, வன்மையான, அசைக்க முடியாத நம்பிக்கைகளை இன்னும் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்ளாமலிருக்கும் இளைஞனைப் பொறுத்தமட்டில் மிகவும் ஆபத்தான வேலைகள். “வாழ்க்கையில் அதிகமான சம்பந்தமில்லாமல் சூக்குமமான உண்மைகளோடு சம்பந்தப்பட்டிருப்பவையே’’.(9)

இந்தச் சுவாரசியமான அறிவிப்பு இந்தக் கட்டத்தில் மார்க்சின் ஆன்மிக உலகத்தை நமக்கு விளக்குகிறது. ஏட்டுப்படிப்பு விஞ்ஞானத்தைப் பற்றி அவரிடம் ஏற்பட்டிருந்த அதிருப்திக்கும் ‘சூக்குமமான உண்மைகளை’ “வாழ்க்கை ஈடுபாட்டுடன்” இணைப்பதற்கு அவர் மேன்மேலும் விரும்பியதற்கும் இது ஒரு வேளை சான்றாக இருக்கக் கூடும்.

தனிப்பட்ட மனநிறைவு என்ற அற்பவாத இலட்சியத்தை மார்க்ஸ் பின்வரும் சொற்களில் மறுக்கிறார்: “ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.”(10)

ஆம். மனிதன் சுய பரிபூரணமடைவது நோக்கம், அதற்கு ஒவ்வொரு வேலையும் ஒரு சாதனம் என்பது உண்மையே. ஆனால் மனிதன் தன்னுடைய சக மனிதர்களின் பரிபூரணத்துவத்துக்காக, நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலமாக மட்டுமே தன்னுடைய சுய பரிபூரண நிலையை அடைய முடியும். நாம் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் மனிதகுலத்தின் நன்மை (ஆகவே நம்முடைய பரிபூரணத்துவமும்) நமக்கு “முக்கியமான வழிகாட்டியாக” இருக்க வேண்டும்.

வரலாற்றில் பொது நலத்துக்காகப் பாடுபட்டுப் புகழீட்டிய மாபெரும் மனிதர்களுடைய உதாரணத்தை மார்க்ஸ் தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக எடுத்துக் காட்டுகிறார், “மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவதே மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார் என்று அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.”(11)

தன்னுடைய சுயேச்சையான பாதையின் தொடக்கத்தில் மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பின்பற்றப் போகின்ற குறிக்கோளை வகுத்தளிக்கிறார்; “மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு!’’ இது மலர்கள் தூவிய பாதையல்ல, முட்கள் நிறைந்த பாதை என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார்; ஆனால் அது அவருக்குக் கவலையளிக்கவில்லை. தான் தேர்ந்தெடுத்திருக்கின்ற வேலையின் “பெரும் பொறுப்பின்” முழுச் சுமையையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

ஆனால் அவர் தன்னுடைய எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.” இங்கே மார்க்ஸ் மறுபடியும் அற்பவாத வாழ்க்கையின் “அற்பமான, வரையறைக்குட்பட்ட சுயநல மகிழ்ச்சியை” “பல கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமான ஒன்றின்”(12) மகிழ்ச்சியுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்.

இந்தக் கட்டுரை பெரிய அளவுக்கு இன்னும் ஒரு பள்ளி மாணவனுடைய கட்டுரைதான் என்பது உண்மையே. இங்கே மார்க்சினுடைய முந்திய ஆன்மிக வளர்ச்சி முழுவதையும் ஒன்று திரட்டப்பட்ட வடிவத்தில் நாம் பார்க்கிறோம், கான்ட் மற்றும் பிரெஞ்சு அறிவியக்கத்தின் தாக்கத்தை உணர முடியும்; அதில் இன்னும் உணர்ச்சிக் கனிவான, புனைந்துரையான குறிகள் இருக்கின்றன, “ஒரு பொதுவான நோக்கத்தைத்” தருகின்ற ‘பரம்பொருளைப்” பற்றிய குறிப்புகளும் “பரம்பொருளின் அறைகூவல்களும்” அதில் இருக்கின்றன. ஆனால் அந்தக் கட்டுரை முழுவதிலும் ஆசிரியரின் முத்திரை ஏற்கெனவே விழுந்திருக்கிறது, மார்க்சின் குணாம்சத்தில் மகிழ்ச்சி நிரம்பிய அம்சங்களான தற்சிந்தனையான வலிமையும் உணர்ச்சிக் குறியும் நடையிலும் உள்ளடக்கத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த இளைஞனுடைய கட்டுரை வாழ்க்கை முழுவதற்கும் வேலைத்திட்டத்தைக் (பொதுவான வடிவத்தில் என்ற போதிலும்) கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய இதயத் “துடிப்புக்குத்” தக்கவாறு தன்னுடைய எதிர்காலத்தைக் கணிக்கிறார்.

மார்க்சிடம் அரசியல் ஆர்வங்கள் கிளர்ந்தெழுந்திருப்பதாக இக்கட்டுரையில் இன்னும் எந்த அறிகுறியும் இல்லை. ஆனல் அவர் பிற்போக்கானவை அனைத்தையும் வெறுத்ததை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெறுப்பை மார்க்ஸ் புத்தகங்களிலிருந்து மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்தும் பெற்றுக் கொண்டார்.

மிக முந்திய காலமான 1833-இல் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், அரசியல் கவிதைகள் ஆகியவை டிரியர் உயர்நிலைப் பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டன, மாணவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார் என்று அறிகிறோம். இது மாணவர்கள் மத்தியில் அறிவுக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வாழ்க்கையைப் பற்றி மார்க்சினுடைய அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மார்க்ஸ் பள்ளியிறுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு பான் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகச் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்ட பொழுது பள்ளிக்கூடத்தின் இணை இயக்குநரான விஸ்டுஸ் லியோர்சைச் சந்தித்து விடை பெறுவதற்கு உறுதியாக மறுத்தார். பள்ளி மாணவர்களை அரசியல் ரீதியான கண்காணிப்பில் வைக்கும் விசேஷக் கடமையை அவர் நிறைவேற்றியது தெரிந்ததே. மார்க்ஸ் அவரைச் சந்திக்க மறுத்தது அவருடைய மன உறுதியைக் காட்டுகிறது. அதனால் அவருக்கும் தகப்பனாருக்கும் மோதல் கூட ஏற்பட்டிருக்கலாம்.

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய ஆரம்ப காலக் கடிதங்களில் ஒன்றில் இந்தச் செயலுக்காக மகனைக் கண்டிக்கிறார், கார்லுடன் உயர்நிலைப் பள்ளியின் மற்றொரு மாணவனான ஹென்ரிஹ் கிலெமென்சும் லியோர்சிடம் நேரில் விடைபெற்றுக் கொள்ள மறுத்ததை இக்கடிதத்திலிருந்து அறிகிறோம். கார்லின் “குற்றத்தைப்” பற்றி ஆத்திரமடைந்த லியோர்சை சமாதானப்படுத்துவதற்காக ஹென்ரிஹ் மார்க்ஸ் ஒரு ‘பச்சைப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. “அவன் அப்பொழுது வீட்டில் இல்லை”(13) என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் வாழ்க்கையுடனும் அறிவுலகத்துடனும் மார்க்சின் உண்மையான மோதல் வருவதற்கு இன்னும் சற்றுக் காலமாயிற்று.

குறிப்புகள் :

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 635.
(2)ஜென்னியின் மூத்த சகோதரரான ஃபெர்டிகுண்டு 1850க்களில் பிற்போக்கான பிரஷ்ய அரசாங்கத்தில் உள்நாட்டு அமைச்சர் பதவி வகித்த பொழுது மார்க்சின் தீவிரமான அரசியல் எதிரியாக இருந்தார்.
(3)Marx, Engels, Collected Works, Vol. 1, P. 28
(4) Marx, Engels, Werke, Bd. 30, Berlin, 1964, S. 628.
(5) Marx, Engels, Collected Works, Vol. 1, P. 355.
(6) Ibid., p. 357.
(7)Ibid., p. 4.
(8)Ibid., p. 7.
(9Ibid., p. 8.
(10)Ibid.
(11)Ibid.
(12) Ibid.
(13) Ibid., p. 647.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க