Thursday, May 30, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

-

மார்க்ஸ் பிறந்தார்  11
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:

இந்தப் பகுதியில் தத்துவஞான ஆராய்ச்சிக்கு தேவையானதையும், தேவையற்றதையும் பார்க்க இருக்கிறோம். ஹெகலின் பிற்போக்கான மாணவர்களோ, மத்திய காலத்தில் அரிஸ்டாட்டிலின் போதனைகளை மதம் போல பாவித்த சிந்தனையாளர்களோ எப்படி தத்துவஞானத்தின் கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது என்பதை விதியாக்கியதை மறுத்தும், கேலி செய்தும் விளக்குகிறார் மார்க்ஸ். கடந்த கால விளக்கத்தை படைப்பூக்கத்துடன் ஆய்வு செய்யாமல், பக்தியுடன் பின்தொடர்ந்தால் நாம் விழுவது பள்ளமே அன்றி சிகரத்தை ஒரு போதும் அடைய முடியாது.

மாறிவரும் புறநிலையோடு, புரிந்து கொள்ளலில் மேம்படும் அகநிலை சேர்ந்து பயணித்தும் ஆய்வு செய்தும் வரும் போது மட்டுமே புதிய புரிதலை கண்டுபிடிக்க முடியும். இல்லை இன்னார் இப்படி சொல்லவில்லை ஆகவே புதிய விசயத்தை ஏற்க முடியாது என்றால் நாம் தேங்கிப் போன இறந்தகாலத்தின் எச்சங்களாக கரைந்து போவோம். அதனை சாக்ரடிசிடம் காண்கிறார் கார்ல் மார்க்ஸ். கேள்வி கேட்பதோடு பதில் சொல்ல மறுக்கும் மரபை தொடர்ந்து கேலி செய்து நீ கேள்வி கேட்டாகத்தான் வேண்டும் என்கிறார் சாக்ரடிஸ். நிதானமாக படியுங்கள்!

 1. “தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது”
  ஆ) தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

ஹெகலின் அடிமைத்தனமான, சுய புத்தி இல்லாத ஆதரவாளர்களை மார்க்ஸ் அதிகமாக ஏளனம் செய்கிறார். இவர்கள் கீழ்மட்ட மனிதர்கள், எத்தகைய  தனித்தன்மையும் இல்லாதவர்கள், இவர்கள் வழக்கமாக “கடந்த காலத்தின் தத்துவஞான மேதைக்குப் பின்னால் மறைந்து கொள்பவர்கள்-ஆனால் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் கழுதை சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கப்படுகிறது; இன்று அல்லது நேற்றைய தினத்தின் குள்ளனுடைய ஈனக்குரல் யுகங்களினூடே எதிரொலிக்கின்ற காம்பீரியக் குரலுடன் கோமாளித்தனமான வேறுபாட்டுடன் புலம்புகிறது”.(1)

ஒரு குள்ளன் இரண்டு மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு ஒரு மேதையின் பிட்டங்களில் நின்று கொண்டிருக்கும் சித்திரத்தை மார்க்ஸ் ஏளனத்தோடு தீட்டுகிறார்; தான் பார்க்க முடிந்த அதிசயமான காட்சிகளை அவன் பிரகடனம் செய்கிறான்; ஆர்க்கிமிடஸ் புள்ளி இதயத்தில் அல்ல, நான் நின்று கொண்டிருக்கும் “கனமான, உறுதியான அடித்தளத்தில்” இருக்கிறது என்று விளக்குவதற்குக் கோமாளித்தனமான முயற்சி செய்கிறான். “முடி, நகம், விரல், மலம் ஆகியவற்றின் தத்துவஞானிகள் மற்றும் இதரர்களை இப்படித்தான் நாம் அடைகின்றோம்….”(2)

இங்கே மார்க்ஸ் ஒரு பக்கத்தில் வலதுசாரி ஹெகலியவாதிகளின் பரிதாபமிக்க நிலையையும் மறு பக்கத்தில் ஹெகல் வழிபாட்டை, அவருடைய போதனையைத் தனிமுதலானதாக உயர்த்துவதை, ஹெகலியத் தத்துவஞானத்தின் பல்வேறு கூறுகளையும் அம்சங்களையும் விளக்கிக் கூறுகின்ற பாதையில் மட்டுமே எதிர்காலத் தத்துவஞான வளர்ச்சி நடைபெற வேண்டும் என்ற வாதத்தைக் கண்டனம் செய்கிறார்.

அரிஸ்டாட்டில்

அதைப் பொறுத்தமட்டில் ஹெகலின் தத்துவஞானத்தின் விதியை, மத்திய காலத்தைச் சேர்ந்த உரையாசிரியர்களால் சீர்குலைக்கப்பட்ட அரிஸ்டாட்டிலினுடைய தத்துவஞானத்தின் வரலாற்று விதியுடன் ஒப்பிட முடியும். அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் ஒரு வகையான தோத்திர நூலாக மாற்றப்பட்டன; மத நம்பிக்கையின் அதிகாரத்தை ஆதரிப்பதற்கு அவருடைய அதிகாரம் உபயோகிக்கப்பட்டது. அவர் எல்லாம் அறிந்தவர் என்ற நம்பிக்கை முட்டாள்தனமான எல்லைகளை எட்டியது. 17ம் நூற்றாண்டில் சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்பதை தொலைநோக்கு கருவியின் மூலமாகப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளும்படி யேசு சபையைச் சேர்ந்த ஒரு பேராசிரியரிடம் வானவியல் ஆராய்ச்சியாளரான கிர்ஹார் கூறிய பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “மகனே, அதனால் பயனில்லை. நான் அரிஸ்டாட்டிலைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இரண்டு தடவைகள் படித்திருக்கிறேன். சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்ற சிறு குறிப்பைக் கூட அரிஸ்டாட்டில் எழுதவில்லை. எனவே அப்படிப்பட்ட கறும் புள்ளிகள் இருக்க முடியாது.”

தத்துவஞானத்தைப் பற்றி-இது “மேதைகளின்” தத்துவஞானமாக இருந்தாலும் கூட-இத்தகைய “பக்திமிக்க” அணுகுமுறை மார்க்சின் விமர்சன அறிவுக்குத் திருப்தியளிக்கவில்லை. “ஒரு தத்துவஞானம் உண்மையில் தத்துவஞானமாக இருக்கும் என்பதை அதிகாரத்தினால் அல்லது நம்பிக்கையினால் மக்களினத்தின் அதிகாரத்தினால் அல்லது நூற்றாண்டுகளின் நம்பிக்கையினால் என்றாலும் கூட-ஏற்றுக் கொள்வது சரியா?”(3) என்று அவர் எழுதினார். எனவே உண்மையான தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் துணிவான, சுதந்திரமான அறிவு அவசியம்; அது இதுவரையிலும் சாதிக்கப்பட்டவற்றைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது, கடந்த காலப் பாரம்பரியத்தைப் படைப்பாற்றலுடன் பகுத்தாராய்ந்து புதிய சாதனைகளைத் தேட வேண்டும் என்பது மார்க்சின் கருத்தாகும்.

அதனால் தான் தத்துவஞானம் மதத்துடன் பொருந்துவதில்லை. நம்பிக்கை மற்றும் குருட்டுத்தனமான வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட தலைமை அதிகார மரபை அது ஏற்றுக் கொள்வதில்லை.

ஹெகல் அரிஸ்டாட்டிலைப் போன்ற அதே ரகத்தைச் சேர்ந்த மாபெரும் சிந்தனையாளர் என்று மார்க்ஸ் கருதினார். அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய (எபிகூரிய, ஸ்டோயிக் மற்றும் ஐயுறவுவாதத்) தத்துவஞானங்களின் விதிக்கும் ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானத்தின் விதிக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் இருப்பதை அவர் காண்கிறார். வலதுசாரி ஹெகலியவாதிகள் தத்துவஞானத்தைக் காட்டிலும் மதம் உயர்வானது என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்தனர்; அவர்கள் மேன்மையான ப்ளுடார் கைப் போல தத்துவஞானத்தை “மத அரங்கத்துக்கு” முன்னால் கொண்டு வந்தார்கள்; ஆனால் மார்க்ஸ் தத்துவஞானமே “தலைமை அதிகாரமானது” என்கிறார். “தத்துவஞானத்தின் உலகத்தை அடக்குகின்ற, முற்றிலும் சுதந்திரமான இதயத்தில் ஒரு துளி இரத்தம் துடிக்கின்ற வரையிலும் எபிகூரசினுடைய போர் முழக்கத்தை எதிரிகளிடம் பதிலாக எடுத்துக் கூறுவதற்கு ஒருபோதும் களைப்படையாது: மக்களால் வணங்கப்படுகின்ற கடவுளே மறுப்பவன் அல்ல, மக்கள் கடவுளைப் பற்றி நம்புகின்றவற்றை ஆமோதிப்பவனே உண்மையில் பாவம் செய்தவன்.”(4)

அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய தத்துவஞானம் கிரேக்கத் தத்துவஞானத்தின் தலைமையான சிகரமாகும். அது அடிமையுடைமை உலகத்தின் சீரழிவையும் புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தையும் அறிவித்தது. ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானமும் அதே வரலாற்று நிலைமையில் இருந்தது. அது “பிளவடைந்த உலகத்தை” எதிரிட்டது. அதன் இசைக் கருவி “அயோலிய யாழ்”: அந்த யாழின் நரம்புகளைப் புயல் மீட்டியது. “ஆனால் ஒரு மாபெரும் தத்துவஞானத்தை, உலகத் தத்துவஞானத்தைப் பின்தொடர்ந்து ஏற்படுகின்ற இந்தப் புயல் மனக் குழப்பத்தைத் தோற்றுவிப்பதற்கு ஒருவர் தன்னை அனுமதிக்கக் கூடாது. ’’(5)

“புயலைப்” பற்றிய, ஒரு புதிய “பேராற்றல் மிக்க” யுகத்தைப் பற்றிய இந்த எதிர்பார்ப்பு 1830க்களின் கடைசியிலும் 1840க்களின் தொடக்கத்திலும் மார்க்சின் மனோநிலையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பொழுது ஜெர்மனி உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கியிருந்தது; அதன் பொருளாதார, அரசியல் மற்றும் அறிவுத் துறை வாழ்க்கையின் புத்தாக்கம் தொடங்கியிருந்தது; அது 1848ம் வருடத்தின் புரட்சிகரமான கொந்தளிப்பை முன்னறிவித்தது.

டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த பொழுது மார்க்சினுடைய “புயலின் முற்பொழுதைப்” பற்றிய மனோநிலை இன்னும் மிகவும் தெளிவற்றதாக, உண்மையான அரசியலிலிருந்து மிகவும் அப்பாற்பட்டதாக இருந்தது என்பது மெய்யே. அது கருத்துமுதல்வாதத் தத்துவஞானத்தின் தெளிவில்லாத வகையினங்களில் தான் வெளிப்பட்டது. அது வெடித் திரியைப் போன்றதே. வெடி குண்டில் இணைக்கப்பட்டிருக்கின்ற திரி மெதுவாகத்தான் எரிகிறது. ஆனால் சீக்கிரத்தில் குண்டு வெடிக்கிறது.

கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸ் ஒரு “புயலை”முன்னறிவிக்கின்ற பொழுது “ஆசானைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்ற” ஹெகலியவாதிகளின் கோழைத்தனமான நிலையைத் தாக்குவது குறிப்பிடத்தக்கதாகும். “தனிமுதலான ஆன்மா வாடிக்கையாக மிதவாதத் தன்மையில் வெளியாகிறது” என்று அவர்கள் கருதினார்கள். தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் உள்ள தகராறை “உண்மையான தேவைகளுடன் சமாதான ஒப்பந்தத்தின் மூலம்”, “ஆயுதந்தாங்கிய சக்திகளை வெட்டுவதன் மூலம், அவற்றைப் பிரித்துவிடுவதன் மூலம்” சரிப்படுத்தி விட முடியும் என்று நினைக்கின்ற “அரை குறையான அறிவுடையவர்களின்” கருத்துக்களை அவர் குறை கூறுகிறார்.(6)

“இப்பிரித்துவிடுதல்” குறிப்பாக, தத்துவஞானம் முக்கியமான பிரச்சினைகளைக் கைவிட்டுச் சுய உணர்வு உலகத்துக்குள் பின்வாங்குவதில் வெளிப்படுகிறது; இந்த நிலைமை அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய நிலைமையை முற்றிலும் ஒத்ததாகும். உதாரணமாக, மார்க்ஸ் எபிகூரிய, ஸ்டோயிக் தத்துவஞானத்தை விட்டில் பூச்சிக்கு ஒப்பிடுகிறார்: “உலக முழுமைக்கும் வெப்பமளிக்கின்ற சூரியன் மறைந்ததும் விட்டில் பூச்சி தனி மனிதர்களின் விளக்கு வெளிச்சத்தைத் தேடுகிறது.”(7)

ஆனால் மார்க்ஸ் இங்கே எதிர்மறையான அம்சத்தைப் பார்ப்பதுடன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சத்தையும், தனிநபரிடத்தில், அவருடைய ஆன்மிக உலகத்தில், அறவியல் பிரச்சினைகளில், இதரவற்றில் அக்கறையை, அதாவது கிரேக்க மனிதாபிமானம் என்று சொல்லப்படுவதையும் பார்க்கிறார்.

இக்கண்ணோட்டத்தில் சாக்ரடீசின் ஆளுமையின் மீது அவருடைய அக்கறை சிறப்பானதாகும். தத்துவஞானத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைப்பதில் வெற்றி பெற்ற, தத்துவஞானத்தை பண்டைக்கால ஏதன்சின் தெருக்களுக்கும் சதுக்கங்களுக்கும் கொண்டு வந்த அறிஞரின் “இலட்சிய ரீதியான” உருவம் இளம் மார்க்சைக் கவர்ந்தது. “கிரேக்க வாழ்க்கையுடன் கிரேக்கத் தத்துவஞானத்தின் உறவு, ஆகவே அதன் உள்ளீடான வரையறை சாக்ரடீசிடம் வெளிப்பட்ட காரணத்தால் அவர் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்.”(8)

இயற்கையை, அண்டவெளியைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்ட அறிவில் சாக்ரடீசுக்குச் சிறிதும் அக்கறையில்லை. தன்னைப் பற்றி மனிதனுக்கு எதுவுமே தெரியாதென்றால் அவன் உலகத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் எப்படி அறிய முடியும்? “உன்னை அறிந்து கொள்” என்பது சாக்ரடீசின் தத்துவஞானத்தின் முதற்கோட்பாடாகும்.

மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பின்வருவனவாகும்: நன்மை, தீமை என்பன யாவை? அழகு என்பது என்ன? நீதி என்பது என்ன? வாழ்க்கை, மரணம் என்பவை என்ன? காதல் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?

இவை தத்துவஞான ஆராய்ச்சிக்குத் தகுதியில்லாத மிகவும் சாதாரணமான விஷயங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். இங்கேதான் சாக்ரடீஸ் தன்னுடைய கிண்டலையும் இயக்கவியலையும் கையாள்கிறார். அவர் விவாதத்தை விரும்புகின்ற எவருடனும் விவாதம் புரியத் தயாராக இருக்கிறார், மற்றவர்களிடமிருந்து அறிவொளி பெற விரும்புகின்ற அப்பாவியைப் போல நடிக்கிறார், வெகுளித்தனமான ஆனால் சாதுரியமான கேள்விகளைக் கேட்கிறார்; அவரோடு விவாதம் செய்கின்ற, சுயதிருப்தி அடைந்த நபரின் அறியாமையை, இயக்கவியல் ரீதியில் அவரால் சிந்திக்க இயலாமையை, ஒரு நபருடைய கண்ணோட்டத்தையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து ஒரே நடவடிக்கை நன்மையானதாக அல்லது தீமையானதாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையை அவை வெளிப்படுத்துகின்றன.

சாக்ரடீஸ்

சாக்ரடீசின் கிண்டல் (மார்க்சும் எங்கெல்சும் மற்றவர்களுடனும் நடத்திய விவாதங்களில் அதை அடிக்கடி உபயோகப்படுத்தினார்கள்) “செவிலித்தாயின் செயலைப்” போன்றது என்பது மார்க்சின் பொருத்தமான உதாரணமாகும்; அதன் உதவியின் மூலம் தத்துவச் சிந்தனை பிறக்கிறது, வளர்கிறது.

“எல்லாம் தெரியும் என்ற சுய திருப்தி மனப்பான்மையைக் கொண்ட” “சாதாரணமான நிதான அறிவுக்கு” சாக்ரடீசின் கிண்டல் ஒரு “இயக்கவியல் பொறியாகும்”. “சாதாரண அறிவுக்குச்” சவால் விடுகின்ற அனைத்துத் தத்துவஞானத்துக்கும் இந்தக் கிண்டல் குறியடையாளம் என்பது மார்க்சின் கருத்து.(9)

சாக்ரடீஸ் “தத்துவஞானத்தின் உருவகம்” – முதலாவதாக, அவரிடம் தத்துவஞானம் ஈடேற்றமடைகிறது, வாழ்க்கையின் புறவுருவமாக, செய்முறையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில், இரண்டாவதாக, தனிமனித சுய உணர்வின் தத்துவஞானம் அது என்ற அர்த்தத்தில். இக்காரணத்துக்காக மார்க்ஸ் அதன் வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளை, அதன் அகநிலைத் தன்மையை, அது தனக்குள் திரும்புவதைக் காண்கிறார். ஆனால் தனிப்பட்ட, மனித மட்டத்தில் அறிவாளியைப் பற்றிய, முரணில்லாத, நேர்மையான தத்துவஞானியைப் பற்றிய இலட்சிய ரீதியான பிம்பத்தை இளம் மார்க்சுக்குக் கொடுத்தது சாக்ரடீசே என்பது வெளிப்படையாகும். அத்தத்துவஞானி உண்மையில் தனக்கே மரண தண்டனை விதித்துக் கொண்டார்; ஏனென்றால் அந்த முடிவு அவருடைய உள் நம்பிக்கைகளிலிருந்து தர்க்க ரீதியாக முன்னேற்றமடைந்தது.

தத்துவஞானிகள் “தாங்களே வாழ்கின்ற பிம்பங்கள், வாழ்கின்ற கலைப் படைப்புகள்”(10), தங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தத்துவங்களின் உயிர்ப்புள்ள விளக்கங்கள் என்ற மார்க்சின் கருத்து மற்றவர்களைக் காட்டிலும் சாக்ரடீசுக்கே அதிகமாகப் பொருந்தும். ஒரு தத்துவஞானியின் ஆளுமை அவருடைய போதனையிலிருந்து சிறிதும்  பிரிக்கப்பட முடியாது என்று இளம் மார்க்ஸ் கருதினார்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 87.
(2) Ibid.
(3) Ibid., p. 506.
(4) Ibid., p. 30.
(5)Ibid., p. 491.
(6) Ibid., pp. 491, 492.
(7) Ibid., p. 492.
(8) Ibid., pp. 438-39.
(9)Ibid., p. 494.
(10) Ibid., p. 436.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

 1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
 2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
 3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
 4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
 5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
 6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
 7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
 8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
 9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
 10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல்
  வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. தாயகத்திலேயே வேரோடு புடுங்கி போட்டு விட்டோமே…அப்புறம் எப்பிடி இந்த சனியன் அருகம்புல் போல் அங்கங்கே முளைத்து கொண்டிருக்கிறது…

  ஹிஹிஹி இவ்வாறு பலர் குடைந்து கொண்டிருப்பர். அண்மையில் அமெரிக்காவிலேயே KKK இற்கு எதிராகவும் கார் தாக்குதலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில்எ த்தனை சேகுவாராக்கள் எத்தனை சுத்தியல் சம்மட்டி டீ சர்ட்டுகள்,

  எஞ்சேல் டீவி செல்வராஜின் குரலில்*

  காலம் இனி செல்லாது, பரலோக ராஜ்ஜியம் சம்மீபமாய் இருக்கிறது…’

  ஆம் உங்களுக்கு.

  பணி தொடரட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க