மார்க்ஸ் பிறந்தார் – 8
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
4. “உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்”
ஆ) கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே
வினவு குறிப்பு: இந்த அத்தியாத்தில் கார்ல் மார்க்சின் அங்கதம் கருக் கொண்ட காலத்தினை ஆய்வு செய்கிறோம். சோம்பேறிகள் உழைப்பாளிகளை விமரிசிப்பதற்கும் சோம்பேறித்தனம் கொண்டதால் “இவனையெல்லாம் பேசி என்ன பயன்?” என்று ஒதுங்கிக் கொண்டது போலவே அற்பவாதிகள் பல்வேறு துறைகளிலும் ஆர்ப்பாட்டமாக தோன்றுகின்றனர். உண்மையை நோக்கும் பாதையிலும், பதர்களாக தடுக்கும் அற்பவாதிகளை விமரிசிப்பதிலும் உயர்தரம் கொண்ட அங்கதம் மார்க்சிடம் தோன்றுகிறது. அற்பவாதத்தில் முதன்மையான பலவற்றில் கடவுளும் மதமும் ஒன்று. யதார்த்தம் பற்றிய ஆய்வும் விமரிசனமும் செய்யும் எவரும் கடவுளை கேள்வி கேட்காமல் கடக்க முடியாது. இங்கே கார்ல் மார்க்ஸ் தனது கவிதைகளில் கேட்கிறார். மார்க்சின் அங்கதம் எழுத்தில் மட்டுமல்ல, அவரோடு பழகிய நண்பர்கள் பலரும் மார்க்சின் நகைச்சுவை வாதங்களை சிரித்துக் கொண்டே கேட்ட இனிமையான காலங்களை நினைவு கூர்கிறார்கள். படித்துப் பாருங்கள்!
பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதிய லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற புத்தகத்தில் இளமைப் பருவத்தில் தன்னிடம் தோன்றிய அங்கதச் சித்திரத்துக்குத் திரும்புகிறார்: “உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன; மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகல் எழுதியுள்ளார். அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார். டன்டோனுக்குப் பதிலாகக் கொஸிடியேர் ரொபெஸ்பியேருக்குப் பதிலாக லுயீ பிளாங்; 1793ம் வருட முதல் 1795ம் வருடம் முடிய இருந்த மலைக் கட்சிக்குப் பதிலாக 1848-51ம் வருடத்திய மலைக் கட்சி; மாமனுக்குப் பதிலாக மருமகன். புரூமேர் பதினெட்டின் இரண்டாம் பதிப்பை ஒட்டிய சந்தர்ப்பங்களிலும் அதே கேலிச்சித்திரம் தோன்றுகிறது.”(1)
அற்பவாதி எப்பொழுதும் மூலச்சித்திரத்தைக் காட்டிலும் கேலிச்சித்திரத்தையே விரும்புகிறார். புயற்காற்று அவருக்குப் பீதியைக் கொடுக்கிறது; ஆனால் அதற்குப் பிறகு மிஞ்சுகின்ற புழுதி அவரிடம் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறுபடியும் எல்லாவற்றையும் “முறைப்படி செய்யத்” தொடங்குகிறார்; புயல் முழுவதையும் புத்தகங்களில் அடைத்து விட வேண்டும், அதை வாங்கிப் படிக்க ஆள் சுலபமாகக் கிடைக்கும். இளம் மார்க்ஸ் தன்னுடைய அங்கதச் செய்யுளில் இந்தக் கருத்துக்கு அடிக்கடித் திரும்புகிறார்.
ஜெர்மானியர்கள் மெய்யாகவே கிளர்ந்தெழுந்தார்கள்;
மக்கள் வெற்றி ஓங்கியது.
எல்லாம் முடிந்த பிறகு ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மூலையிலும் அறிவிப்பைப் படித்தனர்.
“அதிசயங்கள் நடைபெறப் போகின்றன-
எல்லோருக்கும் இரண்டுக்குப் பதில்
மூன்று கால்கள் முளைக்கும்!”
செய்தி அவர்களைக் கலக்கியது,
ஆழ்ந்த வருத்தம் மேவியது:
“ஒரு நொடியில் அதிகம் செய்துவிட்டோம்,
நாம் மறுபடியும் ஒழுங்காக நடக்க வேண்டும்.
மற்றவற்றை அச்சிட்டு வெளியிடுவோம்,
வாங்கிப் படிக்க ஆளா இல்லை!’’(2)
இந்த நூல்களில் இளைஞரான மார்க்ஸ் தன்னுடைய அரசியல் உணர்ச்சிகளை வெளியிடுகிறார். பிற்போக்குவாதத்தைச் சகித்துக் கொள்ள மறுத்தல், புரட்சிப் புயல் மற்றும் மக்களின் வெற்றி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கோழைத்தனம் மற்றும் அரசியல் அக்கறையின்மையைப் பற்றி அவருடைய விமர்சனம், புத்தகங்களில்-வாழ்க்கையில் அல்ல-புரட்சியை ஏற்படுத்துவதில் ஜெர்மானியர்களின் குறிப்பிடத்தக்க திறமையைப் பற்றி அவருடைய கிண்டல் ஆகியவற்றை இவற்றில் காண்கிறோம்.
மார்க்சின் தொட்டிலில் கலைத் தேவதைகள் வளமான பரிசுகளை வைத்தனர்; ஆனால் கவித்திறமை அவற்றில் இல்லை என்று ஃப்ரான்ஸ் மேரிங் கூறுவது முற்றிலும் சரியல்ல. மார்க்சின் கவிதைகளில் பல மற்றவர்களைப் பின்பற்றி எழுதப்பட்டவை என்றாலும், அவை பொதுப்படையாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றன என்று மார்க்சே கருதியபோதிலும் “வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போலப்” பளிச்சிடுகின்ற கவிதைத் துணுக்குகளைக் கொண்டிருக்கின்றன. “இனிய, என்றும் அன்பு நிறைந்த” ஜென்னிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன்னுணர்ச்சிக் கவிதைகளிலும், குறிப்பாக அவருடைய சிந்தனைத் திறனும் கோப உணர்ச்சியும் வெளிப்பட்ட அங்கதக் கவிதைகளிலும் இவை உள்ளன. அவருடைய ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளில் ஷீல்லரின் உணர்ச்சிக் கனிவான புத்தார்வவாதத்தின் தாக்கம் இருந்தது என்றால் அவருடைய பிற்காலக் கவிதைகளில் கேதே மற்றும் சிறப்பாக ஹேய்னெயின் முத்திரைகள் இருக்கின்றன.
அற்பவாதியின் ஆன்மிக ஆசிரியர்களான மதகுருக்களின் போலியான கூற்றுக்களை மார்க்ஸ் கூர்மையாகக் கிண்டல் செய்கிறார். லூதர்வாத மரபைச் சேர்ந்த புஸ்ட்குஹென் என்ற போதகர் 1820க்களில் கேதேயின் வில்ஹெல்ம் மேய்ஸ்டர் என்ற நாவலை நையாண்டி செய்து ஒரு புத்தகம் எழுதினார். அந்த மாபெரும் ஜெர்மானியக் கவிஞருடைய நூல் “ஒழுக்கக்குறைவுடையது” என்று குற்றஞ்சாட்டினர். மார்க்ஸ் இவரைக் கிண்டல் செய்து சில அங்கதச் செய்யுள்கள் எழுதினார்.
போதகர் புஸ்ட்குஹென் தன்னுடைய ஓட்டைப் பிரசங்கங்களைக் கொண்டு மாதாகோவில் சமையலறையில் அப்பம் சுட்டு அவற்றைத் தன்னுடைய விசுவாசமிக்க கூட்டத்தினரிடம் கொடுக்கட்டும். ஆனால் “குள்ளர்கள்” எப்பொழுதுமே தற்பெருமைக் கோளாறு உடையவர்கள், அவர்கள் ஒரு “இராட்சதனுடன்” மோதுவதற்கு வீண் முயற்சிகளைச் செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அளவுகோல்களை உபயோகித்து அவரைக் குறை சொல்வார்கள். அவருடைய மாபெரும் காலணிகளில் உள்ள புழுதியை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். பிறகு இந்தக் “குள்ளர்கள்” அகம் பாவத்தோடு இரங்கியருள்வார்கள். “இராட்சதனின்’’ சிறப்பான அம்சங்களை அவர்கள் குறைகள் என்று கருதுவார்கள்; “குள்ளர்களாகிய’’ தாங்கள் மதிக்கின்ற அம்சங்கள் அவரிடம் இல்லாதிருப்பதைக் காண்பார்கள். பிறகு அவர்கள் அவரை எதற்காக கெளரவிக்க வேண்டும்? கேதே ஒரு தோத்திரப் பாடல் கூட எழுதாமலிருக்கும் பொழுது அவரை எப்படி மிகவும் உயர்வாக நினைக்க முடியும் என்று புஸ்ட்குஹென் தன்னுடைய ஆழமான ஆன்மிக எளிமையில் நினைப்பதாக மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். கேதே இயற்கையைக் கற்றார்; அவர் லூதரின் கோட்பாட்டை அல்லவா கற்றிருக்க வேண்டும், அதைப் பற்றியல்லவா கவிதை எழுதியிருக்க வேண்டும்.
கேதே என்றால் சீமாட்டிகளுக்கு பயம்,
முதிய மகளிர் படிப்பதும் சரியல்ல.
அவர் இயற்கையைக் கற்றார்,
சண்டை இதுதான்.
ஆனால் மத போதனையுடன் ஏன் முடிக்கவில்லை?
அவர் லூதர் கோட்பாட்டை மனப்பாடம் செய்திருக்க வேண்டும்,
அதைக் கொண்டு கவிதை புனைந்திருக்க வேண்டும்.
அவரிடம் அழகான, சில சமயங்களில்
விசித்திரமான, சிந்தனைகள் இருந்தன;
“எல்லாம் கடவுளின் அருள்”
என்று முடிக்கத் தவறினார்.
அவருடைய நூல்களிலிருந்து கிடைக்கும் பயன் என்ன? கடைசியில் “ஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டது”!
கேதேயை மென்மேலும் உயர்த்துகின்ற
விருப்பம் மிகவும் விசித்திரமே,
உண்மையில் அவர் சாதனை கீழானது.
ஒரு தோத்திரமாவது எழுதினாரா?
ஒரு விவசாயியோ ஆசிரியனோ
விளக்குவதற்கு கேதேயிடம் என்ன
இருக்கிறது? எங்கே காட்டுங்கள்.
ஆண்டவனின் அருளைப் பெறாத மேதை,
ஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டதே!(3)
ஃபாவுஸ்டு நாடகம் பற்றி என்ன கூறுவார்? “பாவங்கள் மனிதனைப் பிசாசிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றன’’ என்ற நீதியைக் கூறுவதற்கு, ஒருவர் தன்னுடைய ஆன்மா கடைத்தேறுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதற்கு எவ்வளவு சிறப்பான கதை. ஆனால் கேதே எல்லாவற்றையுமே தவறான முறையில் சித்திரிக்கிறார். அவருடைய ஃபாவுஸ்டு “கடவுளையும் உலகத்தையும் பற்றிச் சந்தேகிப்பதற்குத் துணிந்தான்”, “இளம் பேதை கிரெட்ஹென் அவன் பிசாசுக்கு இரையாகிவிட்டான், கடைசித் தீர்ப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக்காட்டாமல் அவரைப் போற்றினாள்.”
ஃபாவுஸ்டின் அதிகாரபூர்வமான கதையைப்
படியுங்கள். கவிஞர் எழுதியது
வெறும் வக்கரிப்பு: அவன் கடனாளி,
ஒழுக்கக்கேடன், பந்தயம் வைத்துச்
சீட்டாடுவான். மேலிருந்து உதவியில்லை,
எல்லாவற்றையும் முடிக்க விரும்பினான்.
ஆனால் நரகத்தை நினைத்துக் கலங்கினான்.
அறிவு, செயல், வாழ்க்கை, மரணம்,
நரகத்தைப் பற்றி நன்றாகக் கற்றான்;
இவற்றைப் பற்றிக் கூடார்த்தமாக
அவன் பலவாறாக எழுதினான்.
கடன் வாங்கினால் பிசாசு, நரகம்
நிச்சயம் என்று கவிஞர் சொல்லியிருக்கக் கூடாதா?
கடனில் சிக்கியவர்களுக்கு நிரந்தரமாகக்
கடைத்தேற்றம் இல்லையென்பது தெரியாதா?(4)
ஷீல்லர் சமாசாரம் வேறு! “ஷீல்லர் பைபிளை அதிகமாகப் படித்திருந்தால் இவ்வளவு மட்டமாக எழுதியிருக்க மாட்டார்.”(5)
கேதேயின் பெருஞ்சிறப்பு புஸ்ட்குஹென் ரகத்தைச் சேர்ந்த தற்புகழ்ச்சிக் “குள்ளர்களுக்கு” எரிச்சலேற்படுத்துகிறது, அவர்களுடைய கடமையுணர்ச்சிக்கு ஊறு செய்கிறது, குறைந்த பட்சம் அவருடைய செல்வாக்கைக் “குறைத்தால் தான்” அவர்கள் ஆனந்தமடைவார்கள்!
புஸ்ட்குஹென்களின் இழிவான, பழமைவாத உலகத்தை விமர்சனம் செய்வது அத்தகைய மனிதர்களை வளர்த்த ஆசாரமான மத கவிதை உணர்ச்சியை விமர்சனம் செய்வதாகவும் இருந்தது; இது தவிர்க்க முடியாதபடி மதத்தைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு இட்டுச் சென்றது.
மார்க்ஸ் 1837ம் வருடக் கவிதைகளில் மதகுருமார்களின் தீவிரமான முட்டாள்தனத்தின் மீது போர் தொடுத்த பொழுது அவர் தலைமையான பாசாங்குக்காரரும் மிக உயர்ந்த கொடுங்கோலருமாகிய கடவுள் மீதும் போர் தொடுத்தார்.
மதத்துடன் இறுதியாக முறித்துக் கொள்ளாமல் அற்பவாத உலகக் கண்ணோட்டத்துடன் பரிபூரணமாக முறித்துக் கொள்ள முடியாது. கருத்துமுதல்வாத நிலைகளிலிருந்து மதத்தைப் பற்றி முரணற்ற, ஈவிரக்கமற்ற விமர்சனத்தைச் செய்ய முடியாது; ஏனென்றால் அது யதார்த்தத்தைப் பற்றிய விமர்சனத்தோடு சம்பந்தப்படுகிறது. கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே.
1830க்களின் இறுதியில் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களான “டாக்டர்கள் கழகத்தின்” இளம் ஹெகலியவாதிகளைப் போலவே அவருடைய கவனமும் பிரதானமாக மதத்தை விமர்சிப்பதை நோக்கித் திரும்பியது. டேவிட் ஷ்டிராவுஸ் 1835இல் வெளியிட்ட இயேசுவின் வாழ்க்கை என்ற நூல் மதத்தின் மீது தத்துவஞானத் தாக்குதலைத் தொடங்கியது. சுவிசேஷங்கள் “தெய்வீகத் தன்மை” கொண்டவை என்பதை அவர் மறுத்தார். அந்த “டாக்டர்கள் கழகத்தில்” மார்க்சின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புரூனோ பெளவர் இன்னும் முன்னேறிச் சென்று நான்கு சுவிசேஷங்களிலும் வரலாற்று ரீதியான உண்மை அணுவளவு கூட இல்லை என்று கூறினார்.
அதே சமயத்தில் லுட்விக் ஃபாயர்பாஹ் Halische Jahrbicherஇல் (“ஹாலே வருடாந்தர சஞ்சிகை”) எழுதிய கட்டுரைகளில் மதம் மற்றும் தத்துவஞானத்தின் ஒருமையைப் பற்றி ஹெகலின் ஆய்வுரையை விமர்சித்தார். அவருடைய விமர்சன நிலைகள் சீக்கிரத்திலேயே அவரைப் பொருள்முதல்வாதத்துக்கு இட்டுச் சென்றன.
பிரெடெரிக் கோப்பென் மார்க்சின் மூத்த நண்பர்களில் ஒருவர். அவர் 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அறிவியக்கத்தின் மரபுகளை மீண்டும் நிறுவுவதற்காகப் போராடினார். அவர் 1840இல் வெளியிட்ட ஒரு பிரசுரத்தை “என்னுடைய நண்பர், டிரியரைச் சேர்ந்த கார்ல் மார்க்சுக்கு” என்ற சமர்ப்பணத்துடன் வெளியிட்டார்.
“டாக்டர்கள் கழகத்தின்” உறுப்பினர்களிலேயே மார்க்ஸ்தான் மிகவும் குறைந்த வயதுடையவர். எனினும் அந்தப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் மத்தியில் முக்கியமான நிலையை அவர் மிகவும் சீக்கிரத்தில் அடைந்தார். அவருடைய அசாதாரணமான அறிவுத் திறனை, வன்மையான தற்சிந்தனையை, சுதந்திரமான சிந்தனைப் போக்கை அவர்கள் உணர்ந்தார்கள். அவருடைய பல்துறை அறிவை, துணிச்சல் நிறைந்த தீர்ப்பை, அவருடைய நகைச்சுவை உணர்ச்சியை அவர்கள் பாராட்டினார்கள். புரூனோ பெளவர் ஏற்கெனவே உதவிப் பேராசிரியராகவும் இளம் ஹெகலியவாதிகள் இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் இருந்தார். அவர் பானிலிருந்து மாணவராகிய மார்க்சுக்கு மரியாதை கலந்த கடிதங்களை எழுதினார். “டாக்டர்கள் கழகத்தின்” “அறிவுத்துறை அக்கறைக்கு” இணையாக வேறு எதுவுமில்லை என்று எழுதினார்;(6) “உங்களுடன் சாலையைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது கூட நான் பெர்லினில் சிரித்ததைப் போல ஒருபோதும் சிரித்ததில்லை” என்று மார்க்சுக்கு எழுதினார்.(7)
இளம் ஹெகலியவாதிகள் மதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தீவிரமாகப் பங்கெடுத்தார். இறையியல் பேராசிரியர் ஒருவரைப் பற்றி மார்க்ஸ் காரசாரமான புத்தகத்தைக் கூட எழுதினார்; ஆனால் அதை வெளியிடவில்லை. எனினும் அவருடைய கருத்துக்கள் சுவடில்லாமல் மறைந்துவிடவில்லை; அவருடைய மூத்த சகாக்கள் அவற்றை எடுத்துக் கொண்டு மேலும் வளர்த்தனர். கோப்பென் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் இதை ஒப்புக் கொள்வதைப் பார்க்க முடியும். கோப்பென் தன்னைப் பற்றிச் சிரித்துக் கொண்டு, மார்க்ஸ் பானுக்குப் போன பிறகு கடைசியாக “நானே சுதந்திரமாகச் சிந்தித்து சில கருத்துக்களை” (அதாவது மார்க்சிடமிருந்து கடன் வாங்காத சில கருத்துக்களை) உருவாக்கினேன் என்று 1841இல் மார்க்சுக்கு எழுதினார். Halische Jahrbicherஇல் புரூனோ பெளவர் எழுதிய மிகவும் சிறப்பான கட்டுரைக் கூட மார்க்சிடமிருந்து கடன் வாங்கிய கருத்துக்களைக் கொண்டதே என்று கோப்பென் குறிப்பிடுகிறார். “நீங்கள் ஒரு சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைப் பட்டறை, அல்லது ஒரு பெர்லின் வாசியைப் போல எடுத்துக் கூறுவதென்றால், கருத்துக்களின் காளைத் தலை”(8) என்று அவர் அக்கடிதத்தின் இறுதியில் எழுதினார்.
மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே அறிவு நோக்குடைய இளம் மாணவர்கள் மத்தியில் தலைமையான செல்வாக்குப் பெற்றிருந்தார். இடது ஹெகலியவாதிகளின் இடது முனைக்கோடியில் அவர் இருந்தார். அவருடைய நண்பர்கள் கூட அவரை “வெறி கொண்ட புரட்சிக்காரர்”(9) என்று கருதினார்கள்.
ஆனால் அது இன்னும் தத்துவ ரீதியான புரட்சியைப் பற்றிய, முதலாவதாகவும் முதன்மையாகவும் மதத்தைப் பற்றிப் “புரட்சிகரமான” அணுகுமுறையைப் பற்றிய பிரச்சினையாகவே இருந்தது என்பது உண்மையே. ஆனால் இங்கே பெளவர், கோப்பென் மற்றும் அவர்களுடைய குழுவினரைக் காட்டிலும் மார்க்ஸ் அதிகமான தூரம் முன்னால் போய்விட்டார். அவர் மாணவராக இருந்த கடைசி மூன்று வருடங்களில் மதத்தின் பொய்களை மறுக்கின்ற நிலையிலிருந்து மதத்தை அடியோடு நிராகரிக்கின்ற நிலைக்கு முன்னேறிவிட்டார். கிறிஸ்துவ மதம் “அறநெறி அற்றது” என்று மார்க்ஸ் கூறுகிறார், அவரும் பெளவரும் ஃபாயர்பாஹும் பழைய கடவுளே வானத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்போகிறார்கள் என்று கியோர்கு யூன்க் என்ற இளம் ஹெகலியவாதி 1841இல் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.(10)
கடவுளை வானத்திலிருந்து தூக்கியெறிவதற்கு, மதக் கடவுள்களை ஒழிப்பதற்கு மார்க்ஸ் தயாரிப்புச் செய்து கொண்டிருந்த பொழுது, மிக முந்திய காலமான 1838இலேயே பண்டைக் காலத்தின் மாபெரும் நாத்திகர்களான எபி கூரஸ், லுக்ரேத்சியஸ் காருஸ் ஆகியோரை நோக்கித் திரும்பினார். அவர்கள் துணிவுடன் கடவுளுக்கு விட்ட சவால் அக்காலகட்டத்தில் அவருடைய தேடலுக்கு மிகவும் கவர்ச்சியூட்டியது. “மதத்தின் இறுக்கமான முடிச்சுகளிலிருந்து மனிதர்களின் அறிவை விடுவிப்பதற்கும்”(11) அதன் மூலம் “கடவுளின் அடிமையை” வானத்துக்கு உயர்த்துவதற்கும் அவர்கள் முயற்சித்தது அவரைக் கவர்ந்தது.
மார்க்ஸ் டாக்டர் பட்டம் பெறுவதற்குச் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எபிகூரஸ் “கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதி நிதி” என்று லுக்ரேத்சியஸ் எழுதிய சிறப்பான வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார்:
மனித வாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால்
பூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த பொழுது
ஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்து நின்றான்
சவால் விட்டுச் சண்டை போட்டான்.
கடவுள் கதைகள் அவனை நசுக்கவில்லை,
வானத்திலிருந்து மின்னல் வெட்டவில்லை…
ஆகவே மதம் அவன் காலுக்கடியில் நசுங்கிக் கிடக்கிறது;
அவன் வெற்றியினால் நாம் வானத்துக்குச்
சமமாக உயர்த்தப்பட்டோம்.(12)
எபிகூரஸ் காலத்துக்கும் 1830க்களின் இறுதியில் ஜெர்மனியில் மதத்தைப் பற்றி நிலவிய “புயல் மற்றும் தாக்குதல்” என்ற சகாப்தத்துக்கும் இடையில் பொதுவான கூறுகள் அதிகமுண்டு. பண்டைக் கால கிரீசில் எபிகூரசைத் தவிர மற்றவர்களும் மதத்தைத் தாக்கியதுண்டு; ஆனால் அவர்கள் கோழைத்தனமான, முரண்பாடான முறையில்தான் தாக்கினார்கள். உதாரணமாக, ஸ்டோயிக்குகள் (Stoics) – இளம் ஹெகலியவாதிகளைப் போலவே-தமக்கே உரிய ஊக முறையில் பழங்கால மதத்தை ஏற்றுக் கொண்டனர். எபிகூரஸ் சலுகைகளைச் செய்யவில்லை, “சாமர்த்தியமாகவோ” அல்லது “தந்திரமாகவோ” நடந்து கொள்ளவில்லை, “உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக” இருந்தார், “அதன் மதத்தை நேரடியாகத் தாக்கினார்”, அதற்காகவே சமயத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் அவரைப் பாராட்டினார்.(13)
குறிப்புகள் :
(1)கா.மார்க்ஸ், லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, ப. 12.
18ம் நூற்றாண்டின் கடைசியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான டன்டோனையும் ரொபெஸ் பியேரையும் 1848ம் வருடப் புரட்சியின் போது தலைமையான பாத்திரத்தை வகிப்பதற்கு முயற்சி செய்த அரை மனதுடைய, குட்டி முதலாளி வர்க்க அரசியல்வாதிகளான கொஸிடியேருடனும் லுயி பிளாங்குடனும் மார்க்ஸ் இங்கே கிண்டலான முறையில் வேறுபடுத்திக் காட்டுகிறார்.
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 577
(3) Ibid., p. 579.
(4)Ibid.
(5)Ibid., p. 578.
(6)Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 2, S. 235
(7)Ibid., S. 236.
(8)Ibid., S. 257.
(9)Ibid., S. 262.
(10)Ibid., S. 261-62.
(11)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 468.
(12)Ibid., p. 73.
(13) Marx, Engels, Collected Works, Vol. 5, p. 142.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய பாகங்கள்:
- மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
- அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
- ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
- பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
- எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
- சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
- மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?