மார்க்ஸ் பிறந்தார் – 7
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
குறிப்பு: மார்க்சின் பெற்றோர் மறையும் போது தங்கள் மகனது வாழ்க்கை ஒரு தோல்வி என்றே கருதினர். அறிவில் தேடலும், சிந்தனையில் கூர்மையும், ஆய்வில் சுயதிருப்தியின்மையும் மார்க்சை அலைக்கழித்து வந்தன. ஏற்றுக் கொண்ட சமூக அமைப்பு அங்கீகரிக்கும் வரைகையில் தனது மகன் ஒரு அறிஞராக வாழ்வில் கரை சேர வேண்டுமென்று மார்க்சின் தந்தை விரும்பினார். ஆனால் கார்ல் மார்க்சோ தனது வார்த்தைகளைக் கோர்த்து அதே சமூக அமைப்பை கேலியும், முரண்நகையும் கொண்ட விமர்சனத்தால் பதம் பார்க்கிறார். அதற்கு அவருக்கு கவிதைகள் முதலில் கை கொடுக்கின்றன. மார்க்சின் பிந்தைய எழுத்துக்களில் காணக்கிடைக்கும் உலகத்தரமான நகைச்சுவையை இங்கே காண்கிறோம். படித்துப் பாருங்கள்!
– வினவு
4.“உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்”
அ) “உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ்
இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன்,
உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன்,
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்.
என் மகிழ்ச்சியை நசுக்க முடியாது,
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க நான் வருகிறேன்.
ஒவ்வொரு சொல்லும் செயல், நெருப்பு.
என் மார்பும் கடவுளைப் போன்றதே.
– கார்ல் மார்க்ஸ்(1)
கார்ல் மார்க்ஸ் பெர்லினில் மாணவனாக இருந்த வருடங்களில் தத்துவஞான உணர்வில் மட்டுமல்ல அரசியல் உணர்விலும் தீவிரமான வளர்ச்சி அடைந்தார். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்திலேயே அவர் பிற்போக்கான எல்லாவற்றையும் தீவிரமாக வெறுத்தார் என்பதை நாம் கண்டோம். பான் பல்கலைக்கழகத்தில் அவர் இளம் எழுத்தாளர்களின் இலக்கியக் குழு ஒன்றில் சேர்ந்திருந்தார். அந்தக் குழு ஆபத்தானது என்று போலீசு இலாகா கருதியது. பான் பல்கலைக்கழகம் கொடுத்த சான்றிதழில் மார்க்ஸ் “கொலோனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தார்’’(2) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரஷ்ய முடியரசின் தலைநகரமான பெர்லினில் நாட்டின் அரசியல் வாழ்க்கையை அதிகக் கூர்மையாக உணரக் கூடிய வாய்ப்பு மார்க்சுக்குக் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் தீவிரவாதப் போக்குடைய இளம் எழுத்தாளர்களோடு பழகினார்; ஹான்ஸ் கேஃப்டரைப் போன்ற மிதவாத ஹெகலியவாதப் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார்; கருத்து வேறுபாடான விஞ்ஞான, அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகளைப் பற்றி மாணவர்கள் நடத்திய விவாதங்களில் கலந்து கொண்டார்.
கார்ல் தன்னிடம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அரசியல் ரீதியான சந்தேகங்களைப் பற்றித் தன் தகப்பனாரிடம் பேசியிருக்க வேண்டும். இச்சந்தேகங்கள் ஹென்ரிஹ் மார்க்சிடமும் ஓரளவுக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் தன் மகனிடம் “அதிதீவிரமான இடதுசாரிக்” கருத்துக்கள் ஏற்படக் கூடிய சாத்தியத்தைப் பற்றி சிறு சமிக்கையைக் கண்டால் கூட அவர் பீதியடைந்தார். ஏனென்றால் மகனுடைய எதிர்காலத்துக்கு அதனால் ஆபத்தேற்படலாம். அவர் 1836ம் வருடத்தின் முடிவில் மகனுக்குப் பின்வருமாறு எழுதினார்: “சட்டவியலைப் பற்றி உன்னுடைய கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அவற்றை ஒரு அமைப்பாக மாற்றினால் புயல்கள் ஏற்படுவது சாத்தியமே. கல்வியாளர்களிடம் ஏற்கெனவே எவ்வளவு உக்கிரமான புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? மற்றவர்களிடம் எரிச்சலூட்டுகின்றவற்றை முற்றிலும் அகற்றிவிட முடியாது என்ற போதிலும் குறைந்த பட்சம் வடிவமாவது சமரசமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.”(3)
புயல்களை எழுப்பாதே, சமரசமாகவும் உடன்படக் கூடிய முறையிலும் நடந்து கொள், மற்றவர்கள் எரிச்சலடைகின்றவற்றை அகற்றி விடு வெல்ல முடியாத போர்வீரனுக்குரிய வீராவேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்த, புரட்சிகரப் புயல்களின் எதிர்கால “இடிக் கடவுளான” ஒரு இளைஞனிடம் இப்படி அறிவுரை கூறப்பட்டது!
தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அவர்களுக்கிடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு உருவாகியிருப்பதைப் போலத் தோன்றியது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் பொழுது சிரித்துக் கொண்டார்கள், அவர்கள் பாச உணர்ச்சியினால் இன்னும் கட்டுண்டிருந்தார்கள். ஆனால் ஒருவர் பேச்சை அடுத்தவர் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. கார்ல் மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய நீண்ட ஒப்புதல் கடிதத்தைப் பற்றி முந்திய அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். அக்கடிதம் தகப்பனாரிடம் ஏற்படுத்திய விளைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
மார்க்ஸ் வருடம் முழுவதும் செய்த தீவிரமான ஆராய்ச்சி, அவருடைய அறிவார்ந்த, கவித்துவம் நிறைந்த தேடல் தகப்பனாருடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரிடம் எரிச்சலும் ஆவேசமுமே ஏற்பட்டது. அவர் கண்ணீர் விட்டுக் கொண்டே மகனைக் கடிந்து கொள்கிறார். என் மரணம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், என்னுடைய இளைய மகன் எட்வார்டு சமீபத்தில் மரணமடைந்திருக்கும் பொழுது, குடும்பத்தின் ஒரே நம்பிக்கையான கார்ல் மிகவும் கசப்பான ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறானே என்று அவர் குமுறினார். அவன் தன்னுடைய நேரத்தையும் பலத்தையும் உடல்நலத்தையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளில் வீணாக்கிக் கொண்டிருக்கிறான், “அவன் இன்று நிர்மாணிப்பதை நாளைக்கே அழித்து விடுகிறான்”, அவன் “தன்னுடைய சொந்த வேலையைப்” பாராட்டுவதில்லை, “மற்றவர்களுடைய சாதனைகளையும்” தன்வயப்படுத்திக் கொள்வதில்லை, எந்தப் பயனுமே இல்லாத, தெளிவற்ற, சூக்குமமான கருத்தமைப்புகளில், “அர்த்தமில்லாத, உசிதமில்லாத” ஆராய்ச்சிகளில் தன்னுடைய திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கிறான்.
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுடைய வாழ்க்கை முறையை நினைத்து வேதனைப்பட்டார்: “ஒழுங்கின்மை, அறிவின் எல்லாத் துறைகளினூடும் நாற்றமெடுக்கும் தேடல்கள், எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஊசிப்போன சிந்தனை, ஒரு குவளை பீரைக் குடித்துவிட்டுத் தறிகெட்டு ஓடுவதற்குப் பதிலாக மாணவனின் நீண்ட அங்கியுடன், வாரி விடப்படாத தலைமுடியுடன் அலைதல், எல்லா மரியாதைகளையும்-தகப்பனார் என்ற தகுதியையும்- அலட்சியப்படுத்திவிட்டு மற்றவர்களுடன் கலந்து பழகாமல் ஒதுங்கிக் கொள்ளுதல். உலகத்தோடு உறவாடுவதற்குப் பதிலாகத் துப்புரவில்லாத அறையில் அடைந்து கிடப்பது, அதன் மிகச் சிறப்பான குப்பைகளுக்கு மத்தியில் ஒருவேளை ஜென்னியின் காதல் கடிதங்களையும் கண்ணீருடன் எழுதப்பட்ட தகப்பனாரின் அறிவுரைகளைக் கொண்ட கடிதங்களையும் கிழித்துப் புகைக் குழாயில் போட்டுப் புகைபிடித்தல்….”(4)
நிகழ்காலத்தைப் பற்றி இந்த வர்ணனையே போதுமானது, ஆனால் எதிர்காலத்தைப் பற்றி? “நாகரிகமில்லாத படிப்பாளியுடன்” ஏழைக் குச்சில் நடத்துகின்ற வாழ்க்கை ஜென்னியைப் போன்ற ஒரு பெண்ணுக்குத் தகுதியான எதிர்காலமா? தகப்பனாருடைய வழிகாட்டுதல் இனிமேல் இல்லையென்றால் உலகியலை அறியாதிருக்கின்ற தன் மகனுடைய கதி என்னாகும் என்பதை நினைத்த பொழுது அவருடைய இதயம் புண்பட்டது. “தீங்கான பேய்களை” விரட்டி விட்டு எல்லாவற்றைப் பற்றியும் நிதானமாக, செய்முறை நோக்கில் சிந்திக்க வேண்டும் என்று அவர் மகனிடம் மன்றாடினார். பெற்றோர்களுக்கும் வருங்கால மனைவிக்கும் கார்ல் செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் அவர் பட்டியலிட்டார்.
மகன் அவற்றை நிறைவேற்றினால் “சத்தியத்தின் பாதைக்குத்” திரும்புவதற்கு உதவி புரியும் என்று அவர் நம்பினார், அவை, “நாகரிகமில்லாத சிறுவனை ஒழுங்குமிக்க மனிதனாக, அனைத்தையும் மறுக்கின்ற மேதையை உண்மையான சிந்தனையாளனாக, கட்டுப்பாடில்லாத இளைஞர்களின் கட்டுப்பாடில்லாத தலைவனை சமூகத்துக்குத் தகுதியுடைய மனிதனாக மாற்றுவதற்கு உதவி புரியும்; இப்படிப்பட்ட மனிதன் விலாங்கு மீனைப் போல வழுக்கிக் கொண்டு போகாமல் போதிய சுய கெளரவத்தை வைத்துக் கொண்டும் அறவோர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமாக மட்டுமே தன்னை மிகவும் இனிமையான, சாதகமான முறையில் உலகத்தின் பார்வைக்குக் காட்டுகின்ற கலையைக் கற்க முடியும், மரியாதை, அன்பு, கெளரவத்தை இயன்ற அளவுக்குச் சீக்கிரமாகப் பெற முடியும், இயற்கை அன்னை தன்னிடம் அதிகமான அளவில் வழங்கியிருக்கின்ற திறமைகளை நடைமுறையில் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்குப் போதிய அறிவையும் சாதுரியத்தையும் அடைவான்”.(5)
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய கடைசிச் சொற்கள் இவை. அவர் 1839 மே மாதத்தில் மரணமடைகின்ற வரை படுத்த படுக்கையாக இருந்தார். அவர் சீக்கிரத்தில் மரணமடைந்துவிட்டதனால் தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கசப்பான மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது, ஆகவே கார்ல் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் தகப்பனாரைப் பற்றி இனிய நினைவுகளைக் கொண்டிருக்க முடிந்தது என்று ஒகுஸ்ட் கொர்நியூ எழுதியிருப்பது சரியாகும்.(6)
கார்ல் மார்க்சின் தாயாரான ஹென்ரி யேட்டா தன் மகனுடைய உடல்நலத்தைப் பற்றி எப்பொழுதும் அதிகமான அக்கறை காட்டினாலும், அவருடைய ஆன்மீகத் தேடல்களைப் பற்றி எதுவுமே புரிந்து கொள்ளாமலிருந்தாள். அவள் 1863 வரை உயிருடன் இருந்தாள். தன் மகன் ஒரு பரிதாபகரமான தோல்வி என்றே கருதினாள். மூலதனத்தைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் சிறிதளவு மூலதனத்தையாவது சேகரிப்பதற்குத் தன்னுடைய மகன் முயற்சி செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று அவள் கசப்புடன் கூறுவது வழக்கம். அவள் கருத்து ஒரு விதத்தில் சரியானதே. ஏனென்றால் மூலதனத்தை எழுதுவதற்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூடப் பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத இலட்சியத்துக்கு அர்ப்பணித்துவிட்டார்.
அவர் “கண்ணியமிக்க” அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும், தன்னுடைய அறிவை உபயோகித்து முழுப் பலனையும் (அது “பொது நன்மைக்காகவே”) அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம்; ஆனால் அந்த இலட்சியம் மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை “அறிவாளிகளே” அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்! (மூலதனத்தின் “பட்டம் பெற்ற கைக்கூலிகள்” எத்தனை பேர்களை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் “சிறப்பித்திருக்கிறார்”!)
“கல்வியாளர்களுடன் புயல்களைத்” தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்குப் பதிலளிப்பதைப் போல இளம் மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளில் ஒன்றில் பின்வருமாறு எழுதினார்:
என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை,
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை,
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்.
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்.
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்;
ஓய்வு இல்லை, சோர்வும் இல்லை;
செயல் இல்லாத, விருப்பம் இல்லாத,
கிளர்ச்சியற்ற மெளனத்தில் அல்ல;
வலியெனும் நுகத்தடியின் கீழ்க்குனிந்து
ஏங்குகின்ற மோனத்தில் அல்ல;
ஏக்கம், கனவு, செயல் நமக்கு நிறைவேறும் வழியின்றி.(7)
மார்க்ஸ் எழுதிய கவிதைகள் எவ்விதத்திலும் பரிபூரணமானவை அல்ல; இந்த உண்மையை அந்த இளம் கவிஞரே நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் இந்தக் கவிதைகள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கின்றன, ஏனென்றால் அவை அவருடைய ஆன்மிகக் கிளர்ச்சிக்குக் கண்ணாடியாக இருக்கின்றன; உலகத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையை, சமூக விருப்பு வெறுப்புக்களை, அவரிடம் வளர்ந்து கொண்டிருந்த சமூக உணர்வை அவை பிரதிபலிக்கின்றன.
பொதுவாகக் கலையும் சிறப்பாகக் கவிதையும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களை எப்பொழுதுமே கூருணர்ச்சியுடன் புரிந்து கொள்கின்றன; அவை சமூகக் கொந்தளிப்புக்களின் வெப்பமானியாக இருக்கின்றன. மற்ற வடிவங்களில் அரசியல் நடவடிக்கை தற்காலிகமாகச் சாத்தியமில்லாமலிருக்கின்ற பொழுது இது சிறப்பான உண்மையாகும். 1830-களின் முடிவில் ஜெர்மனியில் இந்த நிலைமையே நிலவியது; அங்கே “ஒவ்வொரு பொதுஜன இயக்கமும்…. மடிந்தது”(8). ஆனால் அது புயலுக்கு முன்பாக இருக்கும் அமைதியைப் போன்றதே.
புதுக்காற்று ஏற்கெனவே வீசத் தொடங்கிவிட்டது. 1835ம் வருடத்திலிருந்து இளம் எழுத்தாளர்களின் குரல் மென்மேலும் பலமாக ஒலித்தது. அவர்கள் இளம் ஜெர்மனி என்ற சங்கத்தின் உறுப்பினர்கள். அவர்கள் பத்திரிகை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கோரினார்கள். ஹேய்னெவின் அங்கதக் கவிதை ஜெர்மனி முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிளாட்டென், ஃபிரெய்லிக்ராத் ஆகியோரின் சுதந்திர வேட்கைக் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருந்தன, கியோர்கு ஹேர்வெக் கவிதா வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். மேதாவிலாசம் நிறைந்த கவிஞரும் கட்டுரையாளருமான லுட்விக் பெர்னெ வெளிநாட்டிலிருந்து பிரஷ்ய எதேச்சாதிகாரத்துக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் இளம் மார்க்ஸ், இளம் ஏங்கெல்ஸ் ஆகிய இருவருமே கவிதை மீது அசாதாரணமான அக்கறை காட்டுவதை நாம் காண்கின்றோம். அது இயற்கையே. அவர்கள் முதலில் எழுதியது கவிதைகளே; அவர்களுடைய முதல் வெளியீடுகளும் கவிதை நூல்களே. நெடுங்காலம் வரை மார்க்ஸ் தொழில் முறை எழுத்தாளராகவே விரும்பினார்.
இளம் மார்க்சின் கவிதைப் பரிசோதனைகளில் புயல் வீசப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கலக உணர்ச்சிகளும் நிறைந்திருக்கின்றன. சுற்றிலுமுள்ள உலகத்தின் பால் தீவிரமான வெறுப்பையும் அதைச் சவாலுக்கு அழைப்பதையும் இக்கவிதைகளில் ஒருவர் தெளிவாகப் பார்க்க முடியும். அவருடைய கற்பனை அதிகமான அளவில் கட்டுப்பாடில்லாத, சூடேறிப்போன உணர்ச்சிகளை, துன்பியற் கதாநாயகனின் மிகையான உருவத்தைப் பிரசவித்தது. அந்தக் கதாநாயகன் “நெருப்புச் சக்கரத்தில் முறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறான்”, உலகத்தின் “கொடுமையான வாழ்க்கையைச் சுற்றித்” தன் கரங்களை வீசித் தன்னுடைய “முறுக்கேற்றப்பட்ட சாபத்தின்” மூலம் அதை நொறுக்கிவிடுவதாகக் கனவு காண்கிறான் (Oulanem என்ற சோக நாடகம்).(9) “நானே வாள், நானே நெருப்பு!” என்று ஹேய்னெ பிரகடனம் செய்தார். அவரைப் போல மார்க்ஸ் தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் “நெருப்பாக, செயலாக”(10) இருக்க வேண்டுமென்று ஏங்குகிறார்.
மனித வாழ்க்கையில் சில சந்திப்புகள் எவ்வளவு விசித்திரமானவை! 1840-களின் நடுப்பகுதியில் மார்க்சைச் சந்தித்தது ஹேய்னெயின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் சம்பவமாக இருந்தது; அவருடைய கவிதைக் கணைகள் அதிகமான அரசியல் கூர்மையை அடைந்தன. அதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர், 1830-களின் நடுப்பகுதியில், ஹேய்னெயின் கவிதை மார்க்சுக்கு அறிமுகமான பொழுது மார்க்சின் படைப்பு வளர்ச்சியில் அது அதே அளவுக்கு முக்கியமான பாத்திரத்தை வகித்தது.
1837ம் வருடத்திற்குள் 19 வயது நிறைந்த மார்க்ஸ் ஹேய்னெயின் நூல்களை ஏற்கெனவே நன்றாகப் படித்திருந்தார் என்பது ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஜெர்மனியில் ஹேய்னெயின் பெயரை உச்சரிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. முன்பு மேற்கோள் காட்டிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் நாடு கடத்தப்பட்ட கவிஞர் எழுதிய சமாதானம் என்ற கவிதையிலிருந்து, ஷ்பிரேயே ஆற்றின் அழுக்குத் தண்ணீர் “ஆன்மாக்களைக் கழுவுகிறது, தேநீரை நீராளமாக்குகிறது”(11) என்ற வரியை வேண்டுமென்றே எடுத்தாளுகிறார்.
ஜெர்மானியக் கவிதையின் கலகக்காரரான ஹேய்னெ அந்தச் சமயத்தில் மார்க்ஸ் வழிபட்ட “தெய்வங்களில்” ஒன்றாக இருந்தார் என்பதில் ஐயமில்லை; அவர் கவிதைகள் இதைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் ஹேய்னெயின் புதிய யாப்புகளையும் அடிக்கடி வருகின்ற சந்தப் பொருத்தமின்மைகளையும் நாம் உணர்கிறோம்; இப்பொருத்தமின்மைகள் மார்க்சிடம் ஏற்பட்டிருந்த “கலக உணர்ச்சியின்” குமுறல்களுடன் முற்றிலும் பொருந்தியிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஹேய்னெயின் அங்கதத்தை அவற்றில் உணர்கிறோம். அந்த அங்கதம் புத்தார்வவாதம் மற்றும் “பூமியில் வேரூன்றிய” யதார்த்த வாதம், தன்னுணர்ச்சிப் பாங்கு மற்றும் சமூக உணர்ச்சியின் கலவையாக இருந்தது.
“உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ் அங்கதம், முரண்நகை என்ற வாளைத் தூக்கிப் “பருத்த வயிறுகளைக் கொண்டவர்களின் பொய் ஒழுக்கத்துக்கும் சீர்மைக்கும்” பலமான அடிகளைக் கொடுக்க மறக்கவில்லை. இவ்விஷயத்தில் ஜெர்மன் அற்பவாதத்தையும் “முட்டாள்தனமான, ஊமை ஜெர்மன் பொதுமக்களையும்” அவர் ஏளனம் செய்கின்ற வரிகள் விசேஷமான அக்கறையைக் கொண்டிருக்கின்றன.
ஜெர்மன் மக்கள், முட்டாள் ஊமைகள்
நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புயல் இங்குமங்கும் சுழன்றடிக்கிறது,
மேகங்கள் இருண்டு தெரிகின்றன, நம்பிக்கையில்லை;
மின்னலடிக்குது, பாம்புகள் மறைகின்றன,
உணர்ச்சிகள் மாறாமல் இருக்கின்றன.
ஆனால் கதிரவன் தோன்றியதும்
காற்று கிசுகிசுக்கிறது, புயல் தணிகிறது;
மக்கள் கடைசியில் எழுகிறார்கள்,
குழப்பம் முடிந்துவிட்டது என்று
புத்தகத்தை எழுதுகிறார்கள்.
அவர்கள் புனைகதையைத் தேடுகிறார்கள்.
எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்வோம்,
நடைபெற்றவை வேடிக்கையே ஆனாலும்
சொர்க்கம் இப்படி விளையாடக் கூடாது.
எல்லாவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும்;
முதலில் தலை, பிறகு காலைத் தொட வேண்டும்.
குழந்தை போல அவர்கள் நடக்கிறார்கள்:
மாண்டு மறைந்தவற்றைத் தேடுகிறர்கள்!
சொர்க்கமும் பூமியும் தம் வழிகளில் போகட்டும்.
நாம் நிகழ்காலத்தை நேராகப் பார்ப்போம்.
அவை பழகிய பாதைகளில் சென்றன;
கடலலைகள் கரையை அமைதியாகத்
தொட்டுத் திரும்புகின்றன.(12)
ஒரு நபர் தன்னுடைய பணப்பையைப் பத்திரமாக மறைத்து வைத்திருக்கும் பொழுது அவர் தன்னைப் பற்றி எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும் என்று ஜெர்மன் அற்பவாதி நினைக்கிறார். இந்தச் சுயதிருப்தியை மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். தேளும் ஃபேலிக்சும் என்ற தலைப்பில் அவர் எழுதிய நகைச்சுவை நாவலில் “பழமையான ஜெர்மன் மரபை”, “அதிகமான கிறிஸ்துவத் தன்மை கொண்ட” குடும்பத்தைப் பற்றி ஏளனமாகச் சித்திரிக்கிறார், பிற்போக்கான மனிதர்களையும் மிதவாதத்துக்கு எதிரான போர்வீரர்களையும் கேலி செய்கிறார். மார்க்சின் முதிர்ச்சிக் கால நூல்களில் உள்ள சிறந்த நகைச்சுவையின் சாயல்களை இங்கே நாம் பார்க்கிறோம். சிறந்த ஒவ்வொன்றுக்கும் அதன் எதிரிடை இருக்கிறது, அந்த எதிரிடை அதை அகற்றிவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்: இராட்சசனுக்கு எதிரிடை குள்ளன், அதைப் போல மேதைக்கு அற்பவாதி, மாவீரன் சீஸருக்கு நடிப்புப் பேர்வழி ஆக்டேவியனஸ், சக்கரவர்த்தி நெப்போலியனுக்கு முதலாளி வர்க்க அரசன் லுயீ ஃபிலீப், தத்துவஞானி கான்ட்டுக்குப் பெண்களை வட்டமிடுகின்ற குரூக், கவிஞர் ஷீல்லருக்கு ஹோஃப்ரட் ராவுபஹ், லேய்ப்னித்சின் வானத்துக்கு வோல்ஃபின் வகுப்பறை. அதைப் போல, கடலில் அடிக்கின்ற ஒவ்வொரு புயலும் சேற்றையும் புழுதியையும் முன்னனுமானிக்கிறது.(13)
குறிப்புகள்:
(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 586.
(2)Ibid., p. 658.
(3)Ibid., p. 665.
(4)Ibid., p. 688.
(5)Ibid.
(6)Auguste Cornu, Karl Marx und Friedrich Engels, Leben und Werke, Bd. 1, S. 103–104.
(7)Marx, Engels, Collected Works, Vol. l., pp. 525 – 527.
(8)Marx, Engels, Collected Works, Vol. 6, p. 32.
(9)Marx, Engels, Collected Works, Vol.1, p.599.
(10)Ibid., p. 586.
(11) Ibid., p. 18.
(12) Ibid., pp. 575-576.
(13) Ibid., p. 628
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய பாகங்கள்:
- மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
- அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
- ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
- பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
- எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
- சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்