Wednesday, July 17, 2019
முகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை

எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை

0

மார்க்ஸ் பிறந்தார் – 5

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

  1. கோபமான பரிகாசமும்”   கவிதாவே சத்துக்கான தேடலும்”
    உங்களுக்குப் பிடித்தமான வாசகம்? — De omnibus dubitandum. எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு.
    -கார்ல் மார்க்ஸ் {கார்ல் மார்க்சின் ஒப்புதல்கள்(1)}

அ) எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை

வினவு குறிப்பு: இந்த அத்தியாயத்தில் காதலிலும், அறிவுத்துறை தேடலிலும் கல்லூரிப் பருவத்தை கடக்கும் மார்க்சைப் பார்க்கிறோம். எனினும் மார்க்சின் மனைவியான ஜென்னியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டாமா என்று கார்ல் மார்க்சின் தந்தை கடிதம் எழுதுகிறார். இக்காலத்தில் மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் புத்தகங்களை படிக்கிறார் மார்க்ஸ். அதே போன்று பல நூல்களை எழுதவும் செய்கிறார். எழுதியவை குறித்த அதிருப்தியால் அவற்றை அழிக்கவும் செய்கிறார். சிந்தனை உலகின் உண்மையை கண்டுபிடிக்கும் பாதையில் ஆவேசமாகவும் பரிசீலனையுடனும் பயணிக்கிறது அவரது பார்வை. அந்த வேகத்தை மட்டுப்படுத்த தந்தை முனைகிறார். இருப்பினும் தன்னுடைய பணி என்ன என்பதை மார்க்ஸ் இக்காலத்தில் தெளிவற்ற முறையிலாவது தேடியிருக்க வேண்டும். மூலதனத்தை எழுதம் பணிக்காக தனது குடும்பம், மகிழ்ச்சி, பொழுது போக்கு அனைத்தையும் இழந்த மார்க்ஸ் அதன் அறிகுறிகளை இங்கேயும் காண்பிக்கிறார். இது படித்தலும் திளைத்தலும் கொண்ட ஒரு இலக்கியவாதியின் காலமல்ல. மனித குலத்தின் இரகசியத்தை கண்டு பிடிக்க பாடுபட்ட ஒரு போராளியின் நெருப்பு காலம். படியுங்கள்

1835ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பான் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் படிக்கச் சென்றார். ஆனால் மார்க்சுக்கு சட்டவியலைக் காட்டிலும் உலகம் அதிக விரிவானதாக இருந்தது. அவர் சுதந்திரமான வாழ்க்கை என்ற நீர்ச்சுழலுக்குள் இளமைத் துடிப்போடு குதித்தார். அவர் பலவிதமான ஆன்மீக நடவடிக்கைகளில் முதலில் ஈடுபட்டார்; ஆனால் அவர் கட்டுப்பாடில்லாத மாணவர் கூட்டங்களையும் அவற்றின் தங்குதடையற்ற குதூகலத்தையும் விருந்துகளையும் சண்டைகளையும் பல விதமான வீரசாகசச் செயல்களையும் மறந்து விடவில்லை. ஒரு சண்டையின் போது கார்ல் காயமடைந்தார். ஒரு நாள் அவர் “இரவுக் கால அமைதியைக் குலைத்ததற்காகக்” கைது செய்யப்பட்டார். அவருடைய வற்றாத நகைச்சுவை உணர்ச்சிக்காக நண்பர்கள் அவரை நேசித்தார்கள். ஆனால் அவருடைய புண்படுத்துகின்ற கேலிப் பேச்சும் பரிகாசப் பாடல்களும் அவர்களைப் பயமுறுத்தின. இத்திறமைக்காக மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலேயே பிரபலமடைந்திருந்தார்.

முதியவரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனிடம்  “சண்டைகளையும் தத்துவஞானத்தையும் எப்படி ஒன்று சேர்க்கிறாய்’’ என்று கேட்டதற்குப் போதிய காரணம் இருந்தது. தகப்பனாருடைய கடிதங்கள் மகனுடைய உடல் நலம், மன நலத்தைப் பற்றி அதிகமான அக்கறையைக் காட்டுகின்றன. உடல் நலத்தை நன்கு பேண வேண்டும், ஏனென்றால் “உடல் நலக்குறைவான விஞ்ஞானி பூமியில் மிக அதிகமான பரிதாபத்துக்குரியவர்” என்று அவர் எழுதுகிறார். அவர் தன் மகனுக்கு நற்போதனைகளை வழங்குகிறார்; “இளமைக் காலத்தின் பாவச் செயல்களுக்காக” “பயங்கரமான தண்டனை” பெற்ற குன்ஸ்டர் ஒருவருடைய உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.(2)

ஆனால் அவருடைய தகப்பனார் மகனுடைய மாணவ வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சியைப் பற்றியும் கவலைப்பட்டார். 17 வயதான கார்ல் பான் பல்கலைக்கழகத்திலிருந்து தகப்பனாருக்கு எழுதிய ஆரம்பக் கடிதங்களில் ஒன்றில் மதத்தைப் பற்றித் தன்னிடம் புதிதாகத் தோன்றியிருக்கும் சந்தேகங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். ஹென்ரிஹ் மார்க்ஸ் அக்கடிதத்துக்குப் பின்வருமாறு பதிலளித்தார்: “நீ அறநெறிப்படி தொடர்ந்து நல்லவனாக இருப்பாய் என்பதை நான் உண்மையாகவே சந்தேகிக்கவில்லை. ஆனால் கடவுளிடம் தூய்மையான நம்பிக்கை வைப்பது அறநெறிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும். என்னிடம் இந்த விஷயத்தில் வெறியுணர்ச்சி கிடையாது என்பது உனக்குத் தெரியும். ஆனால் இந்த நம்பிக்கை-சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ – மெய்யாகவே மனிதனுக்கு அவசியம்; நாஸ்திகன் கூட கடவுளை வணங்கும்படி இழுக்கப்படுகின்ற தருணங்களும் வாழ்க்கையில் ஏற்படுகின்றன.”(3)

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னுடைய வாதத்தைப் பலப்படுத்துவதற்காக நியூட்டன், லோக், லேய்ப்னித்ஸ் ஆகியோரை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் இத்தகைய நயமான கண்டிப்புகளுடன் மட்டும் நிற்கவில்லை; பானில் மிகையான சுதந்திரக் காற்று வீசுகிறது, அங்கிருந்து பிரஷ்யப் பேரரசின் தலைநகரமான பெர்லினின் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டிறுக்கமான சூழலுக்கு மாற்றிக்கொள் என்று அவர் வற்புறுத்துகிறார். இதற்கு இன்னும் அழுத்தமான காரணங்களும் இருந்தன: அன்றைய ஜெர்மனியின் தத்துவச் சிந்தனை பெர்லின் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டிருந்தது. “இந்த தொழிற்சாலையுடன் ஒப்பிடுகின்ற பொழுது மற்ற பல்கலைக்கழகங்கள் உண்மையான மதுபானக் கூடங்களே’'(4) என்று லுட்விக் ஃபாயர்பாஹ் கூறினார்.

மார்க்ஸ் மற்றும் அவருடைய மனைவி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன்

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது என்ற ஸ்தூலமான பிரச்சினையைப் பற்றி கார்ல் திரும்பத் திரும்பச் சிந்தித்தார். டிரியர் நகரத்திலேயே மிகவும் அழகான பெண், “நடன அரங்குகளின் அரசியாகிய” ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் மார்க்சுக்கும் திருமணம் நிச்சயமானதும்-அது “அவருடைய முதல் வெற்றி, மிகவும் மகிழ்ச்சிகரமான வெற்றி” (மேரிங்)-அது மிகவும் அவசரமாக முடிவு செய்யப்பட வேண்டிய பிரச்சினையாயிற்று.

மார்க்சின் தகப்பனார் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் ஜென்னி உனக்காக மாபெரும் தியாகம் செய்திருக்கிறாள் என்று மகனிடம் நினைவுபடுத்தத் தவறவில்லை. ஜென்னி வசதியான எத்தனையோ இளைஞர்களின் வேண்டுதல்களை நிராகரித்திருந்தாள்; ஆனால் கார்ல் எப்படியோ அவளுடைய இதயத்தை வெற்றி கொண்டுவிட்டபடியால் அந்த அசாதாரணமான இளம் பெண்ணின் எதிர்காலம் தன் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் கார்ல் உணர வேண்டும்; ஆகவே அவர் “உலகத்தின் மரியாதைக்கு” உரியவராக வேண்டும், தன்னுடைய எதிர்காலக் குடும்பத்துக்குப் பொருளாயத வசதிகளைச் செய்வதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கார்லும் உணர்ந்தார். அவர் 1836இல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பானில் வாழ்க்கையின் ஆனந்தங்களை அனுபவிப்பதில் முழு மனத்துடன் ஈடுபட்டதைப் போல அதே உணர்ச்சி வேகத்துடன் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டார். அவருடைய அக்கறைகள் மிகவும் பல்வகையாக இருந்தன. மூலச்சிறப்பான பண்டைக் காலம், நாடகம், அழகியல், கவிதை, தத்துவஞானம், சட்டவியல் ஆகியவற்றில் ஆழமான அக்கறை காட்டினார். எதிர்கால வேலையைப் பற்றி முடிவு செய்கின்ற வேதனை நிறைந்த முயற்சியில் அவர் இன்னும் ஈடுபட்டிருந்தார். ஒரு சமயத்தில் எழுத்தாளனாவதென்று நினைத்தார். அவர் இசைப்பாடல்கள், சான்னேட் கவிதைகள் எழுதினார், நோட்டுப்புத்தகங்கள் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தார். ஒரு வரலாற்று நாடகத்தையும் கேலியான நாவலையும் கூட எழுதினார். அவருடைய தகப்பனார் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் நாடக ஆசிரியர் போன்ற வேலைகளிலுள்ள சாதகங்களையும் பாதகங்களையும் அவருடன் மிகவும் அக்கறையோடு விவாதித்தார், எத்தகைய பொருட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆலோசனை கூறினார், அவருடைய திறமையைப் பற்றி அறிவுரை கூறினார்.

தன்னுடைய மகன் “சூக்குமமான கருத்தியலானவற்றில்” ஈடுபடுவதாக ஹென்ரிஹ் மார்க்ஸ் கருதினார்; ஆனால் அவர் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பட்டார். அவர் கார்லிடம் “தேசபக்த” நடையில் ஒரு நாடகத்தை எழுதும்படி, பிரஷ்ய முடியாட்சியின் “மேதாவிலாசத்தை” விளக்கிக் கூறும்படி, ஜெர்மானிய உணர்ச்சியில் ஒரு வரலாற்றுப் பொருளைப் பற்றி எழுதும்படி ஆலோசனை கூறினார், ஏனென்றால் அத்தகைய “எழுச்சிப் பாடல்’’ “புகழ் அடைவதற்கும் “பிரபலமடைவதற்கும்” நல்ல அடிப்படையாக இருக்கும் என்றார்.(5) இலக்கிய விமர்சகராக வேண்டும் என்ற மகனுடைய விருப்பத்தை அவர் அங்கீகரிக்கவில்லை; ஏனென்றால் மாபெரும் லேஸ்ஸிங் தன்னுடைய வாழ்நாளில் மிகக் குறைவான பாராட்டுக்களையே பெற்றார், ஏழை நூலகராகவே மரணமடைந்தார்.”(6)

எனினும் நாம் ஹென்ரிஹ் மார்க்சுக்கு உரிய சிறப்பை அளிக்க வேண்டும். அவர்தான் கார்லின் அசாதாரணமான திறமையை முதலில் அங்கீகாரம் செய்தவர்; அவருடைய மகத்தான எதிர்காலத்தை-தெளிவில்லாத முறையில் என்ற போதிலும்-முதலில் உணர்ந்தவர். “கடவுளின் கருணையில் உன்னுடைய மற்றும் உன் குடும்பத்தின் நன்மைக்கு, என்னுடைய ஆரூடம் தவறாக இல்லாமலிருக்குமானால் மனிதகுலத்தின் நன்மைக்காக, நீ இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கப் போகிறாய்”(7) என்று அவர் 1836இல் தன் மகனுக்கு எழுதினார்.

சில சமயங்களில் அவர் தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டார். கார்லின் திறமை, அவரை ஒத்த வயதுள்ளவர்களிடமிருந்து அவர் வேறுபட்டிருப்பது, அவருடைய அசாதாரணமான மனத்திடம், விடாப்பிடியாக உண்மையைத் தேடல்-இவை அனைத்தின் காரணத்தால் தன் மகனை “ஆபத்தான பிசாசு” பிடித்திருக்கிறது, உலகியல் வெற்றிக்குரிய தெளிவான பாதையிலிருந்து அவரை விலக்கிவிடும், அமைதியான வாழ்க்கையை எதிர்த்துக் கலகம் செய்யும்படி அவரைத் தூண்டும் என்று அவர் நினைத்தார்.

“அது வானத்துப் பிசாசா அல்லது ஃபாவுஸ்டின் பிசாசா?” ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த பிரச்சினையைப் பற்றி இப்படிக் கேட்டுக் கொண்டார். கேதேயினுடைய ஃபாவுஸ்டின் முடிவை நினைத்த பொழுது அது பின்பற்றப்பட வேண்டிய உதாரணமாக அன்பு நிறைந்த தகப்பனாருக்குத் தோன்றவில்லை. நிரந்தரமான அதிருப்தியுடன் உண்மையையும் வாழ்க்கையின் மெய்ப் பொருளையும் தேடிய ஃபாவுஸ்டின் உருவம்-அற்புதமான தருணம் என்ற கைக்கு அகப்படாத கானல் நீரைக் கண நேர ஓய்வுகூட இல்லாமல் தேடியவர், மெய்யான மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருந்த பொழுது தனக்குக் கிடைத்த சிறு பங்கைக் கொண்டு திருப்தியடையாமல் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியவர், அவர்களுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்யத் துணிந்தவர்களே வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் தகுதி உடையவர்கள் என்று கருதுபவர்-அந்த உருவம் மார்க்சின் தகப்பனாருக்குக் கவர்ச்சியாக இருந்திருக்க முடியாது, தன் மகனைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பிசாசு அது என்று அவர் பயந்தார்.

“உன்னையும் உன்னுடைய எதிர்காலத்தையும் பற்றி நினைக்கும் பொழுது என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் என்னிடம் கவலைகளையும் அச்சத்தையும் தூண்டுகின்ற கருத்துக்களைச் சில சமயங்களில் என்னால் அகற்ற முடியவில்லை. உன்னுடைய அறிவுக்கு, உன்னுடைய திறமைகளுக்குத் தகுந்தாற்போல உன் இதயம் இருக்கிறதா என்ற கேள்வி மின்னல் கீற்றைப் போல என்னிடத்தில் தோன்றுகிறது. துன்பம் நிறைந்த இவ்வுலகத்தில் கூருணர்ச்சி படைத்த மனிதன் ஆறுதலடைவதற்கு மிகவும் அவசியமான, சாதாரணமான ஆனால் புனிதமான உணர்ச்சிகளுக்கு உன் இதயத்தில் இடமிருக்கிறதா?. நீ என்றைக்காவது உண்மையான மானுட மகிழ்ச்சியை, குடும்ப மகிழ்ச்சியை அடைவாயா? இது என் இதயத்துக்குக் குறைவான வேதனையைத் தருகின்ற கேள்வியல்ல. ஒரு குறிப்பிட்ட நபரை என்னுடைய குழந்தையைப் போல நான் நேசித்து வருகின்றபடியால் அண்மைக் காலத்தில் மற்றொரு கவலையும் என்னை வாட்டுகிறது. உனக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாக்க உன்னால் என்றைக்காவது முடியுமா?”(8) அவர் “குறிப்பிட்ட நபர்;” ஜென்னி வான் வெஸ்ட்ஃ பாலன். அந்த நங்கையின் மகிழ்ச்சியைப் பற்றியே இங்கே ஹென்ரிஹ் மார்க்ஸ் உருக்கமாகக் குறிப்பிடுகின்றார்.

ஒருவர் மகிழ்ச்சியைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒருவேளை கார்ல் மார்க்ஸ் தனக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு” அவருடைய தகப்பனார் கனவு கண்ட, கவலைகள் ஊடாடாத “குடும்ப” மகிழ்ச்சியைத் தராதிருந்திருக்கலாம். என்னுடைய வாழ்க்கைப் பணியான மூலதனத்தை எழுதுவதற்காக என்னுடைய உடல்நலத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்தேன் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார், அவருடைய ஓய்வில்லாத வாழ்க்கையின் எல்லாச்சுமைகளையும்-அலைச்சல், சிறை, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுதல், வறுமை, காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை-ஜென்னி தன் கணவருடன் பகிர்ந்து கொண்டாள். மூன்று குழந்தைகள் இறந்தன. ஆனால் அவள் மார்க்சின் மிக நெருங்கிய சகாவாக, ஆலோசகராக, அவருடைய நற்தெய்வமாக இருந்தாள். ருஷ்யாவிலிருந்து அமெரிக்கா வரையிலும் புதிய, போராடுகின்ற உலகத்தின் சின்னமாக மார்க்ஸ் ஆகியிருப்பதை அவள் உயிரோடிருந்து பார்த்தாள். இது அவள் இழந்த அனைத்துக்கும் ஈடாக இருந்தது.

ஹென்ரிஹ் மார்க்சின் வருந்தீங்குணர்தல் பொய்த்துவிடவில்லை. அவருடைய மகனைப் பிடித்தாட்டியது வானத்துப் பிசாசு அல்ல, அது ஃபாவுஸ்டின் பிசாசே. அது அவரை ஓரிடத்தில் நிற்க அனுமதிக்கவில்லை; அவருடைய ஆன்மிக வளர்ச்சியில், பரிபூரணத்தை நோக்கி அவருடைய தேடலில், பிடிக்கு அகப்படாத, கவர்ச்சி நிறைந்த “பிசாசுத் தர்க்கவியலை”, முழுமையான அறிவு என்ற பொய்த் தோற்றத்தை, யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதை நோக்கி அவருடைய தேடலில் முடிவில்லாதபடி மென்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அது தூண்டியது. அதற்கு மார்க்சும் அவருக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களும்” தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று அது கோரியது. மார்க்ஸ் சமூக உண்மையின் தர்க்கவியலின் சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தன்னுடைய பள்ளிக்கூடக் கட்டுரையில் மகிழ்ச்சியைப் பற்றி எழுதிய கருத்துக்கு (“எல்லோருடைய நன்மைக்காகச் செய்யப்பட வேண்டிய தியாகங்கள்”’, “கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சி”) அவர் விசுவாசமாக நடந்து கொண்டார்.

ஃபாவுஸ்டைப் போலின்றி மார்க்ஸ் மெஃபிஸ்டோபிலேத் தனக்குள்ளேயே வைத்திருந்தார். தன்னுடைய சொந்த நூல்களின் மிகவும் ஈவிரக்கமில்லாத விமர்சகராக அவர் எப்பொழுதும் இருந்தார். “எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை. முதலாவதாகவும் முதன்மையாகவும் அவர் இதைத் தன்னுடைய சொந்த எழுத்துக்களுக்குக் கையாண்டார்.

மாணவப் பருவத்தின் ஆரம்ப வருடங்களில் அவர் செய்த கவிதைச் சோதனைகள் கண்டிப்பு நிறைந்த தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டன. 19 வயதாகிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் அவற்றைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்: “நம் காலத்தைப் பற்றிய கடுந்தாக்குதல்கள், மேலோட்டமான வளர்ச்சியில்லாத உணர்ச்சி வெளியீடுகள், இயல்பான விதத்தில் எதுவுமில்லாதவை, எல்லாமே கற்பனையில் தோன்றியவை, இருப்பதற்கும் இருக்க வேண்டியதற்கும் இடையில் முழுமையான எதிர் நிலை, கவித்துவமில்லாத பிரசங்கச் சிந்தனைகள், ஒரளவுக்கு உணர்ச்சித் துடிப்பும் கவிதாவே சத்துக்கான தேடலும் கொண்டவை.”(9) மார்க்சின் விமர்சனக் கூர்மை இங்கே அவரை ஏமாற்றிவிடவில்லை என்பது வெளிப்படையாகும்.

“வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போன்ற உண்மையான கவிதையின் பளிச்சிடும் உலகத்தை” அவர் முடிவில் சிற்சில கவிதைகளில் கண்டபோதிலும் இந்த வெற்றி அவருடைய கவித் திறமையைப் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பாகவே மார்க்சுக்கு உதவியது, “என்னுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றுமில்லாதபடிச் சிதைவடைந்தன.”(10) இக்கூற்றை அதன் நேர்ப்பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்: மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளையும் நாவல்களின் உருவரைகளையும் எரித்துவிட்டார்.

மார்க்ஸ் “கலைத் தேவதைகளின் நடனங்களையும் வன தேவதைகளின் இசையையும்”(11) கைவிட்ட பிறகு அதிகமான ஆர்வத்துடன் விஞ்ஞானத்தை நோக்கித் திரும்பினார். இதற்கு முன்னர் கூட கவிதை அவருக்குத் துணைத் தொழிலாகவே இருந்தது. அவர் எழுதிக் கொண்டிருந்த இசைப்பாடலை அல்லது கவிதை நாடகத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு சட்டவியல் அல்லது தத்துவஞானத்தில் மூழ்கிவிடுவார். அவர் லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்கெல்மானின் கலைகளின் வரலாறு மற்றும் ஓவி டின் இரங்கற்பாக்களுடன் ரேய்மாருளின் மிருகங்களின் கலை உணர்ச்சிகள், லுடெனின் ஜெர்மன் வரலாறு, அரிஸ்டாட்டிலின் சொல்வன்மை மற்றும் பேக்கன், ஷேல்லிங், கான்ட், ஹெகல் ஆகியோர் எழுதிய நூல்களையும் படித்தார். சட்டவியலைப் பற்றி மலையளவு நூல்களைப் படித்தார். ஒரு வருடத்தில் அவர் படித்த நூல்களின் எண்ணிக்கை நமக்கு மெய்யாகவே திகைப்பளிக்கின்றது !

ஆனால் மார்க்ஸ் வெறுமனே படிக்கவில்லை. அவர் படித்த புத்தகங்களிலிருந்து நீண்ட பகுதிகளை நோட்டுகளில் எழுதிக் கொள்வார்; அவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளையும் எழுதி வைத்திருப்பார். இந்தப் பழக்கத்தை அவர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இது அவருடைய சிந்தனையையும் நினைவாற்றலையும் ஒழுங்குபடுத்தியது; அவருடைய ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவி புரிந்தது.

மார்க்ஸ் ஒரு புதிய அறிவுத்துறை பற்றிப் படிக்கும் பொழுது அது உடனடியாக அத்துறையைப் பற்றி சுதந்திரமான பகுப்பாய்வாக முன்னேற்றமடைவது அவருக்கே உரித்தான குணாம்சமாகும். அவர் ஒரு மாணவனைப் போல ஈடுபாடற்ற முறையில் நூல்களைப் படிக்கவில்லை, அவருடைய சுதந்திரமான, படைப்பாற்றல் மிக்க சிந்தனையை ஊக்குவிப்பதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக, தூண்டுதலாக உதவியது.

அவர் சட்டவியலையும் தத்துவஞானத்தையும் படித்த பொழுது “சட்டவியலின் மொத்தத் துறையையும் உள்ளடக்கிய சட்டவியலின் தத்துவஞானத்தைத்” தேடுகிறார். பதினெட்டு வயதான மார்க்ஸ் இப்பொருளுக்கு அறிமுகமாக மட்டுமே சுமார் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியற்ற நூலை”(12) எழுதுகிறார், அதே கல்வியாண்டில் கலையின் வரலாற்றையும் தத்துவஞானத்தின் வரலாற்றையும் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் சுமார் 24 பக்க அளவில் ஒரு உரையாடலை எழுதினார்; அதில் “கலையும் விஞ்ஞானமும் ஓரளவுக்கு ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. கிளியாந்தஸ் அல்லது தத்துவஞானத்தின் தொடக்க நிலையும் அவசியமான தொடர்ச்சியும் என்பது அந்த உரையாடலின் தலைப்பாகும். அது நமக்குக் கிடைக்காமல் போனது வருந்தற்குரியதே; ஏனென்றால் அந்தக் கட்டத்தில் எழுதப்பட்டவற்றில் மார்க்சினுடைய பாராட்டைப் பெற்றது இந்தக் கட்டுரை மட்டுமே. மற்றவை அனைத்தும் அவருடைய கவிதைகளைப் போலவே கடுமையான விமர்சனத்திற்கு ஆளாயின.

இந்தக் கல்வியாண்டின் போது (1836-37) அவருக்கு உறக்கமில்லாத இரவுகளும் வேதனைமிக்க ஆன்மீகச் சண்டைகளும் ஏற்பட்டன. “ஆன்மப் பயணம்” ஏற்கெனவே செய்யப்பட்டதை நிராகரிப்பதிலேயே வழக்கமாக முடிந்தது. தத்துவஞானம் மற்றும் சட்டவியலில் ஏதாவதொரு அறிஞரின் கருத்தை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டு அதைத் தர்க்க ரீதியான முடிவுக்கு வளர்த்துச் செல்வதற்கு முயற்சிப்பார். ஆனால் அதன் விளைவாக அந்த அறிஞரும் அவருடைய போதனையும் தன்னுடைய சொந்தத் தேடல்களும் பயனற்றவை என்பதைக் காண்பார். ஒரு கோவிலில் இருக்கும் விக்கிரகங்களைத் தூக்கியெறிவார், உடனே அதில் புதிய விக்கிரகங்களை நிறுவுவார். உண்மையின் பீடத்திலிருந்து ஒரு விக்ரகத்தைத் தூக்கியெறிவார், அப்பீடத்தில் மற்ற விக்ரகங்களை நிறுவுவார். கவிதை, அழகியல், தத்துவஞானத் துறைகளில் அவர் ஏராளமான நூல்கள் எழுதினார்-ஆனால் உடனே அவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதிலும் எழுதக் கூடிய நூல்களை அவர் ஒரே வருடத்தில் எழுதி முடித்தார். ஒரு அற்பவாதிக்கு இது பெருமையாக இருக்கும். ஆனால் இளைஞரான மார்க்சுக்கு இது அதிருப்தியின் துன்பத்தைக் கொடுத்தது.

மார்க்ஸ் தன்னுடைய கற்பனை உலகங்களைப் படைத்து முடிப்பதற்குள்ளாகவே உடைத்து விடுகிறார், புதிய உலகங்களைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார், அவர் எழுதிய தேடல் என்ற கவிதையை ஜென்னிக்கு அர்ப்பணித்தார். அதில் அவரே பின்வருமாறு எழுதுகிறார்:

என்னைக் கட்டிய தளைகளை நொறுக்கி எழுந்தேன்.
“எங்கே செல்கிறாய்?” “எனக்கொரு உலகம் தேடி!”
“இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே – கடல்களும் மேலே-விண்மீன்களும் இல்லையா?”….
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்,
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்,
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்,
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும் .  . .
நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்,
திரும்பினேன் – கீழும் மேலும் உலகங்கள்,
விண்மீன்களும் கதிரவனும் துள்ளின,
மின்னல் வெட்டியது- நான் மடிந்தேன்.(13)

தான் சாதித்தவற்றைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் பரிபூரணத்தை நோக்கி முடிவில்லாத தேடலும் அவருடைய முதிர்ச்சிக் காலத்திலும் அவருடைய சிறப்பான அம்சங்களாக இருந்தன. அவருடைய சிந்தனை உருவமெடுத்த உடனே ஏற்கெனவே சாதிக்கப்பட்டவற்றை அது கடந்து சென்றுவிடும், எழுதப்பட்டவற்றை இதுவரையிலும் அடைந்திராத சிகரங்களிலிருந்து நோக்கும், அதன் பிறகு புதிய சிகரம் தோன்றும். அச்சிகரங்களைத் தன்னுடைய காலடியில் குவிப்பது அவருடைய நோக்கமல்ல, உண்மையை அதன் மெய்யான ஒளியில் பார்க்கக் கூடிய சிகரத்தை எட்டுவதே அவருடைய நோக்கம்.

குறிப்புகள் :

(1)Reminiscences of Marx and Engels, p. 266. 70
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 647, 649.
(3) Ibid., p. 647.
(4) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 1, S. 73.
(5)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 672, 673.
(6) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 210.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 662.
(8) Ibid., p. 670. 78
(9)Ibid., p. 11.
(10) Ibid., p. 17.
(11) Ibid.
(12 ) Ibid., p. 12.
(13) Ibid., p. 559.
– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க