Tuesday, July 23, 2019
முகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

0

மார்க்ஸ் பிறந்தார் – 9
(
கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

4. “உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்”
இ) விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டம் வளர்ச்சியடைந்த திசைகளில் ஒன்றுதான் மதத்தைப் பற்றிய விமர்சனம்

வினவு குறிப்பு:

கார்ல் மார்க்சின் வரலாற்றை வெறுமனே நாள், சம்பவம், திருப்பங்கள், இட ம், என்று புரிந்து கொள்ள முடியாது . அவரது உலகக் கண்ணோட்டம் எப்படி வளர்ந்தது என்பதே மார்க்சின் ஆளுமையை அருகில் பார்த்து புரிந்து கொள்வதற்கு உதவும். இந்நூலாசிரியரின் நோக்கமும் அதுதான். இந்த அத்தியாத்தில் கார்ல் மார்க்ஸ் கடவுள் குறித்த விவாதங்களை அதாவது  கடவுள் இல்லை என்பதன் அடிப்படையை நிரூபிக்கிறார்.

நாத்திக ஆத்திக விவாதங்கள் பொதுவில் பகுத்தறிவு, தத்துவ நோக்கில் மட்டும் நடக்கும். ஆனால் கடவுளின் நிலையை வானில் இருந்து அல்ல பூமியில் இருந்து கொண்டு மட்டுமே விளக்க முடியும் என்கிறார் மார்க்ஸ். மனிதன் வர்க்க ரீதியாக முரண்படும் சமூக வாழ்வின் வழியே தன்னை இழப்பதால், கற்பனையான ஆன்மீகத்தில் தன்னை பெற முயற்சிக்கிறான்.

இயற்கையின் இயக்கத்தை மேலும் மேலும் புரிந்து கொள்ளும் போது கடவுள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறார். இயற்கை குறித்த பிரம்மாண்டத்தை அறியாததால் கடவுளுக்க்கு அளிக்கப்பட்ட வலுவான ஆயுதங்கள் அதே இயற்கைய குறித்து அறியும் போது ஒவ்வொன்றாய் உதிர்கின்றன. போலவே வர்க்கப் போராட்டத்தில் மனிதனின் சுய மதிப்பு மீட்குமளவுக்கு கடவுளின் கற்பித மதிப்பு கரைந்து போகிறது.

அறிவியல் ரீதியான உலகக் கண்ணோட்டம் வளர்வதற்கு மார்க்சின் மதம் குறித்த விமர்சனமும் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது.
படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருந்தாலும் படியுங்கள். முயற்சி செய்யுங்கள்.

ஜெர்மனியில் ஹெகல் உள்பட பல சமயத் தத்துவஞானிகள் மாபெரும் கிரேக்க அணுவாதிகளைப்(1) பற்றி ஏளனமாகப் பேசினார்கள். இளம் மார்க்ஸ் அந்தச் சமயத்தில் ஹெகலியவாதிகளுக்கு நெருக்கமானவராக இருந்த போதிலும் ஹெகலின் பெயர் அவரைத் தடுக்கவில்லை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உண்மையே அவருக்கு முக்கியமானது. உண்மையே அவர் வணங்கிய கடவுள்.

கிரேக்கத் தத்துவஞானம் மற்றும் பொதுவாக கிரேக்க அறிவின் வரலாற்றில் எபிகூரிய, ஸ்டோயிக் மற்றும் ஐயுறவுவாத அமைப்புக்களின் மாபெரும் முக்கியத்துவத்தை “மாபெரும் சிந்தனையாளரான” ஹெகல் அங்கீகரிக்காதபடி அவருடைய “ஊக முறை” தடுத்தது என்று மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டார்.(2)

மேலும் மத அரங்கத்தில் தத்துவஞானத்தைக் கொண்டு வந்த ப்ளுடார்கைப் பற்றி எழுதுகின்ற பொழுது மார்க்ஸ் உண்மையில் ஹெகலுடன் அல்லது, சரியாகச் சொல்வதென்றால், அவருடைய ஆதரவாளர்களின் வலது அணியினருடன் வாதம் புரிகின்றார்.

ஹகல்

ஹெகலைப் பொறுத்தமட்டில், “கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்கள்” தொடர்பாக மார்க்ஸ் அவரையும் விமர்சனம் செய்கிறார். இந்த “நிரூபணங்களை” கான்ட் ஏற்கெனவே மறுத்துவிட்டார். ஆனால் ஹெகல் அவற்றைத் தலைகீழாக நிறுத்திவிட்டார், “அதாவது அவற்றை நியாயப்படுத்துவதற்காக நிராகரித்துவிட்டார்.” “ஆதரித்து வாதாடுகின்ற வழக்குரைஞர் தம்முடைய கட்சிக்காரர்களைத் தாமே கொலை செய்வதன் மூலமாகவே அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியுமென்றால் அந்த நபர்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்?(3)” என்று மார்க்ஸ் கிண்டலாகக் கேட்கிறார்.

“கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்கள்” உண்மையில் தலைமையான மனித உணர்வு இருப்பதைப் பற்றிய நிரூபணங்களே, ஆகவே “கடவுள் இல்லை” என்பதற்குரிய நிரூபணங்களே என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். இயற்கை நன்கமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்று “நிரூபணங்களில்” ஒன்று கூறுகிறது. ஆனால் இயற்கை அமைப்பின் “பகுத்தறிவுத் தன்மை” கடவுள் மிகையானவர், கடவுள் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது.

“கடவுள் இருக்கிறார்” என்பதற்கு மெய்யான நிரூபணங்கள் பின்வருமாறு கூற வேண்டும்: “இயற்கை மோசமாக அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார்”; “உலகத்தில் பகுத்தறிவு இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்”; “சிந்தனை இல்லாதபடியால் கடவுள் இருக்கிறார்.”

“உலகம் பகுத்தறிவுடன் தோன்றவில்லை என்பவருக்கு…. அவருக்குக் கடவுள் இருக்கிறார், அல்லது பகுத்தறிவு இல்லாததனால் கடவுள் இருக்கிறார்.”(4) இந்த முடிவு அக்காலத்துக்கு முற்றிலும் துணிவானதாகும்.

மனித சுய உணர்வே “உயர்ந்த கடவுள்” “அதைத் தவிர வேறு எதுவும் கிடையாது’’ என்று மார்க்ஸ் உறுதியாகப் பிரகடனம் செய்தார்; ‘’உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்’’ என்று புரோமித்தியஸ் துணிச்சலாகக் கூறியதை ‘’வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் எதிரானதாக’’ அவர் திருப்பினார். இந்தத் துணிவான கருத்து மத எதிர்ப்பு மட்டுமல்லாமல் அரசியல் தன்மையும் கொண்டிருந்தது.

மார்க்ஸ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகின்ற பொழுது ஆட்சியில் இருப்பவர்களின் “பரிதாபகரமான பிறவிகளுக்கு” உணர்வு பூர்வமாகச் சவால் விட்டார். விலங்குகள் மாட்டப்பட்ட கலகக்காரனான புரோமித்தியசை “பகுத்தறிந்து” பணியும்படி ஜேயசின் ஊழியனான ஹெர்மஸ் முயற்சி செய்த பொழுது அவன் அதை இகழ்ச்சியாக நிராகரித்தான். மார்க்ஸ் எஷ்கிலசின் புரோமித்தியசுடன் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

இது உறுதி: என்னுடைய நிலையை
உங்களுடைய அடிமைத்தனத்துக்கு மாற்றிக் கொள்ள மாட்டேன்;
ஜேயசுக்கு ஊழியம் புரிவதைக் காட்டிலும்
இந்த மலைக்கு ஊழியம் செய்வது மேல்.(5)

மார்க்சின் மிகையான “இடதுசாரி” நிலையைக் கண்டு “பரிதாபகரமான பிறவிகள் அதிர்ச்சியடைந்தனர். மார்க்சின் அஞ்சா நெஞ்சத்தைப் பற்றி அர்னோல்டு ரூகே எழுதினார். தத்துவத்தின் பயங்கரவாதத்தை ஆதரித்த பெளவர் கூட மார்க்சின் சவாலைக் கண்டு அஞ்சினார், ஆராய்ச்சிக் கட்டுரையின் துணிச்சல் மிக்க முன்னுரையின் தொணியைக் குறைக்கும் படி அவரைக் கேட்டுக் கொண்டார்; பிற்போக்குவாத அமைச்சரான எய்ஹகோர்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி ஆலோசனை கூறினார்; போராட்டத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும், அரசாங்கத்தைத் தாக்கக் கூடாது என்று அறிவுரை கூறினார்.

இப்படிப்பட்ட அறிவுரை – தகப்பனாரோ அல்லது நண்பர்களோ – யாரிடமிருந்து வந்தாலும் அதற்குச் செவி சாய்க்கக் கூடியவர் அல்ல மார்க்ஸ். வானத்தையும் பூமியையும் சேர்ந்த கடவுள்களுக்கு முன்னால் இரும்புக் கையுறையைக் கழற்றியெறிந்த மார்க்ஸ் அத்துடன் நின்றுவிடவில்லை. போராட்டத்தில் இறங்கிவிட்ட மார்க்ஸ் கடைசி வரை போராடுவதற்குத் தயாராக இருந்தார்; இப்போராட்டத்தில் அவர் எவ்வளவு தூரம் போகக் கூடும் என்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட ஊகிக்க முடியவில்லை.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

இளம் ஏங்கெல்ஸ் 1841ம் வருடத்தின் முடிவில் எழுதிய நம்பிக்கையின் வெற்றி என்ற கவிதையில் மார்க்சின் முறியடிக்கப்பட முடியாத போராட்ட உணர்வைச் சிறப்பாக வர்ணிக்கிறார். கவிதையின் ஆரம்பத்தில் அவர் புரூனோ பெளவரைச் சித்திரிக்கிறார்:

பச்சைக் கோட்டணிந்த ஒல்லியான வில்லன்
பிதற்றுகிறார்; அந்த முகத்துக்குப் பின்னால்
நரகத்தின் குழந்தையைப் பார்க்க முடியும்.
அவர் கொடியை உயர்த்துகிறார்; அவரது
பைபிள் விமர்சனப் பொறிகள் பறப்பதை
மேலே அரை வட்டத்தில் பார்க்க முடியும்.

பிறகு மார்க்ஸ் தோன்றுகிறார்:

கட்டுக்கடங்காத் துடிப்புடன் ஓடுவது யார்?
டிரியர் நகர இளைஞன், கறுப்பு நிறம்
அவன் தாண்டுவதில்லை, குதிப்பதில்லை,
துள்ளிக் குதித்து ஓடுகிறான்,
வானத்திலிருக்கும் பந்தலைப் பிடித்து
பூமிக்குக் கொண்டு வருவதைப் போல
கைகளை விரித்து வானத்தைத் தொட முயல்கிறான்.(6)

மார்க்சும் புரூனோ பெளவரும் 1841இல் மதத்தைப் பற்றிய விமர்சனத்தில் ஒன்றாகப் பணியாற்றிய பொழுது அவர்களுடைய வாழ்க்கைப் பாதைகள் ஒன்று கலந்தன என்றாலும் பிற்காலத்தில் அவை அதிகமாகப் பிரிந்தன. காலப் போக்கில் பெளவரின் தத்துவ ரீதியான “பயங்கரவாதம்” அரசாங்கத்தின் பால் மென்மேலும் அதிகமான விசுவாசமாக மாறியது; பிறகு ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு எதிராக முதலாளி வர்க்கத்தின் பயங்கர ஆட்சிக்குத் தலைமை தாங்கிய பிஸ்மார்க்குக்கு மிகவும் விசுவாசமான ஆதரவாக மாறியது முற்றிலும் தர்க்க ரீதியானதே.

மத விமர்சனத்தைப் பொறுத்தவரை மார்க்ஸ் ஏற்கெனவே 1843க்குள் பெளவரைக் காட்டிலும் வெகு தூரம் போய்விட்டார். Deutsch-Französische Jahrbüchergஇல் (“ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்தர சஞ்சிகை”) அவர் எழுதிய கட்டுரைகளில் மதத்தைத் தீவிரமான முறையில் விமர்சிப்பதற்கு மதத்தைப் பற்றிய தத்துவஞான மறுப்பு மட்டும் போதுமானதல்ல என்று அவர் எடுத்துக்காட்டினார்.

ஒருவர் மேக மண்டலங்களுக்கு இடையில் சஞ்சரித்தால் “வானத்தின் பந்தலைப் பிடித்து பூமிக்குக் கொண்டு வர” முடியாது. அதற்கு அவர் பூமியில் நிற்க வேண்டும். மதத்தின் மூல வேர்கள் “பூமியில்” இருக்கின்றன. மதஞ்சார்ந்த அவல நிலை சமூக உறவுகளின் மெய்யான அவல நிலையின் வெளியீடுதான். அவை அதை வளர்க்கின்றன.

பரம்பொருளுக்கு முன்னால் “கடவுளின் அடிமைகளின்” பணிவான நிலை சமூகத்தில் மனிதனுடைய அடிமைத்தனமான, ஒடுக்கப்பட்ட, சார்ந்திருக்கும் நிலையின் பிரதிபலிப்பு மட்டுமே, சமூக உறவுகள் இன்னும் மெய்யாகவே மனிதப் பண்பை அடையவில்லை என்ற உண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே.

“மதம் என்பது தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்து விட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே.”(7) மனிதனுக்கு விரோதமான சக்திகள் மனிதனை ஆள்கின்ற மனிதத் தன்மையற்ற உலகத்தின் உற்பத்தியே அது.

“தலைகீழாக இருக்கும் உலகம்” “தலை கீழான” உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. கண்ணீர்க் கடலில் மிதக்கும் பொழுது தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத” மனிதன் மறு உலக வாழ்க்கையைப் பற்றிக் கற்பனையான கனவுகளில் ஆறுதல் தேடுகிறான். பூமியில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்பதால் சொர்க்கத்திலிருக்கும் இன்பங்களைப் பற்றிய சமயப் பிரசங்கங்களில் நம்பிக்கை வைக்கிறான்.

மனிதன் தன்னுடைய விடுதலைக்காகவும் இயற்கையை எதிர்த்தும் நடத்துகின்ற போராட்டத்தில் பலவீனத்தையும் ஆதரவற்ற நிலையையும் உணர்கிறான்; எனவே கடவுளுக்கு வலிமையையும் எல்லாம் வல்ல தன்மையையும் தருகிறான். மனிதன் பூமியில் தன்னுடைய வாழ்க்கையின் அவல நிலைக்குப் பரிகாரத்தைக் கடவுளிடம் தேடுகிறான். அதனால்தான் அக்காலத்திய மதம் “இதயமற்ற உலகத்தின் இதயமாகவும்” “உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும்” இருப்பது மட்டுமின்றி, இந்த உலகத்துக்கும் அதன் நிலைமைகளுக்கும் எதிர்ப்பாகவும் இருக்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்பு மெளனமானதே. அது அடிமையின், “ஒடுக்கப்பட்ட பிறவியின் பெருமூச்சே”; சமூக மற்றும் தனிநபருடைய அவல நிலை தெய்வீகத் தன்மைக்கு எதிரான ஒன்றல்ல, அதன் அத்தியாவசியமான குணாம்சமாக இருக்கிறது. ஒன்று மற்றொன்றை வளர்க்கிறது, நிர்ணயிக்கிறது.

மதத்துக்கு எதிரான தீவிரப் போராட்டம் “அந்த மதத்தை ஆன்மிக வாசனையாகக் கொண்ட உலகத்துக்கு” எதிரான போராட்டத்தை முன்னாகிக்கிறது. இது அந்நியப்படுதலின் எல்லா வடிவங்களிலிருந்தும் மனிதனுடைய விடுதலைக்காக நடைபெறுகின்ற போராட்டம், மனிதனுடைய முழு வளர்ச்சிக்கான போராட்டம்.

புரூனோ பெளவரும் லுட்விக் ஃபாயர் பாஹூம் மதத்தை விமர்சனம் செய்வதுடன் நின்றுவிட்டார்கள்; ஆனால் மதத்தைப் பற்றிய விமர்சனம் “எல்லா விமர்சனங்களுக்குமே முற்கருதுகோளாகும்”(8).

ஃபாயர்பாஹ் கூறியதைப் போல மனிதனே மனிதனுக்குக் கடவுள் என்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற, கைவிடுகின்ற, புறக்கணிக்கின்ற எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டுமென்று மார்க்ஸ் தர்க்க ரீதியாக முடிவு செய்தார். நாய்கள் மீது வரி விதிப்பதற்குத் திட்டமிட்டதைக் கேள்விப்பட்ட ஒரு பிரெஞ்சுக்காரர் “பாவம் நாய்கள்! உங்களை மனிதர்களைப் போல நடத்துவதற்கு விரும்புகிறார்கள்!”(9) என்று கூறினாராம். இந்த உறவுகளை வர்ணிப்பதற்கு இந்தக் கூற்று மிகப் பொருத்தமானது.

மார்க்சின் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் கடவுளை நோக்கித் துணிவாகச் சவால் விட்டதன் விளைவுகளை எடுத்துக்காட்டுவதற்காக நாம் கால ரீதியில் முன்னே போய்விட்டோம். “பகுத்தறிவு இல்லாததுதான் கடவுள் இருப்பதற்குக் காரணம்” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் முடிவிலிருந்து “பகுத்தறிவில்லாத” உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பது அவசியம் என்ற முடிவுக்கு வருவதற்கு ஒரு அடி முன்னால் வைப்பது போதுமானது. ஆனால் இந்த ஒரு காலடியே தீவிரமான இளம் ஹெகலியவாதிக்கும் புரட்சிக்காரனுக்கும் உள்ள வேறுபாடாகும்.

இளம் மார்க்சின் விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டம் வளர்ச்சியடைந்த திசைகளில் ஒன்றுதான் மதத்தைப் பற்றிய விமர்சனம். மாணவப் பருவத்தின் பிற்காலத்தில் தத்துவஞானமே அவருடைய முக்கியமான அக்கறையாக இருந்தது. மதத்தைப் பற்றிய மார்க்சின் விமர்சன அணுகுமுறையுமே அவருடைய தத்துவஞான வளர்ச்சியினால் பெருமளவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குறிப்புகள் :

(1)அணுவாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இப்புத்தகத்தின் 162ம் பக்கத்தில் டெமாக்ரிட்டசைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் குறிப்பைக் காண்க.
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 30.
(3) Ibid., p. 103.
(4)Ibid., p. 105.
(5) Ibid., p. 31.
(6)Marx, Engels, Collected Works, Vol. 2, Moscow, 1975, p. 336.
(7)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 175,
(8) Ibid., p. 175.
(9)Ibid., p. 182.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க