முகப்பு முன்னோடிகள் மார்க்ஸ் பிறந்தார் பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

கலை நம்மை உயர்த்துகிறது, பண்படுத்துகிறது, அழகு நுகர்ச்சி இன்பத்தை வழங்குகிறது, நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் உலகத்தை வண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் பார்க்கவும் கற்பிக்கிறது.

0

மார்க்ஸ் பிறந்தார் – 10
(
கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

வினவு குறிப்பு:
ஐந்தாம் அத்தியாத்தின் முதல் பிரிவில் கலை – தத்துவஞானம் குறித்து பார்க்கிறோம். எதையும் சந்தேகிக்கும் மார்க்சின் தேடல் அவரை தத்துவஞானத் துறையில் கொண்டு நிறுத்துகிறது. துல்லியமான அறிவியல் விதிகளோடு சிந்திப்போர் அறவியலுக்கு மாறான மற்றும் எதிரான கருத்துக்களை ஏற்பதில்லை. அதுதான் அறிவியல். அந்த அறிவியல் நிலையை அடைய நீங்கள் அறிவியலின் பொதுவான விதிகள், வரலாறு தொடங்கி நீங்கள் கவனம் கொள்ளும் குறிப்பான துறை வரை ஆழ்ந்து படிப்பதும், அதை ஆய்வகச் சோதனைகளோடு புரிந்து கொள்வதும், நிரூபிப்பதும் அவசியம்.

அதே போன்று இந்த உலகம் – மனித சமூகம் – சிந்தனை மூன்றின் விதிகளை அறிந்து கொள்ளும் தத்துவஞானமும் இதே உலகு, சமூகம், சிந்தனையின் பொதுவான வரலாறு, செயல்பாட்டை, ஒன்றோடு ஒன்று இணைத்தும், பிரித்தும், மோதவிட்டும், மாற்றிச் சேர்த்தும் இறுதியில் தொகுப்பாக புரிந்து கொள்வது அவசியம். இதில் எங்கேயாவது நீங்கள் கருத்து முதல்வாத சாயலோடு அல்லது இயக்கமற்ற நிலையில் திரிந்து போனால் தத்துவஞானம் காட்டும் பாதையை விடுத்து தொலைந்து போவீர்கள்.

இத்தகைய கறாரான தத்துவஞான சிந்தனை முறையை கற்பிப்பதற்கு கலை உங்களை தயார் படுத்தும். உண்மையில் அழகுணர்ச்சியோடு பண்படுத்தும். சுதந்திரத்தையும், புதிய தேடலையும், அழகுணர்ச்சியையும் காட்டும் கலைதான் உங்களை தவிர்க்க வியலாமல் தத்துவஞானத் துறைக்குள் கொண்டு வந்து சேர்க்கும். கலையை வெறும் பயன்பாட்டு வாதத்தில் பார்த்தால் அழகை கற்றுக் கொள்ளவோ தரிசிக்கவோ முடியாது. அது போல தத்துவஞானத்தை வெறும் அனுபவாதத்தில் பார்த்தால் செக்கு மாடு போல ஒரே இடத்தில் சுற்றி வருவோமே தவிர மலை உச்சியைப் பார்க்க முடியாது.

இந்த உலகை புரிந்து கொள்ளும் பாதையை தத்துவஞானம் காட்டுமென்றால் அந்த பாதையின் அழகை கலை அடையாளம் காட்டும். நேர் மாறாக வறட்டுவாதமும், பயன்பாட்டுக் கலையும் தத்துவஞானத்திற்கு எதிரான புலமையை கொண்டிருப்பதாக பம்மாத்து காட்டும் அற்பவாதமே. அந்த அற்பவாதத்தை பல முனைகளில் கண்டு சீற்றமடைந்த கார்ல் மார்க்ஸ் பிறகு உண்மையை தரிசிக்க தத்துவஞானத்துறைக்கு வந்து சேர்கிறார். கலை – தத்துவம் குறித்த இந்த அழகான ஆழமான ஆரம்ப பாடத்தை நாம் கற்க ஆரம்பிக்கிறோம்.

5. அ) தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது 

தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான, சுதந்திரமான அறிவே – கார்ல் மார்க்ஸ்(1)

மார்க்சின் டாக்டர் பட்ட ஆராய்ச்சியின் ஆரம்பக் குறிப்புகளில் அவருடைய இந்தக் கருத்து இடம் பெற்றிருக்கிறது. இதை இப்படியும் பொழித்துரைக்கலாம்: துணிவான, சுதந்திரமான அறிவுக்கு, அதாவது சுதந்திரமான தத்துவச் சிந்தனைக்கு தத்துவஞானப் பயிற்சி அதே அளவுக்கு அவசியமே. இதற்குச் சிறந்த உதாரணமாக மார்க்சையே குறிப்பிடலாம்.

நீதி இயல் துறையில் சுதந்திரமான தத்துவ ஆராய்ச்சிகளை மார்க்ஸ் தொடங்கிய பொழுது தத்துவஞான ரீதியில் தனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்பதை மார்க்ஸ் அறிந்தார் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம். தத்துவச் சிந்தனை முன்னேற்றமடையக் கூடிய, வளர்ச்சி இருக்கும் ஒரு பொருளை அது சரியாக எடுத்துரைக்கக் கூடிய பொது வடிவங்களை நன்கு அறிந்து கொள்ளாமல் தத்துவத்தின் ஸ்தூலமான துறைக்குள் எவ்விதத்திலும் முன்னேறிச் செல்ல முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.

ஹெகல்

ஹெகலின் பிரபலமான உதாரணத்தை உபயோகிப்பதென்றால் அறிவு வேட்கையின் அடையாளச் சின்னமாகிய மினர்வாவின் ஆந்தை அந்தி நேரத்தில், எல்லாக் காரியங்களும் முடிக்கப்பட்ட பிறகு, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் பறந்து செல்கிறது; உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவின் உலகத்துக்கு மேலே, மிகவும் உயரத்திலிருக்கும் வானத்தில் தன் மெளனப் பயணத்தை நிறைவேற்றுவதற்காகச் சிந்தனை சுய உணர்வின் சிகரங்களை நோக்கிப் பாய்கிறது.

தத்துவஞானம் என்பது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அறிவு பெற்ற முதியவர்களின் விவகாரம் என்றும் இந்த உருவகத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சரியல்ல. இளைஞர்களுடைய மனங்களைப் பண்படுத்துகின்ற மனிதகுலக் கலாச்சாரம் என்ற மாபெரும் சோதனைச் சாலையில் இரண்டு துறைகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று கூறலாம். அவை கலையும் தத்துவஞானமுமாகும்.

“நீங்கள் பெளதிகத்தைத் தெரிந்து கொள்ளாமல் கணிதத்தைக் கற்க முடியும் (எனினும் அது சிறந்த வழியல்ல); சடப் பொருட்களின் தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் டாக்டராக இருக்க முடியும்; வானவியலைப் பற்றி எதுவுமே தெரியாமல் தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிக்க முடியும். ஆனால் கலை மற்றும் தத்துவஞானத்தைத் தெரிந்து கொள்ளாமல் பண்பாடுடைய மனிதராக இருக்க முடியாது. நான் இதை இன்னும் திட்டவட்டமாகக் கூறுவேன்; அவை இல்லாமல் ஸ்தூலமான எந்த நடவடிக்கைத் துறையிலும் மெய்யாகப் படைப்பாற்றலைக் கொண்ட எந்தச் சாதனையையும் நீங்கள் செய்ய முடியாது.”

இக்கருத்து சற்று விசித்திரமாகத் தோன்றலாம். பூமியில் நாகரிகத்தை எடுத்துக் கொள்வோம். அது முன்னர் வாழ்ந்த தலைமுறைகளின், இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற தலைமுறையினரின் உழைப்பின் விளைவாகும். நகரங்கள்-அவை கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டிட நிர்மாணிகளின் சாதனை; கால்வாய்கள், பாலங்கள், சாலைகள்-அவை தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்களுடைய சாதனை; தொழிற்சாலைகள், இயந்திரங்கள், ஊதுலைகள், இயந்திரக் கருவிகள், கார்கள், லாரிகள், ஆகாய விமானங்கள், விண்வெளி ராக்கெட்டுகள்-அவை விஞ்ஞானிகள், வரைவாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் தொழிலாளிகளின் செய்திறன் மற்றும் கடும் உழைப்பின் சாதனை. வயல்களில் முதிர்ந்திருக்கும் பயிர்களை வேளாண்மை நிபுணர்களும் விவசாயிகளும் உருவாக்கினார்கள். இவை அனைத்தும் மனிதகுலத்துக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. வாழ்க்கையின் மையம், கரு அதுவே. ஆனால் இவற்றில் தத்துவஞானிகளின் உழைப்பை நாம் எங்கே காண்கிறோம்?

தத்துவஞானத்தின் “செய்முறைப்” பயன் என்ன? அது உலகத்திற்குள் வெறுங்கைகளுடன் வரவில்லையா? துல்லியமான இயற்கை விஞ்ஞானங்களைப் போலன்றி அதன் விளைவுகள் புதிய இயந்திரங்களிலோ அல்லது முன்னைக் காட்டிலும் திறமையான தொழில்நுட்பவியல் நிகழ்வுப் போக்குகளிலோ காணப்படுவதில்லை; அது சக்தியின் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவில்லை; கலப்புப் பொருள்களை அல்லது புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவில்லை.

இயற்கை விஞ்ஞானங்களுக்கு உபயோகிக்கின்ற அளவைகளிலிருந்து வேறுபட்ட அளவைகளைத் தத்துவஞானத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது வெளிப்படை. கலைப் படைப்புகளின் சமூக முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்குப் பயனெறிவாத அணுகுமுறையை உபயோகிக்க முடியாது; அதைப் போல இங்கும் அந்த அணுகுமுறை பொருந்தாது.

ஃபீடியசின் வீனஸ் சிலை, ரொதேனின் சிந்தனையாளர் சிலை, மோத்ஸார்தின் இரங்கற்பா, ஸ்கிரியாபினின் பரவசக் கவிதை ஆகியவற்றின் “செய்முறைப்” பயன் என்ன என்று கேட்பது பொருளற்றது.

கலை நாம் அழகைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கிறது என்றால் தத்துவஞானம் நாம் இயக்கவியல் நிலையில் சிந்திக்கக் கற்பிக்கிறது

கலை நம்மை உயர்த்துகிறது, பண்படுத்துகிறது, அழகு நுகர்ச்சி இன்பத்தை வழங்குகிறது, நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் உலகத்தை வண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் பார்க்கவும் கற்பிக்கிறது. இது உண்மை. ஆனால் தத்துவஞானத்துடன் ஒரு ஒப்புவமையும் இருக்கிறது. கலை நம்முடைய உணர்ச்சிகளைப் பண்படுத்தி உலகத்தைப் பற்றி நம்முடைய அழகு நுகர்ச்சியை வளர்க்கிறது என்றால் தத்துவஞானம் அறிவைப் பண்படுத்துகிறது, தத்துவ ரீதியான சிந்தனைத் திறமையை வளர்க்கிறது (இவை தவிர வேறு முக்கியமான பணிகளும் உண்டு). கலை நாம் அழகைப் புரிந்து கொள்ளக் கற்பிக்கிறது என்றால் தத்துவஞானம் நாம் இயக்கவியல் நிலையில் சிந்திக்கக் கற்பிக்கிறது.

கலையைப் பயில்வதனால் சிந்தனையின் அழகியல் அம்சத்தை, புனைகதைகளை உருவாக்குவதற்கும் எதிர்பாராத இணைப்புக்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் திறமையை வளர்க்கிறது என்றால் தத்துவஞானப் பயிற்சி மிக உயர்ந்த பொதுமைப்படுத்தல்களைச் செய்யும் சிந்தனைத் திறனை, கருதுகோள்களை இயக்கவியல் நெகிழ்ச்சியுடன் புரிந்து கொள்ளும் திறமையை வளர்க்கிறது; ஒரு பொருளைத் தனித்துப் பார்க்காமல் தொடர்ச்சியாக மாற்றமடைந்து கொண்டிருக்கும் பன்முகப்பட்ட உறவுகளின் உலகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கும்படி கற்பிக்கிறது.

அறிவுத்துறையில் முன்னர் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் விளைவுகளைக் கூட்டினைக்கின்ற மனிதனுடைய தத்துவ ரீதியான வளர்ச்சியின் சாரமே தத்துவஞானம் என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமாவது அது தனிமனிதனுடைய ஆன்மிக வளர்ச்சியில் அசாதாரணமான பாத்திரத்தை வகிக்கிறது.

அறிதல் என்ற கற்பாதைகளின் மீது களைப்புடன் நடந்து செல்கின்ற பிரயாணி தன் பயணத்தின் இறுதியில் வந்து சேர்கின்ற பணி மூடிய மலைச் சிகரங்கள் அல்ல தத்துவஞானம், அது “மலையின் மீது ஏறுவதற்குப் பயன்படுத்துகின்ற சாதனமுமாகும்”. அது துணிச்சலான கருதுகோள்கள் என்ற செங்குத்தான சரிவுகளில் காலூன்ற உதவுகிறது; ஒரு நிகழ்வை மற்றொன்றிலிருந்து பிரிக்கின்ற இடைவெளியை ஒப்புவமைகள் மற்றும் பொதுமைப்படுத்தல்களைக் கொண்டு பாலம் அமைக்க, இதுவரை யாருமே கண்டிராத மேற்பகுதிக்கு இட்டுச் செல்கின்ற பாறை முகட்டைப் பார்க்க உதவுகிறது. அனுபவவாதத்தைப் பின்பற்றினால் கீழ்ப்பகுதிகளில் சுற்றிக் கொண்டிருப்போம்; எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அந்தப் பாதையில் நாம் முன்னே போகலாமே தவிர மேலே போக முடியாது. எனவே அனுபவவாதம் என்ற கவர்ச்சிகரமான பாதை குறுகிய சாத்தியங்களை மட்டுமே கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வதற்கு அது உதவுகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தத்துவஞானப் பயிற்சி அறிவை – அதன் இயக்கவியலில் பரிபூரணமடைந்த, செழுமையான வடிவத்தில்-திரட்டுவது மட்டுமின்றி அறிவைப் பண்படுத்துகிறது; தத்துவ ரீதியான சிந்தனைத் திறனைப் பயிற்றுவிப்பதற்கு இளமைப் பருவமே மிகவும் சிறந்த காலம். “இளைஞர் எவருமே தத்துவஞானப் பயிற்சி பெறுவதில் தாமதம் செய்ய வேண்டாம்”(2) என்று எபிகூரஸ் எழுதினார். டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயார் செய்த பொழுது மார்க்ஸ் தன்னுடைய குறிப்புகளில் இந்த வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சாக்ரடீஸ்

தத்துவஞானம் ஒரு வீண் வேலை என்று அற்பவாதியின் கொச்சையான மூளையே கருதுகிறது. உலகத்தின் “பிம்பமும் ஆசானுமான” (மார்க்ஸ்) சாக்ரடீசின் சிடுசிடுப்பான மனைவி க்ஸாந்திப்பா சாக்ரடீசிடம் நடந்து கொண்ட முறையை தத்துவஞானத்தைப் பற்றி அற்பவாதியின் அணுகுமுறைக்கு ஒப்பிட முடியும். சாக்ரடீஸ் வீட்டைக் கவனிப்பதில்லை, குடும்பத்தைப் பராமரிப்பதில்லை, “வெட்டிப் பேச்சில்” மூழ்கியிருக்கிறார் என்று அவள் சாக்ரடீசை எப்பொழுதும் திட்டிக் கொண்டேயிருந்தாள். தன் கணவனைக் காட்டிலும் குறைவான தகுதியும் அறிவும் உடைய மற்றவர்களுக்கு உயர்ந்த பதவிகளும் கெளரவமும் பணமும் கிடைக்கும் பொழுது சாக்ரடீஸ் ஒட்டுப் போட்ட உடையணிந்து காலணிகள் இல்லாமல் நடப்பதும் தன் மாணவர்கள் கொடுத்த குறைவான பணத்தைக் கூட அவர் பெற்றுக் கொள்ள மறுப்பதும் அவளுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தும்.”

மனிதர்களுக்கு இது ஒரு சிறப்பான அம்சமாகத் தோன்றுவதில்லை. அற்பவாதி இதை ஒரு குறையாகவே எடுத்துக் கொள்கிறான், ஏனென்றால் தத்துவ ரீதியான சிந்தனையினால் அவனுக்குப் பயனில்லை. அது ஒரு மனிதனை விசித்திரமானவனாக, “இந்த உலகத்துடன் சம்பந்தமில்லாதவனாக’’ ஆக்குகிறது என்று அற்பவாதி கருதுகிறான்.

மனித நிதான அறிவு “தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும் சாதாரணச் செய்திகளையும் terra incognita (அறியப்படாத நிலமாக.  -ப-ர்.) தத்துவஞானிகளுக்கு எதிர்நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறது”(3) என்று மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தயாரித்த ஆரம்பக் குறிப்புகளில் எழுதினார்.

தத்துவச் சிந்தனையைக் காட்டிலும் சுலபமானது வேறு எதுவும் இல்லை என்று அற்பவாதி நினைக்கிறார். அவரும் “அற்பமான இடங்களில் ஆழமான தத்துவஞானத்தைப்” பேசுகிறார். அதாவது நன்னெறிப் போதனைகளையும் உலகத்தில் எல்லாவற்றையும் பற்றி வாய்ப் பேச்சில் ஈடுபடுகிறார்.

தத்துவஞானம் குறித்த “நிதானமான” அணுகுமுறை என்பது வாடிக்கையாக சில தத்துவஞானக் கருதுகோள்களையும் விதிகளையும் வகையினங்களையும் உருப்போடுவதாகும்; பெளதிகத்தில் அல்லது கணிதத்தில் விதிகளையும் சூத்திரங்களையும் உருப்போடுவதைப் போன்றதே இதுவும். பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்திருப்பதனால் உயர் கணித ஆராய்ச்சியில் பயனில்லை. தத்துவஞானத் துறைக்கு இந்த “அறிவு” இன்னும் உபயோகமற்றதே.

துல்லியமான விஞ்ஞானங்கள் நிறுவப்பட்ட, மறுக்கப்பட முடியாத, அனுபவ முறையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்ற நிலையில் தொடங்குகின்றன. தத்துவஞானம் இறுதிநிலையில் முடிவான உண்மைகளை எட்டியவுடன் முடிவடைகிறது.

எந்த ஒரு தத்துவஞான அமைப்பின் முன்னரே தயாரிக்கப்பட்ட விளைவுகளையும் ஆராய்வதன் மூலம் தத்துவ ரீதியில் சிந்திக்கக் கற்று விட முடியாது. தத்துவஞானத்தின் மொத்த வரலாற்றையுமே சூக்குமமான வடிவங்களில் மனித சிந்தனையின் முன்னேற்றத்தின் வரலாறு என்ற அடிப்படையில் ஆராய்வது அவசியம்.

ஹெகல் எழுதிய தர்க்கவியல் முழுவதையும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ளாமல் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்று லெனின் எழுதினார். அதைப் போலவே ஷேல்லிங், ஃபிஹ்டே, கான்ட், லேய்ப்னித்ஸ், ஸ்பினோஸா, அரிஸ்டாட்டில், பிளாட்டோ, சாக்ரடீஸ், டெமாக்கிரிடஸ், ஹெரக்லிடஸ் ஆகியோருடைய தத்துவஞானங்களை புரிந்து கொள்ளாமல் ஹெகலின் தர்க்கவியலைப் புரிந்து கொள்ள முடியாது.

தத்துவஞான மற்றும் சமூகச் சிந்தனையின் மொத்த வரலாற்றையும் தன்வயப்படுத்திக் கொள்ளாமல் ஹெகலின் தர்க்கவியலே வெல்ல முடியாது, ஹெகலைக் காட்டிலும் முன்னே போக முடியாது, ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தைப் படைக்க முடியாது என்ற உண்மை அதைக் காட்டிலும் முக்கியமானதாகும். 1830க்களில் இளம் ஹெகலியவாதிகள் ஹெகலிய அமைப்பின் சுற்றுவட்டத்திற்குள் ஊடாடிக் கொண்டு, அதன் ஆய்வுரைகளுக்கு விளக்கம் கூறி, அவருடைய போதனையில் முதலில் இந்த அம்சத்தையும் பிறகு அந்த அம்சத்தையும் பற்றிச் சிந்தித்தபடியால் அவர்கள் ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கியிருந்தார்கள்; அவர்கள் முக்கியமான முறையில் ஒரு காலடி கூட முன்னே வைக்க முடியவில்லை. ஹெகலியத் தத்துவஞானத்தில் உலக ஆன்மா தன்னுடைய இலக்காகிய சுய அறிவைப் பெற்ற பிறகு உலகத்தில் என்ன நடைபெறும் என்ற பிரச்சினையைப் பற்றி அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

மார்க்ஸ் ஒருபோதும் மரபுவழிப்பட்ட ஹெகலியவாதி அல்ல. முதலில் ஹெகலின் போதனையைப் பற்றி அவருடைய அணுகுமுறை அவர் “வெறுத்த” ஒரு பொருளைப் பற்றிய அணுகுமுறையாகக் கூட இருந்தது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் அவர் தன்னாலியன்ற அளவுக்கு முழு அக்கறையுடனும் கவனத்துடனும் ஹெகலைப் படித்தார். ஒரு மாபெரும் சிந்தனையாளர் என்ற முறையில் ஹெகலுக்கு அவர் மரியாதை அளித்தார், ஆனால் அவரை வழிபடுகின்ற தெய்வமாக மாற்றவில்லை. அவர் ஏற்றுக் கொள்ள முடியாத அம்சங்கள் (ஹெகலின் தனிமுதலான உண்மை மற்றும் முழுமையான அமைப்பு) ஹெகலிடம் இருந்தன.

காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்

இளம் மார்க்ஸ் டாக்டர் பட்டத்துக்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை அவருடைய இந்தத் தத்துவஞான நிலையைப் பிரதிபலிக்கிறது; அவர் ஹெகலிடமிருந்து ஹெகல் மூலமாக ஹெகலை முறியடிப்பதற்கு முன்னேற்றமடைந்ததை இந்த நிலை எடுத்துக்காட்டுகிறது.

மார்க்சின் சந்தேகம் மற்றும் மறுப்புணர்ச்சி அவருடைய தேடலைத் தத்துவஞானச் சிந்தனையின் தோற்றுவாய்களுக்கு இட்டுச் சென்றது. அவர் சாக்ரடீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டிலையும் படிக்கத் தொடங்கினார். டியோ கெனிஸ் லயெர்தியஸ், ப்ளுடார்க், சிம்ப்ளித்சியஸ், ஃபிலிஸ்டஸ், சிசிரோ, ஸ்டொபெயஸ், ஃபிலப்போனஸ், லுக்ரெத்சியஸ் காருஸ், ஸேக்ஸ் தியுஸ் எம்பீரிகுஸ் ஆகிய பண்டைக்கால ஆசிரியர்களின் எண்ணற்ற நூல்களையும் படித்தார்.

பண்டைக்காலத் தத்துவஞானத்தின் பல்வேறு போக்குகளிலும் கோட்பாடுகளிலும் மார்க்ஸ் டெமாக்கிரீடஸ் மற்றும் எபிகூரசின் மீது முழு கவனத்தைச் செலுத்தினார்; அவர்கள் பண்டைய கிரீசின் மாபெரும் பொருள்முதல்வாதிகள், பொருள்முதல்வாதிகளின் போதனைகளைப் பகுத்தாராய்கின்ற இந்த முயற்சியே ஹெகலுக்கும் அவருடைய மரபுவழிப்பட்ட சீடர்களுக்கும் சவாலாக இருந்தது. புதிய உலகக் கண்ணோட்டத்தைத் தேடுகின்ற முயற்சி எந்தத் திசையில் செல்கிறது என்பதை அது எடுத்துக்காட்டியது.

கருத்து முதல்வாதச் சுற்றுவட்டத்துக்குள் ஹெகலை வெல்ல முடியாது; கருத்துமுதல்வாதக் கோட்பாடுகளில் ஒன்றும் இதற்கு உதவவில்லை. இங்கே பொருள்முதல்வாதம் மட்டுமே பயனளிக்க முடியும்.

மார்க்ஸ் டாக்டர் பட்டத்துக்காக எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை அவர் பொருள்முதல்வாத நிலைக்கு மாறிவிட்டதை நிரூபிக்கவில்லை; ஆனால் கருத்துமுதல்வாதத்தின் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது என்பதற்கு அக்கட்டுரை சான்றாக இருக்கிறது. கருத்துமுதல்வாதம் தத்துவஞானத்தை எதார்த்தத்திலிருந்து பிரித்து அதை ஊக முயற்சிகளுக்குள் செலுத்தியது. அதனால் தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில், சிந்தனைகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. “உலகம்” தத்துவஞானத்துக்கு அந்நியமாகவும் தத்துவஞானம் “உலகத்துக்கு” அந்நியமாகவும் மாறின. தன்னை அடைய விரும்புகின்ற உந்துதலால் தூண்டப்படும் தத்துவஞானம் “அடுத்தவற்றை எதிர்த்து உலைவடைகிறது”.

அதே சமயத்தில் “உலகம்” தத்துவஞானத்தில் தோய்கின்ற பொழுது தத்துவஞானம் “உலகியல்” தன்மையை அடைய விரும்புகிறது. அப்படியானல் ஹெகலியத் தத்துவஞானத்தில் உள்ளுறையாக இருந்த “உள் சுய அமைதியும் முழுமையும்” அழிந்துவிட்டன என்று பொருளாகும்.

ஹெகலியத் தத்துவஞானம் ஹெகலியவாதிகளின் போதனைகளிலேயே சீர்குலையத் தொடங்குகிறது. “உலகத்தைப் பொறுத்தமட்டில் முதலில் தலைகீழான உறவாகவும் தத்துவஞானத்தின் தீங்கான போக்காகவும் தோன்றியது இரண்டாவது நிலையில் தனிப்பட்ட தத்துவஞான சுய உணர்வில் பிளவாகவும் மாறி முடிவில் தத்துவஞானத்தின் வெளிப்புறப் பிரிவினையாகவும் இருமை நிலையாகவும், எதிர்நிலையான இரண்டு தத்துவஞானப் போக்குகளாகவும் வெளிப்படுகிறது.”(4)

குறிப்புகள் :

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 469, 41
(2) Ibid., p. 488. I 47
(3) Ibid., p. 444.
(4) Ibid., p. 86.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

_____________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க