காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த நாள் – கவிதை

அடிமை வர்க்கம் இருக்கும் வரை நீ அழிய போவதில்லை! அதிகார வர்க்கம் முடியும் வரை நீ அமைதி கொள்வதில்லை! ஆம்! மார்க்ஸ் வாழ்வார் மார்க்சியம் வாழதான் செய்யும்

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 205-வது பிறந்த நாளையொட்டி எழுத்தப்பட்ட கவிதை வரிகள்.

ஏட்டிலே பூத்து கிடக்கும்
காகிதப் பூவல்ல – நீ
உலக மக்களின் உள்ளத்தில்
பூத்துக் குலுங்கும்
புரட்சிப்பூ
சுவாசத்தில் கலந்த
சோசலிச
கருத்தியல் பூ

ஏ தேதோ சொல்கிறார்கள்
எதிரிகள்
அவதூறுக்கு அளவில்லை
அன்னிய தத்துவமாம்
உன்னால்
அழிவு நித்தமுமாம்

எனக்கோ
நகைப்பு
நதியாக ஓடுதே….

காலையில் விழித்து
மாலையில் மறைவதனாலே
கதிரவன்
மரணமடைந்து விட்டது
என்றனர்

நீயோ
மடி சாய்ந்து தங்கும்
மாலைச் சூரியன் அல்ல
இவ்வுலகம்
உன்னுடையதென்று
உழைக்கும் மக்களின்
அச்சத்தை அறுத்தெறியும்
அரிவாள்
பூட்டியிருக்கும் விலங்கை
உடைத்தெறியும்
சுத்தியல்

பாட்டாளிக்கு “மூலதனம்” படைத்தாய்
முதலாளித்துவத்தின்
மூலகனத்தை உடைத்துக்காட்டினாய்

அடிமை வர்க்கம் இருக்கும் வரை
நீ அழியப் போவதில்லை!
அதிகார வர்க்கம் முடியும் வரை
நீ அமைதி கொள்வதில்லை!

ஆம்!
மார்க்ஸ் வாழ்வார்
மார்க்சியம் வாழத்தான் செய்யும்

உலக தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
இழக்க ஒன்றுமில்லை
பெறுவதற்கோ ஓர் பொன்னுலகு உள்ளது.

துடித்து அடங்கட்டும் முதலாளித்துவம்!
துடிப்புடன் முன்னேறும் சமூக விஞ்ஞானம்.

கவிதை: தோழர் அன்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க