மார்க்ஸ் பிறந்தார் – 15
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

6. “யதார்த்தத்தை இரக்கமற்ற முறையில் விமர்சனம் செய்தல்”

இயற்கையான பிராணிகளின் உலகத்தில் உழைக்கின்ற தேனீக்கள் சோம்பேறித் தேனீக்களைக் கொன்றுவிடுகின்றன; ஆனால் மனிதர்களைக் கொண்டிருக்கும் “பிராணிகளின் உலகத்தில்” “சோம்பேறித் தேனீக்கள் உழைக்கின்ற தேனீக்களை, துல்லியமாக உழைப்பின் மூலமாகவே கொன்றுவிடுகின்றன.” (1)

சொத்துடைமை உறவுகளின் சமூக அநீதியினால் கோபாவேசமுற்ற மார்க்ஸ் “ஏழைகளை, அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் உடைமை இல்லாத மிகப் பலருடைய”(2) நலன்களை உறுதியாக ஆதரித்தார்.

“கற்றறிந்த, கற்றுக் கொள்ளப்போகின்ற அடிமைத்தனத்தின்” உதவியுடன் ஒவ்வொரு இழிந்த கோரிக்கையையும் “உரிமை என்ற கலப்பில்லாத தங்கமாக” மாற்றுகின்ற “செய்முறையான” காடுகளின் உடைமைக்காரர்களே மார்க்ஸ் அம்பலப்படுத்துகிறார்.

அந்தக் காடுகளின் உடைமைக்காரர்களிடம் பணிவோடு நடந்து கொள்கின்ற சட்டசபை உழைக்கும் மக்களின் உரிமைகளை இன்னும் அதிகமாகக் குறைப்பதற்கு எல்லாவிதமான நேர்மையற்ற தந்திரங்களையும் செய்கிறது.

காட்டு விதிகளை மீறியவர்களின் நலன்களைப் பற்றிய பிரச்சினை வரும் பொழுது சட்டசபை சுள்ளிகளைச் சேகரிப்பதற்கும் விறகைத் திருடுவதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நிராகரிக்கிறது; ஆனால் “காட்டுக்கு உடைமைக்காரர்களின் நலன்களைப் பற்றிய பிரச்சினை வரும் பொழுது இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கிறது.”(3)

தனியார் நலன் செய்முறையானது, சுய நலமுடையது, கோழைத்தனமானது. அது சட்டமின்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது கோழைத்தனமானது. தன்னிடமுள்ள எல்லாவற்றையும் இழக்க வேண்டிய ஆபத்தேற்படுகின்ற பொழுது அது நடுங்குகிறது. தனியார் நலன் சட்டசபை உறுப்பினர் என்ற பாத்திரத்தை நடிக்கும் பொழுது தீங்கு செய்பவர்களை நினைத்து அச்சமடைந்து அவர்களுக்கு எதிராகச் சட்டங்களை வெளியிடுகிறது.

“கோழைத்தனத்தினால் தூண்டப்படுகின்ற சட்டங்களின் குறிப்பிடத்தக்க பண்பு கொடுஞ்செயல்; ஏனென்றால் கோழைத்தனம் கொடுமையாக நடந்து கொள்கின்ற போது மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும்.”(4)

காடுகளின் உடைமைக்காரர்களின் கருவியாக நடந்து கொண்ட ரைன் மாநில சட்டசபையின் பரிதாபகரமான பாத்திரத்தை வெளிப்படுத்தும் பொழுது சமூகத்தில் அரசின் பாத்திரத்தையும் வேறுவிதமான கண்களுடன் பார்க்கும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார். அரசு என்பது மனிதனுடைய இனக்குழு வாழ்க்கையின் சாராம்சத்தின் வெளியீடு என்ற ஹெகலிய மூடபக்தியும், அதன் தொடர்பாக அவரிடம் எஞ்சியிருந்த பிரமைகளும் மறைந்தன.

மார்க்ஸ் பிறந்தார்“சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை” என்கிறார் மார்க்ஸ். இத்தர்க்கம் அரசின் அதிகாரத்தைக் காடுகளின் உடைமையாளரின் ஊழியனாக மாற்றுகிறது. “அரசின் உறுப்புகள் அனைத்தும் காதுகளாக, கண்களாக, சுரங்களாக, கால்களாக மாறுகின்றன, காடுகளின் உடைமையாளருடைய நலன்கள் அவற்றின் மூலமாகக் கேட்கின்றன, பார்க்கின்றன, மதிப்பிடுகின்றன, பாதுகாக்கின்றன, கையை நீட்டுகின்றன, ஓடுகின்றன.”(5)

சுயநலத்தின் “குதர்க்கங்கள்” பொருள்களுக்கு ஒரு “அதிசயமான குணாம்சத்தைக்” கொடுக்கின்றன. காட்டின் உடைமையாளரிடமிருந்து திருடப்பட்ட விறகு அவரை உடனடியாக அரசின் உருவகமாக மாற்றிவிடுகிறது; ஏனென்றால் அவர் திருடனுக்கு எதிராக அரசின் உரிமையைப் பெற்றுவிடுகிறார். ஆகவே “காட்டின் உடைமையாளர் விறகுத் திருடனைப் பயன்படுத்தி அரசையே திருடிவிடுகிறார்.”(6)

ஒரு மரக்கட்டையின் மீது உரிமையை இழக்கும் பொழுது உடைமையாளர் ஒரு மனிதனின் மீதான உரிமையைப் பெறுகிறார். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வருகின்ற ஷைலக் ஒரு பண முறிக்காக ஒரு பவுண்டு தசையைக் கோருவதைப் போன்றதே இதுவும்.

மார்க்ஸ் தலைகீழாக இருக்கின்ற உலகம் என்ற கருத்துக்கு மறுபடியும் வருகிறார் என்பதை நாம் காண முடியும். இக்கருத்தைப் பின்னர் உழைப்பு அந்நியமாதல், பண்ட மூட பக்தி என்ற வகையினங்களில் அவர் வளர்த்துக் கூறுகிறார். இளம் மார்க்ஸ் விறகு திருடப்படுவதைப் பற்றிய கட்டுரையை விறகு “ரைன் பிரதேசத்தைச் சேர்ந்தவருடைய மூடபக்தி” என்று முடிக்கிறாரென்றால் மூலதனத்தில் பண்டத்தின் “மரக்கட்டை மூளை” முதலாளித்துவ உறவுகளின் மொத்த உலகத்தையும் எப்படி ஆட்சி புரிகிறது என்று எடுத்துக்காட்டுகிறார்.

விறகு திருடப்படுவதைத் பற்றிக் கட்டுரை எழுதிய வேலை தனக்குச் சிறிதும் திருப்தியளிக்கவில்லை; சட்டசபை உறுப்பினர்களுடைய அலுப்புத் தருகின்ற, அற்பத்தனமான விவாதங்கள் தனக்கு அருவருப்பைக் கொடுத்தன என்று மார்க்ஸ் ஒத்துக் கொள்கிறார். எனினும் இந்த வேலை அவருடைய அக்கறைகளை ஒரு புதிய பாதைக்குள் திருப்பியது.

அவர் வறுமையில் உழல்கின்ற, உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களை, பத்திரிகை நிருபர்கள் வர்ணிக்கின்ற மக்களை நேருக்கு நேராகக் கண்டார். அவர் “தேவையின் இரக்கமற்ற குரலை” – புத்தகங்களிலிருந்து அல்ல, மூன்றாவது கைமாறியல்ல – மோஸெல் விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டார்.

“சொந்த நாட்டில் அவரால் என்றுமே மறக்க முடியாத வேதனையின் பொதுஜன மொழியைப் பத்திரிகையின் பக்கங்களில் எழுதுவது, மக்கள் குரலை தான் கேட்ட விதத்தில் மிகவும் அதிகமான மனச்சாட்சியுடன்” (7) வெளியிடுவது தன்னுடைய “அரசியல் கடமை” என்று மார்க்ஸ் கருதினார்.

முதலாளி வர்க்க மார்க்சிய ஆராய்ச்சியாளர்கள் (மார்க்சியத்தை எதிர்ப்பதற்கு வேறு எந்த “வாதமும்” அவர்களுக்குக் கிடைக்காத பொழுது) மார்க்சின் ‘ஈரமற்ற பகுத்தறிவு வாதத்தைப்’ பற்றி, அவர் தனிமனிதனை வெறும் சூக்குமமான கருத்தமைப்பாக, ஒரு வகையான ‘பொருளாதார மனிதனாகக்’ கருதியதைப் பற்றி (அப்படி அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்), அவர் பெருந்திரளான மக்களின் உண்மையான துன்பங்களினால் சிறிதும் தூண்டப்படவில்லை என்பதைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மார்க்சை நேரடியாக அறியாதவர்களே இப்படி எழுத முடியும். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி அவருடைய “பகுத்தறிவு பூர்வமான வாதங்களை” மட்டுமல்லாமல் அவருடைய சொந்த உணர்ச்சிகளின் வன்மையையும், மனிதன் இழிவுபடுத்தப்படுகின்ற, மனித உரிமைகளும் கெளரவமும் மீறப்படுகின்ற ஒவ்வொரு ஸ்தூலமான இனத்திலும் அவரிடம் ஏற்பட்ட வேதனையையும் கோபத்தையும் அறிந்து கொள்வதற்கு மோஸெல் நிரூபர் நியாயப்படுத்துகிறார் (1842 கடைசியில் எழுதப்பட்டது). 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள், அல்லது மூலதனத்தின் முதல் தொகுதியைப் படிப்பதே போதுமானது.

தனிச் சொத்துடைமை உறவுகளின் இயந்திரகதியான இயக்கத்தில் மார்க்ஸ் (அவருடைய வார்த்தைகளில்) “மனித இதயத்தின் துடிப்பைக்” (8) கேட்டார். அதைப் போல மார்க்சின் நூல்களிலும் அவருடைய இதயத்தின் துடிப்பை நாம் தெளிவாகக் கேட்கிறோம். அந்த இதயம் இரக்க உணர்ச்சியினால் இரத்தத்தைக் கொட்டியது, ஆத்திரத்திலும் வெறுப்பிலும் சுருங்கியது.

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மிகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது.

மார்க்சின் அறிவு மனிதகுலக் கலாச்சாரத்தின் ஆன்மிகச் செல்வம் அனைத்தையும் திரட்டியிருந்தது என்றால் அவருடைய இதயம் மனித குலத்தில் துன்பப்படுபவர்கள் அனைவருக்காகவும் இரத்தத்தைக் கொட்டியது என்று கூறினால் மிகையாகாது. ஹென்ரிஹ் மார்க்சின் அச்சங்கள் ஆதாரமற்றவை அவருடைய மகனின் இதயம் தலையுடன் பூரணமாகப் பொருந்தியிருந்தது.

மோஸெல் நிருபர் நியாயப்படுத்துகிறார் என்ற கட்டுரையில் மார்க்ஸ் “வேதனையைக் கொட்டி எழுதியிருக்கிறார்”. அதில் தன்னுடைய சொந்த ஊரான டிரியரில் அதிகாரிகள் எதேச்சாதிகாரத்தோடு நடந்து கொண்ட பல உதாரணங்களைக் காட்டுவதோடு வழக்குரைஞர் என்ற முறையில் நியாயத்துக்காகப் பாடுபட்ட தன் தகப்பனார் நடத்திய வழக்குகளையும் குறிப்பிடுகிறார் என்பது எளிதில் புலப்படும் (“வாழ்க்கைத் தொழிலைத் தேடல்” என்ற அத்தியாயத்தில் இந்த உதாரணங்களைப் பற்றி அதிகமான விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன).

மார்க்சியம் அதன் தோற்றுவாயில் புத்தெழுச்சியூட்டுகின்ற வாழ்க்கையின் ஜீவனால் பேணி வளர்க்கப்பட்டிருக்காவிட்டால் அது உலகத்தின் விஞ்ஞானக் கண்ணோட்டமாக வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. ஆனால் “வாழ்க்கை” உண்மைகளைச் சாதாரணமாக, அனுபவவாத முறையில் பொதுமைப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல; “அனுபவ யதார்த்தத்தின்” மீது தத்துவச் சிந்தனையின் தலைமையான சிகரங்களிலிருந்து ஒளி பாய்ச்சக் கூடிய திறமை மார்க்சிடம் இருந்தது;

மேலும் அதற்கு எதிர் முறையில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றிய ஸ்தூலமான பகுப்பாய்வை, பொதுமைப்படுத்தலின் புதிய சிகரங்களுக்கு முன்னேறுவதற்கு, அதற்குரிய தத்துவத்தைத் தேடுவதற்கு அவர் அடிப்படையாக்கினார். இது மார்க்சிடமிருந்த சிறப்பான அம்சமாகும்.

உலகத்தின் மோசமான அமைப்பைப் பற்றியும் பல்வேறு தனிமனிதர்களுடைய துன்பங்களைப் பற்றியும் மார்க்சிடம் திரட்டப்பட்டிருந்த உணர்ச்சிமிக்க பதிவுகள் அந்த மோசமான அமைப்புக்குரிய காரணத்தைத் தேடும்படி, அதன் முரண்பாடுகளை விளக்கும்படி, “முதல் பார்வைக்குத் தனிப்பட்ட நபர்கள் மட்டுமே செயல்படுவதைப் போலத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களில் புறநிலை உறவுகளின் விளைவைக் காணும்படி” (9)அவரைத் தூண்டின.

ஒரு ஜனநாயகப் பத்திரிகை மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி “பகுத்தறிவை, ஆனால் அதே அளவுக்கு உணர்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டு” நடத்தப்பட வேண்டும், இருக்கின்ற உறவுகளைப் பற்றி எழுதுகின்ற பொழுது “தீர்ப்புக் கூறுகின்ற மதிநுட்பம் நிறைந்த மொழியில் மட்டுமே எழுதாமல் அந்த சந்தர்ப்பங்களின் உணர்ச்சிகரமான மொழியையும்” (10) உபயோகிக்க வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியவை அவருக்குப் பொருந்துகின்றன.

அதிகாரவர்க்க எதேச்சாதிகாரம் மற்றும் முடியாட்சியின் போலியான மிதவாத சமிக்கைகளைப் பற்றிப் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிய பிறகு முடியாட்சி மற்றும் அதிகாரவர்க்கத்தின் சமூக நிலையையும் பாத்திரத்தையும் பற்றித் தத்துவ ரீதியாக விளக்கும்படி அன்றைய நிலைமைகளின் தர்க்கவியல் மார்க்சைத் தூண்டியது.

மார்க்ஸ் பிறந்தார்அரசு பற்றிய ஹெகலியத் தத்துவத்துடனும் முடியாட்சியிடம் ஹெகல் கொண்டிருந்த விசுவாசத்துடனும் அரசியலமைப்புச் சட்ட எதேச்சாதிகாரம் என்ற அவருடைய இலட்சியத்துடனும் கணக்குத் தீர்த்துக் கொள்ளும்படி இது மார்க்சை ஊக்குவித்தது. சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் என்ற பெரிய கையெழுத்துப் பிரதி 1843ம் வருடத்தின் கோடைகாலத்தில் எழுதி முடிக்கப்பட்டது.

ஆனால் மார்க்ஸ் 1841ம் வருடத்தின் பிற்பாதியில், அதாவது அவர் பட்டம் பெற்றுப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு அதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும் என்று உத்தேசமாகக் கூறலாம். மார்க்ஸ் 1842 மார்ச்சில் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி என்பது “கலப்படம்” என்று குறிப்பிட்ட அதே விமர்சனத்தை இதில் காண்கிறோம்.

மார்க்ஸ் Rheinische Zeitung பத்திரிகைக்கு எழுதிக் கொண்டிருந்த அதே சமயத்தில் சட்டம் பற்றிய ஹெகலிய தத்துவஞானத்தைப் பற்றி கட்டுரை எழுதிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அக்கட்டுரையில் அவர் உபயோகித்திருக்கும் கருத்துக்கள், சிந்தனைகள் ஆகியவற்றில் பல அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளில் உள்ள கருத்துக்களுடன் அநேகமாக சொல்லுக்குச் சொல் பொருந்துகின்றன.

மார்க்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளில் பிரஷ்ய அரசு இயந்திரத்தின் ஸ்தூலமான, தனிப்பட்ட அம்சங்களைக் கடுமையாக விமர்சித்தார் என்றால் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றி அவருடைய நூலில் முடியாட்சி, அதிகாரவர்க்க அரசின் கோட்பாட்டையே அவர் விமர்சிக்கிறார். அவர் பிரஷ்ய எதேச்சாதிகாரத்தின் உதிரிப் பகுதிகளைத் தாக்கவில்லை; அதன் மையப் பகுதியை, அதிகாரிகள் பிரிவினால் ஆதரிக்கப்பட்டுப் புனிதமடைந்த தனிச் சொத்துடைமை அமைப்பைத் தாக்குகிறார்.

ஹெகலியத் தத்துவஞான மொழியைப் பற்றி அறியாதவர்கள் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றிய இந்நூலைப் படித்துப் புரிந்து கொள்வது கடினம். எனினும், இன்றும் கூட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்ற மிக ஆழமான, சுவாரசியமான கருத்துக்கள் இந்நூலில் ஏராளமாக இருக்கின்றன.

மார்க்சின் விமர்சனத்திலுள்ள முக்கியமான கருத்துக்களை மட்டும் இங்கே எடுத்துரைப்போம்.

முடியாட்சியையும் அரசரையும் பற்றிய விமர்சனம் நூலின் மையப் பகுதியாக இருக்கிறது. ஹெகலின் கருத்துப்படி அரசின் உருவகமே அரசர். ஹெகல் அவரை உண்மையான “கடவுள்-மனிதனாக”, அரசு என்ற கருத்தின் உண்மையான உருவகமாகக் காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்.

எல்லாக் குடிமக்களின் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, “பொது நன்மையை” நிறைவேற்றுவதற்காக அரசு இருக்கிறது என்பார் ஹெகல்.
இங்கே ஹெகல் மிக மோசமான முறையில் தன்னை மறுக்கிறார்.

ஒரு மனிதர் மொத்த அரசையும் உருவகப்படுத்துகிறார் என்றால் மற்ற எல்லாக் குடிமக்களுக்கும் தனிப்பட்ட பொறுப்புக் கிடையாது என்ற அர்த்தம் சரியானதா? அதிகாரத்தின் முழுச் சக்தியும் ஒரு நபரிடம் குவிக்கப்படுகின்ற பொழுது மற்ற எல்லா நபர்களுமே சக்தியில்லாதவர்களாகி விடுகிறார்கள். ஒரு நபர் “கடவுள்-மனிதன்” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டால் மொத்த சமூகமுமே மனிதத் தன்மை இல்லாத, மனிதத் தன்மைக்கு முந்திய, விலங்குக்கு உரிய நிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மதத்தில் கடவுளின் சர்வவல்லமை மனிதனைக் “கடவுளின் அடிமையாக” மாற்றுவதைப் போன்றதே இதுவும்.

மார்க்ஸ் பிறந்தார்“அரசர் சர்வவல்லமை உடையவரா அல்லது மக்கள் சர்வவல்லமை உடையவர்களா? இது தான் பிரச்சினை!”(11)

ஹெகல் கருத்துமுதல்வாதக் கோட்பாட்டை முரணில்லாமல் பின்பற்ற விரும்பி மிகவும் கொச்சையான “பொருள்முதல்வாதத்துக்குள்” விழுகிறார். அவருடைய கருத்தமைப்பின் குறை இதில் அடங்கியிருக்கிறது.

அரசர் அரசு என்ற கருத்தைத் தன்னிடத்தில் நிறைவேற்றுகிறார், இக்கருத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலியாக அவர் ஏன் இருக்க வேண்டும்? பாரம்பரியத்தின் அடிப்படையில், உடலின் அடிப்படையில் – இனப்பெருக்க நடவடிக்கை அந்த உடலின் மிக உயர்ந்த செயல்.

“அரசரின் இனப்பெருக்க நடவடிக்கைதான் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கையாகும்; ஏனென்றால் அவர் அதன் மூலமாக அரசரைத் தயாரிக்கிறார், தன்னுடைய உடலை நிரந்தரமாக்குகிறார். அவருடைய மகனின் உடல் அவருடைய சொந்த உடலின் புனருற்பத்தியே, அரசருடம்பின் படைப்பே.”(12)

ஆகவே அரசு தன்னுடைய தலைமையான செயல்களில் ஒரு “பிராணியின் யதார்த்தத்தைப்” பெறுகிறது. இப்படி ஹெகல் இயற்கையைப் பற்றிக் காட்டிய இகழ்ச்சிக்காக அது ஹெகலைப் பழிவாங்குகிறது.

எதேச்சாதிகார ஆட்சி அதிகாரவர்க்கப் படிவரிசை முறையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அரசின் தலைவர் இந்த அதிகாரவர்க்க பிரமிடின் உச்சியில் இருப்பவரே. இந்த நிகழ்வின் தன்மையை ஹெகல் வெளிக்காட்டவில்லை; அவருடைய அரசியல் போக்குகளினால் அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை. மார்க்ஸ் இந்தக் குறையைத் திருத்துகிறார். எதேச்சாதிகார அரசின் உள்ளுக்குள் ஊடுருவிச் செல்கிறார்.

அதிகாரவர்க்கம் என்பது அரசின் உணர்வு, அரசின் சித்தம், அரசின் அதிகாரம். அது வெளித்தோற்றத்துக்குப் “பொது நன்மையின்” பிரதிநிதியாகவும் பாதுகாவலராகவும் செயலாற்றுகிறது. ஆனால் “பொது நன்மை” என்பது கற்பனை செய்யப்பட்ட பொதுமையே; அதற்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான தனிச் சலுகை கோஷ்டியின் நலன் இடம் பெற்றிருக்கிறது, அல்லது ஹெகலைப் பின்பற்றி மார்க்ஸ் கூறுவதைப் போல “கார்ப்பரேஷன் உணர்ச்சி” இடம் பெற்றிருக்கிறது.

அதிகாரவர்க்கத்தினர் அரசின் மதகுருக்கள், அதன் யேசு சபையினர், அதன் இறையியல் தத்துவாசிரியர்கள். அவர்களிடம் எல்லாமே இரண்டு அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன : உண்மையான அர்த்தம் ஒன்று, விஷயங்களை அறியாதவர்களுக்கு மறைத்துவைக்கப்படுகின்ற இரகசியமான அர்த்தம் மற்றொன்று. ஆகவே “அதிகாரவர்க்கத்தின் பொது உணர்ச்சி இரகசியம், மர்மம்”.(13)

அதிகாரவர்க்கம் வெளியுலகத்திலிருந்து தனித்து வைக்கப்பட்டிருப்பதில், அதன் ஒதுக்கமான, “கார்ப்பரேஷன் உணர்ச்சியில்” இந்த மர்மத்தைப் பின்பற்றுதல் உறுதி செய்யப்படுகின்றது; ஆனால் அதன் சொந்தச் சூழலில் இந்த மர்மத்தைப் பின்பற்றுதல் அதன் படிவரிசை அமைப்பினால் உறுதி செய்யப்படுகிறது.

“கார்ப்பரேஷன்” இரகசியத்தை மீறுதலை, “அரசின் பகிரங்க உணர்ச்சியை” அதிகார வர்க்கம் துரோகம் என்கிறது. “அதன் படிவரிசை அமைப்பு அறிவின் படிவரிசை அமைப்பே. உச்சியில் இருப்பவர்கள் விவரங்களைப் புரிந்து கொள்வதைக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். பொதுவானவற்றை உச்சியிலிருப்பவர்கள் புரிந்து கொண்டிருப்பதாகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆகவே எல்லோரும் பரஸ்பரம் ஏமாற்றப்படுகிறார்கள்.”(14)

ஆனால் அதிகாரவர்க்கத்தின் “அறிவு” விஞ்ஞான அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை; உண்மையான விஞ்ஞானத்தில் ஒன்றுமில்லை என்று அதிகாரவர்க்கம் கருதுகிறது. அதிகாரவர்க்கத்தின் அறிவு அதிகாரத்தின் நம்பிக்கையை, குருட்டுத்தனமான கீழ்ப்படிதலை, உறுதியாக நிறுவப்பட்ட, சம்பிரதாயமான நடவடிக்கைகளை, முன்னரே தயாரிக்கப்பட்ட கோட்பாடுகள், கருத்துக்கள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

“ஆகவே அதிகாரம் அதன் அறிவின் அடிப்படை, அதிகாரத்தைக் கடவுளாக உயர்த்துவது அதன் பற்றுறுதி.”(15)

எதேச்சாதிகார அரசு கீழ்ப்படுதல் மற்றும் குருட்டுப் பணிவினால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்ற திட்டவட்டமான அதிகாரவர்க்க சக்திகளின் அமைப்பு என்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

நாட்டின் அரசியல் வாழ்க்கை “மனிதத் தன்மையை அடைவதற்கு” அரசரை மட்டும் தூக்கியெறிவது போதுமானதல்ல என்ற முடிவுக்கு அரசைப் பற்றிய மார்க்சின் பகுப்பாய்வு தவிர்க்க முடியாத வகையில் இட்டுச் செல்கிறது. இதற்கு தனிச் சொத்துடைமை, சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சமத்துவமின்மை ஆகியவற்றின் மீது நிறுவப்பட்டிருக்கின்ற மொத்த அதிகாரவர்க்கப் பிரமிடையுமே நொறுக்க வேண்டும். அரசைப் பற்றிய மார்க்சின் விமர்சனம் முடியாட்சியின் எதேச்சாதிகாரத்தை மட்டுமின்றி முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தொட்டுச் செல்வது முற்றிலும் தெளிவாகும்.

அரசு அமைப்பின் தொடக்க நிலைக் கோட்பாடு மக்களை, மனிதனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால் அதிகாரவர்க்கப் போலீஸ் அரசு மக்களின் மிக அவசியமான நடவடிக்கைக்கு அந்நியமானதாக, “சிவில் சமூகத்திலிருந்து” பிரிக்கப்பட்டதாக, அதற்கு மேலே இருப்பதாக இருக்கிறது என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் அவர் அ. ரூகேக்கு எழுதிய கடிதத்தில் “ஜனநாயகத்தின் மனித உலகத்துக்கு மாறுவதைப்” பிரகடனம் செய்கிறார்.

“தொழில்துறை மற்றும் வர்த்தகம், சொத்துடைமை மற்றும் மக்களைச் சுரண்டுவது ஆகிய அமைப்பு” சமூகத்தில் ஆழமான வெடிப்பை ஏற்படுத்திவிடுகிறது “பழைய அமைப்பினால் அதை குணப்படுத்த முடியாது”(15) என்பதை அவர் தெளிவாகக் காண்கிறார்.

மார்க்ஸ் ஒழிக்கப்பட வேண்டிய அன்றைய அமைப்பின் உளுத்துப் போன தன்மையைக் கண்டார் என்ற போதிலும், “எங்கேயிருந்து தொடங்குவது?” என்ற கேள்வியை அவர் கேட்கவில்லை என்ற போதிலும், “எங்கே போவது?” என்ற கேள்விக்கு அவர் இன்னும் தெளிவான பதிலைத் தர முடியவில்லை. அரை நிலப்பிரபுத்துவ ஜெர்மனியில் இக்கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிப்பது கடினமே.

உண்மையான போர் முழக்கத்தை அவர் தேடினார். மனிதகுலத்தின் மொத்த சமூக வரலாற்றைப் பற்றியும் விஞ்ஞான ரீதியான, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை விரித்துக் கூறினால் மட்டுமே அத்தேடல் பயனளிக்கும்.

குறிப்புகள்:

(1) Ibid., p. 231. 205
(2) ) Ibid., p. 230.
(3)Ibid., p. 228.
(4)Ibid., p. 236.
(5)Ibid., p. 245.
(6) Ibid., p. 253.
(7)Ibid., pp. 332, 333.
(8) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 102.
(9)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 337.
(10) Ibid., p. 349.
(11)Marx, Engels, Collected Works, Vol. 3, p. 28.
(12) Ibid., p.40.
(13)Ibid., p. 47.
(14) Ibid., pp. 46-47.
(15) Ibid., p. 47.
(16)Ibid., p. 141.

தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க