கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.

வம்பர் 16 அன்று தேசிய பத்திரிகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு நேரெதிர் திசையில் நம் நாட்டில் கருத்து சுதந்திரம் முற்று முழுதாக நசுக்கப்பட்டு வருகிறது. இதைப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

கடந்தாண்டில் உலகளவில் 86 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், இந்திய பத்திரிகையாளர்கள் 22 பேர். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2016-ஆம் ஆண்டில் 133-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 180 நாடுகள் கொண்ட பட்டியலில் 161-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மோடி அரசின் பாசிச அடக்குமுறைகளையும், கார்ப்பரேட் செயல்பாடுகளையும் விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதன் சமீபத்திய உதாரணம் நியூஸ் கிளிக் மற்றும் அதன் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீதான ஊபா சட்ட ஒடுக்குமுறை.

படிக்க : உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!

மோடி அரசு மூன்று வழிகளில் ஊடகங்களை திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது. ஒன்று, அரசு மற்றும் சங்க பரிவார் கும்பலை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அடுத்து, ஊடக நிறுவனத்தையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது (இதற்கு உதாரணம் என்.டி.டிவி-யின் பெரும்பான்மை பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றியது), மூன்றாவது, விமர்சனங்களை முன்வைக்க இடமளிக்கும் சமூக வலைத்தளங்களை 2021-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் புதிய விதிகளின் கீழ் ஒடுக்குவது. இதன் ஒரு பகுதியாகவே தி வயர், ஆல்ட் நியூஸ், நியூஸ் கிளிக், நியூஸ் லாண்ட்ரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறை.

“ஊடகங்களுக்கு நியாயமற்ற விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பதன் மூலம், தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களைச் சிந்திக்க வைக்க அரசு முயல்கிறது. அரசின் கொள்கைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஊடகங்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள், அரசமைப்புக்கு விரோதமானதல்ல” என்று மீடியா ஒன் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்கெல்லாம் பாசிச மோடி அரசு பின்வாங்கப்போவதில்லை. பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் கூட காலில் போட்டு மிதித்துவிட்டு காவி – கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

படிக்க : செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு!

பெரும்பாலான ஊடகங்கள் பாசிஸ்டுகளின் ஊதுகுழல்களாக மாறிவிட்டன. மோடி அரசின் நிலைப்பாட்டைத் தங்களது நிலைப்பாடாக மேற்கொள்ளும் அளவிற்குப் பக்குவப்பட்டுள்ளன. மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.

பாசிச ஒடுக்குமுறைகளுக்கெதிரான தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்ட உணர்வை வரித்துக் கொண்டு, மக்கள் நலனில் ஊன்றி நின்று செயல்படுவதே நம் அனைவரின் கடமை.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க