நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.

நேற்று (அக்டோபர் 3 , 2023) நீயூஸ் கிளிக் (NewsClick) செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வீடுகளில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனைகள் நடத்தினர். நியூஸ் கிளிக் நிறுவனத்தின் தலைமை பத்திரிகை ஆசிரியர் பிரபீர் புர்கய்ஸ்தா (Prabir Purkayastha) மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி (Amit Chakravarty) ஆகியோரை ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

மொத்தம் 46 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சரியான முறையில் சோதனை உத்தரவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வழங்காமல், வீடுகளில் அடாவடியாக நுழைந்து சோதனை என்ற பெயரில் மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கைபற்றி இருக்கிறார்கள். மோடி அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சியில், சொல்லிக்கொள்ளப்படும் பெயரளவிலான பத்திரிகை சுதந்திரத்திற்கும் கடைசி சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதையே இவையெல்லாம் நமக்கு உணர்த்துகின்றன.

“குருகிராமில் உள்ள எனது வீட்டிற்கு காலை 6:30 மணிக்கு ஒன்பது போலீசார் வந்தனர். அவர்கள் என்னிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார்கள். நான் அவர்களுடன்  டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்திற்கு சென்றேன். என்னிடம், ஒரே மாதிரியான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன. நான் நியூஸ்க்ளிக் செய்தி நிறுவனத்தின் ஊழியரா என்று கேட்டார்கள். ”இல்லை, நான் ஒரு ஆலோசகர்” என்று சொன்னேன். நான் இங்கு வந்த பிறகுதான், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்” என்கிறார் பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா.

அதானியின் வரி ஏய்ப்பு பற்றி இவர் எழுதிய கட்டுரையை எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி (Economic and Political Weekly) பத்திரிகை வெளியிட்டதற்காக EPW செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதானி நிறுவனம். அதற்கு பயந்து EPW நிறுவனம் அந்த கட்டுரையை தனது பக்கத்திலிருந்து நீக்கிவிட்டது. இதனால் பரஞ்சோய் குஹா தாகுர்தா அந்நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


பாஷா சிங் என்ற பத்திரிகையாளர், அவரது கைப்பேசி கைபற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்னதாக அவரது டிவிட்டர் கணக்கில் “இறுதியாக இந்த கைப்பேசியில் இருந்து கடைசி ட்வீட். டெல்லி போலீஸ் எனது கைப்பேசியை கைப்பற்றிக் கொண்டது” என்று பதிவிட்டிருந்தார்.

சோதனை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களை அவர்களது வழக்கறிஞர்கள் கூட சந்திக்க முடியவில்லை. இந்த வழக்கறிஞர்களுக்கு முதல் தகவல் அறிக்கை போன்ற ஆவணங்களையும் அளிக்க மறுத்திருக்கிறது போலீஸ். பத்திரிகையாளர்களின் வீட்டிற்குள் நுழையும் முன்பே சோதனை உத்தரவுகளை போலீசார் காட்டவில்லை. சோதனை  நடந்து கொண்டிருக்கும்போது தான் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A (வெவ்வேறு குழுக்களுக்கிடையில் பகைமையைத் தூண்டுதல்) போன்ற கடுமையாக பிரிவுகளின் கீழ் சோதனைகள் நடத்தப்படுவது தெரியவந்தது என்று சோதனைக்குள்ளாக்கப்பட்ட  பத்திரிகையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சோதனைக்கு முக்கியக் காரணம்,  நியூஸ்க்ளிக் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக பணமளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தான். “இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை ஊக்குவிப்பதன் மூலம் செய்திச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்” என்ற நோக்கத்தோடு நெவில் ராய் சிங்கம் என்பவரால்  நிதியளிக்கப்பட்ட நிறுவனங்களில் நியூஸ்க்ளிக் நிறுவனமும் ஒன்று என்ற அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 2023-இல், தி நியூ யார்க் டைம்ஸ் (The New York Times) பத்திரிகை வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டை ஆதாரமாக கொண்டுதான் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நியூஸ்க்ளிக் நிறுவனம் தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளது. தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் இதுபோன்ற பொய்கள் பத்திரிகைகளின் மீது மோடி கும்பலின் தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பதாக ஜனநாயகவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், நியூஸ்க்ளிக் நிறுவனத்தை டெல்லி போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவினர் மற்றும் அமலாக்கத்துறையினர் ஆகியோர் கண்காணித்து வந்துள்ளனர்.

ஆனால் இது ஒரு வலுவில்லாத சப்பைக்கட்டு என்பதை நாம் அறிவோம்.  ”சட்ட விரோதமான பணம் கொடுக்கப்பட்டதற்கு ஒரு செய்தி நிறுவனத்தின் பணியாளர்கள், அதற்கு செய்தி வழங்கும் சுதந்திர பத்திரிகையாளர்கள், அவர்களது நண்பர்களை எல்லாம் சோதனை வளையத்திற்குள் எப்படி கொண்டு வர முடியும்?” என்ற எளிய கேள்வியை நாம் கேட்டாலே மோடி கும்பலின் இந்த பாசிச அடாவடித்தனம் வெளிப்பட்டுவிடும்.

தீஸ்டா செதல்வாட் தலைவராக உள்ள Tricontinental என்ற சமூக ஆராய்ச்சி நிறுவனம் நியூஸ்க்ளிக் நிறுவனத்திற்கு கட்டுரைகள் வழங்கிய காரணத்திற்காகவே தீஸ்டா செதல்வாட் மீதும் சோதனை ஏவப்பட்டுள்ளது. வரலாற்றியலாளர் சோஹைல் ஹாஷ்சி நியூஸ்க்ளிக் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காகவே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் வீட்டு வாளகத்தில் நியூஸ்க்ளிக் நிறுவனத்தின் பணியாளர்கள் தங்கியிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


படிக்க: இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!


சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிகையாளரிடம், ”நீங்கள் எந்த நோக்கத்தோடு விவசாயிகளின் டெல்லிச் சாலோ போராட்டம், கொரோனா பெருந்தொற்று, CAA எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த டெல்லி கலவரம் போன்ற சம்பவங்களை செய்தியாக்கினீர்கள்? இந்த சம்பவங்களை செய்தியாக்குவதற்கு தனியாக  ஏதேனும் பணம் பெற்றீர்களா?” என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகளை, செய்தியாளர்களை மிரட்டுவது தான் இந்த சோதனையின் பிரதான நோக்கம். அதாவது மோடி அரசின் தோல்விகளை, அடக்குமுறைகளை பற்றி செய்தி எழுதினால் உங்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் என்று நேரடியாகவே மிரட்டுகிறது பாசிச கும்பல்.

மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் வெளிப்படையான முதல் தாக்குதல் அல்ல இது. 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி பிபிசி (BBC) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தை தொடர்ந்து, பிபிசி நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சோதனை நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்களின் கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. பிரபலமான இந்தி பத்திரிகையான ” டைநிக் பாஸ்கர்” என்ற செய்தித்தாள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்தது பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக அதன் மீது அதிகாரிகள் சோதனை நடத்தினர். எல்லைகடந்த பத்திரிகையாளர்கள் (Reporters without Borders) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி இந்தியா பத்திரிகை சுதந்திரத்தில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 161 இடத்தில் உள்ளது. அதாவது, இந்தியா கடைசி 20 இடங்களில் உள்ளது.

இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் இந்தியாவில் பெயரளவிலான பத்திரிகை சுதந்திரம் கூட வெளிப்படையான தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்பதைத்தான். ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் இந்துத்துவ மதவெறி கும்பலால் மிரட்டப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் உக்கிரமான முறையில் நடக்கும். ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு குறைந்தபட்ச மாற்றுத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணையும் போதுதான் நாம் இந்த பாசிச கும்பலின் தாக்குதல்களை முறியடிக்க முடியும்.


சீனிச்சாமி



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க