“தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!

”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி”

0

காஷ்மீரின் ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட ”தி காஷ்மீர் வாலா” என்னும் சுதந்திர செய்தி ஊடகத்தின் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாசிச மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 19 அன்று தங்கள் வலைத்தளத்தை அணுக (access) முயன்ற அந்நிறுவனத்தினர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வர் வழங்குநரிடம் (server provider) இது குறித்து விசாரித்த போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் காஷ்மீர் வாலா வலைத்தளத்தை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 5 இலட்சம் பின்தொடர்பவர்களை (followers) கொண்ட காஷ்மீர் வாலாவின் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் ட்விட்டர் (தற்போது ”எக்ஸ்”) கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

இந்த பாசிச நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 20 அன்று அறிக்கையொன்றை வெளியிட்ட காஷ்மீர் வாலா, “இது ஜம்மு-காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது விழுந்த மற்றுமொரு சம்மட்டி அடி” என்று கூறியுள்ளது.


படிக்க: காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !


மேலும், ”ஸ்ரீநகரில் உள்ள எங்கள் அலுவலகத்தை காலி செய்யுமாறு நில உரிமையாளர் நோட்டீஸ் வழங்கியிருந்தார். நாங்கள் அலுவலகத்தை காலி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தோம். இவ்வேளையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”காஷ்மீர் வாலாவின் கதை காஷ்மீர் பகுதியில் பத்திரிகை சுதந்திரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய கதையாகும். கடந்த 18 மாதங்களில், எங்கள் வாசகர்களான உங்களைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டோம். காஷ்மீர் வாலாவை 12 ஆண்டுகளாக ஆர்வத்துடன் படித்து ஆதரவளித்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்றி” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

காஷ்மீர் வாலா ஆசிரியரான ஃபஹத் ஷா (Fahad Shah) கடந்த 18 மாதங்களாக சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 4 அன்று, பயங்கரவாதத்தை கௌரவப்படுத்தியதாகவும், போலி செய்திகளைப் பரப்பியதாகவும், வன்முறையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஷா போலீசால் கைது செய்யப்பட்டார்.

ஃபஹத் ஷா நான்கு மாதங்களில் ஐந்து முறை கைது செய்யப்பட்டார். கொடூரமான ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் மூன்று எஃப்.ஐ.ஆர்-களும் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு எஃப்.ஐ.ஆர்-ம் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம் என்பது ஊபா சட்டத்தைப் போன்றதொரு ஆள்தூக்கிச் சட்டமாகும். தனிநபர்களை விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைத்து வைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

முன்னதாக, காஷ்மீர் வாலாவில் பயிற்சி நிருபராகப் பணியாற்றிய சஜாத் குல் (Sajad Gul), பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தங்கள் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ஒரு குடும்பம் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொளியை வெளியிட்டதற்காக குல் ஜனவரி 5, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.


படிக்க: தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் எந்த அளவிற்கு நசுக்கப்படுகிறது என்பதற்கு காஷ்மீர் வாலா மீதான ஒடுக்குமுறைகளே சான்று. நவம்பர் 6, 2011 அன்று “அடிமைத்தனத்தின் தளைகள் உடைந்துவிடும்” (The shackles of slavery will break) என்ற கட்டுரை காஷ்மீர் வாலா வலைத்தளத்தில் வெளியானது. இக்கட்டுரை வெளியாகிக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன பின்பு, இதை எழுதிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் அப்துல் ஆலா ஃபாசிலி (Abdul Aala Fazili) ஏப்ரல் 17, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 2022-இல் ஆசிரியர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டது முதல் தற்காலிக ஆசிரியராக யஷ்ராஜ் சர்மா (Yashraj Sharma) பணியாற்றி வருகிறார். மேற்குறிப்பிட்ட கட்டுரை காரணமாக பதியப்பட்ட வழக்கு தொடர்பான சில கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு யஷ்ராஜ் சர்மாவுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதாவது, 2011-அம் ஆண்டு வெளியான கட்டுரை குறித்து 2022-ஆம் ஆண்டில் ஆசிரியாக இருப்பவரிடம் விசாரிக்கப் போகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அக்கட்டுரை வெளியான போது சர்மாவுக்கு வயது 12 தான் என்பதே.

இத்தகைய கொடூரத் தாக்குதல்களை பாசிஸ்டுகளால் எவ்வாறு நிகழ்த்த முடிகிறது? இந்த பாசிச நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையா?

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ஏ ’இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், பொது ஒழுங்கு’ என்ற பெயரில் இணையத்தின் மீது முழுக்கட்டுப்பாட்டை அரசிற்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அனைத்து வலைத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்த முடியும்; தேவைப்பட்டால் தடைசெய்யவும் முடியும். பிரிவு 69ஏ அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது அல்ல. ஏனெனில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(2) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ஏ மற்றும் அதன் சட்டவிதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சட்டப் பிரிவு 69ஏ வழங்கும் அதிகாரத்தை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அரசுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.

2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்தைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் மீதான பாசிச மோடி அரசின் ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய காரணத்தால் தான் காஷ்மீர் வாலா தற்போது முடக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், காஷ்மீர் வாலா மீதான இந்த பாசிச தாக்குதல் சட்ட விரோதமாக நடத்தப்படவில்லை; இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது என்பதைத் தான்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க