லடாக் பிராந்தியத்தை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்

மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில்  போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

டாக்” யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி லடாக் பகுதியின் லே (Leh) மற்றும் கார்கில் (Kargil) மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிப்ரவரி 3 அன்று அணிதிரண்டு உறைபனியில் போராட்டம் நடத்தினர். லே அபெக்ஸ் பாடி (LBA) மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) ஆகிய இரு அமைப்புகள் இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகின்றன.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, பழங்குடி அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது, உள்ளூர் மக்களுக்கு வேலையில் இடஒதுக்கீடு, லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற தொகுதி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, பா.ஜ.க. அரசு அதற்கே உரிய பாசிச முறையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 370-ஐ ரத்து செய்ததோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது.

லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட வேண்டும் என்று அப்போது கோரிவந்த லடாக் பகுதி மக்கள் மோடி அரசின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்ந்து கொண்டதால் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்படுவதன் மூலம் லடாக் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம், இயற்கைவளங்கள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ளும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

டிசம்பர் 4 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, போராடும் இயக்கங்களான இரண்டு அமைப்புகளின் தலைவர்களுடன் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் (பிப்ரவரி) நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் குழு எவ்வளவு தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்த போதிலும், இந்த நான்கு அம்ச கோரிக்கைகளில்  போராடும் இயக்கங்கள் விடாப்பிடியாக இருக்கின்றன.

மோடி அரசை பணியவைத்து, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வைத்த விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டத்தைப் போன்று, லடாக் மக்கள் “லே சலோ” என்று “லே” நகரத்தை நோக்கி பேரணியாகச் சென்று பா.ஜ.க-விற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் “லே” நகரத்தில் உள்ள போலோ மைதானத்தில் மக்கள் கூடினர்.

அங்கு கூடிய லடாக் பிராந்தியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தலைவர்களும் மேடையில் நின்று “ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்று முழங்கினர். மக்களும் இந்த முழக்கத்தை எதிரொலித்தனர். காஷ்மீரில் வழக்கத்தைவிட இவ்வாண்டு பலமடங்கு அதிகமாக இருந்த பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு  மக்களும்  இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


படிக்க: காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்


சையத் ஜாபர் மெஹ்தி என்ற வியாபாரி, லடாக்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கடைசி கிராமமான துர்டுக்கில் இருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசுகையில், “ஆறாவது அட்டவணை மற்றும் மாநில உரிமை போன்ற பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்கிறேன். போராடும் இயக்கங்களின் இந்த கோரிக்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றார்.

மகசேசே விருது வென்ற சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) மேடையில் பேசுகையில், “பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, 370-வது பிரிவைப் ரத்து செய்த  பிறகு, லடாக்கை ஆறாவது அட்டவணையில் சேர்ப்பதாக உறுதியளித்தது. அதற்குப் பிறகு மத்திய அரசிடம் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆறாவது அட்டவணையில் லடாக்கை சேர்ப்பது பற்றி பேசுபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது லடாக்கை அழிக்க விரும்பும் சுரங்கத் தொழில் கும்பல் திரைமறைவு பேரங்களை நடத்தி வருகிறது. நாங்கள் எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மட்டுமே கோருகிறோம், அது நடக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அமைச்சரும் 2020-இல் லடாக் பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்தவருவமான லே அபெக்ஸ் பாடி அமைப்பை சேர்ந்த  செரிங் டோர்ஜே, “இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கான மக்களின் ஆதரவு என்பது லடாக் மக்களின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்ற மிக வெளிப்படையான செய்தியை சொல்வதாக இருக்கிறது. அரசியலமைப்புக்கு புறம்பான எதையும் நாங்கள் கோரவில்லை. பழங்குடியினர் அந்தஸ்து என்பது லடாக் மக்களின் உரிமை. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.

லடாக் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தால் அப்பிராந்தியமே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்நிலையில் செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக், இக்கோரிகைகளை முன்வைத்து வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருப்பது போராட்டத்தின் வீரியத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த போலி ஜனநாயக கூட்டமைப்பிற்குள் தங்களுக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை லடாக் மக்கள் தங்களது சொந்த அனுபவத்தின் வாயிலாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, தங்களது உரிமையை நிலைநாட்ட போராட்டங்களே தீர்வு என்று தற்போது முடிவெடுத்திருக்கிறார்கள்.


‌சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க