காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்

காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது, இனி காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கரத்தை காஷ்மீரில் வலுப்படுத்துவதாகவே அமையும்.

டந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5, காஷ்மீர் முழுவதும் ராணுவத்தை  குவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் துண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் வீட்டு சிறையிலடைத்து  ஒரு ராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கிய சட்டப்பிரிவு 35A  ஆகியவற்றை ஒரு சட்டத்தின் மூலம் தடாலடியாக நீக்கியது பாசிச மோடி அரசு.

இச்சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காஷ்மீரின் உயிராதாரமான தேசிய சுய நிர்ணய உரிமை சம்பந்தமான இவ்வழக்கை நான்கு ஆண்டுகளாக அடைகாத்து வைத்திருந்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில், சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது இறுதித் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11 அன்று அறிவித்தது.

காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வு, காஷ்மீரிகளின் தேசிய இன உரிமை, 1947-க்கு முன்பு வரை காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படாத தனிநாடு என்ற வரலாற்று உண்மை, 1947-இல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட தருணம், இந்திய அரசு காஷ்மீரிகளுக்கு இழைத்த துரோகம், இந்திய ராணுவம் நடத்திய படுகொலைகள், காஷ்மீரில் மெகபூபா முப்தியும், உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பிய போதும் சட்டவிரோதமாக ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைத்தது என எதையும் கணக்கில் கொள்ளாமல், பாசிஸ்டுகளின் குரலாக தீர்ப்பை அறிவித்தார், சந்திரசூட்.

காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பானது, இனி காஷ்மீரில் காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் கரத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.


படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!


ஆனால், இத்தீர்ப்பானது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது பாசிச நடவடிக்கையாக இருக்கட்டும், ஆனால் அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டதா? என்ற கேள்வியின் அடிப்படையில்தான்  தொடக்கத்திலிருந்தே விசாரணை நடத்தப்பட்டது. அதனால்தான் 370 பிரிவு ரத்து செய்வதற்காக, பிரிவு 367-இல் திருத்தம் மேற்கொண்ட வழிமுறை என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று கண்டித்த அரசியல் சாசன அமர்வு, 370-வது பிரிவை ரத்து செய்தது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது பயன்படுத்திய வழிமுறை தவறாம்; ஆனால், ரத்து செய்தது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செல்லுமாம். என்னெ ஒரு தீர்ப்பு!

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளை ஒடுக்கும் தீர்ப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதோடு, இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கான தனி இறையாண்மை இல்லை என்றும் இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகமானது போலியானது என்பதை தனது தீர்ப்பின் மூலம் நிரூபித்திருக்கிறது உச்சநீதிமன்றம். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய ஒன்றியத்திலிருந்து எந்த ஒரு தேசிய இனமும் விடுதலைப் பெற முடியாது என்பதிலிருந்து காவி பாசிஸ்டுகளின் அகண்டபாரதக் கனவை சட்டப்பூர்வமாக நனவாக்கியிருக்கிறது.

மேலும், மாநிலங்களின் எல்லை, பகுதி மற்றும் பெயரை மறுவரையறை செய்யவும், மாற்றவும் இந்திய ஒன்றிய அரசிற்கு அதிகாரமளிக்கிறது என்ற இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 3-ஐ எடுத்துக்காட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை உடைத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பின் மூலம், பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தங்களுக்கு ஒத்துவராத மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு சட்டப்பூர்வமாக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்காலத்தில், இத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சித்தாந்த ரீதியாக தங்களுக்கு ஒவ்வாத பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டை, தனது பாசிசப் பிடிக்குள் கொண்டுவர பல யூனியன் பிரதேசங்களாக உடைக்க முடியும்.  “தமிழ்நாடு” என்று காவி கும்பலுக்கு உறுத்திக் கொண்டிருக்கின்ற பெயரை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். ஏனெனில் ஏற்கெனவே தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவி பேசியது; தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும், மதுரையை தலைமையாகக் கொண்டு மற்றொரு மாநிலம் தனியாகப் பிரிக்க வேண்டும் என காவி கும்பல் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. சித்தாந்த ரீதியாக மோதி வீழ்த்த முடியாத தமிழ்நாட்டை, புறவழியாக தனது இந்துராஷ்டிரக் கனவிற்குள் அடைக்கவே இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிவகுக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன்லோகூர் கூறுவது போல, இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லை என்பதுமட்டுமல்ல, இனி ஜனநாயக மற்றும் தேசிய தன்னுரிமைகளுக்கு உச்சநீதிமன்றத்தில் இடமில்லை என்பதே இத்தீர்ப்பு இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கும் செய்தியாக உள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகளும்

இத்தீர்ப்பு வெளியானதும் காவி கும்பல்கள் இத்தீர்ப்பைக் கொண்டாடினர். “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு உறுதியை, நம்பிக்கையை ஏற்படுத்தும் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார், பிரதமர் மோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம்,  “பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் குறித்த தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்கவில்லை. இந்திய அரசியலமைப்பின்படி திருத்தப்படும்வரை பிரிவு 370 மதிக்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் செயற்குழு தீர்மானத்தை நாங்களும் வலியுறுத்துகிறோம்” என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். காங்கிரஸின் செயற்குழு தீர்மானத்திலிருந்து காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரசின் உள்விருப்பமாகவும் இருந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். காஷ்மீர் குறித்த காங்கிரசின் இக்கருத்துதான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகிற சிவசேனா கட்சியும் இத்தீர்ப்பை வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான மறுநாள் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட காஷ்மீர் தொடர்பான மூன்று மசோதாக்களைத் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சரான அமித்ஷா. அப்பொழுது இம்மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தி.மு.க-வின் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முகமது அப்துல்லா, “காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ரத்து என்பது கூட்டாட்சியின் மீதான தாக்குதல் என்றும், ஒவ்வொரு இனத்திற்கும் தங்களது சொந்த விதியைத் தாங்களே நிர்ணயிக்கும் உரிமை உள்ளது, அது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும்” என்ற பெரியாரின் மேற்கோளை எடுத்துக்காட்டி பேசினார்.

மோடியின் காட்டுத்தர்பாரில், பெரியாரின் பெயரையும், காஷ்மீரிகளுக்கும் தேசிய இன சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்ற உண்மையையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் ஆத்திரத்தில் கூச்சலிட்டது. அப்துல்லாவின் பேச்சையும், அவர் மேற்கோள் காட்டிய பெரியாரின் கருத்தையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கியது.

மேலும், நிர்மலாவும், அமித்ஷாவும் தி.மு.க. உறுப்பினரின் கருத்துடன் காங்கிரஸ் உடன்படுகிறதா? என்று எழுந்து பதிலளிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை வலியுறுத்தினர். காவிகளுக்கு பதிலளித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பெரியார் கூறியதை அப்துல்லா மேற்கோள் காட்டியிருக்கிறார், அதை ஆதரிப்பதா வேண்டாமா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஒருவரை அவையில் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று மழுப்பலாக பதில் கூறினார். ஆனால், கார்கேவிற்கு அடுத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினரான ஜெய்ராம் ரமேஷ் அப்துல்லாவின் பேச்சில் காங்கிரஸ் உடன்படவில்லை என்று உறுதியாக காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். வழிமுறைகளில் உள்ள வேறுபாட்டைத் தவிர தானும் மென்மையான பா.ஜ.க.தான் என நிரூபித்திருக்கிறது காங்கிரஸ்.


படிக்க: உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!


ஒருவேளை, மோடி அரசின் மீதான விரக்தியால், காங்கிரஸை 2024 தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகூட மீட்கப்படாது என்பது தெளிவாகிறது. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பாசிசத்தை எதிர்ப்பதற்கான மாற்றுத் திட்டம் இல்லாத இந்தியா கூட்டணியை ஆதரிப்பதும் மக்களை ஆதரிக்கச் சொல்வதும் பாசிஸ்டுகளிடம் மக்களை அடகுவைப்பதாகும்.

அம்பானி-அதானிகளின் வேட்டைக்குக் காஷ்மீரைத் திறந்துவிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு

பாசிச மோடி அரசின் இந்துராஷ்டிரம் என்பது, அம்பானி-அதானிகளின் கார்ப்பரேட் மேலாதிக்கமாகும். உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு காஷ்மீரை அம்பானி -அதானி கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கே வழிவகுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாள், காஷ்மீர் குறித்து முக்கிய மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி-ஷா கும்பல். ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு-காஷ்மீர் பட்டியலின பழங்குடி சட்டத் திருத்த மசோதா 2023  ஆகியவற்றை தாக்கல் செய்தது.

பட்டியலின பழங்குடி சட்டத் திருத்த மசோதாவில், பகாரி, கட்டா பிராமணர்கள், கோலி மற்றும் பட்டாரி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  “ஜம்மு-காஷ்மீரின் பிர்பஞ்சால் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் பகாரி இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் சமூக ரீதியாக முன்னேறியவர்கள்; ஏற்கெனவே அரசுத்துறை வேலைவாய்ப்பில் செல்வாக்கு செலுத்துகிற பகாரிகளுக்கு எஸ்.டி அந்தஸ்து அளிப்பதன் மூலம் தங்களின் இடஒதுக்கீடு பறிபோகும் என்கின்றனர்”, குஜ்ஜார்-பகர்வால் பழங்குடியினர்கள். கடந்த ஜூலையில் நடைபெற்ற மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே பழங்குடியின சட்ட மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்ததும், இதை எதிர்த்து குஜ்ஜார்-பகர்வால்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023-இன் மூலம், அந்த யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை இடங்களை 83 -லிருந்து 90 ஆக அதிகரித்திருக்கிறது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 24 இடங்களையும் சேர்த்து மொத்தம்114 இடங்களாக அதிகரிக்கப்பட்டியிருக்கிறது. இடஒதுக்கீட்டு மசோதாவின் மூலம், 3 இல் 1 பங்கு இடங்கள் பெண்களுக்காகவும், 9 இடங்கள் பட்டியலின பழங்குடிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களின் மூலம் காஷ்மீரை முழுமையாக தனது இந்துராஷ்டிரத்திற்குள் கொண்டுவர எத்தனிக்கிறது மோடி-ஷா கும்பல்.

குறிப்பாக, பகாரிகள், பட்டாரி, கோலி, கட்டா பிராமணர்கள் ஆகியவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவதன் மூலம் மணிப்பூரைப்போல் காஷ்மீர் மக்களிடையே பிரிவினையைத் தூண்டி, காஷ்மீரின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மணிப்பூரின் உத்தியையே காஷ்மீரிலும் நடைமுறைப்படுத்துகிறது காவி கும்பல்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், ரூ.81,122 கோடி முதலீடுகளுக்கு அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், ரூ.24,729 கோடி மதிப்பீலான முதலீடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாகவும் ஜம்மு-காஷ்மீர் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜம்மு-காஷ்மீரில், 19 தொழிற்துறை பூங்காக்கள் அமைக்கவும், இரண்டு மருத்துவ நகரங்கள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. துபாயைச் சேர்ந்த எமார் குழுமம் (EMAAR Group), ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நூன் (Noon.com), அல் மாயா குழுமம் (AI Maya Group), ஜி.எல். எம்பிளாய்மெண்ட் (GL Employment), மட்டு இன்வெஸ்ட்மெண்ட் (MATU Investments) போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் ரூ.500 கோடி முதலீட்டில் மால் கட்டத்திட்டமிட்டுள்ளது, எமார் குழுமம்.

இதுவரை இந்தியாவை அம்பானி-அதானி கும்பலுக்கு படையல் வைத்த மோடி அரசு, 370 ஐ நீக்கி காஷ்மீரையும் படையல் வைத்திருக்கிறது. அதற்கு உச்சநீதிமன்றமும் பக்கபலமாக அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு சட்ட அங்கீகாரம் கொடுத்திருக்கிறது.

ஜனநாயகத் தூண்களான நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் கூடாரமாகவும், ஊடகங்கள் பாசிச ஊதுகுழல்களாகவும் மாறிவிட்டச் சூழலில், உச்சநீதிமன்றமும் பாசிஸ்டுகளுக்கானதுதான் என்று இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

எனவே, உழைக்கும் மக்களும், தேசிய இனங்களும், ஜனநாயகச் சக்திகளும் தங்களுக்கான நீதியையும், ஜனநாயக உரிமைகளையும் இந்த அரசமைப்புச் சட்டகத்துக்கு வெளியிலான மக்கள் போராட்டத்தின் மூலமே பெறமுடியும். இனியும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க