உணவு தானியங்கள் குறைப்பு: காஷ்மீர் மக்களை பஞ்சத்திற்குள் தள்ளும் மோடி அரசு!

ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.

0

ம்மு – காஷ்மீரில் ஜே.கே.எஃப்.இ.எஸ் (JKFES) மற்றும் பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் (PMGKAY) ஆகிய உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்கள் மோடி அரசால் திரும்பப் பெறப்பட்டதாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட அரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாலும் மக்கள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மாதாந்திர அரிசி ஒதுக்கீட்டைப் பெறமுடியுமா என்பதே தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. பிரதான உணவான அரிசி தற்போது சிறப்புரிமை ஆகிவிட்டது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் முப்தி முகமது சயீத் உணவு உரிமைத் திட்டம் (MMSFES) என்று தொடங்கப்பட்டு, பின்னர் ஜம்மு-காஷ்மீர் உணவு உரிமைத் திட்டம் (JKFES) என பெயர் மாற்றப்பட்ட திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோ‌‌ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதேபோல், கொரோனா தொற்றையடுத்து மார்ச் 2020-இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் மேலும் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது.

மொத்தமாக நபர் ஒருவருக்கு என்.எஃப்.எஸ்.ஏ, ஜே.கே.எஃப்.இ.எஸ் மற்றும் பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் ஆகிய திட்டங்கள் மூலம் மாதம் 15 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் ஆகஸ்ட் 2022-இல் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டமும் டிசம்பர் 2022-இல் ரத்து செய்யப்பட்டது.


படிக்க : இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


காஷ்மீரில் பெரும்பான்மையினரின் பிரதான உணவாகவும், ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடப்படும் உணவாகவும் அரிசி இருப்பதால் இந்த குறைக்கப்பட்ட ஒதுக்கீடு மக்களின் தேவையை நிறைவு செய்வதாக இல்லை. கடந்த ஆண்டு வரை, ஒவ்வொரு காஷ்மீரிக்கும் மாதந்தோறும் 15 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது என்.எஃப்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியம் மட்டுமே வழங்கப்படுகிறது.

“இது (5 கிலோ அரிசி) அரை மாதம் கூட நீடிக்காது. அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கிறது. நாங்கள் இப்போது பசியால் சாக வேண்டும் என்று அது விரும்புகிறது” என்று காஷ்மீர் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதத்தில், காஷ்மீர் பெண்கள் ரேஷன் குறைக்கப்பட்டதற்கு எதிராக பாரம்பரிய வான்வுன் (Wanwun) பாடலைப் பாடி வீதிகளில் இறங்கிப் போராடினர்.

காஷ்மீரில் பி.பி.எல் (BPL), பி.எச்.எச் (PHH) மற்றும் ஏ.ஏ.ஒய் (AAY) நுகர்வோர்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்றாலும், இலவசங்கள் ஒரு ஏமாற்று என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கு பதிலாக, (ரேஷன் கடைகளின் மூலம்) எங்களுக்குப் போதுமான அளவு அரிசியை வழங்குங்கள்” என்று காஷ்மீரி ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மொத்த அவலநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ஃபரீதா என்னும் 65 வயது பெண் “உணவு உட்கொள்வதில் நான் ஒருபோதும் இவ்வளவு கவனமாக இருந்ததில்லை. நான் மாதந்தோறும் 25 கிலோ உணவு தானியங்களைப் பெறுகிறேன்; ஆனால் அதைக்கொண்டு 5 நபர்கள் சாப்பிடவேண்டும். விருந்தினர் வந்தால் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். மற்ற மாநிலத்தவர்களைப் போல எங்களால் ரொட்டி சாப்பிட முடியாது” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்காரர்கள் “நுகர்வோர் பெரும்பாலும் கூடுதல் ரேஷன் பொருட்களைக் கோருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் எங்களிடம் கெஞ்சுகிறார்கள்; சில நேரம் சண்டையிடுகிறார்கள். ஆனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். உணவுப் பொருட்கள் வழங்கும் செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்ட அளவு மட்டுமே கிடைக்கிறது” என்று கூறுகின்றனர்.

தனியார் கடைகளில் அரிசி வாங்குவது குறித்துப் பேசிய குல்காம் பகுதியில் வசிக்கும் முஷ்டாக் அகமது “நான் ஒரு பள்ளியில் பணியாற்றுகிறேன். நாங்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பம். நான் ₹ 7,000 மட்டுமே சம்பாதிக்கிறேன்; இதைக்கொண்டு செலவுகளை ஈடுசெய்ய முடிவதில்லை. தனியார் விற்பனையாளர்களிடமிருந்து அரிசியை வாங்க என்னால் முடியாது” என்று கூறினார்.

பல தனியார் வியாபாரிகள் அரிசியை இருப்பு வைத்து, 30 கிலோ மூட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தனியார் அரிசி வியாபாரி வசீம் அகமது கூறுகையில், “கடந்த சில மாதங்களாக அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது. 900 முதல் 950 ரூபாய்க்கு அரிசியைக் கொள்முதல் செய்கிறோம். லாப வரம்பு மிகவும் குறைவு. வாடிக்கையாளர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து எங்களால் வாங்க முடியாது என்று என்னிடம் கூறுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

அரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதானது ஜம்மு & காஷ்மீரில் வேலையின்மையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) கூற்றுப்படி, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு & காஷ்மீரில் வேலையின்மை விகிதம் 23.1% என்ற மிக உயர்ந்த அளவில் இருக்கிறது. இந்திய அளவில் வேலையின்மை பட்டியலில் ஜம்மு & காஷ்மீர் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.


படிக்க : பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 151 ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் தெலுங்கானா அரசு!


கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு & காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்ட அரிசி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை (Department of Food, Civil Supplies and Consumer Affairs FCSCA) தரவுகளின்படி, ஜூலை 2020-இல் என்.எஃப்.எஸ்.ஏ, ஜே.கே.எஃப்.இ.எஸ் மற்றும் பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் ஆகியவற்றின் கீழ் காஷ்மீருக்கு 5,85,671 குவிண்டால் உணவு தானியங்கள் (அரிசி மற்றும் கோதுமை) ஒதுக்கப்பட்டன. ஆகஸ்ட் 2021-இல் ஒதுக்கீடு 5,10,000 குவிண்டாலாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.கே.எஃப்.இ.எஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கீடு 4,55,000 குவிண்டாலாகக் குறைத்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து 2023 ஜனவரியில் 2,83,051 குவிண்டால் ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டது.

“இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் காஷ்மீருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்களின் அளவு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு நிகராக ஒதுக்கீடு இருந்தாலும், அரிசி காஷ்மீரிகளின் பிரதான உணவாக இருப்பதால் அரசாங்கம் பள்ளத்தாக்கிற்கு (காஷ்மீருக்கு) விலக்கு அளித்திருக்க வேண்டும்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத எஃப்.சி.எஸ்.சி.ஏ அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து தனது பாசிசத்தை அரங்கேற்றியபோது, காஷ்மீரில் இனிமேல் பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகக் கூக்குரலிட்டது பாசிச மோடி அரசு. ஆனால் தற்போது காஷ்மீர் மக்களை உணவு தானியங்களுக்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளி இருக்கிறது. பாசிஸ்டுகள் கூறும் பாலாறும் தேனாறும் உழைக்கும் மக்களுக்கல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!


பொம்மி
நன்றி: நியூஸ் கிளிக்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க