உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழலில் அம்மாநிலத்தில் உள்ள விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், தேவபூமி ரக்ஷா அபியான் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஜூன் 15 அன்று முஸ்லீம்களை அச்சுறுத்தும் வகையில் ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக புரோலா நகரில் ஒரு மகா பஞ்சாயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அரசு நிர்வாகம் அந்நிகழ்வுக்கு அனுமதி மறுத்துவிட்டது.
கடந்த மே 26 அன்று சிறுமி ஒருவரை இருவர் (ஒருவர் இந்து மற்றொருவர் முஸ்லீம்) கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த மே 29 அன்று இந்துத்துவ கும்பல்கள் பேரணி ஒன்றை நடத்தின. அதில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல வேண்டும்’, ‘இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், இஸ்லாமியர்களை விரட்டியடியுங்கள்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
உத்தரகாண்டிலேயே பிறந்து வளர்ந்த முஸ்லிம் ஒருவர் “இந்த முழக்கங்களைக் கேட்ட என்னுடைய 10 வயது மகள் நம்மை பற்றி இவ்வாறு ஏன் பேசுகிறார்கள் என்று என்னிடம் கேட்டார். என்னிடம் அதற்குப் பதில் இல்லை; எனது மகள் அழத் தொடங்கிவிட்டார். பேரணியின் போது, தாங்களும் அப்பேரணியில் கலந்து கொள்வதைப் போல் போலீசு அவர்களுடன் நடந்து சென்றது” என்று கூறினார்.
“உத்தரகாசி மக்கள் வகுப்புவாதிகள் இல்லை. சில கும்பல்கள் வேண்டுமென்றே வெறுப்புப்பேச்சு பேசுகின்றனர்; நில உரிமையாளர்களை மிரட்டி முஸ்லீம்களின் கடைகளை காலி செய்ய வைக்கின்றனர். இப்பகுதியில் மொத்தம் 38 கடைகள் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவற்றில் 12 கடைகளிலிருந்து நில உரிமையாளர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.
படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!
இதன் தொடர்ச்சியாக, ஜூன் 15-ஆம் தேதி மகா பஞ்சாயத்து நடத்தவிருப்பதாகவும், அதற்குள் முஸ்லீம்கள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும், காலி செய்யாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தேவபூமி ரக்ஷா அபியான் சார்பாக புரோலா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதேபோல, பார்கோட் (Barkot) நகரில் முஸ்லீம் கடைகளுக்கு வெளியே கதவுகளில் கருப்பு நிறத்தில் “X” என்ற குறியீடு இடப்பட்டது.
பா.ஜ.க தொண்டரான சலீம் அகமது என்பவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். “நான் எனது வீட்டை விற்றுவிட்டு டேராடூனுக்கு குடிபெயர இருக்கிறேன். இப்படி ஒரு நிலைமையை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார். பா.ஜ.க தொண்டராக இருந்தாலும் அவரும் ஒரு முஸ்லீம் தானே!
இங்கு வகுப்புவாத பதட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் இந்துத்துவ சாமியார்கள்.
உத்தரகாண்டில் தற்போது நிலவுகின்ற வகுப்புவாத பதட்டம் குறித்து சுவாமி ஆதி யோகி என்ற இந்துத்துவ சாமியார் தி வயர் வலைத்தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார். ஆதி யோகி முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசி வரும் தர்ஷன் பாரதியின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஆதி யோகி தனது பேட்டியில், “இந்நிலம் கடவுள்கள், முனிவர்கள் மற்றும் துறவிகளுக்குச் சொந்தமானது. சேவைக்காகவே மக்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் (முஸ்லீம்கள்) இறைச்சி உண்கின்றனர்; எங்கள் பெண்கள் மீது தேவையற்ற பார்வையைச் செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
அப்படியானால் உத்தரகாண்டில் முஸ்லீம்களைப் புறக்கணிக்கிறீர்களா என்று தி வயர் கேட்டதற்கு, “இல்லை, இல்லை. இந்த இடம் எங்களுக்கு மெக்கா போன்றது. மெக்காவுக்குள் நுழைய எங்களுக்கு அனுமதி உண்டா? அதேபோலத்தான், இது எங்கள் மதத்தின் புனிதத்தலம். 2024-ஆம் ஆண்டுக்குள் உத்தரகாண்டில் ஜிகாதிகளின் செல்வாக்கைத் துடைத்தெறிவோம்; அனைத்து இறைச்சிக் கடைகளையும் புறக்கணித்து மூடச்செய்வோம். 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி இங்கிருந்து துவங்கும்” என்று கூறினார்.
மகா பஞ்சாயத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்குச் சுவாமி ஆதி யோகி, “இந்த விசயம் மத ரீதியாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அரசாங்கம் எங்கள் புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் உரிமையை எங்களுக்கு வழங்கியுள்ளது” என்று கூறினார்.
படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!
இப்படி ஒரு அச்சமூட்டும் நிலையில்தான் உத்தரகாண்ட் மாநிலம் தற்போது உள்ளது. நடக்கவிருந்த மகா பஞ்சாயத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (Association for Protection of Civil Rights – APCR) உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றமோ “உயர் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லையா?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, வழக்கை முறைப்படி உயர் நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றம், ‘தான் கறார்’ என்பதை வெளிப்படுத்திக்கொண்டது.
அடுத்ததாக ஏ.பி.சி.ஆர்-இன் மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், உத்தரகாசி மாவட்டத்தின் புரோலாவில் இந்துத்துவ கும்பல்கள் ஏற்பாடு செய்திருந்த மகா பஞ்சாயத்து குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தியது.
மாநில பா.ஜ.க அரசாங்கம் மகா பஞ்சாயத்தைத் தடுத்து விட்டதாக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், உத்தரகாசியில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான போராட்டங்களில் முன்னிலை வகிக்கும் தேவபூமி ரக்ஷா அபியான் சங்கத்தின் (Devbhoomi Raksha Abhiyan Sangathan) நிறுவனரும் இந்துத்துவ சாமியாருமான தர்ஷன் பாரதியின் கூற்று, பா.ஜ.க அரசாங்கம் இந்து மதவெறி கும்பல்களுக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
முன்னதாக தர்ஷன் பாரதி “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் ‘நில ஜிகாத்’ குறித்து விவாதித்தோம். அதன் பின்னர் தான் அவர் ‘நில ஜிகாத்’ குறித்த சட்டங்களை இயற்றினார். இதன் விளைவாகத்தான் 300-க்கும் மேற்பட்ட முஸ்லீம் கல்லறைகள் (mazars) இடிக்கப்பட்டன” என்று கூறியுள்ளார். புஷ்கர் சிங் தாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்பு ‘மசார் ஜிகாத்’ – ‘நில ஜிகாத்’ என்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து முஸ்லீம் கல்லறைகளை இடித்ததை தர்ஷன் பாரதி இங்கு சுட்டிக் காட்டுகிறார்.
படிக்க: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!
வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உத்தரகாசியில் வசிக்கும் முஸ்லீம்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்குப் பஞ்சம் இல்லை.
சான்றாக, பா.ஜ.க-வின் உத்தரகாசி மாவட்ட எஸ்.சி பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ் குமார் தப்ரால் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களை (முஸ்லீம்களை) இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்; கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டோம். தாமாகவே அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்” என்று கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் முஸ்லீம் விரோத வெறுப்பு அரசியலால் சூழப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரான பேரணிகள் இந்துத்துவ அமைப்புகளால் சுதந்திரமாக அரசின் துணைகொண்டு நடத்தப்படுகின்றன. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் பேரணி நடந்தவாறே உள்ளது. இந்துத்துவ சாமியார் சுவாமி ஆதி யோகி கூறுவது போல், 2024-இல் இந்து ராஷ்டிரம் அமைக்கும் பணி உத்தரகாண்டில் இருந்து துவங்கும் நிலைதான் அங்கு நிலவுகிறது. காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.
பொம்மி