உத்தரகண்ட்: புத்தகக் கண்காட்சியைத் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி குண்டர்கள்

”நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.”

த்தரகாண்ட் மாநிலத்தில் ”கிரியட்டிவ் உத்தரகண்ட்” (Creative Uttarakhand) என்ற அமைப்பு பவுரி கர்ஹாவில் (Pauri Garhwal) உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த புத்தகக் கண்காட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியைத் திரும்பப் பெறக்கோரி ஏ.பி.வி.பி விடுத்த கோரிக்கையை ஏற்றுப் பல்கலை நிர்வாகம் அனுமதியை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளது.

கிதாப் கௌதிக் (Kitaab Kautik) என்ற பெயரில் கிரியட்டிவ் உத்தரகண்ட் நடத்தத் திட்டமிட்டிருந்த பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

”இந்நிகழ்வு முன்பே அரசு பெண்கள் கல்லூரியில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்–இன் எதிர்ப்பால் அது ரத்தானது. இதன்பிறகு, ஹெம்வதி நந்தன் பஹுகுனா கர்ஹால் பல்கலைக் கழகத்தின் (Hemwati Nandan Bahuguna Garhwal University) டீனிடம் பேசி நடத்த முயன்றோம். அவரும் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி வழங்கினார். ஆனால், நிகழ்வை வளாகத்திற்குள் நடத்தக் கூடாது என்று பின்னர் நிர்வாகம் கூறிவிட்டது.

பிறகு, ராம் லீலா மைதானத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த முயற்சி செய்தோம். எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி இருந்தபோதிலும், அதே நாளில் ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.” என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான ஹேம் பண்ட் கூறினார்.

”அவர்கள் புத்தகக் கண்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டனர். நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த புத்தகக் கண்காட்சியில் கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்ட வெவ்வேறான தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் வைக்கப்பட இருந்தது. மேலும், சமூகப் பிரச்சனையைப் பேசக்கூடிய கிராமப்புறக் கலைஞர் நரேந்திர சிங்க் நெகியை அழைக்கத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதுவும் ஆர்,எஸ்.எஸ்-க்கு பிடிக்கவில்லை” என்று பண்ட் மேலும் கூறினார்.


படிக்க: டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ள போலீசு!


புத்தகக் கண்காட்சியை நடத்துவதில் தங்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் அதில் வைக்கப்படும் புத்தகங்கள் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்றும் ஏ.பி.வி.பி தெரிவித்ததையடுத்து இந்நிகழ்விற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ததாக மாணவர் நலன் துறையின் டீன் கூறியுள்ளார்.

”பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் புத்தகக் கண்காட்சி அதற்கு இடையூறாக அமைந்துவிடும் என்பதால் ஆட்சேபனை தெரிவித்தோம்” என்று ஏ.பி.வி.பி தலைவர் திமிர்த் தனமாகக் கூறியுள்ளான். அதுமட்டுமல்லாமல் ராம் லீலா மைதானத்தில் பிப்ரவரி 15 அன்று “வித்தியார்த்தி ஏகாதிரிகரன்” (vidyarthi ekatrikaran) என்ற ஏ.பி.வி.பி-இன் நிகழ்வை நடத்தப் போவதாகக் கூறி அங்கும் புத்தகக் கண்காட்சிக்கு இடம் கிடைக்காமல் செய்துள்ளனர்.

ஒருபுறம், பாசிச மோடி அரசு கல்வியைக் காவிமயமாக்கி மூடநம்பிக்கை – இந்துத்துவ கருத்துகளைப் பரப்பி வருகிறது. மறுபுறம், ஆர்.எஸ்.எஸ் தனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி எனப்படும் வானர படைகள் மூலம் மாணவர்களுக்கான ஜனநாயக வெளியை ஒடுக்கி வருகிறது. இக்கும்பலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க