டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ள போலீசு!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர்கள் போலீசின் தாக்குதலுக்கும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கும் ஆளாவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.

மாரிஸ் நகர் போலீசு நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷாரேயர் கான் மற்றும் பிற மாணவர்கள்

நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மாணவர் பிரிவின் முன்னாள் மாணவர் தலைவர் ஷாரேயர் கான் (Shahreyar Khan) மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) உறுப்பினர் அன்னான் (Annan) ஆகியோர் வாக்குப்பதிவு முடிந்தபிறகு சக மாணவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மாரிஸ் நகர் போலீசு அவர்கள் இருவரையும் லத்தியால் சரமாரியாகத் தாக்கியது மட்டுமின்றி, 200 மீட்டர் வரை இழுத்துச் சென்று பூட்ஸ்களாலும் மிதித்துள்ளனர். மேலும், அவர்களுடைய மதத்தைக் குறிப்பிட்டு “முல்லா”, “தேசத்துரோகி”, “பயங்கரவாதி” ஆகிய இழிவான சொற்களால் வசைபாடியுள்ளனர். இத்தாக்குதல் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் மீனா (Manoj Kumar Meena) உத்தரவின்படியே நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த கான், “போலீசு குறிப்பாக ஒரு குழுவைக் குறிவைத்தது; நான் அவர்களிடம் அமைதியாகப் பேசும்படி கேட்டபோது, அவர்கள் என்னைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றினர்” என்று கூறியுள்ளார்.

மேலும், வாக்குச்சாவடிக்கு அருகிலிருந்த அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களையும் கலைக்கும்படி போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வாக்குச்சாவடியிலிருந்து கணிசமான தொலைவிலிருந்த தங்களை நியாயமற்ற முறையில் குறிவைத்து போலீசு தாக்கியதாகக் கூறுகிறார். வலதுசாரி குழுக்களுக்கு எதிராகச் செயல்படும் மாணவர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கை என்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) உறுப்பினர்களுக்கு எதிராகப் போலீசு செயல்படவில்லை என்றும் கூறினார்.

நான் படேல் செஸ்ட் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்று வரும் சார்கோயிடோசிஸ் நோயாளி என்று போலீசிடம் கூறியபோதும் தாக்குதலைத் தொடர்ந்தனர் என்றும், வேனில் ஏற்றி தன்னை அச்சுறுத்தியது மட்டுமின்றி இரண்டு மணி நேரம் தன்னை பிடித்து வைத்திருந்து தன்னுடைய தொலைப்பேசியைப் பறித்துக் கொண்டதாக கான் கூறுகிறார். மேலும், பேராசிரியர் கிருஷ்ணா மூராரி சம்பவ இடத்திற்கு வந்த பிறகே தான் விடுவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.


படிக்க: புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி


போலீசால் கானுடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த அன்னான், போலீசு தன்னை அடிக்கவில்லை. ஆனால் தன்னை இழிவான சொற்களால் வசைபாடியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய தொலைப்பேசியைப் பறித்துக் கொண்டதாகவும் கூறுகிறார்.

டெல்லி போலீசின் மாணவர் சங்கத் தலைவர்கள் மீதான இக்கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, பல மாணவர்கள் மாரிஸ் நகர் போலீசு நிலையத்தில் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் மீனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி திரண்டனர். மாணவர்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகே அடுத்த நாள் காலை 4 மணிக்கு மாணவர்களுடைய புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் மனோஜ் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர்கள் போலீசின் தாக்குதலுக்கும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கும் ஆளாவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. இந்த அடக்குமுறைகள் மூலம் அம்மாணவர்களின் குரல்களை நசுக்கி விடலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசும் ஏ.பி.வி.பி குண்டர்களும் கனவு கண்டு வருகின்றனர். அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க உரிமைகளுக்கான குரல்கள் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்குமே தவிர, பாசிஸ்டுகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.

செய்தி ஆதாரம்: தி வயர்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க