த்தரகாண்டில் 24 ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க பன்னிரண்டாம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதுமானது என அரசுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பணிக்கு எம்.டெக்., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். உத்தரகாண்டில் உள்ள கர்வால் மண்டலத்திலிருந்து மட்டும் அதிகபட்சமாக 12,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. குமாவோன் மண்டலத்தில் 8,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறிப்பாக, ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட 70 சதவிகித விண்ணப்பங்கள் முதுநிலை பட்டம் பெற்றவர்களுடையது என்ற சோகமான செய்தி உத்தரகாண்டில் படித்த பட்டதாரிகள் மத்தியில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்குச் சேர தகுதியாக 18 முதல் 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பல இளைஞர்கள் இதில் வேலையை பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்துள்ளனர். உத்தரகாசியைச் சேர்ந்த ராஜீவ் செம்வால், “நான் எம்.எஸ்.சி. கணிதவியலில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றவன். போட்டித் தேர்வுகளுக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சித்து தொடர் தோல்விகளே கிடைத்தன. வேலைவாய்ப்புக்கு எனது வயது ஒரு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்துள்ளேன்” எனக் கூறுகிறார்.

உத்தரகாண்டை சேர்ந்த படித்த பட்டதாரிகள் வேலையில்லா திண்டாட்டத்தால் கூடுதல் மதிப்புடைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவை எதுவும் தேவைப்படாத ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2023-24 வரையிலான நிதியாண்டில் உத்தரகாண்டில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 9.2 சதவிகிதமாக உள்ளதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் அரசின் புள்ளிவிவரத்தை விட மேலும் அதிகமாகவே இருக்கும்.


படிக்க: இஸ்ரேலின் நலனுக்காக 10,000 இந்தியர்களின் உயிரைப் பணையம் வைத்துள்ள பாசிச மோடி அரசு


உத்தரகாண்ட் மட்டுமின்றி, பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை விட மிகத் தீவிரமாக உள்ளது. ஹரியானா உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மையால் போர்ச்சூழல் நிலவும் இஸ்ரேல் நாட்டிற்குக் கூட வேறுவழியின்றி வேலை செய்ய அம்மாநில மக்கள் செல்கின்றனர்.

இவ்வாறு நாடு முழுவதும் தீவிரமாகிவரும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு அரசுத்துறைகளில் காண்ட்ராக்ட்மயம் மற்றும் கார்ப்பரேட்மயத்தை புகுத்துவது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் துறையையும் திட்டமிட்டு அழிப்பது உள்ளிட்ட கார்ப்பரேட் நலன் சார்ந்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கையே காரணமாகும். இந்த கார்ப்பரேட் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டியமைக்கும் போதே வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக்கட்ட முடியும்.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க