கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு 350க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இமாச்சலில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுவதும், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதும் போன்ற காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன. மேலும், பலரைக் காணவில்லை எனவும் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா தேவி என்ற பெண்மணி கூறும் போது “இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென பயங்கரம் சத்தம் கேட்டதும் வீடே அதிர்ந்தது. வெளியே எட்டிப்பார்த்த போது கிராமமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக வீட்டிலிருந்து வெளியே வந்து, அருகிலுள்ள கோயிலில் தஞ்சமடைந்தோம். இரவு முழுவதும் அங்கேயே தங்கினோம். எங்கள் வீடு மட்டுமே தப்பிப் பிழைத்தது” என தனது வேதனையைக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில், கடந்த 4 நாட்களாக தொடர் கனமழையால் மண்டி, குலு, கின்னார், லாஹால், ஸ்பிதி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, வாகனப் போக்குவரத்து சாலைகளில் இதுவரை 191 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில அவசர நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழகம் கொடுத்த தகவலின் படி மொத்தமுள்ள 3,612 வழித்தடங்களில் 82 வழித்தடங்களில் பஸ் வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுக்க 294 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களும், 120 நீர் வழங்கும் மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இமாச்சல் பிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தரகாண்டிலும் அதி கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டேராடூன், ஹரித்வார், நைனிடால், சாமோலி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மூழ்கியுள்ளன, பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஏராளமானோர் படுகாயம் அடைந்ததுடன், பச்சிளம் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
படிக்க: வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்
கடந்த சில ஆண்டுகளாக இமயமலை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பருவமழைக் காலத்தில் மேக வெடிப்புகளால் அதீத பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மேகவெடிப்பு ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது, இது 2004 சுனாமிக்கு பிறகான மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகும்.
சமீபகாலமாக, காலநிலை மாற்றத்தினால் மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகள் அதிகரித்துவருவதாக எஸ்.ஏ.என்.டி.ஆர்.பி (South Asia Network on Dams, Rivers and People – SANDRP) அமைப்பு கூறியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் இமாச்சல் பிரதேசத்தில் சுமார் 30 மேக வெடிப்புகளும், உத்தரகாண்டில் 50 மேக வெடிப்புகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் மேகவெடிப்பு ஏற்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது. இந்த அளவிற்கான மழைப்பொழிவு திடீர் பெருவெள்ளத்தை ஏற்படுத்தி அதிக பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் உண்டாக்குகிறது.
பருவமழைக் காலங்களில், கனமான நீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்துவிடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும்.
இவ்வாறு நீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று கனமான நீர்த்துளிகளை உருவாக்கும். இதனால், ஒரே நேரத்தில் மொத்தமாக மிக கனமழை கொட்டித் தீர்த்துவிடும். அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்போது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால் மேக வெடிப்பு ஏற்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தினால் இயற்கைச் சீற்றம் அதிகரித்து வருகிறது. ஆனால், பாசிச மோடி அரசு அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் கார்ப்பரேட் நலனை பாதுகாக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது.
எனவே, இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையிலான மாற்றுத்திட்டத்தை முன்வைத்துப் போராடுவதே நமது முதன்மைப் பணியாகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube