கேரள மாநிலம் வயநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜூலை 30 அன்று அதிகாலையில் நடந்த நிலச்சரிவு 350 பேரை பலி கொண்டு விட்டது. இன்னும் 300 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
முண்டக்கை, சூரல்மலை, நிலாம்பூர் ஆகிய கிராமங்கள் பெருமழை வெள்ளத்தின் தாக்கத்தினால் நிலம் சரிந்து மொத்தமாக சேற்றிலும் சகதியிலும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மீட்பு படையினர் மண் மூடிய கற்பாறை இடுக்குகளிலிருந்து மனித உடல்களை பிடுங்கி எடுக்கும் காட்சிகளைக் கண்டு நாடே பதைபதைத்துப் போனது.
சடலங்களை தோண்டி எடுக்கும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் பொழுதே எந்த ஆய்வும் ஆதாரமும் இல்லாமல் வயநாடு பேரழிவுக்கு கேரள மாநில அரசுதான் காரணம் என்று மாநிலங்களவையில் பச்சையாக பொய் சொன்னார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஒரு வாரத்துக்கு முன்பே 23 ஆம் தேதியே கேரள மாநில அரசுக்கு பேரிடர் நேர இருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தும், முன்னேற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தும், கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அக்கறையற்று இருந்ததே இவ்வளவு மக்கள் பலியாவதற்கு காரணம் என்று அமித்ஷா கூறினார். இவ்வளவு மக்கள் செத்து மடிந்ததைப் பற்றி எவ்வித மனித உணர்ச்சியும் இல்லாமல் பச்சையான பொய்யைச் சொல்லி, தான் இட்லரின் கோயாபெல்ஸ் ரகத்தைச் சேர்ந்த ஒரு பாசிஸ்ட் என்று விகாரமாக வெளிக்காட்டிக் கொண்டார்.
வயநாடு நிலச்சரிவு பேரிடரினால் மாநிலமே நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், பொதுவாக பெருமழை வரக்கூடும் என்ற அளவில் தான் எச்சரிக்கை விடுத்தனரே தவிர இப்படிப்பட்ட பேரிடர் நேரும் வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றியோ நிலச்சரிவு ஏற்படும் வகையில் பெரிய மழை வெள்ளம் வரும் என்றோ எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை என்று உடனடியாக மறுப்பு தெரிவித்தார். சிறிதும் நேர்மையில்லாமல் பொய் பேசிய அமித்ஷாவை அம்பலப்படுத்தினார்.
இவ்வளவு பெரிய செயற்கைப் பேரிடர் நிகழ்ந்திருக்கும் நிலையிலும் ஊடகங்களோ, இதை உள்துறை அமைச்சருக்கும் கேரள முதல்வருக்கும் இடையிலான கொள்கை வேறுபாடாக ஊதிப் பெருக்கி விவாதப் பொருளாக்கின.
இது இந்த இருவருக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு தான்.
படிக்க: தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!
நாட்டின் உழைக்கும் மக்கள் யார் எப்படி செத்தாலும், எக்காலத்திலும் எந்தக் கவலையும் படாதவர். அதை தமது கட்சியின் கொள்கையாகவே கொண்டவர். அதிலும் தமக்கு வாக்களிக்காத மாநிலத்து மக்களின் மேல் வன்மத்தை கக்கக் கூடியவர் இந்த அமித்ஷா.
ஒரு பெரும் இயற்கை பேரிடர் நிகழ்ந்து விட்ட நிலையில் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு மக்களை மீட்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருப்பவர் பினராயி விஜயன்.
இவ்விரண்டு கொள்கைகளும் வேறு வேறானவை தான்.
ஆனால், நாம் கவனம் செலுத்த வேண்டியது அவர்கள் இருவருக்குமிடையில் இருக்கும் கொள்கை ஒற்றுமையைப் பற்றித் தான்.
அதாவது இந்தியாவில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சுற்றுலா தொழிலை – சுற்றுலாப் பொருளாதாரத்தை ஊக்குவித்து வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு எதிரானவர்கள் யாராயினும் அவர்கள் தேசத்தின் விரோதிகளாவர். எனவே அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது இருவரினுடைய பொதுக் கொள்கையாகும்.
நமது நாட்டில் சுற்றுலா துறையை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற இந்த கொள்கையின் காரணமாகத்தான் மேற்கு தொடர்ச்சி மலையில் மேலும் மேலும் காடுகள் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளை மீறி பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. மூன்று நட்சத்திர ஐந்து நட்சத்திர விடுதிகள் பெரியப் பெரிய ரிசார்ட்டுகளுடன் சுற்றுலாத்தலங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுகின்றன.
மேலும் புதிதாக கோடை வாசஸ்தலங்களும் பல இடங்களில் மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
சரிவான மலைப் பகுதியை வெட்டிச் சமன்படுத்தி இப்படிப்பட்ட கட்டுமானங்களை எழுப்புகின்றனர். இன்னும் பல வகை கனிமங்கள் அகழும் சுரங்கங்கள் வெட்டுதல், கருங்கல் குவாரிகள் அமைத்தல், சிறிய பெரிய அணைக்கட்டுகளைக் கட்டி நீரைத் தேக்கி நீர் மின்சார நிலையங்கள் அமைத்தல் என மிகப்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரளம் தமிழ்நாடு கர்நாடகம் கோவா மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பலநூறு கிலோ மீட்டர்கள் நீண்டிருக்கின்றது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகளைக் கொண்டிருக்கிறது. அடர்ந்த காடுகளுடன் கூடியது.
பெருமரங்கள் மற்றும் பிற மலைத் தாவரங்களின் வேர்களின் தனிச்சிறப்பான ஆற்றல்தான் பாறைகளை மூடி இருக்கும் மண் பகுதியை இறுக்கமாக பிடித்திருக்கின்றது. மழை நீரால் மண் கரைந்து ஓடி விடாமல் தாவரங்களின் வேர்கள் தான் ஒருசேர நீரையும் மண்ணையும் தடுத்து நிறுத்தி வைக்கின்றன.
மொத்த மலைச்சரிவின் சாய்வுப் பகுதியில் ஒரு இடைநிலைப் பகுதி வெட்டிச் சமன்படுத்தப்பட்டு கான்கிரீட் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படும் போது உச்சியில் இருந்து அடிவாரம் வரையிலுமான பாறையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் மண்ணின் தொடர்ச்சி அறுபட்டுப் போகிறது.
மண்ணையும் மழை நீரையும் தாங்கிப் பிடிக்கும் மலை தாவரங்களின் வேர்கள் அறுத்தெறியப்படுவது தான் நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணமாகும்.
மேற்கு தொடர்ச்சி மலை முழுவதிலும் எல்லா மாநிலங்களுமே எந்த வேறுபாடுமின்றி போட்டி போட்டுக் கொண்டு காடுகளை அழித்து கட்டுமானங்களை எழுப்பி வருகின்றன.
தமிழ்நாட்டின் ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களில் பெரு நகரங்களுக்கு இணையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தவறாமல் மலர் கண்காட்சி நடத்தி ஊடக விளம்பரங்களின் மூலம் இந்தியா முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.
படிக்க: வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்
மாநில அரசுகளின் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் இந்திய சுற்றுச்சூழலியல் ஆய்வு மையத்தின் தலைவர் மாதவ் காட்கில் அறிக்கை 2011 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை செய்தது.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் நிலச்சரிவுகளாலும் பெருமழை வெள்ளங்களாலும் ஏற்படும் பேரழிவுகள் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்பதை அறுதியிட்டு அந்த அறிக்கை கூறியது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை மூன்று சுற்று சூழல் உணர்திறன் (Eco sensitive) மண்டலங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்குமான தனித்தனி வழிகாட்டுதல்களை முன்வைத்தது மாதவ் காட்கில் கமிஷனின் அறிக்கை.
ஆனால் கர்நாடகம் மகாராஷ்டிரம் கேரளம் ஆகிய மாநிலங்கள் காட்கில் அறிக்கை மாநிலத்தின் பொருளாதார மேம்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி நிராகரித்து விட்டன. ஒன்றிய அரசும் அதே பார்வையுடன் அந்த அறிக்கையை புறந்தள்ளிவிட்டது.
இப்போது சூழலியலாளர்கள் எச்சரித்திருந்தவாறு பேரிடர் ஒன்று நேர்ந்துவிட்டவுடன் நான் இல்லை நீ இல்லை என்று அவரவரும் பிறர் மீது பழி சுமத்திவிட முயல்கிறார்கள்.
கேரளத்தில் மட்டுமல்ல இமாச்சலப் பிரதேசத்திலும் உத்தராகாண்டிலும் நிலைமை இதுவே தான்.
ஆண்டுதோறும் பேரழிவுகள் நடந்து மக்கள் பலிகொள்ளப்படுகின்றனர். இந்தியாவெங்கும் காடுகள், மலைகள், கடல் வளங்கள் என்று எல்லா இயற்கை வளங்களும் எல்லையில்லாமல் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் சூறையாடப்படுகின்றன.
இந்த சுரண்டலுக்காக அரசும் ஆட்சியாளர்களும் மேற்கொள்ளும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே இப்பேரிடர்களுக்கு அடிப்படையாகும்.
எத்தனை இயற்கை பேரிடர்கள் நடந்தாலும் எந்த ஒரு கார்ப்பரேட் திட்டங்களும் எப்போதும் கைவிடப்பட்டதில்லை. அனைத்து கட்சி ஆட்சியிலும் இதுவே நிலைமை.
காலநிலை நெருக்கடி மேலும் மேலும் முற்றி வருகின்ற நிலையில் மேகப் பெருவெடிப்புகள் ஏற்பட்டு திடீர் பெருவெள்ளம் நகரங்களை சூழ்வதும், மறுபுறம் கடும் வறட்சி, கடும் வெப்பம், நில அதிர்ச்சிகள் சூறாவளிகள் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் புயல் கடலில் சுனாமி என்று கார்ப்பரேட் கொள்ளை கும்பலுக்கு எதிராகத்தான் இயற்கை கடுஞ்சீற்றத்துடன் எதிர்வினையாற்றுகின்றது.
எனவே ஆட்சியாளர்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் உடனடியாக முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்த அளவில், மாதவ் காட்கிலின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோது நாடு முழுவதற்கும் மக்கள் நலனையும் இயற்கைப் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தும் மாற்று பொருளாதாரக் கொள்கைகள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
அதற்காக அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களும் மக்களுடன் இணைந்து போராடவும் தலைமை ஏற்று வழிநடத்தவும் முன்வர வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube