கேரள மாநிலத்தின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் வயநாடு உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ பகுதியை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிப்பது தொடர்பாக வரைவறிக்கை வெளியிட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு. வெளியிடப்படும் ஆறாவது வரைவறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான ஒரு குழு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் தேவையான பாதுகாப்பின் அளவை ஆய்வு செய்ய 2011 இல் பரிந்துரைக்கப்பட்டது. 1,29,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட முழுப் பகுதியும் சுற்றுச்சூழல் உணர்திறன் நிறைந்த பகுதியாக அதில் அறிவிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை மாநிலங்களுடன் தொடர்புடைய குடியிருப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, காட்கில் குழு மூன்று பரந்த மண்டலங்களை உருவாக்க பரிந்துரைத்தது. சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் 1, 2 மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் 3 என பிரித்து, முதல் இரண்டு மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
பரிந்துரைகளை ஒன்றிய – மாநில அரசுகளும் தொழில் நிறுவனங்களும் ஏற்க மறுத்த நிலையில், விண்வெளி ஆய்வாளர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான இரண்டாவது குழு அமைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவை பாதியாகக் குறைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறைக்கையே தற்போது ஆறாவது முறையாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
2013 ஆண்டில் கொடுத்த வரைவறிக்கையை 5 முறை பொதுவெளியில் கருத்துக்கேட்டு இறுதிசெய்து சட்டமாக்கப்படாமல் தற்போதுவரை கிடப்பில் போட்டுள்ளது மோடி அரசு. இந்த வரைவறிக்கை மீது மாநில அரசுகள் மற்றும் மக்களிடம் கருத்துகள், ஆலோசனைகள் கேட்பதற்காக ஐந்துமுறை காலாவதியான அறிக்கையை தற்போது வெளியிடக் காரணம் என்ன?
வயநாட்டில் கடந்த 30ம் தேதி கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இச்சம்பவம் கேரள மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. ஒன்றிய மோடி அரசு கடந்த பத்தாண்டுகளாக வரைவறிக்கையைக் கிடப்பில் போடப்பட்டுள்ளதை மூடிமறைத்து, இச்சம்பவத்தை திசைதிருப்புவதற்காக இந்த வரைவறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட அடுத்த நாளன்று “ஏழு நாட்களுக்கு முன்பே கனமழை குறித்து கேரள அரசை எச்சரித்தோம்” என மக்களவையில் பொய்யைக் கூறினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்கு மறுப்பு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை எனவும், இந்த சூழலில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாசிசக் கும்பலின் இந்த அற்ப அரசியலுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
படிக்க: தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவறிக்கையின்படி, “சுரங்கம், கல்குவாரி, மணல் அள்ளுதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள சுரங்கங்கள் இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் அல்லது தற்போதுள்ள சுரங்கக் குத்தகை காலாவதியாகும் வரை, அதற்கு முன்னதாகவோ படிப்படியாக அகற்றப்படும். புதிய அனல் மின் திட்டங்கள் தடை செய்யப்படுகிறது. தற்போதுள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படலாம், ஆனால் விரிவாக்கம் அனுமதிக்கப்படாது. பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் மற்றும் நகரமயமாக்கல் தடைசெய்யப்பட்டும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஏற்கெனவே உள்ள கட்டிடங்களை பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் செய்யலாம். மருத்துவமனைகள் செயல்படலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால் 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்” என வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, இந்த வரைவு ஜூலை 2022 இல் வெளியிடப்பட்டது. வயநாட்டில் உள்ள 13 கிராமங்களை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க அதில் முன்மொழியப்பட்டது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு பாதிக்கப்பட்ட மாநிலங்களும் சுற்றுச்சூழல் உணர்திறன் பிராந்தியங்களில் சேர்க்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட இடங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்ததால், வரைவு அறிவிப்பு இன்னும் சட்டமாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இத்தகைய அறிவிப்புகள் பொதுவாக அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்டமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அறிவிப்பு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் விலகியிருக்கிறது என்று பல ஆய்வாளர்கள் விமர்சனமாகத் தெரிவித்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் ஒருமித்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை எட்டுவதற்காக, 2022 ஆம் ஆண்டு மாநிலங்களின் மறுப்புக்கான காரணத்தை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
படிக்க: வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்
மேற்கண்ட வரைவறிக்கை பற்றி, மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வரைவறிக்கை 725 நாட்களுக்கு செல்லுபடியாகும், இது 31 ஆம் தேதி (ஜூலை 2024) அன்று முடிவடைந்தது. எனவே நாங்கள் அதை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது. உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வயநாட்டில் நடந்த சோகம் தற்செயலானது” என்றார். மேலும், “மாநிலங்கள் ஒருமித்த கருத்துக்கு வருவது கடினம்; குழு அதை கவனித்து வருகிறது. இதுவே இறுதி வரைவறிக்கையாக இருக்கும் என நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார். பாசிச மோடி கும்பல் அரசு நிர்வாகத்தை தனது அரசியலுக்கு ஏற்ப இயக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்ப அலை பாதிப்பால் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளதும், கடுமையான மழைப்பொழிவு வெள்ளம், நிலச்சரிவு போன்றவையால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டிலிருந்தே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அது எந்த அளவிற்கு அக்கறையாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மோடியின் ஆட்சியில் நிலக்கரி, தங்கம், உள்ளிட்ட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் போன்ற பேரழிவு திட்டங்களையும், சாகர்மாலா, பாரத்மாலா, பரியோஜனா போன்ற கட்டுமானத் திட்டங்களையும் அதானி – அம்பானி போன்றக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கும் வேலையை செவ்வனே செய்து வருகிறது. அதற்கேற்ப வனவிலங்கு பாதுகாப்பு திருத்த சட்டம் 2022, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த சட்டம் 2023, வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் 2023 ஆகியவற்றையும் நிறைவேற்றியிருக்கிறது.
இவற்றையெல்லாம் ஒருபுறம் செய்துவிட்டு தான் மேற்குத்தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிப்பதற்கான வரைவறிக்கையை ஆறாவது முறையாக வெளியிட்டு, திசைதிருப்பும் அரசியலை இன்னொருபுறம் செய்ய முயல்கிறது பாசிச மோடி கும்பல்.
இவ்வரைவறிக்கை மீது கருத்து கூற 60 நாட்கள் கெடுவிதித்திருப்பது பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் பித்தலாட்டத்தனமாகும். மாதவ் காட்கில் ஆய்வறிக்கையில் கூறியுள்ளவற்றின் படி மூன்று வகை மண்டலங்களாக பிரித்து அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் காடுகளின் வசிக்கும் பழங்குடி மக்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பின்னரே அறிக்கை இறுதிசெய்யப்பட வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube