வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்

"காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.

டந்த செவ்வாய்கிழமை (30.07.2024) அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளால், வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சில நொடிகளில் புதைந்து போயின. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது.

முண்டகை பகுதியில் ஒரு கிராமமே அழிக்கப்பட்டுவிட்டது. மீட்புப்படையினர் தோண்டத் தோண்ட உடல்கள் இருக்கினறன; பார்ப்பவர்களின் மனதைப் பதறவைக்கின்றன. மனித உடல்கள் மண்ணில் இருக்கிறதா அல்லது வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டதா என்பதே தெரியாத அவலநிலையை பார்க்கும் போது மனம் பதபதைக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் நிலச்சரிவுகள், பெருவெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் இடுக்கி, வயநாடு போன்ற மாவட்டங்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

கனமழை, நிலநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பது போன்ற இயற்கை காரணங்களாலும், ஆக்கிரமிப்புகள், காடுகள் அழிப்பு, சுரங்கங்கள், கட்டுமானங்கள், தங்கும் சொகுசு விடுதிகள் (ரெசார்ட்கள்) போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு காரணிகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் மழையும் வெள்ளமும் கேரளா மாநிலத்தையே புரட்டிப்போட்டது. வயநாடு, இடுக்கி, கண்ணூர், திரிச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த ஆண்டும் (2019) மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்ந்தன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வயநாடு, மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், திரிச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இரண்டே நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 121 பேர் உயிரிழந்தனர். அதேபோல, 2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் தொடர்ந்தன.

மாநில அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன?

கடந்த 40 வருடங்களில், 9,000 சதுர கிலோமீட்டர் காடுகளை கேரளா இழந்துள்ளது என்கிறார் வயநாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.

மேலும், “காரணம், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார்.

வயநாட்டில் தேயிலை, காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் அதிகம் இருப்பதால், இதுபோன்ற நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன என்றும், தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தங்கி இருந்தவர்கள் பலரும் தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்றும் கூறுகிறார் தன்யா.

கடந்த காலத்தில் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு எவ்வளவோ பரிந்துரைகள் நிபுணர் குழுக்களால் அளிக்கப்பட்டும், அதற்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை. இந்த முறையாவது தற்காலிகத் தீர்வுகள் எடுக்காமல், நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்கிறார்.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் 40% விழுக்காடு கேரளாவில் தான் உள்ளது. அதுமட்டுமல்லாது கேரள மாநிலத்தின் 44 நதிகளில், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து மட்டுமே 41 நதிகள் உருவாகின்றன.

ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்கள்

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கண்டறிய சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் தலைமையில் 13 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை 2010 ஆம் ஆண்டு அமைத்தது ஒன்றிய அரசு.

அந்த ஆய்வுக்குழு 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் 522 பக்கங்களுக்கு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையை ஒன்றிய அரசும், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாநில அரசுகளும் நிராகரித்தன.

பின்னர், ஆய்வாளர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை நியமித்து, அவர்கள் 2013 ஆம் ஆண்டு சம்ர்பித்த அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், கர்நாடகா, கேரளா போன்ற மாநில அரசுகள் அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால், சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த இணையவழிக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

அக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அப்போதையை கர்நாடகா பா.ஜ.க அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “மேற்குத்தொடர்ச்சி மலையை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிப்பது அப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதனால் கர்நாடக அரசும் அப்பகுதியில் வாழும் மக்களும் இந்த அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்க்கிறோம்” என்றார்.

கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள்

  • மேற்குத்தொடர்ச்சி மலையின் 37 விழுக்காடு பகுதியை உணர்திறன் மிக்க சூழலியல் மண்டலமாக அறிவிக்குமாறு பரிந்துரைக்கிறது.
  • அதில், 20,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கர்நாடகாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அத்தோடு, கிராணைட் போன்றவற்றிற்கான அகழ்விடங்கள், சுரங்கங்கள், சிவப்பு வகைப்பாட்டில் வரும் தொழிற்சாலைகளுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்குமாறு வலியுறுத்தியது.
  • மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன்பே, அவை காடு மற்றும் காட்டுயிர்களிடையே என்ன மாதிரியான பின்விளைவுகளை கொண்டுவரும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
  • புதிதாக அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டங்களை மேற்குத்தொடர்ச்சி மலையில் அனுமதிக்கக் கூடாது. ஆனால், நீர்மின் திட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம்.
  • கட்டுமானத் திட்டங்களை பொறுத்தமட்டில், 20,000 சதுர கிலோமீட்டர் வரை அனுமதி வழங்கலாம்.
  • காட்டு நிலங்களைத் திசை திருப்புவதை, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளலாம்.

மாதவ் காட்கில் ஆய்வறிக்கையின் பரிந்துரைகள்

  • மேற்கு மலைத்தொடர் முழுவதையுமே மூன்று சூழலியல் மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. சூழலியல் மண்டலம் 1-ல் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 2-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், சூழலியல் மண்டலம் 3-ல் முக்கியமான சூழலியல் பகுதிகள். இதில் முதல் இரண்டு சூழலியல் மண்டலங்களில் மொத்த மலைத்தொடரில் 75% பகுதி வருகிறது.
  • மண் அரிப்பிற்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் ஒற்றைப் பயிர் சாகுபடியைக் கைவிட வேண்டும்.
  • காலாவதியான அணைகள், அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைத் தடுக்க வேண்டும்.
  • காட்டு நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்புதல், நதிகளின் போக்கை திசைத்திருப்புதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.
  • கேரளாவில் பாயும் சாலக்குடி நதியில் மாநில மின்வாரியம் திட்டமிட்டுள்ள அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைத் கைவிட வேண்டும்.
  • மலைத்தொடரின் பாதுகாப்பு கருதி, மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
  • அந்த ஆணையம் மலைத்தொடரில் வாழும் மக்களையும் உட்படுத்தி, அவர்களின் ஆலோசனைகள், பங்கெடுப்புகளோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • பழங்குடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்து, காடுகள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்கெடுப்பை உறுதி செய்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும்.
  • இந்த வன உரிமைச் சட்டத்தை மேற்கு மலைத்தொடர் முழுக்க முறையாக அமல்படுத்த வேண்டும்.

நீலகிரிக்கு காத்திருக்கும் ஆபத்து

“மாதவ் காட்கில் பல ஆண்டுகளாக மேற்குத்தொடர்ச்சி மலைகள் குறித்து ஆய்வுகள் செய்து வந்தவர். மேற்குத்தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் கொடுத்த அழுத்தத்தால், மத்திய அரசு அவர் தலைமையில் குழுவை அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளை நிராகரிக்காமல் பின்பற்றியிருந்தால் நிச்சயம் பல பேரிடர்களைத் தவிர்த்திருக்கலாம்” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஓசை காளிதாஸ்.

வயநாட்டிற்கு அடுத்தப்படியாக நீலகிரி இத்தகைய நிலச்சரிவு ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கிறார் காளிதாஸ். “எல்லா இடங்களிலும் மனிதர்கள் சென்று வாழ வேண்டும் என நினைப்பதே தவறு. குறிப்பாக, நீலகிரியில் கணக்கற்ற கட்டிடங்கள், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கட்டப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன் நீலகிரியில் பெய்த கனமழை மற்றும் அவலாஞ்சியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை சுட்டிக்காட்டிய அவர், வயநாடு சம்பவம் நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி என்கிறார்.

“இயற்கை பேரிடர்களை நம்மால் தடுக்க முடியாதுதான். ஆனால், அதன் தீவிரத்தைக் குறைக்கவும், மேற்குத்தொடர்ச்சி மலையைக் காப்பாற்றவும் நம்மால் முடியும். ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து, தோட்டங்களாக மாற்றினார்கள். இப்போது நாம் அதை கட்டிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அதன் கோர விளைவுதான் வயநாடு நிலச்சரிவு போன்ற சம்பவங்கள்” என்று அவர் கூறுகிறார்.

“அதிகமான மனித உயிர்களையும் காடுகளையும் இழந்துவிட்டோம், இப்போதாவது மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் காளிதாஸ்.

மத்திய, மாநில அரசுகள் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. இக்கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் ஒரு அங்கமாக இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு என்ன செய்யப் போகிறோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.


தினேஷ்

நன்றி: பிபிசி தமிழ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க