தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!

2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

கேரளத்தின் வடகிழக்கு மாவட்டமான வயநாட்டில் ஜூலை 30 அதிகாலை நிகழ்ந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இயற்கையைப் பாதுகாக்காமல் கார்ப்பரேட் நலனையே பிரதிபலித்து வந்த அரசின் செயல்பாடுகளை இந்த கோர நிகழ்வு அம்பலப்படுத்தியுள்ளது.

மலைகள் நிறைந்த வயநாட்டில் இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒன்றிய – மாநில அரசுகள் மாறி மாறி குறை கூறிக்கொண்டு இயற்கை விடுத்த எச்சரிக்கையை தீவிரமாக அணுகாததே இத்தகையப் பேரழிவுக்குக் காரணம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

குறிப்பாக, முண்டக்கை பகுதியில் சுற்றுலா தொடர்பான பணிகளுக்காக விதிகளை மீறி வீடுகள், தங்கும் விடுதிகள், சொகுதி விடுதிகள் கட்டும் பணிகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. வாகனப் போக்குவரத்து, குப்பைக் கூளங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் முடிவின்றித் தொடர்ந்தன. கூடவே, காடுகளை அழித்தல், சுரங்கப் பணிகள், செயற்கை ஏரிகள் அமைத்தல் உள்ளிட்டவையும் வயநாட்டின் சீரழிவுக்கு முக்கியக் காரணியாகும்.

குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை அழிவிலிருந்து பாதுகாக்க வெண்டும் என்கிற குரல்களுக்கு இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை. 2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 2013-இல் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மேற்குத் தொடர்ச்சி மலையின் 50 சதவிகித பகுதியைச் சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக அறிவிக்குமாறு பரிந்துரைத்தது. இவையிரண்டையும் மத்திய, மாநில அரசுகள் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை.


படிக்க: வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்


வயநாட்டின் சூரல்மலை, மேப்பாடி பகுதிகள் உட்பட, கேரளத்தின் 26 சதவிகித நிலப் பகுதிகள் நிலச்சரிவின் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக 2019-இல் கேரள அரசின் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலத் தாவரவியல் பூங்கா – ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்தது. இதுதொடர்பான வரைபடத்தையும் கேரள பல்லுயிர் வாரியத்துக்கு அளித்துள்ளது. வயநாடு பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும், 4,000 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அதில் முண்டக்கை பகுதி முக்கியமானது என்றும், 2020-ஆம் ஆண்டில் பேரழிவு மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியது.

இப்படி இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் குரல்கள் விடாமல் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்தக் குரல்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செவிசாய்க்கவில்லை. இதன் விளைவாக, காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பின் மிக மோசமான அத்தியாயமாக வயநாடு துயரம் அமைந்துவிட்டது.

“காட்டுத் தீ, பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிப்பாறை உருகுவது, கடல்மட்டம் உயர்வது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. மேலும், வயநாடு பகுதியில், தொடர்ச்சியாக நிலப்பயன்பாடு மாற்றம், வரைமுறையற்ற கட்டுமானங்கள், காடழிப்பு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் அதிகரிக்கும் மழைப்பொழிவு ஆகியவையே இப்பேரழிவுக்குக் காரணம்” என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மழைப் பொழிவு நடைமுறை பெரிய அளவில் மாறியுள்ளதை பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக “வெள்ளமும் சீற்றமும்” (Flood and Fury) எனும் புத்தகத்தை எழுதிய விஜூ கூறுகிறார். குறிப்பாக, இந்திய வானிலை ஆய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்று 2013 முதல் 2017 இடைப்பட்ட காலத்தில் வயநாட்டில் மழைப்பொழிவின் அடர்த்தி குறைந்து வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

மேலும், “Climate Trends in Wayanad: Voices from the Community” எனும் ஆய்வானது வயநாட்டில் மிதமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை குறைந்தும், அதிகமான அளவில் மழைபொழியும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது. மேலும், இந்த ஆய்வு பெருமழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறுகிறது. குறைவான நேரம் அல்லது குறைவான நாட்களில் அதிகப்படியான மழை பெய்யும் நிகழ்வுகள் இந்தியா முழுக்க அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை மேற்கண்ட ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.


படிக்க: கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு


ஒட்டுமொத்த வயநாடு மற்றும் குறிப்பாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட வைத்திரி தாலுகாவில் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டிடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவை தாங்கும்’ (Immunity towards Landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.

தமிழ்நாடு அரசு இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், ஊட்டி, கொடைக்கானல், கோத்தகிரி, குன்னூர், வால்பாறை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் பரிந்துரை அறிக்கையினை உடனடியாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

000

டெல்லியில் 14 ஆண்டுகளில் இல்லாத கனமழை கொட்டித்தீர்த்து, 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் மேகவெடிப்பினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 50 பேர் மாயமாகியுள்ளனர். தமிழ்நாடு, பஞ்சாப், உத்தராகண்ட், ஹரியானாவில் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட், செப்டம்பரில் மழைப் பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதில், நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீண்டகால சராசரி அளவான 422.8 மி.மீ-இல், கடந்த ஜூன் 1-இல் இருந்து இதுவரை 453.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 2% அதிகமாகும்.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழைப் பொழிவு இயல்பாகவும், சில இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும்.  கடந்த ஜூலை மாதத்தில் மழைப் பொழிவு இயல்பைவிட 9% அதிகமாகும். மத்தியப் பகுதியில் 33% கூடுதலாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

எனவே, இந்தியாவில் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கையைக் கொண்டுவந்த பின், வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, வனப்பகுதியில் வசித்துக்கொண்டிருக்கும் மக்களை விரட்டி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலையை மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், பிஜேபியும் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளன. அத்தோடு மாநில அரசுகளும் இதில் தங்களது கார்ப்பரேட் நலனைப் பிரதிபலிக்கும் விதமாகவே செயல்பட்டு வந்துள்ளன.

கடந்த ஆண்டு, காடுகளை அழித்து பழங்குடி மக்களை விரட்டும் “வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் – 2023”-ஐ பாசிச மோடி அரசு நிறைவேற்றியது. குறிப்பாக, வனம், பழங்குடிகள் மற்றும் கனிம வளங்கள் தொடர்பாக, மோடி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மூன்றுமுறை சட்டத்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

இவையெல்லாம், நமக்கு உணர்த்துவது ஒன்றைத் தான், இயற்கைச் சீற்ற ஆபத்து நிறைந்த பகுதிகளில் சுற்றுலா உள்ளிட்டவற்றால் குறுகிய காலப் பயன்கள் கிடைக்கலாம். ஆனால், வனங்களை பாதுகாக்க தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களை இனியும் வகுத்து மேற்கொள்ளாவிட்டால், இதுபோன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியாது. இதுவே இயற்கை நமக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகும்.


பூங்குன்றன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க