நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

ஆர்.எஸ்.எஸ். தனக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதிகார வர்க்கத்தின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, தான் விரும்பியதை நிறைவேற்றும் நிலைக்கு உயர்ந்திருப்பதை இவை உணர்த்துகின்றன.

ர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்கள் செய்த ஆராவாரமும் அடுத்த வாரமே காணாமல் போய்விட்டது. இப்போது, அவர்கள் ‘புறக்கணிப்பு’ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஆட்சியில் நாடாளுமன்றத்திற்குக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்தை நாட்டின் குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, குடியரசுத் தலைவர் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவுமில்லை. அதனைவிடுத்து பிரதமர் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க இருப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் என்று எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைக் குற்றஞ்சாட்டியுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, பிரிவு 79-இல், ஒன்றிய அரசுக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்; அது, குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டு  அவைகளைக் கொண்டதாக இருக்கும்; அந்த இரண்டு அவைகள் முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என அறியப்படும்” என்று கூறுகிறது.

படிக்க : போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!

குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியும் ஆவார். அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி, முன்னுரை செய்து, உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் சட்டம் அமலுக்கு வருவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது.

ஆனாலும் குடியரசுத் தலைவர் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற செயல், குடியரசுத் தலைவரின் உயர் பதவியை அவமதிப்பதோடு, அரசியலமைப்பின் உறுதி மற்றும் உணர்வை மீறுகிறது; இந்திய தேசம் தனது முதல் பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவரைக் கொண்டாடுகிற அந்த உணர்வைக் குறைத்து மதிப்பிடுகிறது.

நாடாளுமன்றத்தை இடையறாது வெறுமையாக்கிய பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதியவை அல்ல. இந்திய மக்களின் பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; இடைநீக்கம் செய்யப்பட்டனர்; அவர்களின்  குரல் நெரிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைத்துள்ளனர். மூன்று விவசாயச் சட்டங்கள் உட்பட பல சர்ச்சைக்குரிய சட்டங்கள் கிட்டத்தட்ட எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்கள் நடைமுறையில் செயலிழந்துவிட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தொடர்பாக இந்திய மக்களுடனோ அல்லது எம்.பி.க்களுடனோ கலந்தாலோசிக்காமல், நூற்றாண்டிற்கு ஒருமுறை நடக்கும் தொற்றுநோய் பரவல் காலத்தின்போது பெரும் செலவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டடத்தின்பால் எந்த மதிப்பையும் நாங்கள் காணவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம்.

இந்த எதேச்சதிகாரப் பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக – உறுதியான முறையிலும், உணர்வுப்பூர்வமான முறையிலும், வலுவான முறையிலும் – தொடர்ந்து போராடுவோம்; மேலும் இச்செய்தியை நேரடியாக இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்வோம்” என்று எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஆகையால், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புப் போராட்டத்தை இவ்வாறு சொல்லலாம். இது ‘புறக்கணிப்பு’க்கு எதிரான ‘புறக்கணிப்பு’!

முதல் புறக்கணிப்பு, பாசிசத்தின் கை மேலோங்கியிருப்பதை உணர்த்துகிறது. இரண்டாவது புறக்கணிப்பு, பாசிசத்தை எளிதாக (தேர்தலின் மூலம் மட்டுமே) வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

எதிர்க்கட்சிக்களுக்கு எதிரான மொன்னை வாதங்கள்

நாட்டின் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் திறக்கப்படும் சூழலில், இதற்கு குடியரசுத் தலைவரை வைத்து திறக்காததும், அவரை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் வாதமாகும். எதிர்க்கட்சிகளின் வாதத்தில் உள்ள நியாயத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

எனினும், நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடத்தைத் திறந்து வைப்பது வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்ச்சி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது தவறு என்று பா.ஜ.க.வினர் எதிர்க்கட்சிகளைக் கண்டித்துள்ளனர். நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படும் சிலரும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பா.ஜ.க. முன்வைத்திருக்கும் வாதத்தையே வழிமொழிந்தனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு புதிய கட்டடத்தை அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதிதான் திறந்து வைத்தார். அப்போது குடியரசுத் தலைவராக, பிரதீபா பாட்டில் என்ற பெண் இருந்தார் எனினும் அவரை அழைக்கவில்லை. அதைப்போலவே, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை அன்றைக்கு ராஜீவ்காந்திதான் திறந்துவைத்தார். ஆகையால், நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்தை ஒரு டீ விற்றவர் திறந்துவைப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விசயம் என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

பாசிஸ்டுகளுக்கு எப்போதும் இரட்டை நாக்கு, இரட்டை செயல்பாடு.

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறக்கப்படும் நிகழ்ச்சியை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுபோல சித்தரிக்கின்றனர். படாடோபமாக பிரச்சாரங்களையும் ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் உள்ள நிகழ்வுக்கு ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்டவுடனே, எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் செய்த, அற்ப நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். இவ்வாறு பா.ஜ.க.வின் செயல்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்தி, பா.ஜ.க.வினர் பேசுவதெல்லாம், எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்துகின்ற கருத்துகளாகும்.

“குடியரசுத்தலைவர் புறக்கணிப்பு” மனுவாதத்தின் ஒருபகுதி மட்டுமே

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் திறக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய நிகழ்ச்சியான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவின்போதும் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அன்றைய குடியரசுத் தலைவர் தலித், இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்பதுதான் முக்கியமான விசயமாகும்.

குறிப்பாக, தற்போதைய புதிய கட்டடத்திற்கான திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மரபுப்படி பார்த்தால் மக்களவைத் துணைத்தலைவரின் பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும். மக்களவைத் துணைத்தலைவரின் பெயரைப் போட்டால் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரையும் இணைக்க வேண்டியதாகிவிடும் என்பதற்காக, குடியரசுத் தலைவரின் பெயர் இடம்பெறக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இக்கட்டுரை எழுதப்படும் வரை இதுதான் நிலைமை. ஒருவேளை, எதிர்க்கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக, குடியரசுத் தலைவர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படலாம்.

படிக்க : கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!

எனினும், நாட்டில் நடக்கும் முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளிலும் மோடியின் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும்; மோடியின் பெயர் மட்டும்தான் வரலாற்றில் இடம்பெற வேண்டும், நாளைய வரலாறு மோடியின் புகழ்பாட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்பதால், மனுதர்மப்படி இந்தக் கட்டடத்தை அவர் திறந்து வைக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கருதுகிறது என்றும் ஜனநாயக சக்திகள் தெரிவிக்கும் கருத்துகள் சரியானவையே.

மேற்படி நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் என்பது ஒரு அடையாளமாகும். இந்த கட்டடத்தில் 888 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்து சில ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போவதையும் மனதில் கொண்டு இக்கட்டடம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகை வளர்ச்சி குறைவான தென்னிந்தியாவிற்கு மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வடஇந்தியாவுடன் ஒப்பிட தொகுதிகளின் விகிதாச்சாரம் குறையும். பா.ஜ.க. ஆதரவு பசு வளைய மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவை மட்டுமின்றி, தேசிய சின்னமாகிய நான்கு சிங்கங்கள் சீற்றத்துடன் இருப்பதை வடிவமைத்து அதனை நாடாளுமன்றத்திற்கு மேல் வைத்துள்ளனர். மேலும், வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலைப் போராட்டத்தைக்காட்டிக் கொடுத்த சர்வாக்கர் பிறந்த நாளான மே 28-ஆம் தேதி இப்புதிய கட்டடத்தைத் திறக்கின்றனர்.

வெள்ளையர்களிடமிருந்து அதிகார மாற்றம் இந்தியர்களுக்கு மாற்றியதைக் குறிக்கும் வகையில் அன்று வெள்ளையர்களால் வழங்கப்பட்ட மன்னராட்சியின் சின்னமாகிய “செங்கோலை” அன்றைய பிரதமர் நேரு அருங்காட்சியகத்தில் வைத்தார் என்று ஒரு கதையைச் சொல்லி, மனுதர்மத்தின் படி ஆட்சி நடப்பதைக் குறிக்கும் வகையிலான, “மனுதர்மக் கோலை” நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு அருகில் கொண்டுவந்து வைக்கின்றனர்.

இவையெல்லாம், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி மன்னராட்சி முறையைக் கொண்டுவருவதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துராஷ்டிரத்திற்கான புதிய அரசியல் சாசனத்தை எழுதி வைத்துள்ளது. அதனை இரகசியமாக வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த கட்டடமும் திறப்புவிழாவும் அரங்கேற்றப்படுகிறது. தற்போது நடந்தேறும் நிகழ்வுகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

இத்துடன், 2024-இல் இராமர் கோவில் திறக்கப்பட இருக்கிறது; அடுத்த ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முறையில் நடத்த இருப்பதாக மோடி – அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருக்கின்றன. இவையன்றி, ஏற்கெனவே நிலவிவரும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன. இனி, அவற்றை அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக சுருக்குவது மட்டுமே எஞ்சி நிற்கிறது.

ஆகையால், பிரச்சினையின் ஒரு சிறுமுனைதான் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் திறக்கப்படும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வாகும். உண்மையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் என்று இவர்கள் சொல்வது, இந்துராஷ்டிர அடிப்படையிலான புதிய ‘நாடாளுமன்றத்திற்கான’ கட்டடம்; மன்னராட்சியின் அரண்மனை!

எழுத்துரிமை, பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, வாழ்விட உரிமை, மொழி உரிமை, வழிபாட்டு உரிமை என முதலாளித்துவ ஜனநாயகம் ஏற்கின்ற குறைந்தபட்ச உரிமைகள், அதிகாரங்கள் ஏட்டளவிலும் இல்லாத, மன்னராட்சியை ஒத்த, பார்ப்பன சாதிய அடிப்படையிலான, மனுதர்மத்தின் அடிப்படையிலான, மாநிலங்கள் அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக மாறியிருக்க இந்துராஷ்டிர முடியாட்சியை அறிவிப்பதன் தொடக்கம்தான் இந்த கட்டடத் திறப்பு விழாவாகும்.

இறந்துபோன ‘ஜனநாயகத்தை’ எப்போது புறக்கணிப்பது?

இப்படி ஆர்.எஸ்.எஸ்.யின் திட்டத்தின் கீழ் இயங்கும் மோடி – அமித்ஷா கும்பல், இப்புதிய கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வே பாசிசத்தை அரங்கேற்ற இக்கும்பல் மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். அந்த நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஆச்சரியத்திற்குரியதல்ல.

குடியரசுத் தலைவரை அழைத்திருந்தால் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டமே பிரச்சினையை சுருக்குவதாகும்; இன்னொரு வகையில், இந்துராஷ்டிர அடிப்படையிலான இந்த கட்டடத்தை ஏற்கவைக்கும் வகையிலானதாகும்.

மேலும், எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து, மோடி – அமித்ஷா கும்பலுக்கு ‘எதிர்ப்பில்லாதவர்களை’ மட்டுமே கொண்டு இந்த கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தின் ஒரு அங்கம்தான் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்திருப்பதாகும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால், “காங்கிரசு இல்லாத இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ்.யின் கொள்கை அரங்கேறுவதைக் குறிக்கும், இந்தியாவை ஆளும் கட்டடத்தின் திறப்புவிழா என்ற வகையிலும் எதிர்க்கட்சிகள் வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், தாங்கள் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் திறப்பு விழாவைப் புறக்கணித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதினால், அது தவறு. அவர்கள், பா.ஜ.க.வால் திட்டமிட்டு ‘வெளியேற்றப்பட்டுள்ளனர்’!

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதுகின்ற எதிர்க்கட்சிகளுக்கு, மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாடுகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம் அரங்கேறி வருவதை உணர்ந்தாலும், மோடி – அமித்ஷா கும்பலிடமிருந்து இந்த அரசியல் சாசனத்தைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

2014-இல் மோடி – அமித்ஷா கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இந்த நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்திற்கு குழிதோண்டும் பணிகளைத் தீவிரப்படுத்தி, இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு கட்டுமான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. சென்ற சில மாதங்களில் மட்டும், மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ப்பு, ராகுல் பதவி பறிப்பு; டெல்லி குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்தது; காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவது போன்றவை இந்த ஜனநாயகத்தைத் தூக்கியெறிந்துவிட்டதை நமக்கு உணர்த்துபவையாகும்.

ஆர்.எஸ்.எஸ். தனக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதிகார வர்க்கத்தின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, தான் விரும்பியதை நிறைவேற்றும் நிலைக்கு உயர்ந்திருப்பதை இவை உணர்த்துகின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் எதிர்க்கட்சிகளது விரும்பம் என்றாலும், இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்காக வளமாக இருந்த, என்றோ இறந்துபோன இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை அகற்றும் வேலையைத்தான் மோடி – அமித்ஷா கும்பல் செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. மாண்டவை மீளப்போவதில்லை! நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் பெருமைகளை இனியும் பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

படிக்க : டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !

மோடி – அமித்ஷா கும்பல் தலைமையில் ஒரு பாசிச அரசு அரங்கேறுவதைத் தடுக்க வேண்டுமெனில், வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதைக் கைவிட்டு, பாசிசம் முகிழ்ந்தெழாத வகையில், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை கட்டியமைக்கும் பணியில் இறங்க வேண்டியதுதான் ஒரே தீர்வு.

இன்று, புதிய கட்டடத் திறப்புவிழாவில் தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்தை அதே திசையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், மோடி – அமித்ஷா வழியில் கார்ப்பரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எதிர்க்கட்சிகளிடம் இதனை எதிர்ப்பார்ப்பது நகைப்புக்குரியதே.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகளிடம் கையளித்துவிட்டு வேடிக்கைப் பார்க்காமல், உழைக்கும் மக்களாகிய நாம் வீதியில் இறங்க வேண்டும்; பாசிசத்திற்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியைக் கட்டமைக்க வேண்டும்.

புதிய ஜனநாயகம்,
2023 ஜூன் இதழுக்குரிய தலையங்கம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க