முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்டம்மி பீசாகும் நாடாளுமன்றம் - ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !

டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !

-

 நாடாளுமன்றத்தின் மேலாண்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது – பி ராஜீவ்

நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தின் முயற்சிகளும், தேர்தல்களை முடிவு செய்வதில் பண பலத்தின் அதிகரித்து வரும் தாக்கமும் மக்களின் நியாயமான விருப்பங்களை அரித்து விட்டிருக்கின்றன.

நாடாளுமன்றம்
“ஒளிமங்கும் நாடாளுமன்றம்”

நாடாளுமன்றம்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன். அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் நாட்டு மக்களின் இறையாண்மை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அந்த மேலாண்மையை செலுத்துகிறார்கள். சமீப காலங்களில் நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பது பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வெளியாகிறது. அப்படி நடக்கும் போது தவிர்க்க முடியாததுபடி அது செய்தியாகிறது.

15-வது நாடாளுமன்றத்தை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் குறைவாக செயல்பட்ட ஒன்றாக கூறலாம். மக்களவை செயலகம் தயாரித்த புள்ளிவிபரங்களின் படி, 15-வது நாடாளுமன்றத்தின் 12-வது அமர்வு வரை 1,157 மணி நேரம் மட்டுமே கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 14-வது நாடாளுமன்றம் கூடிய 1,736 மணி 55 நிமிடங்களை விட இது மிக மிகக் குறைவானதாகும். முதல் நாடாளுமன்றம் தனது 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் கூட்டம் நடத்தியிருந்தது. மாநிலங்கள் அவை என்று அழைக்கப்படும் மேலவையிலும் இதே கதைதான். வரலாற்றில் முதல் முறையாக நிதி நிலை அறிக்கையை விவாதிக்காமலேயே மேலவை ஏற்றுக் கொண்டது.

அடையாள அட்டை மசோதா கிடப்பில் போடப்பட்டது

ஆனால், இது மட்டுமே ஜனநாயகத்தின் செயல்பாட்டை அரித்து விடவில்லை. நாட்டின் மிக உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகார அமைப்புகள் பெரும்பான்மை கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. இதற்கான மிகப் பொருத்தமான உதாரணம், ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் பெருமளவு பீற்றிக் கொள்ளப்படும் ஆதார்தான்.

அதிகார வர்க்கம்
நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தின் முயற்சிகள் (படம் : நன்றி தி ஹிந்து)

அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை இருந்தாக வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆதார் எண் இல்லாமல் ஒரு மாணவர் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த நலத் திட்ட உதவியையும் பெற முடியாது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் ஆதார் எண்களை அடிப்படையாகக் கொண்டது. வங்கிக் கணக்குகள் அதனுடன் இணைக்கப்பட உள்ளன. ஆனால், ஆதாருக்கான சட்ட ஆதாரம் என்ன?

ஆதார் செயல்முறைப்படுத்தப்படுவதற்கான சட்டமாக அடையாள எண் மசோதா முன் வைக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழு, மசோதாவின் பெரும்பான்மை பகுதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது அறிக்கையை கொடுத்துள்ளது. அரசாங்கம் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதையே மறந்து விட்டது. ஆனால், ஆதார் இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிதர்சனமாக ஏற்கனவே ஆகி விட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த ரகசியமான அணுகுமுறை மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிக்கும் முறையை அறிமுகப்படுத்திய போதும் தெரிய வந்தது. நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கோடிக் கணக்கான ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியத்துக்கான பங்களிப்பை திரட்டி வருகின்றன. ஆனால், அது தொடர்பான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தனை ஆண்டுகளும் பல நூறு கோடி ரூபாய் பணத்தை திரட்டுவதற்கான சட்ட அடிப்படை என்ன? முக்கிய கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தை அரசு புறக்கணிப்பதற்கான ஒரு சில உதாரணங்கள் மட்டுமே இவை.

ஜனநாயக அமைப்பின் வெவ்வேறு உறுப்புகளின் அதிகாரங்களை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்து, பிரித்துள்ளது. நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அதுதான் நாட்டின் சட்டமாக ஆகி விடுகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களும் அதை கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது. ஆனால், இப்போது இந்த நிபந்தனைக்குட்பட்ட இறையாண்மை மீறப்படுவதே நடைமுறையாகி விட்டிருக்கிறது.

ஒரு மனதான முடிவு மாற்றி அமைக்கப்பட்டது

2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசும் போது அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன் தேதியிட்ட வரிவிதிப்பை அறிமுகம் செய்தார். இந்த வரிவிதிப்புடன் கூடிய நிதி மசோதாவை இரண்டு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனதும் நிலைமை திடீரென மாறியது. புதிய வரி சீர்திருத்தத்தை மறுஆய்வு செய்ய அவர் ஒரு நபர் குழுவை நியமித்தார். வரி நிபுணர் பார்த்தசாரதி ஷோமே தனது அறிக்கையை சமர்ப்பித்த ஒரு வாரத்துக்குள் முன் தேதியிட்ட வரிவிதிப்பை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுவதாக அரசாங்கம் முடிவு செய்தது. நாடாளுமன்றத்தின் ஒரு மனதான முடிவை ஒரு நிபுணர் மாற்றி விட முடிகிறது என்பதுதான் நிலைமை.

அதிகாரங்களை கைப்பற்றுதல்

நாடாளுமன்ற குழுக்கள் நாடாளுமன்றத்தின் சிறிய வடிவங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக, இந்த குழுக்களில் பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறுகின்றனர். வளர்ந்த ஜனநாயங்களில் முழு நாடாளுமன்றம் மட்டுமே நாடாளுமன்ற குழுக்களின் முடிவுகளை மாற்ற முடியும். ஆனால், இந்தியாவில் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ அதிகார வர்க்கத்துக்கு உரிமை உள்ளது. மசோதாவில் ஆரம்பத்தில் இல்லாத ஒரு பிரிவை அரசாங்கம் சேர்த்தால் கூட, அதை மீண்டும் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

ஆனால், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இந்த அரசியலமைப்பு மரபுக்கு மாறாக, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரி விதிகளின் மீதான தனது அறிக்கையை சமர்ப்பித்ததும், நிதி அமைச்சகம் உடனடியாக இந்த அறிக்கையை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியவுடன் அமைச்சகம் சில விளக்கங்களை கொடுத்தாலும் இதை சரி என்றோ நியாயம் என்றோ கருத முடியுமா? நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றி மக்களின் குரலை ஒடுக்குவதற்கான வழியாக அது இல்லையா?

இவை அனைத்துமே நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள்தான். மற்ற கொள்கை விவகாரங்களில் இது மேலும் தெளிவாகிறது.

1990-களுக்கு முன்பு இந்தியாவின் சாதாரண மனிதர்கள் தொலைக்காட்சி அல்லது வானொலி பெட்டியின் முன்பு வரி வீதங்கள், பல்வேறு பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், ரயில் கட்டணம் போன்றவை குறித்த நிதிநிலை அறிக்கை முன்வைப்புகளை கேட்பதற்கு ஆர்வமாக காத்திருப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் யாரும் வரவு செலவு அறிக்கையைப் பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. சமீப காலத்தில் நாடாளுமன்றம் மட்டுமின்றி, அதிகார வர்க்கம் கூட பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிப்பதில் எந்த பங்கும் வகிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களின் கையில் அரசு ஒப்படைத்து விட்டிருக்கிறது. சென்ற ரயில்வே வரவு செலவுத் திட்டத்தின்படி ரயில் கட்டணங்கள் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றினால் தீர்மானிக்கப்பட உள்ளன.

இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி தொடர்பான அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற அரசு தயாராகி வருகிறது. வரைவு மசோதாவின்படி வரி வீதங்களை தீர்மானிப்பதில் நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மத்திய அரசுக்கும், மாநிர அரசுக்கும் வரி வீதங்களை தீர்மானிப்பதற்கான அதிகாரங்களுடன் ஜிஎஸ்டி குழு என்று அமைக்கப்படும். நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களுக்கும் இந்த விஷயத்தில் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் நிதிநிலை அறிக்கை ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாக மாறி விடுமா? மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து அவர்களது அரசியல் சட்டபூர்வமான பொறுப்புகள் கொள்ளையடிக்கப்பட்டு விடுமா?

சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமிருந்து தீவிர எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு அரசாங்கம், ஜிஎஸ்டி குழுவுக்கு பரிந்துரை வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்று ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஆனால், எதிர்கால நிதி அமைச்சர்களின் கைகளை இந்த பரிந்துரைகள் கட்டிப் போட்டு விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மூலம் நாடாளுமன்றத்தின் நிதி தொடர்பான அதிகாரங்கள் நீர்த்துப் போகச் செய்யப்படும்.

இந்தியாவின் நாடாளுமன்றம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மையை பெரிதும் இழந்திருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு தீவிரமான அபாயம். தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி 15-வது நாடாளுமன்றத்தின் 306 உறுப்பினர்கள் வரை கோடீஸ்வரர்கள். 14-வது நாடாளுமன்றத்தை விட இது 100%-க்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ 5.8 கோடி வரை உள்ளது. 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் தினசரி நுகர்வு ரூ 20-க்கும் குறைவாக உள்ள சமூகத்தின் பிரதிநிதிகள் அவர்கள் என்பது மோசடியாக இல்லையா? ரூ 50 லட்சத்துக்கும் ரூ 5 கோடிக்கும் இடையே சொத்து மதிப்பு உடைய வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகள் 18.5 சதவீதம். ரூ 10 லட்சத்துக்கும் குறைவான சொத்து உடையவர்களின் வாய்ப்பு 2.6 சதவீதம் மட்டுமே. தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் பணபலம்தான் தேர்தல் அமைப்பில் முக்கிய கூறாக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் ஓரளவுக்கு முற்போக்கு தன்மைகள் இருக்கின்றன. ஆனால், அரசை நடத்தும் அதே வர்க்கங்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன. நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ தன்மையையும், அதன் சட்டமியற்றும் மேலாண்மையையும் பாதுகாப்பது நமது கடமையாகும். நாடாளுமன்றம் என்ற வாகனத்தில்தான் மக்களின் விருப்பங்களும் தேவைகளும் நிறைவேற்றப்பட முடியும். சட்டப்படியான ஆட்சியையும், வினியோக நியாயத்தையும் அமைப்பதற்கான கருவி அதுதான். அதன் அதிகாரங்களையும் கடமைகளையும் மறுப்பதும், விலக்குவதும், மக்களின் நியாயமான விருப்பங்களை இல்லாமல் செய்வதில்தான் கொண்டு போய் விடும்.

– பி ராஜீவ் (நாடாளுமன்ற உறுப்பினர்)

பி ராஜீவ்
பி ராஜீவ், எம்பி.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி ராஜீவ் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்திலும் சட்டத் துறையிலும் பட்டம் பெற்ற அவர் கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணி புரிந்தவர். SFI ஒருங்கிணைப்பாளர், DYFI மாவட்டச் செயலாளர், CITU மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்த அவர் இப்போது கேரள சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார்.

நன்றி : Parliamentary supremacy under attack
பி ராஜீவ்

தமிழாக்கம் : அப்துல்.
___________________

பின்னுரை : நாடாளுமன்றம் எந்த வகை அதிகாரமும் இல்லாத ஒரு அரட்டை மடம், பன்றித் தொழுவம் என்று மார்க்சிய லெனினிய கட்சிகள் சொல்லும் போதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தின் மேன்மைக்காக பொங்கி எழுவார்கள். நாடாளுமன்றத்திலேயே அவ்வப்போது நடக்கும் கூத்துக்களின் போதும் அவர்கள் “எப்பேற்பட்ட நாடாளுமன்றம் நம்முடையது” என்று ஒழுக்கவானாய் எழுந்து கூச்சலிடுவார்கள். மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட “இந்த மன்றம் பன்றித் தொழுவம்தானே இதிலென்ன அதிசயம்” என்று ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் மறுப்பார்கள்.

தற்போது அவர்களே இந்த அரட்டை மடத்திற்கு தெரியாமல் சட்டம் அமலுக்கு வருவது குறித்து புலம்புகிறார்கள். முக்கியமான மசோதாக்கள், சட்டங்கள், முடிவுகள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமல் அமலுக்கு வருகின்றன என்பதுதான் அவர்களது கவலை. உண்மையில் இத்தகைய கொள்கை முடிவுகளுக்கு பஜனை மடமாகத்தான் நாடாளுமன்றம் அதன் தோற்றம் முதல் இருந்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டுமே இருக்கிறதே அன்றி அதை அமலாக்கும் அதிகாரம் இல்லை. அந்த வகையில் இந்தியாவில் நடப்பது ஆளும் வர்க்கங்களின் சார்பான அதிகார வர்க்கத்தின் ஆட்சியே அன்றி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அல்ல. தற்போது அந்த சட்டம் இயற்றும் அதிகாரமும் இல்லை என்பதுதான் போலிகளின் கவலை.

அது மீண்டும் கிடைத்து விட்டால் நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் சுரங்கம் என்று அவர்கள் மீண்டும் பஜனையைத் துவங்குவார்கள். இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த புலம்பலின் முடிவில் ராஜீவ் அதைத்தான் முன்மொழிகிறார். போலி ஜனநாயகத்திற்கு காரணமான ஆளும் வர்க்கங்களின் மேல் மக்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படுத்தும் வேலையினைத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள். தற்போது அந்த மயக்கமும் கலைந்து வருகிறது என்பதால் எப்படி முட்டுக் கொடுப்பது என்பது அவர்களது கவலை. பன்றித் தொழுவத்தில் சந்தனத்தை தேடும் இவர்களை எப்படி திருத்துவது?

– வினவு
_____________________

  1. இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.—-அதெப்படி நாங்க குத்து பட்டாலும் வெளியே சொல்லமாடடோம்ல,கட்சி ரகசியத்த சொல்லமாடடோம்ல……………

  2. அருமையான பதிவு.//மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட “இந்த மன்றம் பன்றித் தொழுவம்தானே இதிலென்ன அதிசயம்” என்று ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் மறுப்பார்கள்.//உன்மை

  3. சமீப காலங்களில், ஆதிக்க சக்திகள் பாராளுமன்றத்தை புறக்கணித்து அரசியல் சட்ட அமைப்புகள் என்றபெயரில் சர்வாதிகார அமைப்புகளை எற்படுத்தி அவற்றின் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றன! பொங்கி எழவேண்டிய அரசியல் கட்சிகள், தங்கள் தலைமைகளும் இதற்கு உடந்தையானதை அறிந்து மதி மயங்கி நிற்கின்றனர் ! மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் எல்லாம் அயொக்கியர்கள், அதனால் யோக்கிய சிகாமணிகளான, சுதந்திர (?) அதிகார வர்க்கமே ஆட்சியை நடத்த முயற்சி நடக்கிறது! அதிகார அமைப்புகளை மேற்பார்வை செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தை புறக்கணித்து, தன்னிச்சையான அதிகார மக்கள் செயல்படுமானால் அது எப்படி மக்களாட்சியாக இருக்கமுடியும்?

    பாகிசஸ்தான், எகிப்து வரிசையில் இந்தியாவும் மறைமுகமாக அமெரிக்க கட்டுப்பாட்டில் வரும்! அரசியல் வாதிகள் அனைவருமே அயொக்கியர்கள் என்று திட்டமிட்ட ஊடக பிரச்சாரம் ஒரு முன்னோட்டமே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க