கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!

பசுப் புனிதம் என்ற காவி அரசியலை பேசி, மக்கள் பணத்தைப் பசுக்களுக்காக செலவு செய்து வீணடிக்கும் யோகி அரசு, தெருநாய்களாலும் கால்நடைகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை.

0

னக்கு உபயோகப்படாத கால்நடைகளை கைவிடும் விவசாயிகள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என உத்தரப்பிரதேச அரசு மே 19 அன்று தெரிவித்துள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தரம்பால் சிங், “கால்நடைகளை கைவிடுவது யார் என்பது அனைவருக்கும் தெரியும். பசு பால் கொடுக்கும்போது அதை வைத்துக்கொள்வது, அது பால் தருவதை நிறுத்தினால் அதை கைவிடுவதென்பதுதான் நடக்கிறது. கால்நடைகளை கைவிடுபவர்கள் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். பசுவின் பால், நெய், தயிர் மற்றும் சாணம் ஆகியவை நன்மை தரக் கூடியது. பசுவின் சாணத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள். தாய் கங்கை மாட்டு மூத்திரத்தில் வசிக்கிறாள். நாங்கள் பசுக்களைப் பற்றி கவலைப்படுகிறோம். அவற்றை பாதுகாக்கிறோம். இதை தவறான விலங்குகள் அல்ல. தவறான விலங்குகளுக்கும் கைவிடப்படும் விலங்குகளுக்கு இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. நாங்கள் அவற்றை ‘நிராஷ்ரித் கோவன்ஷ்’ என்று அழைக்கிறோம்” என்று கூறினார்.

படிக்க : உ.பி: தெருவில் சுற்றித்திரியும் கால் நடைகள் – பாதிக்கப்படும் விவசாயிகள்!

ஆனால், உண்மையில் தெருவில் அலையும் கால்நடைகளால் உ.பி விவசாயிகள் தினம் தினம் அவதிக்குள்ளாகிறார்கள் என்பதே உண்மை.

ஆக்ராவில் உள்ள விவசாயி தலைவர் ஷியாம் சிங், “உ.பி அரசிடம் இரட்டை நிலைபாடு இருப்பதாக குற்றம்சாட்டினார். எதற்கும் உதவாத கால்நடைகளை கைவிடும் விவசாயிகள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

கௌசாலைக்குச் செல்லும் கால்நடைகள் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ்கின்றன. அதன் பிறகு, அவை உணவின்றி இறக்கின்றன. இந்த மோசமான நிர்வாகத்திற்கு அரசு பொறுப்பேற்குமா? கௌசாலை நடத்தும் தலைமை வளர்ச்சி அலுவலர் மற்றும் தொகுதி வளர்ச்சி அலுவலர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? கால்நடைகளை கைவிடும் விவசாயிகள்தான் அந்த கால்நடைகளுக்கு பொறுப்பு என்றால், அதிகாரிகள் கௌசாலைகளில் இறக்கும் கால்நாடைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். சட்டம் இரண்டிற்கும் சமமாகப் பொருந்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் – கால்நடைகள் ஆகியவற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெருவில் அலையும் மாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி கட்டுப்படுத்தப்படவில்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் விவசாயிகள்.

உ.பி அரசு, 8.55 லட்சம் ஆதரவற்ற கால்நடைகளை கொண்ட 6,222 பசுக் காப்பகங்களை நடத்துவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் காப்பகங்களை கட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. கால்நடைகளை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.30 அரசு செலுத்துகிறது.

படிக்க : குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

பால் தருவதை நிறுத்தி விட்ட, எதற்கும் பயன்படாத கால்நடைகளை இறைச்சிக்கு விற்பதுதான் விவசாயிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும்.. ஆனால், கால்நடைகளை இறைச்சிக்கு விற்க யோகி அரசு தடை விதித்தால், அவற்றை கைவிடுவதை தவிர விவசாயிகள் வேறென்ன செய்வார்கள்?

பசுப் புனிதம் என்ற காவி அரசியலை பேசி, மக்கள் பணத்தைப் பசுக்களுக்காக செலவு செய்து வீணடிக்கும் யோகி அரசு, தெருநாய்களாலும் கால்நடைகளாலும் பாதிக்கப்படும் விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை, அக்கறை காட்டப்போவதுமில்லை. கௌசாலைகளில் இருக்கும் பசுக்களே சரியான பராமரிப்பு இல்லாமல் குறிப்பிட்ட மாதங்களுக்குள் உடல்மெலிந்து இறந்து வரும் நிலையில், எதற்கும் உதவாத கால்நடைகளை இறைச்சிக்கும் விற்க கூடாது – கைவிடக் கூடாது என்றால் விவசாயிகள் காவி பாசிச அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறென்னதான் செய்வது?

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க