ந்துத்துவ வெறியாட்டத்தை செயல்படுத்தி வெற்றிகண்ட குஜராத் மாநிலம், இம்முறை நேரடியாக மக்களின் உணவில் கை வைத்துள்ளது. குழந்தைகளின் மனதில் எதிர்மறையான கருத்துக்களை விதைப்பதாகக் கூறி, சாலையோரங்களில் உள்ள இறைச்சி உணவு கடைகளுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
ஏற்கெனவே ராஜ்கோட், வதோதரா, பாவ்நவர் நிர்வாகங்கள் தள்ளுவண்டிகளில் இறைச்சி உணவுகளை விற்கத் தடை விதித்திருந்த நிலையில், நான்காவதாக அகமதாபாத் நிர்வாகம் இறைச்சி உணவுகளுக்கு தடைவிதித்துள்ளது.  இதற்கென்று நியமிக்கப்பட்ட நிலைக்குழுவின் எந்தவித அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி, ‘ஆக்கிரமித்ததாக’க் கூறி தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவே இறுதியான முடிவெடுக்கும் அமைப்பாக உள்ளது. அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை முழுவதும் காவிமயமான குஜராத்தில் இந்த அமைப்புகள் ஜனநாயகத்தை நிலைநாட்டும் அமைப்புகளாக இல்லை.
படிக்க :
இறைச்சிக் கடைகளை மூடு : கையில் வாளேந்தி இந்துத்துவக் குண்டர்கள் மிரட்டல் !
தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!
அகமதாபாத் மாநகராட்சியின் வருவாய் ஆணையத்தின் தலைவர் ஜெய்னிக் வக்கீல், குஜராத்தின் ‘அடையாளம்’ மற்றும் ‘பாரம்பரியத்தை’ மேற்கோள் காட்டி இறைச்சி தள்ளுவண்டி கடைகளை அகற்றுவது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
உடனடியாக இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், நவம்பர் 16 முதல் இறைச்சி உணவுகடைகள், முட்டை விற்கும் கடைகளும் கூட அகற்றப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி, மத வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ள 100 மீட்டர் எல்லைக்குள்ளும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்லும்போது இறைச்சி கடைகளிலிருந்து ‘கெட்ட நாற்றம்’ வருவதாக ‘மக்கள்’ புகார் அளித்ததை அடுத்து இந்த முடிவை எடுத்திருப்பதாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
“இறைச்சி உணவு இளம் குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்கிறார் நகராட்சி நிர்வாகி ஒருவர்.
இறைச்சி உணவு ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கானது, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கானது, கெட்ட குணங்களுடன் தொடர்புடையது என பல பத்தாண்டுகளாக காவி கும்பல் பரப்புரை செய்துவருகிறது. இந்த காவிக் கும்பலின் தொடர் பரப்புரையால், குஜராத் பெரும்பான்மை சமூகம் இறைச்சி உணவை தீண்டாமையோடு அணுகுவது இயல்பாகக் கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையினரின் இந்த உணவு தீண்டாமையை, ஏதோ சில நகராட்சிகள் எடுத்த தனிப்பட்ட முடிவாக குஜராத் மாநில முதலமைச்சர் வெளி உலகத்தின் முன்பே கைகழுவுகிறார். இந்தத் தடை உத்தரவுகள் சர்ச்சையான பின், “இந்த வண்டிகளில் விற்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், மாநகராட்சி அவற்றை அகற்றலாம்… ஆனால் சைவம்-அசைவம் பற்றிய பிரச்சினைகளை எழுப்ப எதுவுமில்லை… யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்கிறார்.
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களுக்கு எதிராக பல வகைகளிலும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்; ஆட்சியதிகாரம் கையில் கிடைத்திருப்பதால் நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை ஒழித்துக்கட்ட இவர்கள் கிளம்பியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம், கர்நாடக மாநிலத்தில் கோழி இறைச்சி கடையை அடித்து நொறுக்குவோம் என இந்துத்துவ கும்பல் மிரட்டுவதாக, ஒரு முசுலீம் குடும்பம் குற்றம்சாட்டியது. அந்தப் புகாரைக்கூட பாஜக ஆளும் கர்நாடக அரசின் போலீசு ஏற்றுக்கொள்ளவில்லை என அந்தக் குடும்பம் மனம் வெதும்பி கூறியது.
அக்டோபரில், ஒரு இந்துத்துவா அமைப்பினரால் தங்கள் கோழிக் கடை சேதப்படுத்தப்பட்டதோடு, கோவில் திறப்புக்காக அதை மூடும்படி மிரட்டியதாகவும் ஒரு முசுலீம் குடும்பம் கூறியதை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய போலீசு மறுத்ததாகக் கூறப்படுகிறது.
நவராத்திரி கொண்டாட்டங்கள் என்ற பெயரில் காவி கும்பல் வன்முறையை களமிறக்கிய நேரத்தில் பல வடமாநில நகரங்களில் இறைச்சிக் கடைகளும் சேர்த்தே சூறையாடப்பட்டன.  சமூக ஊடகங்களில் காவிக் கும்பல் வெளிப்படையாக இந்த பிரச்சாரங்களுக்கு அறைகூவல் விடுத்தன.
படிக்க :
சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
‘பசுப் புனிதம்’ எனக்கூறி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் உணவு ஆதாரமான மாட்டிறைச்சியை முன்வைத்து கடந்த ஆண்டுகளில் மிகக் கொடூரமான கும்பல் வன்முறையை ஏவியது இந்துத்துவக் கும்பல். எந்தவித குற்றமும் இழைக்காத பலர், காவி கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார்கள். இதன் அடுத்தக் கட்டமாக பெரும்பான்மை இந்திய மக்களின் உணவு பழக்கத்திலும் எளிய மக்களின் ஊட்டச்சத்து ஆதாரத்திலும் கை வைத்துள்ளது காவி கும்பல்.
பெரும்பான்மை மக்கள் இறைச்சி உண்ணும் தீபாவளியின் போது மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி விற்க தடை என்ற தமிழக அரசின் அறிவிப்பையும் (எதிர்ப்புக்குப் பின் திரும்பப் பெறப்பட்டது என்றாலும்) இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். குஜராத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்துத்துவ திட்டத்தை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்திப் பார்க்கிறது காவிக் கும்பல். இத்தகைய உணவுத் தீண்டாமை எனும் பார்ப்பனிய கருத்தாக்கத்தை மக்களிடம் திணிக்க முயற்சிக்கும் காவிக் கும்பலை முறியடித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே, காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

அனிதா
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க