”வட மேற்கு இந்தியாவில் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பானைகளில் இருக்கும் கொழுமிய மீதம் (Lipid residue)” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஹரப்பன் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பட்ட பானை ஓடுகளின் கொழுமிய மீதங்களை ஆய்வு செய்ததில் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் மாட்டுக்கறியையே  உணவாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் உணவுப் பழக்கத்தில் மாமிச உணவுகளின் ஆதிக்கமே இருந்தாகவும், அதிலும் மாட்டுக்கறியையே அதிகமாக உட்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு கடந்த புதன்கிழமை (09-12.2020) “அகழ்வாய்வு அறிவியலுக்கான பத்திரிகை” என்ற புகழ்பெற்ற இதழில் வெளிவந்திருக்கிறது.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் அக்‌ஷ்யெதா சூரியநாராயண் எனும் ஆய்வு மாணவி தலைமையிலான குழுவினர்  தங்கள்  ஆய்வின் ஒரு பகுதியாக இதனைக் கண்டறிந்துள்ளனர்.

படிக்க :
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

பசுவதை தடுப்புச் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி வரும் சங்க பரிவாரக் கும்பல்கள் தற்போது ஆட்சி செய்துவரும் மாநிலங்களான அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய  பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின், நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள பீங்கான் பாத்திரங்களில் இருந்த கொழுமிய மீதங்களை ஆய்வு செய்ததில் அதில் பெருமளவு பன்றி, எருமைமாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் ஆகியவற்றின் மாமிசமும், பாலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மாணவி அக்‌ஷ்யெதா-வுடன் இணைந்து புனேயிலுள்ள டெக்கான் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தரும், பிரபல அகழ்வாய்வாளருமான பேராசிரியர் வசந்த் சிண்டே, பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திர சிங்  ஆகியோரும் இணைந்து செய்துள்ளனர். கூடுதலாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிரியம் க்யூபாஸ், ஆலிவர் ஈ. க்ரெய்க், கார்ல் பி. ஹெரான், டம்சின் கண்ணல், கேமரான் ஏ. ப்ரெட்ரி ஆகியோரும் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர்.

ஆய்வாளர் அக்‌ஷ்யெதா

சிந்து சமவெளி நாகரிகம் தற்போதைய பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவியிருந்தது. இந்த ஆய்வை மேற்கொள்ள இவர்கள் ஐந்து கிராமங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்; உத்தரப் பிரதேசத்தைச் சேந்த அலாம்கிபூர், அரியானாவில் உள்ள லோஹரி ரகோ, மசுத்பூர், கானாக், ஃபர்வானா ஆகிய 5 கிராமங்களிலும் ராகிகர்ஹி அகழாய்வுப் பகுதியிலும் ஆய்வை  மேற்கொண்டனர்.

இப்பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் 172 பானை ஓடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. பீங்கான் கொழுமிய மீத ஆய்வுமுறை என்பது பழங்கால மக்களின் உணவுப் பழக்கங்களைக் கண்டறிய உதவும் மிகவும் சக்திவாய்ந்த வழிமுறையாகும் என்கிறார் அக்‌ஷெதா. கிடைக்கப்பெறும் பானை ஓடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய கொழுமிய மீதங்களில் இருந்து நடத்தப்படும் இவ்வாராய்ச்சி, அகழ்வாய்வுத்துறையில் முக்கியமானது.

இந்த ஆய்வில், அங்கு பல்வேறு விவசாய நடைமுறைகள் இருந்ததாகவும்  அவை பகுதிக்குப் பகுதி மாறுபட்டதாக இருந்தாகவும், காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை, பல்வேறு தானியங்கள் மற்றும் பிற எண்ணை வித்துக்கள் என பலவற்றையும் மக்கள் உணவாகப் பயன்படுத்தியதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அவர்கள் தொடங்குகையில், சிந்து சமவெளி நாகரிகத்தில் எவ்வகையான பயிர்கள் உணவாக உட்கொள்ளப்பட்டன என்பதுதான் ஆய்வின் நோக்கமாக இருந்தாகத் தெரிவித்திருக்கிறார்.

மாடு , எருமைமாடு உள்ளிட்ட கால்நடைகள் சுமார் 50 -60% வரை பெருமளவில் உணவாக உட்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆடு 10% தான் உட்கொள்ளப் பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் அங்கு கிடைத்த எலும்பு மீதங்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கின்றனர் ஆய்வாளர்கள். அந்த வகையில் மாட்டுக்கறி உணவுதான் அங்கு பிரதான உணவாக இருந்திருக்கிறது. ஆட்டுக்கறியும் கூடுதல் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மான் இனங்கள், முயல்கள், காட்டுப் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் என அனைத்தும் அவர்களது உணவில் பகுதியளவிற்கு இடம்பிடித்திருந்ததையும் இந்த ஆய்வு காட்டுகிறது.

மேலும் ஹரப்பாவில் 90% கால்நடைகள் அதன் 3.5 வயது வரை கொள்ளப்படாமல் பாதுகாக்கப்பட்டதாகவும், பெண்ணின கால்நடைகள் பால் பொருட்கள் உற்பத்திக்கும், ஆணின கால்நடைகள் இழுவைப் பணிக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பேசிய பேராசிரியர் ஷிண்டே, இதற்கு முன்னர் இரண்டு ஆய்வுகள் நடந்திருப்பதாகவும், முதல் ஆய்வில் மஞ்சள், பூண்டு, இஞ்சி, கத்தரிக்காய் ஆகியவை உணவாகக் கொள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குஜராத் பகுதியில் கிடைக்கப்பெற்ற பாத்திரங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது ஆய்வு, ஆட்டுக் கறி  மற்றும் பாலாடை, பன்னீர் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அக்‌ஷ்யெதாவின் இந்த கொழுமிய மீத ஆய்வு மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி உண்ணும் சமூகமாக சிந்து சமவெளிச் சமூகம் இருந்தை தெளிவாகக் காட்டுகிறது என்று கூறியிருக்கிறார் பேராசிரியர் ஷிண்டே.

ஏற்கெனவே சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் வந்து விட்ட சூழலில், தற்போது அங்கு “புனிதமான” மாட்டுக்கறிதான் பிரதான உணவாக இருந்தது என்பதற்கான ஆய்வறிக்கையும் தற்போது வந்த பின்னர், சங்க பரிவாரக் கும்பல் மூதாதையரின் உணவான மாட்டுக்கறியை ஏற்றுக் கொள்ளப் போகிறதா ? அல்லது சிந்து சமவெளி நாகரிகத்தையே பாகிஸ்தான் சதியாக சித்தரிக்கப் போகிறதா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !

கர்ணன்
நன்றி :
Indian Express