பி.ஜே.பி. ஆட்சி செய்கின்ற உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய ஐந்து மாநில அரசுகள் “லவ்ஜிகாத் தடுப்புச் சட்டம்”-ஐ நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளன. முசுலீம் இளைஞர்கள் ‘காதல்’ என்ற பெயரில் திட்டமிட்டு இந்து பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர் என்றும் இதனைத் தடுக்க அந்த திருமணம் செல்லாது என்று அறிவிப்பதோடு அவ்வாறு செய்பவர்களை ஜாமினில் வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இவர்கள் முன்மொழிகிற சட்டம் கூறுகின்றது. உத்தரப் பிரதேசத்தில் அதற்கான சட்டத்தை அமல்படுத்தி முதல் வழக்கையும் பதிவு செய்துள்ளது யோகி அரசு.

இவர்கள் முன்மொழியும் இந்தச் சட்டம் காட்டாய மதமாற்ற திருமணத்திற்கு மட்டுமே எதிரானது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இதன் மூலம் இந்து முசுலீம் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களுக்கிடையிலான பகைமையையும் பரஸ்பர அச்ச உணர்வையும் வளர்த்து அதன் வாயிலாக தமது சித்தாந்தத்தை நிலைநாட்டத் துடிக்கிறது சங்க பரிவாரம். இதன் விளைவை புரிந்துகொள்வதற்கு, இத்தகைய இழிவான சட்டங்களுக்கு வரலாற்று வழிகாட்டியாக அமைந்த  ஹிட்லரின் இனத் தூய்மைச் சட்டங்களைப் பற்றிப் பார்த்தாக வேண்டும்.

யூதர்களுக்கு எதிரான நாஜி சட்டங்கள்

செப்டம்பர் 15, 1935-ல் தெற்கு ஜெர்மானிய நகரமான நியூரெம்பெர்க்கில் ஆண்டுதோறும் வழக்கமாக நடத்தப்படும் நாஜி கட்சியின் பேரணியில் தன்னுடைய இனவெறி சித்தாந்தத்தின் அடிப்படையிலான இரண்டு சட்டங்களை நாஜிக்கள் அறிவித்தனர். ஒன்று, ரீச் குடியுரிமைச் சட்டம். இரண்டாவது, ஜெர்மன் ரத்தம் மற்றும் ஜெர்மன் கெளரவத்தை பாதுகாக்கும் சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் நியூரெம்பெர்க் சட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.

படிக்க :
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !
♦ “லவ் ஜிகாத்” – திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.

ரீச் குடியுரிமை சட்டம் : ஜெர்மன் ரத்தம் மற்றும் ஜெர்மன் தோற்றம் கொண்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை. ஜெர்மானியரல்லாதோர் குடியுரிமை பெற, தன்னுடைய நடத்தையின் மூலம் தான் ஜெர்மானியருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், அதற்கு தான் தகுதியானவன் என்றும் நிரூபிக்க வேண்டும். இதன் பொருள் ஜெர்மானியரல்லாதோர் இரண்டாம்தரக் குடிமக்கள் அல்லது அவர்களின் சேவகர்கள் என்பதே.

ஜெர்மன் ரத்தம் மற்றும் ஜெர்மன் கெளரவத்தை பாதுகாப்பதற்கான சட்டம் : ஜெர்மானியரல்லாதோர் மற்றும் ஜெர்மானியர்களுக்கு இடையிலான திருமணங்கள் மற்றும் திருமணத்தை மீறிய உறவுகளை இந்த சட்டம் தடை செய்தது. இச்சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டது. மேலும், 45 வயதிற்குட்பட்ட எந்த ஜெர்மானிய பெண்ணும் யூத வீடுகளில் பணி செய்வதை இச்சட்டம் தடை செய்தது. ஏனென்றால் 45 வயதிற்குட்பட்ட பெண்களால் குழந்தையை சுமக்க முடியும் என்பதால் யூத ஆண்கள் அவர்களை தீட்டுப்படுத்திவிடுவார்களாம்.

இந்த இனத் தூய்மைச் சட்டம் ஜெர்மன் பெண்கள் மற்றும் ஜெர்மானிய இனம் தீட்டுப்படுவதை தடுத்து “தூய ஜெர்மன் மக்களை” உருவாக்குவதாகக் கூறி ஜெர்மானிய இனவெறியை வளர்ப்பதற்காக் கொண்டுவரப்பட்டது.

இழிவான இனத்தூய்மைச் சட்டங்களின் வெட்கக்கேடான பாரம்பரியம்

இனக்கலப்பை தடுப்பதற்கான கடுமையான சட்டங்களை கொண்ட முதல் நாடு நாஜி ஜெர்மனி அல்ல, அதற்கு முன்னதாகவே அமெரிக்காவின் பெரும்பான்மையான மாகாணங்கள் கலப்பின திருமணங்களை (குறிப்பாக வெள்ளையர்களுக்கும் கறுப்பின அமெரிக்கர்களுக்கும் இடையில்) தடுக்கும் சட்டங்களை கொண்டிருந்தன. சில அமெரிக்க மாகாணங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சட்டங்களை ரத்து செய்திருந்தாலும், 16 மாகாணங்களில் ஜெர்மனியில் நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகும் கூட இத்தகைய சட்டங்கள்  நடைமுறையில் இருந்தது. இறுதியாக, 1967-ல் அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் கலப்பின உறவுகளை தடுப்பது தடைசெய்யப்பட்டு, அவ்வாறு திருமணம் செய்வது அடிப்படை அவர்களின் உரிமை என்று அங்கீகரிக்கப்பட்டது.

இதேபோல் இனவெறி காலத்து தென்னாப்பிரிக்காவிலும், அங்கிருந்த நான்கு இனங்களுக்கு  இடையில் கலப்புத் திருமணத்தை தடுக்கும் ஒரு சட்டம் நடைமுறையில் இருந்தது. இச்சட்டத்தை மீறியவர்களுக்கு  எந்த இனத்தில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்களோ அந்த இனத்திற்கான வரையறை என்ன என்று ஆராய்ந்து அதற்கேற்ப குற்றவியல் தண்டனை வழங்கப்பட்டது.

கறுப்பு அமெரிக்கர்கள், ஹோண்டுராஸ் அல்லது ஹைட்டி இனத்தைச் சேர்ந்த வெள்ளை பெண்களை திருமணம் செய்வது சட்டப்படிக் குற்றம்; இச்சட்டத்தை மீறித் திருமணம் செய்துகொண்ட ஆண்களின் வாதங்களை அமெரிக்க நீதிமன்றங்கள் புறக்கணித்ததாகட்டும் யூதர்கள் வேறு மதத்திற்கே மாறினாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களும் யூதர்களின் வம்சாவளிதான் என்று நாஜிக்கள் வரையறுத்ததாகட்டும் இவையெல்லாம் இச்சட்டங்களின் நோக்கத்தைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன.

இந்தச் சட்டங்களின் நோக்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும், அவர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாட்டையும் சட்டப்பூர்வமாக்கி வளர்ப்பதாகும். ஏனென்றால், சட்டப்படியே இனி அவர்கள் சமமாக கருதப்பட மாட்டார்கள். மேலும், இத்தகைய சட்டங்கள் சமூகத்தின் பொதுவெளியில் சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தையும், துன்புறுத்தல்களையும் கொண்ட ஆபத்தான சூழலை உருவாக்கும்.

இந்தச் சட்டங்களுக்கு இடையிலான மற்றொரு ஒற்றுமை ஆணாதிக்க சிந்தனையாகும். “பெண்களின் வழியாக பெரும்பான்மை இனத்தை தீட்டுபடுத்திவிடுவார்கள்” என்று கூறுவதன் மூலம் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு உணர்வற்ற பொம்மைகளை போல் நடத்தப்படுகிறார்கள்.

பாசிச பா...வின்லவ் ஜிகாத்சட்டம்

தற்போது இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டு பிற நான்கு மாநிலங்களில் கொண்டுவரவிருக்கும் ‘லவ் ஜிகாத்’ தடுப்பு சட்டங்களின் நோக்கம் என்ன?

முதலில் ‘லவ் ஜிகாத்’ என்பது பா.ஜ.க.வாலும் கூட பல ஆண்டுகளாக  நிரூபிக்கப்பட முடியாத நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்படாத கற்பனையான கட்டுக்கதையாகும். இப்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் எந்தவொரு சட்டப்பூர்வமான அடிப்படையும் இல்லை. அதாவது கட்டாயமாக மதமாற்றி திருமணம் செய்துகொள்வது குறித்த வழக்குகளோ பிரச்சனைகளோ ஏதுமில்லை.

வேண்டுமென்றால் இந்த சட்டத்திற்காக காட்டு கூச்சல் போடும் இந்து மதவெறி கூட்டம் 2009-ல் கேரளாவில் நடந்ததைப்போல, விருப்பபூர்வமான மதமாற்றங்களை காட்டாய மதமாற்றம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தும், திட்டமிட்டே போலியான புள்ளிவிவரங்களை காண்பித்தும் தங்களது சட்டத்திற்கான பொய் ஆதாரங்களை உருவாக்குவார்கள். இதில் இந்து மதவெறியர்கள் கைதேர்ந்தவர்களும் கூட.

ஆனால் தற்போது பெயரளவில் இருக்கும் சட்டப்படி, பருவமடைந்த இருவர் சம்மதிக்கும் பட்சத்தில், சுதந்திரம் மற்றும் ஒரு மதத்தை கடைப்பிடிப்பதற்கான உரிமை ஆகியவற்றில் அரசு, நீதிமன்றம், மதவெறி குண்டர்கள் மற்றும் அந்த தம்பதியினரின் குடும்பங்களே கூட தலையிடக்கூடாது. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் இந்து மதவெறி கும்பல்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது என்பது இவர்களின் கடந்தகால மற்றும் தற்போதைய நடைமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

லவ் ஜிகாத் தடைச் சட்டம்இரண்டாவது நியூரெம்பெர்க் சட்டம் :

அமெரிக்கா தென்னமெரிக்கா மற்றும் நாஜிக்களால் கொண்டுவரப்பட்ட இனத்தூய்மைச் சட்டங்களையும் லவ் ஜிகாத் சட்டத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் நோக்கங்கள் குறிப்பிட்ட சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து அவர்களுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் இடையிலான பிளவுகளை கூர்மைப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை எளிமையாக்கி வளர்ப்பதும்தான்.

இந்த நியூரம்பர்க் சட்டங்கள் ஜெர்மனியில் ஏற்படுத்திய விளைவு பற்றி ரிச்சர்ட் டி ஹைட்மேன் எழுதியதாவது : “கலப்பு தம்பதிகள் தங்கள் சமூகத்தில் இருந்தே வரும் கண்டனம் மற்றும் துன்புறுத்தலினால் சோர்வுற்றனர். இத்தம்பதியினர் பொதுவெளியில் ஒன்றாகச் செல்வதை நிறுத்தும் வரை அவர்களை துன்புறுத்துவது போன்ற நிகழ்வுகள் தவறாமல் நடந்தன. ஆண்களும் அவர்களுடைய தோழிகளும் தெருவில் தாக்கப்பட்டதால், தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு நேரடியாகச் செல்லாமல் நகரத்தைச் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மோதல்கள் வன்முறையாக மாறின. மேலும் வேறு இனத்தவருடன் சமூக மற்றும் பாலியல் உறவு வைத்திருப்பது  குற்றமாக அறிவிக்கப்பட்டது. –  இச்சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பே யூத இன வெறுப்பு நடைமுறையில் இருந்தாலும்இந்த சட்டத்தினுடைய போக்கானது, கலப்பு தம்பதிகள் தங்கள் உறவுஒரு சுமையாகவும் ஆபத்தைத் தருவதாகவும் மாறும்போதும் பிரிந்துவிடுவது நல்லதுஎன்று முடிவு செய்ததில் சென்று முடிந்தது.”

மேலே விவரிக்கப்பட்டுள்ள ஜெர்மானிய நிலைமை இந்தியாவில் ஏற்கனவே பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பரவலாக நடந்து கொண்டிருந்தாலும், ‘லவ் ஜிகாத்’ தடுப்பு சட்டம் இதனை மேலும் வலிமையாக்குவது மட்டுமல்லாமல் சட்டப்பூர்வமாக்குகிறது. இதனால் கலப்பு திருமணம் செய்வதை ஏற்கும் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு இச்சட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

இச்சட்டம், முஸ்லீம் ஆண்களால் இந்துப் பெண்கள் வேட்டையாடப்படுவதாக சித்தரிப்பதன் மூலமும், இந்து பெண்களையும் அவர்களின் கெளரவத்தயும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்படுகிறது என்று சொல்வதன் மூலமும் முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வை இந்துக் குடும்பங்களுக்குள்ளும், இந்து மதவெறியர்களின் மீதான அச்சத்தை முஸ்லீம் குடும்பகளுக்குள்ளும் கடத்துகிறது. இதனால் இரு வேறு மதங்களைச் சேர்ந்த வயது வந்தவர்கள் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் இணைந்து வாழ்வதையே அக்குடும்பங்கள் மறுக்கும் நிலை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சட்டங்கள் ஏதும் இல்லாத போதே, யோகி ஆதித்யநாத்தின் “ரோமியோ எதிர்ப்பு படைகள் முதல் பஜ்ரங் தளம் மற்றும் பிற இந்து மதவெறி பாசிச கும்பல்களால் கலப்பு தம்பதிகளின் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுவதை நாம் பார்க்கிறோம். ஸம்பு லால் ரீகர் என்ற இந்து மதவெறியன், லவ் ஜிகாத்துக்கு எதிராக முழக்கமிட்ட முகமது அப்ராஸ் என்பவரைக் கொடூரமாக கொன்றதையும் ரோமியோ எதிர்ப்பு படைகள் சாலைகளில், பொது இடங்களில் ஜோடியாக இருந்தாலே கேள்விகேட்டு அவர்களை தாக்கியதும் சில உதாரணங்கள்.

இத்தகைய கொடூரங்கள் ஒரு சட்டத்தால் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டு ஊக்குவிக்கப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும். இதில் ஒளிந்து கொண்டிருப்பது, இந்துத்துவக் கும்பலின் மதவாத அரசியல் மட்டுமல்ல; பெண்களை இரண்டாம்தர குடிமக்களாகவும், போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கும் சங்கபரிவாரத்தின் பார்ப்பன ஆணாதிக்க சித்தாந்தமும் ஒளிந்துள்ளது.

இவையெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே நடப்பதாக எண்ணிக் கொண்டு அமைதி காத்திருக்க முடியாது. உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலை ஒரு சமூக எதார்த்தமாக மாறுவதுதான் சங்கிகளின் நோக்கம். அத்தகைய ஒரு சமூக எதார்த்தம்தான் பாசிசத்தின் வலுவான அடித்தளம் !

ஜெர்மனி நமக்கு உதாரணமாக நிற்கிறது! வரலாற்றின் பாடங்களில் இருந்து புரிந்து கொள்ளத் தவறினால் அது பெரும்பிழை !!


பூபாலன்

செய்தி ஆதாரம் : The Quint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க