Sunday, April 2, 2023
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்"லவ் ஜிகாத்" - திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.

“லவ் ஜிகாத்” – திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.

-

டந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் ஜாட் சாதிவெறியைத் தூண்டிவிட்டு உத்திரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில்ஏழை முசுலீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட கலவரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான முசுலீம் குடும்பங்கள் அதுவரை தாம் வாழ்ந்துவந்த கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டனர். தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்ட இந்தக் கலவரம் உ.பி.யின் மேற்கு மாவட்டங்களில் ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் இடையே அதுவரை நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தை உடைத்துப் போட்டு, ஆழமான பிளவை ஏற்படுத்தியது.

முசுலீம் இளைஞனான ஷாநவாஸ், ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சினின் சகோதரியைக் காதலிக்கிறான் என்று, பாலியல் தொந்திரவு செய்கிறான் என்று ஷாநவாஸையும் சச்சினின் சகோதரியையும் தொடர்புபடுத்தி பரப்பபட்ட வதந்திகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஜாட் சாதிவெறி யைத் தூண்டிவிட்டு இந்தக் கலவரத்தை நடத்தி முடித்தது, ஆர்.எஸ்.எஸ். ஷாநவாஸ் ஜாட் சாதிவெறியர்களால் கொல்லப்பட, பதிலுக்கு ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சின், கவுரவ் என்ற இரு இளைஞர்கள் முசுலீம் கும்பலால் கொல்லப்பட்டனர். தனிப்பட்ட கொலை, அடிதடியாக முடிந்துபோயிருக்க வேண்டிய பிரச்சினையொன்றை, முசுலீம் இளைஞர்களால் ஜாட் சாதி பெண்களுக்கு ஆபத்து என ஆர்.எஸ்.எஸ். ஊதிப் பெருக்கி, இதனை இன்னொரு முசுலீம் பயங்கரவாத நடவடிக்கையாக, “லவ் ஜிகாத்” என முத்திரை குத்தியது.

இந்தக் கலவரமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் நடந்த முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரமும்தான் உ.பி.யில் பா.ஜ.க. 71 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அது மட்டுமின்றி, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், ஆதிக்க சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக மடை மாற்றுவதற்கும் ராமனை விட, முசுலீம்கள் குண்டு வைக்கிறார்கள் எனப் பீதியூட்டுவதை விட, லவ் ஜிகாத் – முசுலீம் இளைஞர்களால் இந்துப் பெண்களுக்கு ஆபத்து, சாதி கௌரவத்திற்கு ஆபத்து என்ற பிரச் சாரம் – அதிகப்பயன் தருவதையும் கண்டுகொண்டது ஆர்.எஸ்.எஸ்.

ஷாலு கலீம் தம்பதியினர்
லவ் ஜிஹாத் – என ஆர்.எஸ்.எஸ். பரப்பிவரும் பொய்யையும் அவதூறையும் அம்பலப்படுத்தித் திருமணம் செய்துகொண்ட ஷாலு – கலீம் தம்பதியினர்.

இப்படியான சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல்களும் முடிந்து உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில்,உ.பி.யின் மீரட் பகுதியிலுள்ள சாரவா கிராமத்தில் வசித்துவரும் ஜாட் சாதியைச் சேர்ந்த ஷாலு என்ற இளம் பெண், உல்தான் கிராமத்தைச் சேர்ந்த கலீமும் அவரது நண்பர்களும் தன்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தியதோடு, மதம் மாறுமாறு வலுக்கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சுமத்தி போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கலீமும் அவரது ஐந்து நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஷாலு-கலீம் விவகாரம் எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றியது போல ஆனது. உள்ளூர் இந்திப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஷாலு அளித்த புகாரையும் கலீம் கைது செய்யப்பட்டதையும் லவ் ஜிகாத் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதற்கான ஆதாரங்களாகக் காட்டிப் பீதியுட்டின. இதற்காகவே காத்திருந்ததைப் போல, “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” மற்றும் “மீரட் பாதுகாப்பு இயக்கம்” என்ற பெயர்களில் புதிதுபுதிதான இந்து மதவெறி அமைப்புகளை உருவாக்கி, அப்பாவி இந்துப் பெண்களை முசுலீம் காமுகர்களிடம் இருந்து காப்பாற்றக்கோரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, முசுலீம் வெறுப்புப் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது, ஆர்.எஸ்.எஸ்.

ஷாலு-கலீம் விவகாரம் மேற்கு உ.பி.யில் அடுத்த கலவரத்திற்கு இட்டுச் சென்றுவிடக்கூடிய முறுகல் நிலையைத் தோற்றுவித்த நிலையில், ஷாலு, தான் புகார் கொடுத்த மூன்றாவது மாதத்தில் -கடந்த ஆண்டு அக்டோபர் 2014-இல் உள்ளூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், கலீம் மீது தான் கொடுத்த புகார் தவறானது என வாக்குமூலம் அளித்ததோடு, தானும் கலீமும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், இதனை விரும்பாத தனது தந்தை நரேந்தர் தியாகி தன்னை வலுக்கட்டாயப்படுத்தி கலீம் மீது புகார் கொடுக்கச் செய்ததாகவும், இதற்காக உள்ளூர் பா.ஜ.க. பிரமுகர் தனது தந்தைக்குப் பணம் கொடுத்ததாகவும் உண்மையைப் போட்டு உடைத்து, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தையும், புளுகுணித்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்
முசுலீம்களால் ஜாட் சாதி பெண்களுக்கு ஆபத்து என்ற பொய்யைப் பரப்பிய ஆர்.எஸ்.எஸ்., ஜாட் சாதிவெறியர்களோடு இணைந்துகொண்டு நடத்திய முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம் பெண்ணும் குழந்தையும். (கோப்புப் படம்)

“எனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நான் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் உறுதியோடு இருப்பதால், அவர்கள் என்னைக் கொல்லத் துணியக்கூடும்” என நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்த அவர், வீட்டைவிட்டு வெளியேறி அரசின் இல்லத்தில் தங்கினார். ஷாலு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கலீம் 2015 ஏப்ரலில் பிணையில் விடப்பட்டு, பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 2015 டிசம்பரில் ஷாலுவும் கலீமும் திருமணம் செய்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்தில் கரியைப் பூசினர்.

ஷாலு-கலீம் விவகாரத்தை உள்ளூர் அளவில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தனித்ததொரு சதிச் செயலாகக் கருதி ஒதுக்கித் தள்ளவிட முடியாது. லவ் ஜிகாத் குறித்து கோப்ரா போஸ்ட், குலைல் என்ற இரு இணைய தள இதழ்கள் நடத்திய “ஆபரேஷன் ஜூலியட்” என்ற இரகசியப் புலனாய்வில், இந்த நச்சுப் பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைமையின் ஆசியோடும், ஒப்புதலோடும் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் மற்றொரு இந்துத்துவா திட்டம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

கோப்ரா போஸ்ட் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் சிசுபால் குமாரும், குலைல் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷாஸியா நகரும் தம்மை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் காட்டிக்கொண்டு, உ.பி. புதானா சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட உமேஷ் மாலிக், முசாஃபர் நகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ சுரேஷ் ராணா, முசாஃபர் நகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சஞ்ஜய் அகர்வால், வி.ஹெச்.பி ஊழியர் ராதே ஷ்யாம், கிருஷ்ண சேனா கட்சியின் நிறுவனர் சிவகுமார் ஷர்மா, கேரளாவில் இருந்து செயல்படும் இந்து ஒற்றுமை மன்றத்தின் தலைவன் ரவீஷ் தந்த்ரி உள்ளிட்ட பலரைச் சந்தித்து, ஏறத்தாழ ஒரு வருட காலம் இந்த இரகசியப் புலனாய்வை நடத்தி, ஆதாரங்களைச் சேகரித்து, அதனைப் பல மணி நேரங்கள் ஓடக்கூடிய காணொளி பதிவுகளாக வெளியிட்டுள்ளனர். இந்து மதவெறியர்கள் இந்த இரகசியப் புலனாய்வில் அளித்திருக்கும் சுயவாக்கு மூலங்கள், “லவ் ஜிகாத்” என்ற பெயரில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திட்டமிட்ட சதியின் மூலம் நடத்தப்பட்டவை என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

பா.ஜ.க அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
கோப்ரா போஸ்ட், குலைல் இணைய இதழ்கள் நடத்திய இரகசியப் புலனாய்வில் லவ் ஜிஹாத் என்ற போர்வையில் தாங்கள் நடத்திய சதிகளை ஒப்புக்கொண்ட மைய அரசின் விவசாயத் துறை இணை அமைச்சர் சஞ்ஜீவ் பல்யான் (இடது) மற்றும் உ.பி. மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராணா.

முசாஃபர் நகர் பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ராணா, “சாதாரணமாக நடக்கிற மதமாற்றத் திருமணத்தைக் கலைக்க நாங்கள் இசுலாமிய இளைஞர்கள் மீது பாலியல் வல்லுறவு அல்லது கடத்தல் வழக்கைப் போட வைப்போம். எங்களின் இத்திட்டத்திற்குச் சம்மதிக்க மறுக்கும் இந்து பெண்களை ஏதாவதொரு விதத்தில் ஒப்புக்கொள்ள வைப்போம்; அப்படியும் சம்மதியாமல் முரண்டு பிடிப்பவர்களுக்கு இரண்டு அறைவிட்டால் போதும், அப்பெண்கள் அடிக்கு பயந்து உடனே சம்மதித்து விடுவார்கள். பிறகு அவர்களாகவே போலீசு நிலையம் சென்று, கடத்தல் மற்றும் கற்பழிப்பு புகாரைப் பதிவு செய்வார்கள்” எனத் தங்களது நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறான்.

கேரள இந்து ஒற்றுமை மன்றத்தின் தலைவன் ரவீஷ் தந்த்ரி, “முசுலீம்களைத் திருமணம் செய்து கொண்டு மதம் மாறிய பெண்கள், தமது கணவன்மார்களுடன் இப்பிரச்சினை தொடர்பான வழக்கை சந்திப்பதற்காக நீதிமன்றத்துக்கு வரும்போது, உங்கள் பெற்றோர் தரப்பிற்கு ஆதரவாகப் பேசவேண்டும்; மேலும் உன் கணவனை விட்டுவிட்டு, நாங்கள் சொல்லும் நபரைத் திருமணம் செய்ய வேண்டும்; இல்லையென்றால், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்பொழுதே கொலை செய்துவிடுவோம்” என மிரட்டுவோம் எனக் கூறியிருக்கிறான்.

பா.ஜ.க.வின் முசாஃபர்நகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சஞ்ஜய் அகர்வால், “இசுலாமிய இளைஞர்கள் “லவ் ஜிகாத்” என்ற பெயரில் நமது பெண்களைத் தூக்கிச் செல்கிறார்கள்; இந்தத் தெருவில் வசிக்கும் இந்த இந்துப்பெண்ணை குறிப்பிட்ட இசுலாமிய இளைஞன் கடத்திச் சென்றுவிட்டான். அதனால் நாம் லவ் ஜிகாத்திற்கு எதிராகப் போராட வேண்டும் எனத் தேர்தல் கூட்டங்களில் பேசுவதன் மூலம் முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வை இந்துக்களிடம் விதைப்பேன்” என வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

லவ் ஜிகாத் எனும் நச்சுப் பிரச்சாரத்தை இந்தியாவெங்கும் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப இந்த அமைப்புகளின் வலைப் பின்னல் உ.பி.யின் முசாஃபர்நகர், மீரட்டில் ஆரம்பித்து மேற்கு வங்கம், கர்நாடகத்தின் மங்களூர் மற்றும் கேரளத்தின் காசர்கோடு, எர்ணாகுளம் வரை காணப்படுவதையும்; சித்தாந்த ரீதியாகப் பெண்களின் மனதை மாற்ற ஆலோசனை மையங்கள், ஹெல்ப்லைன்கள் செயல்படுத்தப்படுவதையும் இந்த இரகசியப் புலனாய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.- இன் லவ் ஜிகாத் சதி தமிழகத்தை எட்டிப் பார்க்கவில்லை என்றாலும், அதற்கு இணையான ஒன்றை, நாடகக் காதல் என்ற பெயரில் வன்னியர், கவுண்டர், தேவர் சாதிவெறி அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடத்தி வருகின்றன. உ.பி.யில் ஜாட் சாதிவெறியை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-க்குத் தமிழகத்திலும் அதே உத்தியைப் பயன்படுத்தி மதவெறிக் கலவரங்களை உருவாக்குவதற்கு, இந்த நாடகக் காதலும் ஆதிக்க சாதி அமைப்புகளும் அடித்தளமாக அமையும்.

காலனிய காலக் கட்டத்தில் பசு வதைத் தடுப்பு, போலி சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தான் எதிர்ப்பு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, ராமர் கோவில், காஷ்மீர், மாட்டுக் கறி – எனத் தனது இந்துத்துவா திட்டங்களைக் காலச் சூழல்களுக்கு ஏற்ப செயல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்.-இன் இன்னொரு மதவெறி பாசிசத் திட்டம்தான் லவ் ஜிகாத். முன்னவற்றைப் போலவே லவ் ஜிகாத்தும் சதிகளும், புளுகுகளும், அரை உண்மைகளும் நிறைந்தது என்பதை கோப்ரா போஸ்ட், குலைல் இணைய இதழ்கள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருப்பதைத் தேசிய ஊடகங்களும் போலீசுத்துறையும் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்கூட ஒரு பொருட்டாகக் கருதாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டன.

குஜராத் படுகொலை குறித்த தெகல்காவின் புலனாய்விற்கு என்ன கதி நேர்ந்ததோ, அதே நிலை லவ் ஜிகாத் குறித்த இரகசியப் புலனாய்விற்கும் நேரிட்டிருப்பது, இந்த நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்களுக்கும் சதிகளுக்கும் அவதூறுகளுக்கும் தரும் முக்கியத்துவத்தை, விளம்பரத்தை, உண்மைக்கும், நியாயத்திற்கும், பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் தருவதில்லை என்பதை மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

– அன்பு

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

  1. //ஷாலு-கலீம் விவகாரம் மேற்கு உ.பி.யில் அடுத்த கலவரத்திற்கு இட்டுச் சென்றுவிடக்கூடிய முறுகல் நிலையைத் தோற்றுவித்த நிலையில், ஷாலு, தான் புகார் கொடுத்த மூன்றாவது மாதத்தில் -கடந்த ஆண்டு அக்டோபர் 2014-இல் உள்ளூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், கலீம் மீது தான் கொடுத்த புகார் தவறானது என வாக்குமூலம் அளித்ததோடு, தானும் கலீமும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், இதனை விரும்பாத தனது தந்தை நரேந்தர் தியாகி தன்னை வலுக்கட்டாயப்படுத்தி கலீம் மீது புகார் கொடுக்கச் செய்ததாகவும், இதற்காக உள்ளூர் பா.ஜ.க. பிரமுகர் தனது தந்தைக்குப் பணம் கொடுத்ததாகவும் உண்மையைப் போட்டு உடைத்து, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தையும், புளுகுணித்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.//
    இதுவே மோடியயோ சங்கராச்சாரியாரையோ குற்றம் சுமத்திய ஒருத்தர் வாக்குமூலத்த மாத்தினா அந்த ஆளு வெலபோய்ட்டான் இல்ல மெரட்டப்பட்டான். கரெக்டா?

  2. லவ் ஜிகாத் கதை – திரைக்கதை, வசனம், டைரக்சன் நடிப்பு ஒப்பாரி எல்லாமே வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க