“முசுலீம்களிடமிருக்கும் பசுக்களை எந்த விலை கொடுத்தேனும் மீட்டு விட வேண்டும். முசுலீம்கள் பசுக்களை வைத்திருப்பதும்கூட ‘லவ் ஜிகாத்’தில் சேர்ந்ததுதான்” என சொன்னதன் மூலம் மாட்டரசியலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார் உத்தரபிரதேச பாஜகவைச் சேர்ந்த ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சா.

மாட்டை முன்னிறுத்தி முசுலீம்களையும் தலித் – பழங்குடியினரையும் கும்பல் வன்முறைகளின் மூலம் பதட்டத்துடன் இருத்தி வைத்திருக்கிறார்கள் காவிகள். நாள்தோறும் புதிது புதிதாக இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகள் இந்தச் சமூகங்களை மேலும் மேலும் பதட்டம் கொள்ள வைக்கின்றன.

ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சா.

“நம் வீட்டில் இருக்கும் பெண்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதை லவ் ஜிகாத் என சொல்வதைப் போல, பசு மாதா அவர்கள் வீட்டில் இருப்பதை ஏன் லவ் ஜிகாத் என சொல்லக்கூடாது? இது லவ் ஜிகாத்-தான். எந்த விலை கொடுத்தேனும் அவர்கள் வீட்டிலிருந்து பசுக்களை மீட்க வேண்டும்” என்கிறார் ரஞ்சித்.

அதோடு அவர் நிறுத்தவில்லை, பசுக்கள் இந்துக்களாக இருப்பதால் அவற்றை இந்து சடங்குகளின்படிதான் தகனம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்.

“பசுக்கள் நமது தாய். தாய்க்கு எப்படி இறுதிச் சடங்கு செய்கிறோமோ அதே போன்று பசுக்களுக்கும் செய்ய வேண்டும். பசுக்களுக்கென்று தனி சுடுகாடும் உருவாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர்.

அதோடு விட்டாரா என்றால் இல்லை. முசுலீம்கள் எதை வளர்க்க வேண்டும் என்றும் எப்படி வாழ வேண்டும் என்றும் ‘அறிவுறுத்துகிறார்’.

“ஆடுதான் முசுலீம்களின் தாய். அவர்கள் ஆட்டைத்தான் வளர்க்க வேண்டும். பசுக்களை ஏன் வளர்க்கிறார்கள்? இது லவ் ஜிகாத். நான் அதற்கு எதிரானவன்.

முசுலீம்கள் இந்தியா வந்த பிறகு இந்துக்கள் முசுலீம்களாக மாறினார்கள். அதை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் சகோதரர்கள்தான். எனவே, அவர்கள் தங்களுடைய பழைய மதத்துக்குத் திரும்ப வேண்டும்” .

கடந்த வாரம் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங், உலகிலேயே பசுதான் ஆக்சிஜன் உள்ளிழுத்து, ஆக்சிஜன் வெளியே விடும் ஒரே விலங்கு என எந்த விஞ்ஞானியும் சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொன்னார்.

பசுவை தடவிக்கொடுத்தால் மூச்சுகோளாறு சரியாகும் என்றும் பசுவின் அருகிலேயே வசித்தால் காசநோய் குணமாகும் என்றும் அரிய மருத்துவ கண்டுபிடிப்புகளையும் சொன்னார். ஒரு பாஜக முதல்வரே இப்படியான அரிய விசயங்களை சொன்னால், அக்கட்சியின் இதர தலைவர்கள் எப்படியான அறிதலுடன் இருப்பார்கள்?

படிக்க:
அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

மாட்டை ‘புனிதமான தாயாக’வும் சர்வரோக நிவாரணியாகவும் மாட்டு மூளைக் கும்பல் தொடர்ந்து பரப்பி வருகிறது.  பொது சமூகத்தில் தொடர்ந்து இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புவதன் மூலம், முசுலீம்களையும், தலித், பழங்குடியின மக்களையும் காவிகள் அச்சுறுத்த நினைக்கிறார்கள் என்பதே உண்மை.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி: த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க