கடந்த மே 26 அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் பி.ஜே.பி ஆதரவு ஆதிக்க சாதியினரால் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடி வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மே 25 அன்று கொலை செய்யப்பட்ட அவரது மாமா ராஜேந்திர ஹரிவார்-இன் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸில் இருந்து அந்த இளம்பெண் குதித்து இறந்துவிட்டதாக திட்டமிடப்பட்ட பொய் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் இந்த இளம்பெண். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போலீசில் அவர் புகார் அளித்தார். புகார் அளித்தது முதல் அவரும் அவரது குடும்பத்தினரும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். 2020-ஆம் ஆண்டில் பி.ஜே.பி மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் மிரட்டல் அதிகரித்துள்ளது.
வழக்கை திறும்பப்பெறாததால் அப்பெண்ணின் சகோதரர் நிதின் அஹிர்வார் கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் விக்ரம் சிங் தாக்கூர் தலைமையிலான ஆதிக்க சாதி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற அவரது தாயாரின் ஆடைகளைக் களைந்து அட்டூழியம் செய்துள்ளனர். விக்ரம் சிங் தாக்கூர் என்பவன் அந்த இளம்பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமல் சிங் தாக்கூர், ஆசாத் தாக்கூர் மற்றும் விக்ரம் சிங் தாக்கூர் ஆகியோர் தான் இதை செய்தார்கள் என்று தெரிந்தும் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படிக்க: அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – யார் குற்றவாளி?
”ஐந்து வருடமாக விடாப்பிடியாக போராடிய அப்பெண் ஆம்புலன்ஸிலிருந்து குதித்து இறந்தார் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. ஆம்புலன்ஸ் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்தே இருந்ததா? ஏன் வழக்கத்துக்கு மாறாக ஆம்புலன்ஸ் வேறு வழியில் சென்றது?” என்று அப்பெண்ணின் மற்றொரு சகோதரன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார். அண்ணன் நித்தினின் கொலை வழக்கின் ஒரே சாட்சி ராஜேந்திர ஹரிவார் மட்டும்தான் என்று தெரிந்து கொண்ட கோமல் சிங் கும்பல் அவரையும் அடித்துக் கொன்றுள்ளது.
பிஜேபி நிர்வாகியான கோமல் சிங் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தொடர் கொலைகளையும் பாலியல் துன்புறுத்தல்களையும் செய்துள்ளான். இதனை எந்த விதத்திலும் கண்டிக்காமல் பிஜேபியின் தலைவர்களும் ஆதரித்துள்ளனர். மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவும் இதனை எந்த விதத்திலும் கண்டிக்கவில்லை.
அந்த இளம்பெண் தனக்கு நிகழ்ந்த கொடூரத்தை அணில் திவாரி என்ற பத்திரிகையாளரிடம் பேட்டியாக அளித்துள்ளார். அணில் திவாரி அதனை தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து மிகவும் கோபமடைந்த கோமல் சிங் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தன் பாசிச அதிகாரத்தை பயன்படுத்தி மிருகத்தனமாக அப்பெண்ணின் குடும்பத்தை சிதைத்துள்ளான். இது மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் மட்டும் நடந்ததல்ல; பாசிச பிஜேபி ஆழக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைமைதான் நிலவுகின்றது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பின்பும் அவரது மகனான கரன் பூஷன் சிங்குக்கு பி.ஜே.பி சீட் வழங்கியுள்ளது. குஜராத் பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கில் நன்னடத்தை காரணமாக குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தன் கண்முன்னே தன் குடும்பத்தினரை கொன்று தன்னை பாலியில் சித்திரவதை செய்த குண்டர்களை ஆரத்தி எடுத்து ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதையடுத்து பில்கிஸ் பானு சொன்ன வார்த்தைகள் “எனது சோகங்களும், நம்பிக்கைகளும் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காக போராடும் ஒவ்வொரு பெண்களுடையது. இந்த அநீதியான முடிவு எடுப்பதற்கு முன் என் பாதுகாப்பு பற்றியும் என் நல்வாழ்வை பற்றியும் யாரும் யோசிக்கவில்லை” என்று கூறினார்.
இதைப் போன்ற சம்பவங்கள் அனைத்திலும் குற்றவாளிகள் தைரியமாக தயக்கமின்றி தவறுகளை செய்ய துணை செய்கிறது பாசிச பிஜேபி அரசு. பி.ஜே.பி என்பது பாலியல் குற்றவாளிகளின் கூடாரமே!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube