டந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த உண்மையை உலகிற்கு காட்டும் வகையில் இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை அவரது கணவர் முன்பே 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மற்றொன்று, புதுச்சேரியில்  9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை செய்து சிறுமியின் உடலை கால்வாயில் வீசியது. இந்த இரண்டு சம்பவங்களும் பெரிய அளவில் சமூகத்தில் பேசுபொருளாகி உள்ளது.

புதுச்சேரியில் சிறுமி கொலையை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி ஜார்க்கண்ட் மாநிலத்தின், டும்கா என்னும் கிராமத்தில் தற்காலிக குடிசை (டெண்ட்) அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அங்கே வந்த 7 பேர் கொண்ட கும்பல், பெண்ணின் கணவரை தாக்கி கைகளை கட்டிப்போட்டனர். பின்பு அந்த கணவர் முன்பே அந்த பெண்ணை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 7 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை இந்த  தம்பதியினர் தங்களது சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்தினர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் 9 வயதான இரண்டாவது மகள் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி காணாமல் போனார். இதனை தொடர்ந்து, பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் மூன்று நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனையடுத்து, மூன்று  நாள் கழித்து,  சிறுமி வசித்து வந்த தெருவின் அருகில் இருக்கும் கால்வாயில், துணி சுற்றப்பட்ட நிலையில் ஒரு பிணம் மிதப்பதை அறிந்த போலீசார், இந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


படிக்க: அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!


முதற்கட்ட விசாரணையில், கருணாஸ் என்பவன் விவேகானந்தன் என்பவனின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் இருவரும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் சிறுமி இறந்து விடவே, உடலை வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும் கால்வாயில் வீசிவிட்டனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடப்பது தனித்த நிகழ்வல்ல. தொடர்ந்து, நெஞ்சை உலுக்கும் வகையில் பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் நடந்து வருகிறது. 2012 ஆண்டு நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, பாலியல் வன்கொடுமை பற்றிய சட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டது, விரிவாக்கப்பட்டது.

ஆனால், 2012 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரம் மட்டுமே. சாதியாதிக்க, ஆணாதிக்க சிந்தனை ஊறிப்போன இந்திய சமூகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணையே குற்றம் சொல்லும் மனப்பான்மை வேரூன்றி இருப்பதாலும், குற்றவாளிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்குவதாலும் பெரும்பாலான வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுவது இல்லை. இதிலிருந்து, வெறுமனே பாலியல் வன்கொடுமைகள் பற்றிய சட்டத்தில் திருத்தங்கள் செய்வதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கூட குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. இந்தியாவில் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆணாதிக்க சாதிய மனப்பான்மையால் போலீசாரே குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் செயல்படுவது; குற்றவாளிகள் “பெரிய பின்புலத்தை” சேர்ந்தவர்களாக இருந்தால், அரசியல் அழுத்தம் காரணமாக வழக்குகள் சரியாக விசாரணை செய்யப்படாமல் குற்றவாளிகளை தப்பிக்க விடுவது; பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவருக்கு ஜாதகம் பார்க்க நீதிமன்றமே  உத்தரவிடுவது; சிறை தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளை “நன்னடத்தை அடிப்படையில்” விடுதலை செய்வது போன்ற அவல நிலை இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.


படிக்க: மணிப்பூர், மத்தியப் பிரதேசம் எனத் தொடரும் பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதம் | ஓவியம்


மேலும், நிலவுடைமை சாதியாதிக்க மனப்பான்மையின் காரணமாக தங்களது “அதிகாரத்தை நிலைநாட்டும்” விதமாக பெண்ணின் உடலை சிதைப்பது இந்தியாவில் இன்னும் நடக்கக்கூடிய விஷயம் தான். சாதி ரீதியான கட்டுப்பாட்டை “மீறியதாக” சொல்லி பல தலித் பெண்கள் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

2015 முதல் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில், தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது 45 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம், “மேல்சாதி” என்று  சொல்லிக்கொள்ளப்படுபவர்கள் தாங்கள் எந்தவகையான குற்றங்கள் செய்தாலும், அதிகராத்தால் காப்பாற்றப்படுவோம் என்ற தெனாவெட்டு மனப்பான்மை (Impunity mindset) இங்கே வளர்ந்துள்ளது.  சாதியவாத மதவாத அமைப்புகளில் இருக்கும் நபர்கள் இந்த தெனாவெட்டு மனப்பான்மையை கட்டமைப்பதில் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் போக, கடந்த 10 ஆண்டுகள் பாசிச பாஜக ஆட்சியில் மற்றொரு மோசமான “புதிய நிலை” உருவெடுத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக ஊர்வலம் செல்லும் நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அன்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கதுவா என்ற இடத்தில் 8 வயதான சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிக்கு ஆதரவாக “இந்து ஏக்தா மன்ச்” என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த இரண்டு மாநில அமைச்சர்கள் (அன்றைய) கலந்துகொண்டார்கள்.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயதான தலித் இளம்பெண்ணை, தாக்கூ சாதியை சேர்ந்த குண்டர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, நாக்கை அறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றனர். பின்னர் மருத்துவமனையில் அந்த பெண் உயிரிழந்தார். சாட்சியங்களை அழிக்கும் பொருட்டு, அவரது உடல் பெற்றோரின் அனுமதியில்லாமல் போலீஸால் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது. மேலும் தாக்கூர் சாதி வெறியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை சூழ்ந்து கொண்டு அவரது உறவினர்களை அச்சுறுத்தினர். இந்த கும்பலிடம் “நாம் ஒரு பாலியல் குற்றவாளிகளுக்கு துணை போகிறோம்” என்ற  குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லை.

இதுமட்டுமின்றி, ஆபாச இணையதளங்கள், போதை கலாச்சாரம் ஆகியவை இந்தியாவில்  மிகவும் மலிந்து இருக்கிறது. இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகள் பெரிதாக  எந்த வகையான நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கின்றன. இவையெல்லாம், பாலியல் வன்கொடுமைகள் அதிக எண்ணிக்கையில் நடக்க வழி செய்வதாக இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது தான் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய உண்மை நிலவரம் புரியும். நடக்கும் ஒவ்வொரு பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஒட்டுமொத்த பிரச்சினையின் வெளிப்பாடு என்று தெரியவரும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை கையாள்வதில் இந்திய அதிகார வர்க்கத்திற்கு இருக்கும் மெத்தனப் போக்கை மக்கள் போராட்டங்களால் தான் உடைக்க முடியும். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதும், இன்றைய புதுச்சேரி சிறுமி வழக்கை போலீஸ் தீவிரமாக விசாரணை செய்வதற்கும் பின்னணியில் மக்கள் போராட்டங்கள் தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க