பில்கிஸ் பானோ வழக்கு: நீதிக்கான நீதிமன்ற போராட்டம் இன்னும் எத்தனைக்காலம்!

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே!

0

பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது குஜராத் அரசு. இதை பற்றி விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசிடம் உச்ச நீதிமன்றம் 2023 ஏப்ரல் 18 அன்று கேட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி குஜராத்தில் நடந்த காவிக் குண்டர்களின் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் போது அகமதாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பில்கிஸ் பானோ காவிக் குண்டர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவருக்கு 19 வயது, கர்ப்பிணியாக இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் காவிக் குண்டர்களால் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அவரது மூன்று வயது மகனும் அடங்குவார்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் கோத்ரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குஜராத் அரசு அதன் மன்னிப்புக் கொள்கையின் கீழ் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

குஜராத் மாநிலத்தில் குற்றம் நடந்ததால் மன்னிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் 2022 மே மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு உள்ளிட்டு ஒரு தொகுதி மனுக்கள் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 2023 ஏப்ரல் 18 ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி 2023 மார்ச் 27 ஆம் தேதி முதல் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அன்றைய தினம், குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்குவது குறித்த காரணங்கள் அடங்கிய அசல் கோப்புகளுடன் தயாராக இருக்குமாறு குஜராத் அரசுக்கு நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இன்னும் கோப்புகளை தாக்கல் செய்யாததால், அரசின் நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்று அமர்வு குறிப்பிட்டது.

“கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுள்ளார். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்” என்று அமர்வு குறிப்பிட்டது. “பாதிக்கப்பட்டவரின் வழக்கை வழக்கமான பிரிவு 302 கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பதுபோல, படுகொலையை ஒரு வழக்கமான கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் பொதுவாக சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் எதிராக செய்யப்படுகின்றன. சமத்துவமற்றவர்களை சமமாக நடத்த முடியாது” என்று அமர்வு கூறியது.

“இன்று பில்கிஸ், ஆனால் நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். விடுதலை வழங்குவதற்கான காரணங்களை நீங்கள் கூறவில்லை என்றால், நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுப்போம்” என்று நீதிமன்றம் கூறியது.

படிக்க : பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!

விளக்கம் அளிக்காமல் நாட்களை கடத்தி பில்கிஸ் பானோவிற்கு நீதி கிடைக்க விடாமல் காவிக் குண்டர்களுக்கு விடுதலை கிடைக்க வழிவகையை செவ்வனே செய்துவருகிறது குஜராத் – ஒன்றிய மோடி அரசு.

பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்கள் பா.ஜ.க நடத்தும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்களோடு மேடையை பகிர்கின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையும் அவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி விடுதலை செய்வதற்கே! இன்னும் எத்தனை காலத்திற்கு காவிமயமாக்கப்பட்டு வரும் நீதிமன்றங்களை நம்பி சட்டப்போராட்டம் மட்டும் நடத்திக்கொண்டு இருக்கப்போகிறோம்?

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க