ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்ட தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 4,200 பேர் 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் முறைகேடுகள் அதிகம் நடைபெறக் கூடிய சிகாரில் இத்தனை ஆயிரம் மாணவர்கள் அதீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் நேற்று (ஜூலை 20) இம்முடிவுகள் வெளியிடப்பட்டன.

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அனைவருக்கும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் மறுதேர்வு நடத்தப்படுவதற்கு முழுமையான ஆதாரங்கள் தேவைப்படுகிறது; அப்படி ஆதாரங்கள் இல்லாமல் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேலும், நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், மையங்கள் வாரியாக தேசியத் தேர்வு முகமை ஜூலை 20-க்குள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி உச்சநீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.


படிக்க: நீட் தேர்வின் ‘புனித’த்தைக் காப்பாற்ற நினைக்கும் உச்ச நீதிமன்றம்


உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1,58,449. இதில் நீட் நுழைவுத் தேர்வை எழுதியவர்கள் எண்ணிக்கை 1,52,920. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை 89,426. ஆனால் தேசியத் தேர்வு முகமை நேற்று வெளியிட்ட நீட் தேர்வு முடிவுகளானது தமிழ்நாட்டில் மொத்தம் 1,53,664 பேர் தேர்வு எழுதியதாகத் தெரிவிக்கிறது. இந்த 744 பேர் எப்படி கூடுதலாக தேர்வு எழுதினர் என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல் நீட் முறைகேடுகள் அதிகம் நடைபெறும் இடமாக சுட்டிக்காட்டப்படுவது ராஜஸ்தான் மாநில சிகார் பகுதிதான். இங்குள்ள தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதியோரில் 2,000-க்கும் அதிகமானோர் 720-க்கு 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தகுதி பெற்றுள்ளனர். உதாரணமாக ஆரவாலி பள்ளியில் 942 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 90 பேர் 600க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மோதி கல்வி நிறுவனத்தில் 110 மாணவர்கள், 600-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.

இப்படி சிகார் தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 27,000 மாணவர்களில் 4,200 பேர் 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். நீட் முறைகேடுகள் முழுவீச்சில் நடந்துள்ளதை சிகார் முடிவுகள் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


ஏனெனில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்கள் 23.22 லட்சம் பேர். இதில் 650-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் வெறும் 30,204 பேர். இவர்களுக்குத் தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 23.22 லட்சம் பேரில் 1.3% பேர் 650-க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில் சிகார் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 2,037 பேர் 650க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளது எப்படி சாத்தியமானது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த தகவல்கள் அம்பலமாகிக் கொண்டிருந்த வேளையில், நேற்று (ஜூலை 20) நீட் முறைகேடு தொடர்பாக பாட்னாவில் மூன்று பேரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. நீட் மோசடி தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ இன்னும் கெடவில்லையா என்பதை மோடி அரசைக் காப்பாற்றி வரும் உச்ச நீதிமன்றம் தான் கூற வேண்டும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க