நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!

பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு மாறாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே மாணவர்களின் போராட்டம் தொடங்கி, பாசிசக் கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. 2017-ஆம் ஆண்டு நீட் எதிர்ப்பு போராளி அனிதா தியாகியானது முதல் தற்போதுவரை நீட் தேர்வுக்கு எதிரான பல போராட்டங்களை தமிழ்நாடு கண்டுவருகிறது. ஆனால் தற்போது, நாடுதழுவிய அளவில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தாண்டு நீட் தேர்வில் நடந்த ஊழல்-மோசடிகள் அடுத்தடுத்து அம்பலமாகி, நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்துள்ளது.

கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாடு முழுவதும் 4,750 மையங்களில், சுமார் 23 லட்சம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். (MBBS), பி.டி.எஸ். (BDS), ஆயுஷ் (AYUSH) மற்றும் பிற மருத்துவம் தொடர்புடைய படிப்புகளுக்கான நீட் தேர்வை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வில் நடந்த பல்வேறு மோசடிகளை மூடி மறைப்பதற்காக, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்றே நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட்டது, தேசிய தேர்வு முகமை (National Testing Agency).

ஆனால், தேசிய தேர்வு முகமையின் திட்டம் பலிக்கவில்லை. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், போலி தேர்வு மையங்கள், ‘கருணை’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என நீட் தேர்வில் நடந்த பல்வேறு ஊழல், முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகத் தொடங்கின.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தாண்டு நீட் தேர்வில் சுமார் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதுவும், ஒரே பள்ளியில் தேர்வெழுதிய ஆறு பேர் முதலிடம் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தற்போது, அந்த ஆறு பேரும் பா.ஜ.க. ஆளும் ஹரியானா மாநிலத்தில் நீட் தேர்வு மையமாக செயல்பட்ட ஹர்தயாள் பப்ளிக் பள்ளியில் தேர்வெழுதியவர்கள் என்பதும் அப்பள்ளி பா.ஜ.க-வை சேர்ந்த சேகர் யாதவின் மருமகளான அனுராதா யாதவால் நடத்தப்படும் பள்ளி என்பதும் அம்பலமாகியுள்ளது. மேலும், ஹரியானா மாநிலத்தில் ஜஜ்ஜர் மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களாக செயல்பட்ட மூன்று பள்ளிகளில், ஹர்தயாள் பப்ளிக் பள்ளியிலும் விஜயா சீனியர் செகண்டரி பள்ளியிலும் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், நாடு முழுவதும் பிற மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள் இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

அதேபோல், நீட் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களே முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்தன. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியாக விடை எழுதினால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மதிப்பெண் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறைக்கப்படும். அதுவே கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண்கள் மட்டும் குறைக்கப்படும். அப்படியெனில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண்களாக 716, 715 ஆகியவையே இருக்க முடியும். ஆனால், தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.


படிக்க: நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை


இதற்கு பதிலளித்த தேசிய தேர்வு முகமை, சில தேர்வு மையங்களில் காலதாமதமாக வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டதால், சில மாணவர்கள் மனு அளித்ததன் பேரில், ஹர்தயாள் பள்ளியில் முதலிடம் பெற்ற 6 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது; இதனால்தான் சில மாணவர்கள் 719, 718 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று நியாயவாதம் பேசியது. ஆனால், மாணவர்கள் எங்கு முறையிட்டனர்? தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே எவ்வாறு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது? என்பதற்கெல்லாம் தேசிய தேர்வு முகமையிடம் பதிலில்லை. அதேபோல், காலதாமதம் நடந்ததாக சொல்லப்படும் ஆறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படாமல் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆறு தேர்வு மையங்களில் பெரும்பாலானவை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேசிய தேர்வு முகமையின் தலைமையில் மிகப்பெரிய ஊழல்-மோசடி அரங்கேறியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

இம்மோசடிகளைக் கண்டு ஆத்திரமடைந்த மாணவர்கள், மறுதேர்வு நடத்த வேண்டும்; முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு மாறாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச மோடி கும்பல் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே மாணவர்களின் போராட்டம் தொடங்கி, பாசிசக் கும்பலின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

நீட் எதிர்ப்பு போராட்டங்கள் பா.ஜ.க-விற்கு விழுந்த பலத்த அடி!

நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு என்று மோடி அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடுதான் அதனை உறுதியாக எதிர்த்து நின்றது. ஆனால், தற்போது பா.ஜ.க-வின் கோட்டை என்று சொல்லிக்கொள்ளப்படுகிற பசுவளைய மாநிலங்களிலேயே நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்குணத்துடன் நடந்துக்கொண்டிருக்கிறது. இது மூன்றாவது முறை ஆட்சிக்குவந்துள்ள பாசிச மோடி அரசுக்கு விழுந்த பலத்த அடியாகும்.

நீட் தேர்வில் நடந்த மோசடிகளை கண்டித்து பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அதிலும், உத்தரப்பிரதேசத்தில் மோடியின் தொகுதியான வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மறுதேர்வுக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் மாணவர்களின் போராட்டம் காரணமாக, பா.ஜ.க. அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே அரசு, நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வு மகாராஷ்டிரா மாநில மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.

அதேபோல், நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்கள் அதிகம் இருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரத்தில் மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக போலீசு கடுமையான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் ரயிலை மறித்தும் வகுப்புகளைப் புறக்கணித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் பெற்றோர்களும் கைக்கோர்த்து போராட்டத்தில் இறங்கினர். பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பெருந்திரளாக டெல்லிக்கு சென்று இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

போராட்டக் கனல் ஒன்றிரண்டு நாட்களில் தணிந்துவிடவில்லை. தேர்வு முடிவு வெளியானதில் இருந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டம் போர்குணத்துடன்  நடந்துக்கொண்டிருக்கிறது. அதன் வீரியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 27-ஆம் தேதி, டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை பூட்டுப்போட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் தடுக்க முயன்ற மோடி அரசின் நயவஞ்சக திட்டங்கள் எதுவும் பலனளிக்காமல் போனது. நீட் தேர்வு மோசடிகளை ஆரம்பத்தில் மறுத்துவந்த தேசிய தேர்வு முகமை, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும் அவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீட் தேர்விற்கு எதிராக நடந்த பிரம்மாண்ட போராட்டம்.

அதேபோல் ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வு மோசடிகளை மறுத்துவந்த மோடி அரசு, தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும்; ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை வலுத்துவருவதை கண்டு அஞ்சி, “நீட் தேர்வில் சில முறைகேடுகள் சில குறிப்பிட்ட இடங்களில் நடந்துள்ளன” என்று ஒப்புக்கொண்டது. மேலும், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநராக இருந்த சுபோத் குமாரை நீக்கிவிட்டு இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது. ஆனால், பா.ஜ.க. நடத்தும் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்ப மாணவர்கள் தயாராக இல்லை என்பதையே தீவிரமடைந்துவரும் போராட்டங்கள் காட்டுகின்றன.

மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் உச்சநீதிமன்றம்

களத்தில் போராட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதற்கு துணை நின்றுவரும் உச்சநீதிமன்றம், தற்போதும் தேசிய தேர்வு முகமை மற்றும் பா.ஜ.க. கும்பலுக்கு பக்கபலமாக நின்று போராடும் மாணவர்களுக்கு துரோகமிழைத்துள்ளது.

ஊழலும் மோசடிகளும் மலிந்துள்ள இம்மோசடி தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் போராடிவரும் மாணவர்களின் கோரிக்கை. ஆனால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு நடத்தப்படும் என்ற தேசிய தேர்வு முகமையின் நயவஞ்சக வாதத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு அப்பட்டமான துரோகமிழைத்தது, உச்சநீதிமன்றம். மேலும், நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அம்மாநில உயர்நீதிமன்றங்களில் மறுதேர்வு நடத்தக்கோரி தாக்கல் செய்திருந்த மனுக்களையும் ரத்து செய்தது.

முக்கியமாக, ஜூலை 6 முதல் தொடங்கவிருக்கும் மருத்துவ கலந்தாய்விற்கு எந்த தடையும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த உச்சநீதிமன்றம், மருத்துவ கலந்தாய்விற்கு ஒருபோதும் தடைவிதிக்க முடியாது என்று கூறியது. இதற்காக வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தாண்டு நடந்த நீட் தேர்வை தடை செய்துவிட்டால், மறுதேர்வு நடக்கும் வரை தனியார் மருத்துவ கல்லூரிகளால் கல்லாக் கட்ட முடியாது என்ற வர்க்க பாசத்தினால் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலம் தனது ஆளும் வர்க்க சேவையை மீண்டும் ஒருமுறை செவ்வனே செய்து முடித்துள்ளது.

000

உச்சநீதிமன்றம் போராடும் மாணவர்களுக்கு நேரடியாக துரோகமிழைக்கிறதென்றால், எதிர்க்கட்சிகளோ மறைமுகமாக துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன.

நீட் எதிர்ப்பில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில், மூன்றாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தனிதீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சூழலில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தை கட்டியமைப்பதற்கு பதிலாக, சட்டப்போராட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களிடையே இருக்கும் நீட் எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கும் வேலையையே தி.மு.க. தற்போதும் தொடர்கிறது.

காங்கிரசை பொறுத்தவரை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவிக்கவில்லை. நீட் தேர்வு மோசடிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதே மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை. நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஜூன் 21 அன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும் சந்தர்ப்பவாதமாக “மாணவர்களுக்கு நீதி வேண்டும்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது. விரும்பும் மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்ற காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் சந்தர்ப்பவாதம் இந்நடவடிக்கையின் மூலம் செயல்வடிவம் பெற்றுள்ளது.

முக்கியமாக, நீட் தேர்வு குறித்தான தங்களது நிலைப்பாடு என்ன என்பதை தற்போதுவரை இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவிக்கவில்லை. நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உண்மையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இருந்தால் நாடுதழுவிய அளவில் ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்யாமல், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக அறிக்கை விடுவது; அடையாள போராட்டங்களை நடத்துவது; நாடாளுமன்றத்தில் மோடியுடன் மல்லுக்கட்டுவதென மாணவர்களுக்கு மறைமுகமாக துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வு மோசடிகள்: தேசியமயமாகியுள்ள “வியாபம் ஊழல்”

நீட் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என மோடி அரசு சாதித்துக்கொண்டிருந்த போதே, பீகார், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு-முறைகேடுகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படும் செய்திகளும் அவர்களின் பின்னணியும் வெளியாகத் தொடங்கியது.

இம்முறைகேடுகள் குறித்து பூதாகரமாக வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும், 2013-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின்போது அரங்கேறிய “வியாபம்” ஊழல் தற்போது தேசியமயமாகியுள்ளது என்பதையே உணர்த்துகிறது. வியாபம் என்ற அரசு நிறுவனத்தின் மூலம் ஒரு மாநிலத்தில் அடித்த கொள்ளையை தற்போது தேசிய தேர்வு முகமை என்ற கைப்பாவை மூலம் தேசிய அளவில் விரிவுப்படுத்தியுள்ளது, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல். பீகார், ஜார்கண்ட் மற்றும் குஜராத்தில் நடந்த மோசடிகள் இதனை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது.

பீகார் போலீசின் பொருளாதார குற்றப்பிரிவின் (EOU – Economic Offences Unit) விசாரணையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிவு நடந்துள்ளது அம்பலமாகியது. மேலும், இந்த வினாத்தாள் கசிவில் “முகியா சால்வர்” (Mukhiya Solver Gang) என்ற மாஃபியா கும்பல் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. தற்போது ஓயாசிஸ் பள்ளியின் முதல்வர் எக்சனூல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எக்சனூல் ஹக் என்பவர்தான் நீட் தேர்விற்கான ஹசாரிபாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து “இந்தியா டுடே” (India Today) ஊடகம் நடத்திய “ஸ்டிங் ஆப்ரேஷனில்” (Sting Operation), வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஏற்கெனவே இரண்டுமுறை கைது செய்யப்பட்ட பிஜேந்தர் குப்தா என்பவனிடமிருந்து அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்தன. இந்த நீட் தேர்வு ஊழலில், சுமார் 700 மாணவர்களை குறிவைத்து 200 முதல் 300 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் இது சஞ்சீவ் முகியா என்பவனின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது என்றும் பிஜேந்தர் குப்தா கூறினான். மேலும், சஞ்சீவ் முகியாவை போலீசால் பிடிக்க முடியாது என்று கூறியதோடு “ஜெயில் ஜாயங்கே, ஃபிர் பெயில், அவுர் ஃபிர் ஷுரு ஹோகா கேல்” (முதலில் சிறை, பின்னர் பினை, மீண்டும் ஆட்டம் தொடரும்) எனவும் கூறியுள்ளான்.

ஏனெனில், சஞ்சீவ் முகியா என்கிற சஞ்சீவ் சிங், சுமார் 20 ஆண்டுகளாக எந்தவித தடையுமின்றி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறான். அவனது மகன் ஷிவ் என்கிற பிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளான். ஏற்கெனவே, 2017-இல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் சஞ்சீவ் சிங்கும் அவனது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் மட்டுமின்றி, உத்தராகண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நடந்த போலீசு கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வு; பீகார், ஹரியானா மாநிலங்களில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு; ஹரியானா கால்நடை மருத்துவருக்கான தகுதி தேர்வு உள்பட பல அரசு நிறுவனங்களுக்கான தேர்வுகளில் சஞ்சீவ் சிங் தலைமையிலான மாஃபியா கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

தேர்வு மோசடிகளில்
ஈடுபடும் நிறுவனங்களுக்கு
பெரும்பாலும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுடன்
தொடர்புள்ளது.

இத்துணை முறைகேடுகளில் ஈடுபட்டு பலமுறை கைது செய்யப்பட்ட பிறகும் சஞ்சீவ் சிங்கால் சுதந்திரமாக நடமாடவும் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபடவும் முடிகிறதென்றால், அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையின்றி இது சாத்தியமில்லை என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை. சஞ்சீவ் சிங்கின் மனைவி மம்தா தேவி 2020-ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். அதற்குமுன் பீகாரின் பூதாகர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். சஞ்சீவ் சிங்கின் மனைவி மம்தா தேவி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, சஞ்சீவ் முகியாவை பாதுகாப்பது யார் என்றும் அவரது மனைவி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதேபோல், குஜராத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மையமாக இருந்த ஜெய் ஜலராம் பள்ளியில், பள்ளி நிர்வாகமும் பயிற்சி மையமும் கூட்டுச்சேர்ந்துகொண்டு, அம்மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் (ஓ.எம்.ஆர். ஷீட்டில்) சரியான விடைகளை நிரப்பியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக, 30 மாணவர்களிடமிருந்து தலா 10 இலட்சம் ரூபாயை அக்கும்பல் பெற்றிருக்கிறது. பணம் தந்த மாணவர்களிடம் விடை தெரியாத வினாக்களை அப்படியே விட்டுவிடும்படி கூறி, தேர்வு முடிந்த கையோடு சரியான விடைகளை நிரப்பியிருக்கிறது. இதற்கெனவே, விமான நிலையம் கூட இல்லாத கோத்ரா மாவட்டத்தின் இப்பள்ளியை பீகார், மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 30 மாணவர்கள் தங்களது தேர்வு மையமாகத் தேர்ந்தெடுத்து தேர்வெழுதியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேர்வு முறைகேடுகளில் சிக்கியுள்ள “எடு-டெஸ்ட்” நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்சந்திர ஆச்சார்யா மோடியுடன் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம்.

இம்மோசடியில், நீட் தேர்வு மையமாக செயல்பட்ட ஜெய் ஜலராம் பள்ளியின் முதல்வர் புர்ஷோத்தம் சர்மா, இப்பள்ளியின் ஆசிரியரும் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளருமான துஷார் பட், வதோதராவில் உள்ள ராய் ஓவர்சீஸ் கோச்சிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் பரசுராம் ராய், ராயின் கல்வி நிறுவனத்தில் மாணவர்களைச் சேர்க்கும் ‘கல்வி ஆலோசகர்’ விபோர் ஆனந்த் ஆகியோர் முக்கிய நபர்களாக செயல்பட்டுள்ளனர். அதிலும் தேர்வு மைய கண்காணிப்பாளர் துஷார் பட்டிற்கும் பரசுராம் ராயின் கல்வி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் ஆரிஃப் வஹோரா என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் போலீசு விசாரணை மேற்கொண்டபோது, விடைத்தாள்களை போலீசிடம் சமர்பிக்காமல் தேசிய தேர்வு முகமை நேரம் தாழ்த்தியிருக்கிறது. இச்சம்வமானது தேசிய தேர்வு முகமையும் இம்மோசடியில் ஓர் கூட்டாளிதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.


படிக்க: நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி


இந்நிலையில், இம்மோசடி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய குஜராத் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சக்திசிங் கோஹில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரிஃப் வஹோரா பா.ஜ.க-வின் சிறுபான்மை அமைப்பு தலைவன் என்பதையும் ஜெய் ஜலராம் பள்ளி நிர்வாகத்திற்கும் பா.ஜ.க-விற்கும் கள்ளக்கூட்டு உள்ளதையும் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதாரமாக, ஜெய் ஜலராம் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியை முன்னாள் மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் திறந்துவைக்கும் புகைப்படங்களையும் அறக்கட்டளையின் தலைவர் தீட்சித் படேல் ஒரு பொது நிகழ்ச்சியில் நேரடியாக மோடியிடம் காசோலை வழங்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், இப்பள்ளி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பள்ளி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இப்பள்ளியிடம் நிதியை பெற்றுக்கொண்டு, இரண்டு நீட் தேர்வு மையங்களை இயக்க பா.ஜ.க. அனுமதி கொடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் இதுபோல் எத்தனை நீட் தேர்வு மையங்கள் இயக்கப்பட்டிருக்கும் என்பது குறித்த தரவுகள் வெளியானால் நிச்சயம் அது பூதாகரமானதாக இருக்கும்.

மொத்தத்தில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கல்வி மாஃபியாக்கள், மிகப்பெரிய கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் தொடங்கி கல்வி ஆலோசகர் என்ற பெயரில் சுற்றும் புரோக்கர்கள், மோசடியான பள்ளி முதல்வர்கள், மைய கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்கள் என நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய வலைப்பின்னல் சம்மந்தப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னலில் உள்ள ஒவ்வொரு அங்கத்திலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலைச் சார்ந்தவர்கள் உள்ளனர். இந்த மாபெரும் ஊழல்-மோசடி முழுமையாக அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிறு புரோக்கர்களையும் வினாத்தாளை வாங்கிய மாணவர்களையும் பெற்றோர்களையும் கைது செய்வதன் மூலம் பா.ஜ.க. தப்பிக்கப் பார்க்கிறது.

ஆனால், இக்கும்பலின் கூட்டுக்கொள்ளையால், தற்போது லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. இம்முறை நடந்த முறைகேடுகளால், மருத்துவ “கட் ஆஃப்” (cut-off) மதிப்பெண் கடந்தமுறையை விட 50 சதவிகிதம் வரை அதிகமாகும் அபாயமுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இம்முறை பல மாணவர்களால் அவர்களின் மருத்துவ கனவை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கொண்டுவருவது தரமான தகுதியான மருத்துவர்களை உருவாக்கும்; அரசியல் தலையீடு முறைகேடுகளில்லாத நேர்மையான மருத்துவ தகுதி தேர்வை நடத்தப்போகிறோம் என்றெல்லாம் பா.ஜ.க. கும்பல் அளந்த கதைகள் தற்போது பொதுவெளியில் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது. கல்வியை முழுமையான வணிகப்பொருளாக மாற்றத்துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக கொண்டுவரப்பட்டதே இந்த நீட் தேர்வு என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

சிதைந்துவரும் கல்வி கட்டமைப்பு மாற்று கட்டமைப்பே தீர்வு

நீட் தேர்வு ஊழல்-மோசடிகள், வெளியாகி கொண்டிருந்தபோதே பிற நுழைவுத் தேர்வுகளில் நடத்தப்பட்ட மோசடி-முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியது. இது ஒட்டுமொத்த கல்வித்துறையையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் எவ்வாறு சீரழித்து வருகிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்படும் யு.ஜி.சி-நெட் (UGC-NET) தேர்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 9 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியிருந்த நிலையில், தேர்வின் வினாத்தாள் “டார்க் வெப்” இணையதளம் முதல் டெலிகிராம் குழுக்கள் வரை கசியவிடப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து தேர்வு நடந்த மறுநாளே தேர்வை ரத்து செய்வதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதனால், தற்போது 9 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை மீண்டும் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ஆராய்ச்சி நிதியுதவி (JRF) பெறுவதற்கும் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குமான சி.எஸ்.ஐ.ஆர்-நெட் (CSIR-NET) தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே, தேசிய தேர்வு முகமையின் இலட்சணம் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஜூன் 23-ஆம் தேதி நடக்கவிருந்த முதுகலை நீட் தேர்வு நடத்தப்பட்டால் மேலும் நாறிவிடுமோ அன்று அஞ்சிய ஒன்றிய சுகாதார அமைச்சகம், தேர்வு நடப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் அத்தேர்வையும் அதிரடியாக ரத்து செய்வதாக அறிவித்தது. இவை அனைத்தும் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது இது முதல்முறையல்ல. கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளிலும் அரசு நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்விலும் பல்வேறு ஊழல்-மோசடிகள் அரங்கேறியுள்ளன. இந்த மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலுடன் தொடர்புள்ளது.

சான்றாக, குஜராத்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவது குறித்து “தி வயர்” (The Wire) இணையதளத்தில் சிறப்பு புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “எடு-டெஸ்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட்” (Edutest Solutions Private Limited) எனும் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆட்சேர்ப்பு மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்சந்திர ஆர்யா, “சர்வதேசிக் ஆர்ய பிரதிநிதி சபா” என்ற ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான இந்துத்துவ அமைப்பின் தலைவர்; இந்த அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வின்  முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள்; பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இந்நிறுவனம் தவறிழைத்தோர்-பட்டியலில் (Blacklist) சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்நிறுவனத்திற்கு ராணுவம் உள்பட பல முக்கியமான அரசு நிறுவனங்களின் தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் பிரதமர் தலைமை தாங்கும் ஒன்றிய அரசின் நிறுவனங்களும் வழங்கிவருகின்றன போன்ற பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அக்கட்டுரையில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊழல்-மோசடிகளில் ஈடுபடுவதுடன், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் திட்டமிட்டு அரசு கட்டமைப்பிற்குள் புகுத்தப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.

பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் மறுகாலனியாக்க கொள்கைகளால் நாட்டின் ஒட்டுமொத்த கல்வித்துறையும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பல்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. 1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையின்படி எல்லாவித சேவைகள், உற்பத்தி துறைகள், பிற முக்கிய பிரிவுகள் அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றம் மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒட்டுமொத்தமாக பறித்து கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நாட்டில் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளாகும்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக
சிதைக்கப்பட்டுள்ள இந்த
கல்வி கட்டமைப்பிற்கு பதிலாக
மாற்று கல்வி கொள்கையையும்
மாற்று கட்டமைப்பின் தேவையையும் வலியுறுத்துகிறது.

அந்தவகையில், பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நாடாளுமன்றம், அரசு நிறுவனங்கள், மாநில அரசாங்கங்கள் அனைத்திற்குமான உரிமைகளை பறித்து கார்ப்பரேட் கும்பல்களிடம் ஒப்படைக்கும் விதமாக பல்வேறு சட்டத்திட்டங்களையும் கேள்விகேட்க முடியாத அதிகாரம் கொண்ட ஆணையங்களையும் உருவாக்கிவருகிறது. கல்வித்துறையில் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடே மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை. நீட் போன்ற நுழைவுத்தேர்வும் அதை நடத்துவதற்கான தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதும்; தன்னாட்சி என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களை கார்ப்பரேட்டிற்கு தாரைவார்ப்பதற்கான நடவடிக்கைகளும்; யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியும் கல்வித்துறையை கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளே.

எனவே, தற்போது நடந்துவரும் மாணவர்களின் போராட்டம் வெறுமனே நீட் மறுதேர்வுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் கொள்ளைக்காக சிதைக்கப்பட்டுள்ள இந்த கல்வி கட்டமைப்பிற்கு பதிலாக மாற்று கல்வி கொள்கையையும் மாற்று கட்டமைப்பின் தேவையையும் வலியுறுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்வது; தேசிய தேர்வு முகமையை கலைப்பது; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது என்ற கோரிக்கைகளோடு, கடந்த பத்தாண்டுகால பாசிச மோடி ஆட்சியில் கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கானதாக மாற்றப்பட்டுள்ள கல்வி கட்டமைப்புக்கு மாற்றாக மாணவர்கள் நலனை மையப்படுத்திய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டியத் தேவையையும் சேர்த்து வலியுறுத்த வேண்டியுள்ளது.


கயல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க