நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.

மாணவர்களுக்கு துரோகமிழைக்கும்
தேசிய தேர்வு முகமை + உச்சநீதிமன்றத்தின் கள்ளக்கூட்டு

டந்த மே மாதம் 5-ஆம் தேதியன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. கிட்டத்தட்ட 24 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவு ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பத்து நாட்களுக்கு முன்பாகவே, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்று தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.

இது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியது. அதற்கு ஏற்றாற் போலவே, முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் (720) பெற்றது; நீட் தேர்வில் சாத்தியமற்ற மதிப்பெண்ணான 719, 718 மதிப்பெண்களை பலர் பெற்றிருப்பது; கருணை மதிப்பெண் வழங்குவது என்ற பெயரில் மோசடிகள் நடந்திருப்பது; ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய ஆறு பேர் முழு மதிப்பெண் பெற்றது; வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டப்படும் ராஜஸ்தானில் 11 பேர் முழு மதிப்பெண் பெற்றது; பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது; குஜராத் மாநில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது என அடுத்தடுத்து நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகின. இது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடி குறித்து விசாரிக்கக் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

படிக்க : மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை

மேலும், இந்த மோசடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என “பிசிக்ஸ் வாலா” என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் அலக் பாண்டே சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், நீட் தேர்வு முடிவுகளை திரும்பபெற்று மறுதேர்வு நடத்த வேண்டும் என அப்துல்லா முஹம்மது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மோஹித்தின் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அதேபோல், தேர்வர்களுக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனக் கூறி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து நீட் தேர்வர் ஜாரிபிதி கார்த்திக் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால அமர்வு வியாழக்கிழமை (13/06/2024) விசாரித்தது. அப்போது மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கணு அகர்வால், “கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் ஏற்பட்ட குறைபாடுகளை களைந்து மாணவர்களின் அச்சத்தைப் போக்கவே தேசிய தேர்வு முகமையால் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுகிறது. கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வர்கள் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வில் பங்கேற்பதற்கான மற்றொரு வாய்ப்பும் வழங்கப்படுகிறது” என்றார்.

இதனையடுத்து உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு திரும்பபெறப்படும்; மறுதேர்வில் பங்கேற்க விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை நீக்கி அவர்களுடைய இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படும்; மறுதேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு அந்த தேர்வில் அவர்கள் பெரும் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், மே 5-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண் நிராகரிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனை ஏற்றுகொண்டு உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

எண்ணிலடங்காத மோசடிகள் அரங்கேறியுள்ள இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே தற்போது போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் முதன்மையான கோரிக்கையாகும். ஆனால் தேசிய தேர்வு முகமையின் இவ்வாதமானது நடந்துமுடிந்த மோசடி தேர்வினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

மேலும், தேசிய தேர்வு முகமையின் இந்த மோசடிக்கு உச்சநீதிமன்றமும் துணைபோகிறது. வழக்கு விசாரணையின்போது கருணை மதிப்பெண்கள் முறையால் பாதிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தை அணுகாத அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என அலக்பாண்டே சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சாய் தீபக் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்ததோடு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் மறுத்துவிட்டது. மேலும், வெற்றிபெற்ற மாணவர்களின் சேர்க்கையானது நீட் தேர்வு குளறுபடிகள் சார்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது என்ற புதிய வியாக்கியானத்தையும் முன்வைத்தது.

அதனோடு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உட்பட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. ஆக, ஜூலை 6-ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு எந்தவித தடையும் வந்துவிடக்கூடாது என்பதிலேயே உச்சநீதிமன்றம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

படிக்க : தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!

நடந்துமுடிந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருக்கும் நிலையில், அதனை முறையாக விசாரித்து அதன் பிறகு இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரின் கோரிக்கை. ஆனால், முறைகேடுகள் பற்றி எல்லாம் பிறகு விசாரித்துக் கொள்ளலாம்; முதலில் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்; அதற்கு எந்தவித தடையும் வந்துவிடக்கூடாது என்பதில் மோடி அரசின் தேசியத் தேர்வு முகமையுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அதன் முறைகேடுகளை மூடி மறைப்பதோடு, மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் வேலையையும் உச்சநீதிமன்றம் மேற்கொள்கிறது.

மறுதேர்வு நடத்தக்கோரி பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுடைய போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. உண்மையில், இந்தப் போராட்டங்கள்தான் “கருணை மதிப்பெண்ணை ரத்து செய்கிறோம்” என்று சொல்லும் அளவிற்கு தேசிய தேர்வு முகமையை தள்ளியுள்ளது. எனவே அப்போராட்டத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே மாணவர்களால் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதுதான் உச்சநீதிமன்றத்திற்கும் நெருக்கடி கொடுக்கும்.

மேலும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட இந்த நீட் தேர்வு என்பது மோசடி முறைகேடுகள் உள்ளிட்ட மாணவர்கள்-மக்கள் விரோத தன்மைகளை தன்னகத்தே கொண்டது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும். அதுதான் ஏழை வீட்டு பிள்ளைகள் மருத்துவராகக் கூடாது என்னும் நோக்கத்துடனும் மாநில பாடத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் கார்ப்பரேட் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்ட இத்தேர்வை ஒழித்து சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதற்கான நிரந்தர தீர்வாக அமையும்.


தீரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க