2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா கூட்டணி” 233 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்தியா கூட்டணி வெற்றிப்பெறவில்லை என்றாலும், “400 இடங்களை கைப்பற்றுவோம்” என வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்த மோடி-அமித்ஷா கும்பல் பெரும்பான்மை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது மோடியின் சர்வாதிகாரத்திற்கு கடிவாளமிடும் என்று எதிர்க்கட்சிகளும் கணிசமான பாசிச எதிர்ப்பு சக்திகளும் கருதுகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களையும் தி.மு.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியிருப்பது (Clean Sweep) இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. “பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது” என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி (viral) வருகிறது. இத்தேர்தல் முடிவால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
பாசிஸ்டுகளையும் துரோகிகளையும் புறக்கணித்த தமிழ்நாடு மக்கள்:
இத்தேர்தலில் இரண்டு இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளையும் 25 சதவிகித வாக்குகளையும் வெல்வோம் என்று அண்ணாமலை தம்பட்டம் அடித்துவந்த நிலையில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றியடையவில்லை. குறிப்பாக, கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியுற்றதையடுத்து, தி.மு.க-வினரும் தமிழ்நாட்டு மக்களும் ஆட்டை பலியிடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில் கோயம்புத்தூரில் மக்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. இதனால் கோயம்புத்தூரிலேயே இருந்துக்கொண்டு பா.ஜ.க. அலுவலகத்திற்கு வராமல் அண்ணாமலை தலைமறைவாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இருப்பினும், திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் பா.ஜ.க 11.6 சதவிகித வாக்குகள் வாங்கியுள்ளது; 11 தொகுதிகளில் அ.தி.மு.க-வை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது; தமிழ்நாடு வரலாற்றில் பா.ஜ.க-வினரின் அதிகபட்ச வாக்காக 32.79 சதவிகித வாக்குகளை அண்ணாமலை பெற்றுள்ளார் என்றெல்லாம் கூறி, பா.ஜ.க. தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது என்று சங்கிகள் கூவி வருகின்றனர். ஆனால், இம்முறை பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் கணக்கிட்டால் பா.ஜ.க. வாக்குவிகிதம் ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும் என்பதையும், 2014-இல் பா.ஜ.க. சார்பாக கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனின் 33.6 சதவிகித வாக்கை விட அண்ணாமலையின் வாக்கு குறைவுதான் என்பதையும் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மேலும், அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ளி தி.மு.க-விற்கு போட்டியாக வளர துடிப்பது, தென் மாவட்டங்களில் சாதிய முனைவாக்கத்தை தீவரப்படுத்தி பா.ஜ.க. வேலை செய்வது போன்றவை உண்மை என்றாலும் குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து பேரணி, ரோடுஷோக்களை நடத்தியது; கோவையில் செல்வாக்கு செலுத்தும் தி.மு.க-வின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையிலடைத்தது; தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற அறியப்பட்ட முகங்களையும் ராதிகா போன்ற பிரபலங்களையும் தேர்தலில் நிறுத்தியது என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாடு மக்கள் பா.ஜ.க.-வை புறக்கணித்துள்ளனர் என்பதே எதார்த்தம்.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: மக்கள் போராட்டங்களால் பாசிசத்தை வேரறுப்போம்!
அதேபோல், பா.ஜ.க-விற்கு அடிமை சேவகம் புரிந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்த அ.தி.மு.க. 2019 தேர்தலில் ஒற்றை தொகுதியில் வென்றிருந்த நிலையில், இத்தேர்தலில் அதையும் இழந்துவிட்டது. மேலும் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்தது. தி.மு.க. மீதான அதிருப்தி வாக்குகளை கூட அறுவடை செய்துகொள்ள முடியாத அ.தி.மு.க. தனது வாக்குகளையும் பா.ஜ.க-விற்கு பறிகொடுத்ததோடு பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க-விற்கு தாரைவார்த்துள்ளது. பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அரங்கேற்றிய நாடகத்தை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை என்பதையே இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.
***
“நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன்” என்று சவால் விட்டிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. இருப்பினும் இத்தேர்தலில் 35.60 லட்சம் வாக்குகளை (8.19 சதவிகிதம்) பெற்று நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 1.1 சதவிகித வாக்குகளும்; அதற்கடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.8 சதவிகித வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.8 சதவிகித வாக்குகளும் பெற்றது; தற்போது இத்தேர்தலில் 8.19 சதவிகித வாக்குகள் பெற்று 8 ஆண்டுகளில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சிக்கு தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் கரும்பு விவசாயி சின்னத்திற்கு மாற்றாக புதிய சின்னம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நா.த.க. தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுவதாக பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
நா.த.க-வின் தேர்தல் முடிவு குறித்து பேசிய அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சியின் மூலமாக ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர் என்பது அந்த கட்சியின் செய்தி. அவர்கள் களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நானும் நேரில் பார்த்தேன். மக்களிடையே அவர்களும் தங்களின் சித்தாந்தத்தை முன் வைக்கிறார்கள். என்னையும் சீமான் அண்ணனையும் ஒப்பிட வேண்டாம். நாங்கள் அதிக வாக்குகள் வாங்கிவிட்டோம். சீமான் அண்ணன் நாம் தமிழர் கட்சியை கலைப்பாரா என்று நான் கேட்க மாட்டேன். சீமான் அண்ணன் அவர்களின் பாதையில் பயணிக்கிறார். அரசியலில் நேர்மையாக நின்றதை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான அண்ணாமலையின் இந்த பாசத்திற்கான காரணம் பா.ஜ.க – நா.த.க-விற்கு இடையேயான சித்தாந்த உறவுதான். திராவிட எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலை நீர்த்துப் போகச் செய்து, தமிழினப் பெருமிதம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை கடத்திக் கொண்டு வருவதுதான் சீமானின் இலக்கு. உண்மையில், சீமான் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. வளர்வதற்கான சித்தாந்த கரசேவையைத்தான் பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாசிச பா.ஜ.க-வின் மதவெறி அரசியல் எடுபடவில்லை; மக்கள் பா.ஜ.க-வை எதிரியாகத்தான் பார்க்கின்றனர். பா.ஜ.க-வின் அடிமையாகிப்போன அ.தி.மு.க-வும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க-வை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே அதன் சித்தாந்ததை ஊட்டிவளர்க்கும் சீமானுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை நாம் சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது.
பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம்
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 32.76-ஆக இருந்த தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் இத்தேர்தலில், 26.93 சதவிகிதமாக சரிந்துள்ளது. தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் விருதுநகர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருமங்கலம் உள்ளிட்ட பல தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளை தவிர பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வினர் பெரியளவில் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் மந்தகதியில் இருந்தது தேர்தல் சமயத்திலேயே பேசு பொருளானது. மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு தனக்கு வாக்குகளாக அறுவடையாகிவிடும் என்று அலட்சியமாக இருந்த தி.மு.க-விற்காக, பல இடங்களில் இளைஞர்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளுமே பிரச்சாரம் செய்தனர். இது கடந்த தேர்தலைவிட தமிழ்நாட்டில் வாக்குவிகிதம் குறைந்தற்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. பிறகு எப்படி இத்தகைய வெற்றியை தி.மு.க-வால் சாதிக்க முடிந்தது.
படிக்க: 2024 தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு மாற்றுத் திட்டமும் மக்கள் போராட்டமும் முன்நிபந்தனை!
அதற்கு காரணம் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தமிழ்நாட்டில் நிலவும் இந்த மரபுதான் பா.ஜ.க. எதிர்ப்பாகவும் தேர்தல் களத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளாகவும் எதிர்க்கட்சிகளுக்கு அறுவடையாகியிருக்கிறது என்பதே உண்மை. தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே பல அமைப்புகள் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கத்தில் பா.ஜ.க-விற்கு எதிரான பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை பாசிசக் கும்பலின் சிம்ம சொப்பனமாக விளங்கும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை முன்னிறுத்தும் வகையில் மேற்கொள்ளவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு பிரச்சாரமும் கூட வரம்புக்குட்பட்ட வகையிலேயே மேற்கொண்டது. சான்றாக, ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தி பேசிய மோடி, தியானம் செய்கிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வந்தபோது எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமல் தி.மு.க. கள்ளமௌனம் காத்தது.
மேலும், மூன்று ஆண்டுகால ஆட்சியிலும் தமிழ்நாட்டிற்கே உரிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுக்காமல் தி.மு.க. கவர்ச்சிவாதத்தையும் கார்ப்பரேட் நலதிட்டங்களையுமே முன்னிறுத்தி வருகிறது. இம்முறை தேர்தலின்போது தி.மு.க-வின் கார்ப்பரேட் நல திட்டத்திற்கு எதிராகவும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பரந்தூர், வேங்கைவயல், நாமக்கல், எண்ணூர் என பல இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
திராவிட மாடல், கொள்கை பிடிப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டே பிற எதிர்க்கட்சிகளை போல பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய தி.மு.க. விழைகிறதே ஒழிய பா.ஜ.க. எதிர்ப்புணர்வையும் தமிழ்நாட்டில் அதற்கு அடிப்படையாக உள்ள பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும் வளர்த்தெடுக்க தி.மு.க. துளியும் தயாராக இல்லை.
எனவே, மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்கள், கவர்ச்சிவாதம் போன்றவற்றை முன்னிறுத்தியே மக்களின் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துக்கொள்ளலாம் என தி.மு.க. கருதினால் அது தி.மு.க-விற்கு எதிரானதாக மட்டுமல்ல பாசிச பா.ஜ.க-விற்கு ஆதரவானதாக சென்று முடியும்.
பானு
(புதிய ஜனநாயகம் – ஜுன் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
முக்கியமாக புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான விசயங்களை திமுக நடைமுறைப்படுத்தி வருது..