நீட் தேர்வின் ‘புனித’த்தைக் காப்பாற்ற நினைக்கும் உச்ச நீதிமன்றம்

இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான பின்பும், அதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பின்பும், நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ முழுமையாகக் கெட்டுவிட்டால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக ஜூலை 20 பகல் 12 மணிக்குள் வெளியிடுமாறு தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் நேற்று (ஜூலை 18) கெடு விதித்தது.

மேலும், “முறைகேடுகளால் நீட் தேர்வு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மறுதேர்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்” என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த செய்திகள் வெளியாகின. தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பீகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையானது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக இத்தேர்வு முடிவுகள் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டதும், குறிப்பிட்ட சில தேர்வர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் எந்தவொரு தெளிவான நடைமுறைகளையும் பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் மிகப்பெரிய சர்ச்சையானது.

இந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யவேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


படிக்க: நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி


இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

“நீட் முறைகேடு வழக்கின் தீர்ப்பை இலட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கிக் காத்துள்ளனர். சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பான சில விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை வெளியிட்டால், விசாரணையைப் பாதிக்கும்.

இந்த முறைகேடுகள் தொடர்பான முதல்கட்ட விசாரணையில், வினாத்தாள் கசிவு என்பது பீகார் மாநிலத்தில் பாட்னா மற்றும் ஹசாரிபாக் ஆகிய இரு இடங்களில் அமைந்திருந்த மையங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்தது வினாத்தாள் கசிவு சர்ச்சை அல்ல. அங்கு, சில தேர்வர்கள் பணம் கொடுத்து விடைத்தாளை (ஓ.எம்.ஆா் தாள்) நிரப்பும் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில், பணத்துக்காக இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளதே தவிர, தேசிய அளவில் முறைகேட்டில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வெவ்வேறு நகரங்களில் பெரிய அளவில் தொடர்புகள் இருந்தால் மட்டுமே, வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறுவது சாத்தியம்.

அவ்வாறு இந்த முறைகேடுகள் காரணமாக நீட் தேர்வின் புனிதத்தன்மை முழுமையான அளவில் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும் போது மறுதேர்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும்.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் அல்லது மறு தேர்வு நடத்தக் கோரும் மனுதாரர்கள், வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தேர்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், தேர்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தேர்வு முடிவுகளைத் தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தேர்வர்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும்.

வினாத்தாள் கசிவுக்கும் தேர்வுகள் தொடங்கியதற்கும் உள்ள இடைவெளியைத் தெளிவாகக் கணக்கிட விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான பின்பும், அதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பின்பும், நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ முழுமையாகக் கெட்டுவிட்டால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், வினாத்தாள் கசிவு என்ற அளவில் மட்டும் நீட் முறைகேடுகளைச் சுருக்கி நரித்தனமாகக் கையாள்கிறது.

இதன்மூலம், முறைகேட்டுக்கு பின்னால் ஒழிந்துள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளையை திட்டமிட்டே நீதிமன்றம் மறைக்கப்பார்க்கிறது.

பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் மாநில பாடத்திட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு நடத்தப்படும் நீட் தேர்வே ஒரு முறைகேடு தான். அதில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் ஆண்டுக்கணக்கில் தங்களை வருத்திக்கொண்டு கடினமாகப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோச்சிங் சென்டர்களுக்கு இலட்சங்களைச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், ‘தகுதிவாய்ந்த’ மருத்துவர்களை உருவாக்குவதற்கான நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்த பின்னரும் கூட, பாசிச மோடி அரசு மறுதேர்வு நடத்த மறுக்கிறது. மாணவர் நலனுக்கு எதிராகக் கலந்தாய்வை நடத்த முயல்கிறது. இதற்கு உச்ச நீதிமன்றமும் துணை நிற்கிறது.

மாணவர்களின் வீரியமான போராட்டங்களால் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பாசிச மோடி அரசின் யோக்கியதை அம்பலப்பட்டுப் போனதால் அரசின் பேச்சையோ தேசிய தேர்வுகள் முகமையின் பேச்சையோ கேட்க மாணவர்கள் தயாராக இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தின் துணைகொண்டு கோச்சிங் சென்டர்கள் கொழிக்க உதவும் நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’யை காப்பாற்றப் பாசிச மோடி அரசு முயல்கிறது.

ஆனால், மாணவர்களின் போராட்டங்கள் மோடி அரசைத் தற்காப்புக்குத் தள்ளியதைப் போல், நீதிமன்றத்தையும் பணிய வைக்கும். போராட்டத்தின் வீரியம் தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை முடிவு செய்யும். மறுதேர்வு என்ற கோரிக்கையைக் கடந்து நீட் தேர்வு இரத்து என்ற நிலைக்கு இப்போராட்டங்கள் அடுத்தகட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க