கனமழையால் தவிக்கும் குஜராத் மக்கள்: மீண்டும் அம்பலமானது ‘குஜராத் மாடல்’

மேலும் 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

‘டபுள் இன்ஜின் சர்க்கார்’ ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திர நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜுனகர், கிர் சோம்நாத், அம்ரேலி, பவ்நகர் மற்றும் பொ டாட் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 50 மிமீ முதல் 200 மிமீ வரை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக 39-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 40,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

வதோதராவின் விஸ்வாமித்ரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட 12 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பை ஆளும் குஜராத் பாஜக அரசு கண்டுகொள்ளாததால் கன மழை வெள்ளத்தில் சிக்கி 40,000-க்கும் அதிகமானோர் உணவின்றித் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 14 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 22 குழுக்கள் மற்றும் 6 இராணுவக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 17,000 பேர் மட்டுமே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரைக்  காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


படிக்க: வயநாடு நிலச்சரிவு: மக்கள் உயிரைக் குடித்த சுற்றுலா பொருளாதாரம்


கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சௌராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் அடுத்த 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் அம்மாநில அரசு விடுத்துள்ளது. ஏற்கெனவே குஜராத்தின் 12 மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பரிதவித்து நிற்கும் நிலையில், மேலும் 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கனமழை வெள்ளத்தால் மாநிலத்தின் 50 சதவிகித பகுதிகள் உருக்குலைந்த நிலையில் மீட்பு நடவடிக்கை, உணவின்றி தவிக்கும் மக்கள் நலன் குறித்துப் பேசாமல் பிரதமர் மோடியைப் புகழ்பாடுவதிலேயே பொழுதைக் கழித்து வருகிறார் குஜராத் பாஜக முதல்வர் பூபேந்திர படேல்.

வானிலை அறிக்கையை குஜராத் அரசு கண்டு கொள்ளாததன் காரணமாக வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கனமழை குஜராத் மக்களுக்குப் பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் முதலைகள் நடமாடி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. பாசிச கும்பலால் மெச்சிப் புகழப்படும் ‘குஜராத் மாடல்’ ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி இதுதான்.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க