பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை:
‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!

“நாம் பல சமயங்களில் பெண்களை அவமதிக்கிறோம். இந்த மனநிலையை ஒழிக்க நாம் உறுதி ஏற்போமா? நம் தேசத்தின் கனவினை நிறைவேற்ற பெண்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியம். நாம் ‘பெண் சக்தியை’ ஆதரிக்க வேண்டும்”. 76வது போலி சுதந்திர தின நிகழ்ச்சியில் மோடி ஆற்றிய உரை இது.

பெண்களுக்கு மதிப்பளிப்பது குறித்து அவர் பேசிய அதே நாளில், 2002 ஆம் ஆண்டு குஜராத் படுகொலையின்போது, பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான அக்குற்றவாளிகளை ஆரத்தி எடுத்து, ஆரத்தழுவி வரவேற்றதோடு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியது விஷ்வ இந்து பரிஷத்.

இவர்களின் விடுதலை நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்டு பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 2008 ஆம் ஆண்டு இக்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யு.டி.சால்வி குஜராத் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான முடிவு என 134 முன்னாள் சிவில் அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும்; குற்றவாளிகளின் விடுதலையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட 6,000 பேர் உச்சநீதிமன்றத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர். சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது நியாயமற்றது எனக் கூறி, இந்தியாவின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

படிக்க : காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !

இதேநேரத்தில், பில்கிஸ் பானு தற்போது வாழ்ந்துவரும் ரந்திக்பூர் பகுதியில் இஸ்லாமிய மக்கள் வீடுகளை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாக பிபிசி கள ஆய்வு கூறுகிறது. நாட்டையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைக் குற்றவாளிகள், சட்டப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது இசுலாமிய மக்கள் மனதில் ஒருவித அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

***

2002 பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் கொளுத்தப்பட்டது. அதில் பயணித்த கரசேவகர்கள் பலரும் பலியாகினர். காவி கும்பலே திட்டமிட்டுச் செய்த இச்சதிச் செயலை இசுலாமியர்கள் மேற்கொண்டதாகக் கூறி, குஜராத் முழுவதும் மிகப் பெரிய இனப் படுகொலையையே நடத்தியது ஆர்.எஸ்.எஸ். இக்கலவரத்தில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

அக்கலவரத்தின் போது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களில் பில்கிஸ் பானு குடும்பமும் ஒன்று. காவி குண்டர்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணி என்றும்கூட பாராமல், கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவரது தாய் உட்பட குடும்பத்தில் இருந்த அனைத்துப் பெண்களும் காவி மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். பில்கிஸ் பானு குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

வன்புணர்ந்து வீசியெறியப்பட்டதில் உயிர்தப்பித்த பில்கிஸ் பானு, காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக விடாப்பிடியாக நடத்திய போராட்டத்தின் விளைவாய் 2008 ஆம் ஆண்டு 11 குற்றவாளிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அவரின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டவர்களைத்தான் தற்போது ‘நன்னடத்தை’ அடிப்படையில் விடுதலை செய்துள்ளது குஜராத் அரசு.

***

2002 ஆம் ஆண்டு அமலிலிருந்த, தண்டனைக் குறைப்புக் கொள்கை 1992-ஐ அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளை விடுதலை செய்ததது குஜராத் அரசு. 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த குற்றவாளியின் விடுதலையைப் பரிசீலிக்கலாம் என்று கூறும் கொள்கைக் குறிப்பில், குற்றப் பின்னணியைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடவில்லை.

2014ல் உள்துறை அமைச்சகம் இக்கொள்கையில் சில மாற்றங்களைச் செய்து நடைமுறைப்படுத்தியது. அதில் பாலியல் வன்கொடுமை அல்லது கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தகுதியற்றவர்களாக வரையறுத்தது. இதன்படி பார்த்தால் அந்த 11 பேரையும் விடுதலை செய்ததே சட்டவிரோதமாகும்.

சட்டத்தை மீறி, அக்கொடூரக் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளதை, தண்டனை வழங்கிய மும்பை நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ கண்டிக்கவில்லை. இந்நிலையில், குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (முன்னாள்) என்.வி.ரமணா, 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகளின் விடுதலைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்ததே உச்சநீதிமன்றம்தான் என்பதே உண்மை.

11 குற்றவாளிகளில் ஒருவன் தண்டனைக் குறைப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, கடந்த மே 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றச் சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது; எனவே குற்றவாளிகளின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தகுதியானது குஜராத் அரசுதான்; குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியபோது நடைமுறையில் இருந்த 1992ஆம் ஆண்டு தண்டனைக் குறைப்புக் கொள்கையின் கீழே மனுவை பரிசீலிக்கலாம்” என்று உத்தரவிட்டதே உச்சநீதிமன்றம்தான்.

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு அக்குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று அரசிடம் முன்மொழிந்தது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே காவி கும்பல், உச்ச நீதிமன்றத்தோடு சேர்ந்துகொண்டுதான் அக்காவி பயங்கரவாதிகளை விடுவித்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தனக்கும் அவ்விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல் நாடகமாடுகிறது.

***

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவித்திருப்பதை எந்த நாட்டு அரசுகளும் நீதித்துறையும் ஏற்றுக் கொள்ளாது. உலக அளவிலேயே, பில்கிஸ் பானு தீர்ப்பு இந்தியாவின் நீதி பரிபாலன முறை பற்றி கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவை இன்னமும் மதச்சார்பற்ற – ஜனநாயக நாடாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமானால் இவ்விடுதலை குறித்து அதிர்ச்சியடையலாம், ஆனால் நம் நாட்டு அரசின் தன்மை எப்போதோ மாறிவிட்டது.

பெயரளவிலான ஜனநாயக ஆட்சியின் கீழ் கூட நாம் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்படாத இந்துராஷ்டிரக் கொடுங்கோல் அரசின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பார்ப்பன பாசிசம் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் தோற்றத்திலேயே, கொடும் மனுநீதி நீதி, நீதிபரிபாலனம் செய்துகொண்டிருக்கிறது.

குற்றவாளிகளின் விடுதலையைப் பரிந்துரைத்த ஆலோசனைக் குழுவில் இருந்த பத்து பேரில் ஐந்து பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்; இருவர் பாஜக எம்.எல்.ஏ.க்கள், ஒருவர் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர், இருவர் பாஜகவுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்கள்.

நன்னடத்தையின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அந்த ‘நன்னடத்தை’ என்னவென்று ஆலோசனைக் குழுவில் இருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராகுல்ஜி கூறுவதைக் கேளுங்கள்; இது சாதிக்கொரு நீதி எனும் பார்ப்பன மனுநீதியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று தெரியவரும் :

“அவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. அவர்கள் குடும்பத்தின் செயல்பாடு மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம் (மதிப்புகளை) உடையவர்கள்” எனக் கூறியுள்ளார் ராகுல் ஜி.

படிக்க : பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!

“எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக” என்கிறது மனுநீதி (மனு 8:378). அதுதான் ஆலோசனைக் குழுவால் நன்னடத்தைக்கு உரிய தகுதிப்பாடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

இந்துராஷ்டிரத்திற்குள்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்லும்போது மிகைப்படுத்திக் கூறவில்லை. இன்று அது எதார்த்த உண்மையாகிவிட்டது.

இதே குஜராத் கலவர வழக்கில், குற்றவாளியான மோடி விடுவிக்கப்பட்டுள்ளார்; மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த காரணத்தினாலேயே சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் கைதுசெய்யப்பட்டுள்ளார்; மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்கள் என்று கைதுசெய்யப்பட்ட அறிவுத்துறையினரும் செயல்பாட்டாளர்களும் நிரபராதிகள், சதி செய்தது புனே போலீசுதான் என்று அம்பலமான பின்னரும் எந்த நீதிமன்றமும் வாய் திறக்கவில்லை; முகமது ஜுபைர் உள்ளிட்டு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினரை அம்பலப்படுத்திய எண்ணற்ற பத்திரிகையாளர்கள் பொய்வழக்கு போட்டு கைதுசெய்யப்படுகிறார்கள்; இசுலாமியர்களின் வீடுகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்படுகிறது.

பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்தது தனிப்பட்ட நிகழ்வல்ல, இந்துராஷ்டிரத்தில் பெண்களுக்கு இனி இதுபோன்ற நீதிதான் வழங்கப்படும் என்பதற்கான தொடக்கம் இது. இதை நாம் இந்த கண்ணோட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்துராஷ்டிரத்தைத் தகர்த்தெறியாமல் ஜனநாயகமான சமூகத்தில் வாழமுடியாது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.


அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க