காவிக் கும்பலும் போலி மருத்துவமும்

ஐ.ஐ.டி இயக்குநராக இருக்கும் ஒருவர் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுங்கள், உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கோமியம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி விடும் என்பது அறிவியலுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது.

ந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி) இயக்குநர் காமகோடி, மாட்டின் (சிறுநீர்) மூத்திரத்தைக் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்றும் வயிறு சார்ந்த உடல் உபாதைகளுக்குக் கோமியம் சிறந்த மருந்து என்றும் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசியிருப்பது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியது.

ஏற்கெனவே, இப்பிரச்சாரத்தை சங்கிகள் மேற்கொண்டு வந்தபோது,பசுக்கள், எருமைகளின் சிறுநீரில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன; இவை மனித உடலுக்குள் சென்றால் வயிறு, குடல்களில் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்; கோமியம் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஐ.ஐ.டி இயக்குநரே இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பினையும் கிளப்பியது.

ஆனால் தனது மூடத்தனமான கருத்திலிருந்து பின்வாங்காத சங்கி காமகோடி, “கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சிறந்த பத்திரிகைகள் அறிவியல் சான்றுகளை வெளியிட்டுள்ளன. விவசாயத்திலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இயற்கை வேளாண்மை மற்றும் உள்நாட்டுக் கால்நடை இனங்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் சூழலில் எனது கருத்துகள் கூறப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மீண்டும் சங்கிகளுக்கே உரித்தான பாணியிலும் பார்ப்பனியத் திமிருடனும் பதில் அளித்தார்.

இந்நிலையில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற குப்பன் அவர்கள் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ”சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க”த்தின் பொதுச் செயலாளர் ரவீந்தரநாத் பின்வருமாறு கூறினார்:

“இந்த சூழலில், அறிவியல் பூர்வமான கருத்திற்கு எதிராக கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றை யார் பயன்படுத்தினாலும் தவறு தான்; கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் பஞ்கவ்யத்தை பயன்படுத்த ஆதரித்தாலும் தவறுதான். கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்ற கருத்து மக்களுக்கும், அறிவியலுக்கும் எதிரானது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.


படிக்க: ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?


மேலும், “தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல்வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன. எல்லா வகை காய்ச்சல்களுமே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அபாயகரமானது தான். வெளிக்காய்ச்சலோ, உள் காய்ச்சலோ எந்த காய்ச்சல் வந்தாலும் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு சிகிச்சை செய்யாவிட்டால் ஆபத்தாகிவிடும்.

ஐ.ஐ.டி இயக்குநராக இருக்கும் ஒருவர் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுங்கள், உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் கோமியம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகி விடும் என்பது அறிவியலுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானது. உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் சாதாரண மக்களுக்குக் கோமியத்தைக் கொடுத்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாக விடும் என தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் அதை உபயோகிப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“மிகப்பெரிய அறிவியல் நிறுவனத்தை, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி முறைகேடாக பயன்படுத்துகிறார். பொது சுகாதாரத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்தும் ஐஐடி இயக்குநர் காமகோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். காய்ச்சலில் இருப்பவர் கோமியம் குடித்தால் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பசுவின் சிறுநீரில் 14 வகையிலான நுண்ணுயிர்கள் (பாக்டீரியாக்கள்) உள்ளன. வயிற்றுப்போக்கு, சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பசு மாட்டின் சாணம் சாப்பிட்டால் சிறுநீர் பை தொற்று ஏற்படும். கிட்னியில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.

பசு மாட்டின் சாணம் கிருமி நாசினி கிடையாது. நாடாப்புழு தொற்று ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பசுமாட்டின் பாலை காய்ச்சாமல் குடித்தாலே காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பிருக்கும் நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது வேதனைக்குரியது” என்று அறிவியல் உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்தார்.


படிக்க: மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம்


“முன்னாள் பா.ஜ.க மக்களவை உறுப்பினர் பிரக்யாசிங் தாகூர், கோமியம் குடித்ததால் புற்றுநோய் சரியானது என பேட்டியளித்து விட்டு, அறிவியல் முறையில் சிகிச்சையளித்து குணமடைந்தது குறித்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற இந்துத்துவ அரசியலை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது.

ஒரே தேசம், ஒரே மருத்துவமனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் போலி மருத்துவத்தை பரப்பி வருகின்றனர். ஐஐடி இயக்குநர் காமக்கொடியின் கருத்து தமிழ்நாட்டு மக்களுக்கும், அறிவியலுக்கும் எதிரானது.

எனவே அவரது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். திரும்பப் பெறவில்லையெனில் அவருக்கும், அவருடைய கருத்துக்கும் எதிராகப் போராட்டத்தை நடத்துவோம்,” என்று தெரிவித்தார்.

கேரளாவில் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தைப் பயன்படுத்துவது குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரவீந்திரநாத் ”அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை யார் நம்பினாலும் அது தவறுதான்; கேரளா அரசாங்கம் செய்தாலும் அது தவறு தான்” என்று கூறினார்.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க