இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி.) இயக்குனர் காமகோடி, மாட்டின் (சிறுநீர்) மூத்திரத்தை குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்றும் வயிறு சார்ந்த உடல் உபாதைகளுக்கு கோமியம் சிறந்த மருந்து என்றும் அறிவியலுக்குப் புறம்பாக பேசியிருப்பது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா என்ற ‘கோசாலை’யில் கடந்த ஜனவரி 15 அன்று மாட்டுப் பொங்கலையொட்டி விழா ஒன்று நடைபெற்றது. அதில் சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அந்த விழாவில் பேசுகையில், “எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. அவரிடம் மருத்துவரை கூப்பிடலாமா என்று என் அப்பா கேட்டார். எனது அப்பா சொன்ன உடனே, அந்த சந்நியாசி கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு காய்ச்சல் போய்விட்டது. பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பேசியுள்ளார்.
மாட்டு மூத்திரத்தையும் சாணத்தையும் உட்கொள்வது, உடலில் பூசிக்கொள்வது உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யும் என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த சங்கிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அப்பாவி மக்கள் இந்த மூட நம்பிக்கைக்கும் முட்டாள்தனத்திற்கும் பலியாவதை கண்டு அதிர்ச்சியுற்ற பலரும் இது அறிவியலுக்கு புறம்பானது என எச்சரித்து வருகின்றனர்.
பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே தலையிட்டு, பசுக்கள், எருமைகளின் சிறுநீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன; இவை மனித உடலுக்குள் சென்றால் வயிறு, குடல்களில் தொற்று உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்; கோமியம் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சங்கிகள் இப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.
படிக்க: காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
ஆனால், இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக, திறமைமிக்க மனித வளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்க தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற ஐ.ஐ.டி-யின் இயக்குனர் அறிவியலுக்கு புறம்பாகவும் சங்கித்தனமாகவும் பேசியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் பேசுவதைக் காட்டிலும் ஆபத்தானது.
அந்நிறுவனத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் சமூகத்தில் மேற்கொண்டுவரும் பிரச்சாரத்தை காமகோடி போன்ற சங்கிகள் மூலமாக கல்வி நிலையங்களிலும் மேற்கொள்கிறது என்பதே உண்மையாகும்.
எனவே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அனைவரையும் பேராசிரியர் பணியிலிருந்தும் கல்வி நிலையங்களிலிருந்தும் துரத்தியடிக்க வேண்டும்.
இவர்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டக் களத்திற்கு வரவேண்டும். கல்வி நிலையங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வினரை களையெடுக்க வேண்டும்.
அறிவியல் பூர்வமான கல்வியையும் சமூகக் கல்வியையும் உள்ளடக்கிய மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் நடவடிக்கையில் மாணவர்கள், கல்வியாளர்கள் இறங்க வேண்டும்.
தீரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram