சமீபத்தில் இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்லாமிய மத வெறுப்பு கருத்துகளைப் பேசியிருப்பது நாடுமுழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 10 அன்று ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி கும்பலின் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP – Vishva Hindu Parishad) அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக வளாகத்தில் பொதுசிவில் சட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பு” (Constitutional Necessity of Uniform Civil Code) என்கிற தலைப்பில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், “இங்கு பெரும்பான்மையினரின் (இந்துக்கள்) விருப்பப்படியே நாடு இயங்கும் என்பதை நான் ஒரு இந்துவாக ஏற்றுக்கொள்கிறேன். நம் முன்னோர்கள் செய்த தியாகங்களினால் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது” என்று இந்து மதவெறியைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார்.
“நாங்கள் (இந்துக்கள்) எங்களின் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது என்கிற அகிம்சையையும் ஆன்மீகத்தைக்தையும் கற்றுக்கொடுப்பதினால் எங்கள் குழந்தைகள் கருணை உணர்வுடன் இருக்கின்றனர். அதனால் அவர்களைக் கோழைகள் என்று கருதக் கூடாது” என்று மறைமுகமாக இஸ்லாமிய மக்களை எச்சரித்துள்ளார்.
“ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளின் கண் முன்னே மிருகங்களை வெட்டுவதினால் நாளைக்கு அவர்கள் எவ்வாறு மாறுவார்கள்” என்று இஸ்லாமிய மக்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் விதமாக இஸ்லாமிய மத வெறுப்பினை கக்கியுள்ளார்.
“அவரவர்கள் தங்கள் மதத்தில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைவருக்கும் சமமான நீதியை வழங்குகின்ற பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். மேலும் நாங்கள் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் உள்ள பெண்களைத் தெய்வமாக வழிப்படுகிறோம். ஆனால் அவர்கள் (இஸ்லாமிய மக்கள்) முத்தலாக் மூலமாகப் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே அவர்கள் நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவர்கள். தேசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவார்கள். எனவே சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று இஸ்லாமிய மத வெறுப்பூட்டியுள்ளார்.
படிக்க: நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!
இவர் இதற்கு முன்பு 2021-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் சம்பலில், பசு மாடுகளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியருக்கு ஜாமீன் மறுத்ததுடன், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நீதிபதியின் இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இந்து மத அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நீதிபதி பங்கேற்பது அவமானம்” என்று வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் சமூக ஊடகத்தில் தன்னுடைய கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கமானது (AILU – All India Lawyers Union), நீதிபதி சேகர் குமார் யாதவ் மத அமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இஸ்லாமிய மதவெறுப்பு கருத்துகளைப் பேசியிருப்பது, அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கும் சுதந்திரத்துக்கும் எதிரானது; எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளது.
ஆனால், இம்மாதிரியான மத வெறுப்பு கருத்துக்களை இந்தியாவில் உள்ள பல நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். பலர் தாங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த சங்கி என்பதையே பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
படிக்க: அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்
கடந்த மே மாதம் 20-ஆம் தேதியன்று தன்னுடைய பணி ஓய்வு நிகழ்வில் உரையாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன்தாஸ், “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் சிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பிலிருந்து வந்தேன். இடையில் வேலைகள் காரணமாக 37 வருடங்கள் விலகி இருந்தேன். தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணையத் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னை அழைத்தால் அவர்களுடன் இணைந்து செயல்படுவேன்” என்று தான் ஒரு சங்கி என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.
இவரைப் போன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவ்யாசாச்சார் ஸ்ரீஷானந்தா, கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி குறித்தான வழக்கு விசாரணையின்போது, “நீங்கள் மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள். அங்கே ஒவ்வொரு ரிக்ஷாவிலும் 10 பேர் உள்ளனர். ஏனெனில் அந்த பகுதி இந்தியாவில் இல்லை. பாகிஸ்தானில் உள்ளது” என பட்டவர்த்தனமாக இஸ்லாமிய வெறுப்பை கக்கினார்.
இவர்களுக்கெல்லாம் மேலாக எதிர்க்கட்சி தலைவர்கள் உட்படப் பலராலும் ஜனநாயகவாதியாகப் பேசப்பட்டுவந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியிருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய சந்திரசூட், “பல வழக்குகளில் என்ன தீர்ப்பு வழங்குவது என்று புரியாத நிலையில் கடவுள் முன் அமர்ந்து வணங்குவேன். அப்படி வழங்கப்பட்டதுதான் பாபர் மசூதி நிலம் தொடர்பான இறுதித் தீர்ப்பு” என்று பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலே குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் காவி கும்பலுக்குச் சாதகமாகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் எத்தகைய தீர்ப்புகளை வழங்கியிருப்பார்கள் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை. இந்த நீதிபதிகள் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது, அவ்வமைப்பு ஏற்பாடு செய்கின்ற மத நிகழ்வுகளிலும் மாநாட்டிலும் கலந்துகொள்வது போன்ற செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்த நீதித்துறையும் காவி கும்பலின் கட்டுப்பாட்டில் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram