வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.

டந்த பிப்ரவரியில் பாசிச மோடி அரசு, இந்தியாவின் ஒட்டுமொத்த நீதித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீய நோக்கத்தோடு, வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இல் திருத்தம் கொண்டு வர  முயன்றது. வழக்கறிஞர் மசோதா 2025 என்ற பெயரில், சட்டத்திருத்தம் கொண்டுவரும் தனது முயற்சியை, வழக்கறிஞர்களின் நாடு தழுவிய மிகப்பெரும் எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது. அதன் பின்னணி என்ன என்பதைப் பார்ப்போம்.

மோடி அரசு முன்வைத்துள்ள மசோதாவின் பிரிவு 33 இன் படி, பார் அசோசியேசனில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஒரு இடத்தில்தான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று இந்தச் சட்டத்திருத்தம் கூறுகிறது. இவ்வாறு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்றிய அரசுக்கு என்ன இருக்கிறது? உண்மையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், யாரைக் கட்டுப்படுத்த வேண்டும்? பார் அசோசியேசனில் உறுப்பினராகிவிட்டு, வழக்கறிஞர் தொடர்பான பணிகளில் ஈடுபடாமல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், வேறு ஒரு தொழிலைப் பார்த்துக் கொண்டு பணம் ஈட்டிக் கொண்டிருப்பவர்களையும் கட்டுப்படுத்துவதற்கு இந்தச் சட்டத்திருத்த மசோதாவில் எதுவும் இல்லை. ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் வழக்கறிஞர் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கத்தில்தான் இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மசோதாவின் பிரிவு 35 A-வில் புதிதாக சில விசயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். இதன்படி, வழக்கறிஞர்கள் போராடுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது வழக்கறிஞர்கள் போராடுவதால் வழக்குகள் தேங்குவதாகவும், அதனால், தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் போராடக் கூடாது எனவும் கூறுகின்றனர். இது பச்சைப் பொய் அல்லவா? உண்மையில் நீதித்துறைக் கட்டமைப்பை விரிவுபடுத்தாமல் இருப்பதே கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்குக் காரணமாக உள்ளது.


படிக்க: இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை


கடந்த 2002 இல் நடந்த சேலம் பார் அசோசியேசன் (எதிர்) ஒன்றிய அரசு வழக்கானது முக்கியமானது. பார் அசோசியேசனைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்போது பல விதிகளை ஒன்றிய அரசு திணித்ததை எதிர்த்து சேலம் பார் அசோசியேசன் இந்த வழக்கை நடத்தியது. இதில் சேலம் பார் அசோசியேசன் சட்டரீதியாக ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடித்தது.

ஏற்கெனவே மூன்று குற்றவியல் சட்டங்களைத் திருத்தி, வழக்கறிஞர்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும் அதில் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராக வழக்கறிஞர்கள் போராடுவதைத் தடுக்கின்ற, அப்படிப் போராடுகின்ற நேர்மையான, ஜனநாயக உணர்வுள்ள வழக்கறிஞர்களை நீதித்துறையிலிருந்தே அகற்றும் நோக்கில்தான் பிரிவு 35 A-ஐ கொண்டு வர பாசிச மோடி அரசு முயற்சிக்கிறது என்ற நோக்கிலும் பார்க்க வேண்டியுள்ளது.

வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் சட்ட அலுவலகங்களை உருவாக்கிக் கொள்ளலாம், இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என்று வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதாவின் ஒரு விதி கூறுகிறது. இந்திய நீதிமன்றங்களை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு, அதை மட்டுமே நம்பி வாழும் வழக்கறிஞர்கள்தான் பெரும்பான்மை. மசோதாவின்படி,   வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கிருக்கும் வழக்கறிஞர்களைக் கூலிக்கு விலை பேசி, தங்களுக்கான அடிமைகளாக மாற்றிக் கொள்வதற்குத்தான் இச்சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது.

எப்படி வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியாவில் குவித்து, இங்கிருக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் குறைந்த கூலிக்குச் சக்கையாகப் பிழிகிறார்களோ, அதைப்போலவே உரிமைகளற்ற கார்ப்பரேட் கூலிகளாக வழக்கறிஞர்களும் மாற்றப்படுவார்கள்.

ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையே, அதாவது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். பாசிஸ்டுகளை எதிர்க்கும் யாருக்கும் நீதித்துறை கட்டமைப்பில் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்கின்ற நோக்கில்தான் வழக்கறிஞர் சட்டத் திருத்த மசோதா 2025-ஐ கொண்டுவர எத்தனிக்கிறார்கள்.

அதாவது, இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய பார் கவுன்சில், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் இவை தற்போது தனித்தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பாசிசக் கும்பலுக்கு ஆதரவான 3 நபர்களை நுழைக்கும் வகையில் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மோடி அரசு முயல்கிறது.


படிக்க: நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?


ஏற்கெனவே இந்திய பார் கவுன்சிலில் அரசின் பிரதிநிதியாக அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் இருக்கும்போது கூடுதலாக 3 பேரை நுழைக்க வேண்டிய அவசியம் எதனால் வந்தது? ஒட்டுமொத்த நீதித்துறையையும் கட்டுப்படுத்தும் வகையில் ஆலோசனைக்குழு, ஒழுங்குமுறைக் குழு என்ற இரண்டு நிர்வாக அமைப்புகளை உருவாக்குவதற்குத் திட்டமிடுகின்றனர். நாடு தழுவிய பார்கவுன்சில், மாநிலங்கள் அளவில் பார் கவுன்சில், பார் அசோசியேசன் ஆகியவை இருக்கும்போது, இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துகின்ற வகையில்தான் ஒழுங்குமுறை குழுவைக் கொண்டு வர எத்தனிக்கின்றனர்.

இதன் உள்நோக்கம் என்ன? சட்டக் கல்வியில் என்ன இருக்க வேண்டும் என்பதை பாசிஸ்டுகளின் கையாட்களான அந்த 3 பேர் உள்ளடங்கிய ஆலோசனை, ஒழுங்குமுறைக் குழுதான் தீர்மானிக்கும்.

ஏற்கெனவே கல்வித்துறையில் பல்வேறு வழிகளில் முற்போக்குக் கருத்துக்களைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு, மனுதர்மத்தை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான். அதுபோல, மனுதர்மத்தைச் சட்டக்கல்வியில் நுழைக்க வேண்டும் என்பதற்கான வேலைதான் இது. சாதி அமைப்பு முறையை மேலும் இறுக்கமாகக் கட்டியமைப்பதற்கும், குறைந்தபட்ச சமத்துவம் தொடர்பான விழுமியங்களைக் கூட நீக்கிவிட்டு, சாதி அடக்குமுறைகளை நிரந்தரமாக்குவதற்கும்தான் இந்த ஒழுங்குமுறை, ஆலோசனைக்குழு பித்தலாட்டங்கள்.

இந்தியாவில் ஒருவர் சட்டம் படித்துவிட்டு, வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு பார் கவுன்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. தற்போது கொண்டுவர எத்தனிக்கும் சட்டத் திருத்தத்தின்படி, மறுபடியும் ஒரு தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிகிறது. எப்படி நீட் தேர்வைக் கொண்டு வந்ததன் மூலம், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்த்தார்களோ, அதேபோல் வழக்கறிஞர் படிப்பையும் கொண்டு செல்வதே நோக்கமாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம். இந்த நோக்கங்களை ஈடேற்றுவதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்துராஷ்டிரக் கட்டமைப்பை நோக்கி, ஒரு பாசிச கும்பலாட்சியை நிறுவுவதை நோக்கி, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் வேகமாக முன்னேற கொண்டுவரப்பட்டதே வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 ஆகும்.

வழக்கறிஞர்களின் நாடு தழுவிய போராட்டம்தான் தற்காலிகமாக பாசிச கும்பலை பின்வாங்க வைத்துள்ளது. அதேசமயம், மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்குவது ஒன்றே பாசிசக் கும்பலை அடியோடு வீழ்த்தும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க