மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

ர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்ட இந்து மதவெறியர்கள் இருவர் மீதான குற்றவழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அந்த இருவரையும் குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருக்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகப் பிரசன்னா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கின் தீர்ப்பில் ஜெய் ஸ்ரீ ராம் என்கிற முழக்கம் எந்த வகையிலும் தாக்குதல் தன்மை (Offensive) கொண்டதல்ல. பிற மதத்தினரை எவ்வகையிலும் புண்படுத்தக் கூடியதுமல்ல. இந்திய குற்றவியல் சட்டம் 295 ஏ என்ற குற்றப்பிரிவில் பிற மதத்தினர் மனதைக் காயப்படுத்துவது தான் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனவே இங்கு இவ்விருவரும் சட்டப்படி எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி இருவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்துள்ளது.

இந்து மதவெறியர்கள் இருவர் கடந்த செப்டம்பர் மாதம் தெற்கு கர்நாடகத்தில் பதன்யா ஜும்மா மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டு “நாங்கள் முஸ்லிம்களை அமைதியாக வாழ விட மாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்து மிரட்டி உள்ளனர். அந்த இருவர் மீதும் ஹைதர் அலி என்பவர் பிற மதத்தினர் மத உணர்வுகளை புண்படுத்துவது (295 ஏ) அத்துமீறி மசூதிக்குள் நுழைந்தது (440), பிறரை அச்சுறுத்துவது (506), ஆகிய குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் மூத்த வழக்குரைஞர்கள் தேவதத் காமத் மற்றும் ஜாவீத் உர் ரஹ்மான் ஆகியோர் வாதாடினர்.

ஜெய் ஸ்ரீ ராம் என்பது எல்லா சாதி மதவெறி கலவரங்களிலும் எல்லா கும்பல் வன்முறைகளிலும் இந்து மத வெறி ஊட்டுவதற்கு இந்துத்துவ வெறியர்கள் போடும் முழக்கம் என்பது இந்திய மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் உயர் நீதிமன்றமோ ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

இன்னொரு மதத்தவரின் வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்ததுடன் அவர்களை அமைதியாக வாழ விட மாட்டோம் என்று எச்சரித்து மிரட்டி இருக்கின்றனர். இக்குற்றங்களுக்கான தனித்தனிக் குற்றப்பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் முழக்கமிட்டது குற்றமில்லை எனும் போது மற்ற யாவும் இயற்கையாகவே குற்றமாகாது என்கிற முறையில் ஒதுக்கி தள்ளி விட்டு அவர்களது கடவுளை அவர்கள் வாழ்த்தினார் வழிபட்டனர் என்று பேச முடிகிறது என்றால் இந்த நீதிபதிகள் எவ்வளவு தூரம் இந்து மத வெறிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள் என்று எவரும் உணர முடியும். இந்து மதவெறிக்குத் துணை போகும் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.


படிக்க: மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!


உச்ச நீதிமன்ற விசாரணையில் நீதி அரசர்கள் பங்கஜ் மிட்டல் மற்றும் சந்தீப் மேத்தா இருவரும் உயர் நீதிமன்றத்தின் அராஜகமான தீர்ப்பை நியாயப்படுத்த வழி இல்லாத நிலையில், அத்தீர்ப்பை ஏற்காத அதேசமயம் குற்றவாளிகளைக் காப்பாற்றட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கின்றனர். எனவே சட்டத்தின் புதிய ஓட்டைகளை தேடுகின்றனர்.

இவ்வழக்கின் குற்ற பிரிவுகளின் கீழ் அவர்கள் செய்தது குற்றம்தான். ஆயினும் அந்த குற்றத்தை இழைத்தவர்கள் இந்த இருவரும் தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்? இவர்கள் தான் அந்த குற்றத்தை செய்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? சி.சி.டி.வி பதிவுகள் போன்ற என்ன உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளனவோ அவற்றை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதுதான் இன்றைய உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை பற்றியொழுகும் ‘மதச்சார்பின்மை’ கொள்கை.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க