இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் கடப்பா என்கிற பகுதியில் உள்ள மசூதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் “ஜெய் ஸ்ரீராம்“ என்று முழக்கமிட்டும் தங்களை மிரட்டியதாகவும் மசூதியின் தலைவர் கடப்பா நகர் போலீசில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் மசூதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் குமார் மற்றும் சச்சின் குமார் தான் அவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களின் மேல் இந்தியத் தண்டனை சட்டம் (Indian Penal Code) பிரிவு 295 A இன் கீழ் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் குற்றவாளிகள் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அக்டோபர் 13 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ. பி. சி யின் 447வது பிரிவின்படி மசூதி என்பது அனைவருக்கும் பொதுவான இடம் என்பதால் அதற்குள் நுழைவது குற்றமாகாது என்று குற்றவாளிகள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி தெரிவித்தார்.
அரசு தரப்பில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவர்கள் மீது கூடுதலாக விசாரணை தேவை என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா “இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 295 A கீழ் திட்டமிட்டு எந்தவொரு வகுப்பினை சேர்ந்தவர்களின் மத உணர்வுகளையும், மத நம்பிக்கையினையும் சீர்குலைத்தல், பொது அமைதியைச் சீர்குலைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்.
ஆனால் மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவது யாருடைய மத உணர்வினை புண்படுத்தும்” என்று முஸ்லீம் மக்களை ஏளனம் செய்யும் வகையில் கேள்வி எழுப்பினார்.
படிக்க: கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?
“மசூதியின் தலைவர் தன்னுடைய புகார் மனுவில் தங்களின் பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில் “ ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டதன் மூலம் யாருடைய மத உணர்வினையும் புண்படுத்தவில்லை; பொது அமைதியை சீர்குலைத்ததாக யாரும் புகார் அளிக்கவில்லை” என்று நீதிபதி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும், அமைதியாக வாழும் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மசூதிக்குள் நுழைந்தவர்கள் கீர்த்தன் குமார், சச்சின் குமார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் கண்டுபிடித்து கைது செய்தது. ஆனால், மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது தவறான நீதிக்கு வழிவகுக்கும் என்று கூறி வழக்கை ரத்து இந்துத்துவ குண்டர்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை.. ஆனால், மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கலவரத்தில் ஈடுபடலாம் என்பது தான் நீதிமன்றங்கள் வழங்கும் ‘நீதி’யாக உள்ளது.
குறிப்பாக, பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றங்கள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன. பாபர் மசூதியை இடித்த காவி கும்பலுக்கு ஆதரவாக, மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்பளித்தது முதல் ஆர். எஸ். எஸ் பேரணிக்கு அனுமதியளிப்பது என காவி கும்பலுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகவே நீதிமன்றங்கள் மாறிவருகின்றன.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram